Wednesday, November 27, 2019

மதுரை பள்ளிகளின் ஆசான்கள்

பள்ளியில் கற்றுத் தந்த ஆசிரியை ஆசிரியர்களுக்கு நன்றி!

ஒய்எம்சிஏ பள்ளி மேலப்பொன்னகரம் மதுரை!

ஒருநாள் பள்ளி வாழ்க்கை!

தாத்தா கெஜபதி சேர்த்துவிட்டார்! நானுமங்கே
நாட்டமின்றி உட்கார்ந்தேன்! ஆசிரியர் வந்ததும்
வாட்டமுடன் சென்று பசிக்கிறது என்றேன்நான்!
ஆற்றலுடன் சாப்பிட்டு வாஎன்றார் வந்துவிட்டேன்!
மூச்சடக்கி ஓடிவந்தேன் மீண்டும்நான் செல்லவில்லை!
தாக்கமின்றி சென்றஒரு நாள்.

கேப்ரன் ஹால் பள்ளி-- மங்களபுரம் மதுரை

முதல் வகுப்பு ஆசிரியை திருமிகு.கிரேஸ்(1954)

முதன்முதலில் பள்ளி வகுப்பிலே பாடம்
நடத்தி
இதுதான்நீ கற்கின்ற பாதையென்று காட்டி
மெதுவாக ஆனால் படிப்படியாய் என்னைச்
செதுக்கிய சிற்பி இவர்.

இரண்டாம் வகுப்பு ஆசிரியை
திருமிகு டோரா(1955)

முதல்வகுப்பைத் தாண்டி இரண்டிலே சென்றேன்!
முதல்வகுப்பில் கற்ற அனுபவத்தை வைத்தே
சிறப்பாக பாடம் நடத்தியே மூன்றில்
தடம்பதிக்க வைத்தார் இவர்.

மூன்றாம் வகுப்பு ஆசிரியை திருமிகு.கிளாடிஸ்(1956)

இரண்டு வகுப்புகளில் கற்ற அறிவால்
தரமுயர்ந்த ஆர்வத்தால் மூன்றில் நுழைந்தேன்!
பலபாடம் ஆசிரியைக் கற்றுத் தரவே
கலகலப்பாய்ச் சென்றுவிட்டேன் நான்கு.

புனித ஜோசப் கான்வெண்ட் -
பழைய குயவர் பாளையம் மதுரை

நான்காம்வகுப்பு ஆசிரியை
திருமிகு தெரசா(1957)


நான்காம் வகுப்பில் படிக்கத் தொடங்கினேன்!
பாங்குடன் கற்பதற்குப் பாடத்தைச் சொல்லியதால்
நான்கற்றேன் காலகட்டத் தேவைக்கே ஏற்றவண்ணம்!
தேர்ச்சிபெற்றுச் சென்றுவிட்டேன் ஐந்து.

ஐந்தாம் வகுப்பு ஆசிரியை 
திருமிகு குழந்தை தெரஸ்(1958)


மரத்தடியில் கூட வகுப்பெடுப்பார்! பாடம்
இயல்பாய் நடத்திப் புரியவைக்கும் ஆற்றல்
சுரந்துவரக் கற்றுக் கொடுத்ததால் ஆறில்
கலக்கமின்றிச் சென்றேன் மகிழ்ந்து.

ஆறாம் வகுப்பு ஆசிரியை  திருமிகு.ஜெயமேரி(1959)

கூரை வகுப்பு! குதூகலமாய்ப் பாடங்கள்
கூர்ந்து கவனிப்போம்! ஈடுபாடு கொண்டேதான்
ஈர்க்கின்ற வண்ணம் நடத்துவார் பாடத்தை!
ஆர்வமுடன் சென்றுவிட்டேன் ஏழு.

ஏழாம் வகுப்பு ஆசிரியை
திருமிகு.ரோஸ் மேரி(1960)

பள்ளிஉந்து நிற்கும் இடத்தில் வகுப்பெடுத்தார்!
சொல்லித் தருவதில்  வல்லவர்! நல்லவர்!
தெள்ளத் தெளிவாய்ப் பாடம் நடத்தினார்!
கற்றேதான் சென்றுவிட்டேன் எட்டு.

சேதுபதி உயர்நிலைப் பள்ளி-- வடக்குவெளி வீதி மதுரை

எட்டாம் வகுப்பு ஆசிரியர் திரு. எஸ் சுப்ரமணியன்(1961)

பாரதியார் தொண்டுசெய்த பள்ளியில் சேர்ந்துவிட்டேன்!
சாரமுடன் பாடம் நடத்தி மனதிலே
வேரூன்ற  வைத்தவர்! கோபமே கொள்ளமாட்டார்!
நான்சென்றேன் ஒன்பதைப் பார்த்து.

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்  திரு.எஸ்.டி.ராஜகோபால்(STR)(1962)

பள்ளியின் உள்ளரங்குப் பக்க வரிசையாய்
சொல்லிவைத்தப் பாங்கில் இருந்தன! நாங்களோ
எல்லோரும் ஊன்றிக் கவனித்தே கற்றுவந்தோம்!
வல்லவர் ஆசானை வாழ்த்து.

பத்தாம் வகுப்பு ஆசிரியர் 
திரு.பி எஸ்  கிருஷ்ணசாமி (PSK)(1963)

நகைச்சுவைப் பேச்சால் கவர்ந்தே பாடம்
அகத்தில் பதிய நடத்தினார்! கற்றோம்!
தமிழுடன் ஆங்கிலம் மற்றபாடம் எல்லாம்
சுமையென்றே எண்ணாத வண்ணம் எளிமை
மணக்கவே கற்றுக் கொடுத்தார்! படித்தேன்!
இணக்கமுடன் சென்றேன் அடுத்து.

பதினொன்றாம் வகுப்பு (SSLC)ஆசிரியர்
திரு.எஸ் எஸ் கிருஷ்ணன்( SSK)(1964--65)

பள்ளி இறுதி வகுப்பிற்குச் சென்றுவிட்டேன்!
பல்முனை ஆற்றலைப் பெற்ற உணர்விலே
துள்ளித் திரிந்தேன்! மகிழ்ச்சியுடன் கற்றறிந்தேன்!
நல்லபடி யாக பொதுத்தேர்வில் வெற்றிபெற்றேன்!
கல்லூரி சேர்ந்தேன் நிமிர்ந்து.

அனைவருக்கும் நன்றி!

ஒன்றில் தொடங்கி பதினொன்றில் பள்ளிவாழ்க்கை
நன்றாய் நிறவேற என்னைச் செதுக்கிய
பண்பான  ஆசிரியை ஆசிரியர் எல்லோர்க்கும்
நன்றி நவில்கின்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

நண்பர்களின் வாழ்த்து

21.10.22

Krishnamurthy Ramanujam:
முதல் வகுப்பில் இருந்து,பதினொன்றாம் வகுப்பு வரை பள்ளி ஆசிரியர்/ஆசிரியைகளின் பெயரை நினைவில் வைத்துஇருப்பது  மிகச் சிறப்பு/போற்றுதலுக்கு  உரியது.🙏🙏🙏

VovTheetharappan:
ஆசிரியர்களை நினைவு கூர்ந்து வெளியிட்ட பதிவு அருமை! முன்னாள் ஐனாதிபதி அப்துல்கலாம் அவர்களும் 'அக்னிச் சிறகுகள் ' நூலில் தன் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தது எண்ணத்தகுந்தது!

Vovkaniankrishnan:
தாங்கள் கவிஞர் என்பதை
தங்களது நினைவாற்றல்
நிருபணம் செய்துவிட்டது.

தெ.கி

VOVCR:
என்ன ஒரு நினைவாற்றல்

அழகு பா.. பாபா 👍👏😍

SELVARAJ K:
மடை திறந்த வெள்ளம்
           மதிநிறை  நல்உள்ளம்
தடையேதுமிலா தனித்துவம்
          தரணிபோற்றும் ஆசிரியர்
படைத்தவன் பெருமை கூறி
           பெருமை கொள்ள செய்தீர்
விடையேறும் பாகன் அருள்
           விரிந்த உள பாபாக்கே

0 Comments:

Post a Comment

<< Home