Wednesday, December 13, 2017

பகல்வேடம்!

உரிய மரியாதை தந்தே பழகு!
உரியதைத் தாண்டி வளைந்து குழையும்
மரியாதை எல்லாம் பகல்வேடக் காட்சி!
தெளிவுடன் வாழ்தல் சிறப்பு.

Monday, December 11, 2017

பாரதி வாழ்க!

11.12.2017

சொல்ல முடியாத நேரத்தில் நற்கருத்தைச்
சொல்லி நிமிர்ந்தவன் பாரதி! ஆதிக்க
வல்லூறைப் பாவினத்தால் பந்தாடிப் பார்த்தவன்!
தெள்ளுதமிழ்ப் பாமுரசை வாழ்த்து.


நாடுபோற்றும் பாரதி ஆசிரியர் தொண்டுசெய்த
சேதுபதி பள்ளி மதுரையிலே நான்படித்தேன்!
பாடுபொருள் பாரதியின் காற்றங்கே பட்டதாலே
ஏடுகளில் நானும் கிறுக்குகின்றேன்  பாவினங்கள்!
நாடுகின்றேன் ஆசிகளைத் தொட்டு.

Wednesday, December 06, 2017

குழந்தையும் பொம்மையும்!
கணவனும் மனைவியும.

குழந்தையிடம் பொம்மை கிடைத்துவிட்டால் போதும்
குழந்தையோ இப்படி அப்படி ஆட்டும்!
தரைமீது தூக்கி எறியும்! சிரிக்கும்!
அலைபாயும் உள்ளம் உவந்து.

தன்விருப்பம் போல நடக்கவேண்டும் என்றேதான்
என்னென்ன செய்யும்? அடிபணிய வைத்தேதான்
கொஞ்சும் மகிழும் வலிக்கிறதா என்றேதான்
நெஞ்சுருக்க் கேட்கும் அழுது.

இப்படித்தான் வாழ்வில் ஒருவர்மேல் அன்புவைத்தால்
அப்படி இப்படி ஆடவேண்டும் என்றேதான்
எப்பொழுதும் இங்கே எதிர்பார்ப்போம்! ஏக்கமுடன்!
சற்றே தடம்புரண்டால் வாடி வதங்கிடுவோம்!
இப்பற்றின் பண்பே இது.

Wednesday, November 29, 2017


அக்கறை எங்கே?

கடமைக்குச் செய்வதும் அக்கறை கொண்டே
உடன்பட்டுச் செய்வதும் வெவ்வேறாய்த் தோன்றும்!
அகத்திலே ஒன்றா? புறத்திலே ஒன்றா?
முகமே வெளிப்படுத்தும் இங்கு.

பேரன் வருண் பேகனோ!

மயிலொன்று காட்டில் குளிரில் நடுங்க
வழிவந்த பேகனோ போர்வையைத் தந்தான்!
குருவிகள் வீட்டில் குளிரில் நடுங்க
கருணையுடன் பேரன் வருணிங்கே துண்டை
குருவியின் கூண்டில் விரித்தான் இரங்கி!
கருணைமனம் வாழ்க நிலைத்து

Tuesday, November 28, 2017


வணிகர்க்குரிய  பண்புகள்!

REQUISITES OF A TRADER

அன்பு,பணிவு,கடமை உணர்வுடன்
இன்சொல், புன்னகை, கலப்படம் இல்லாமை
கொண்ட வணிகரிடம் நாளும் பொருள்வாங்க
வந்து குவிந்திடுவார் வாடிக்கை யாளர்கள்!
பண்பே வணிகத்தின் மாண்பு.


இங்கே முடியாது!

பெரியாரின் மண்ணில் மதவாத சக்தி
வரிந்துகட்டி ஊன்றத் துடிக்கிறது பாராய்!
தெரியாமல் கூட களைவளர்க்க மாட்டோம்!
தெளிவாக வாழ்வோம் உணர்.

வெண்புறா-- பெண்புறா

வேடன் வலையிலே சிக்கிய வெண்புறாவும்
வீடறிய நாளும் குடித்துவிட்டு வந்தேதான்
கூடழிய இங்கே அடிவாங்கும் பெண்புறாவும்
வேதனைக் காட்சியில் ஒன்று.

Saturday, November 25, 2017

யாரறிவார்

ஆழ்கடலின் ஆழத்தைக் காணலாம் மாதரின்
ஆழ்மன எண்ணத்தை யாரறியக் கூடுமிங்கே?
பாழ்மனமே ஏங்கித் தவிப்பதேன்? துள்ளுவதேன்?
தாழ்போட்டு நிம்மதியாய் வாழ்.நீரோட்டம்

நீரோட்டம் தன்னை உணர்ந்து நிலத்தடியில்
பார்த்தே அளக்க கருவியுண்டு! உள்ளத்தில்
வேரோடும் மாந்தரின் எண்ணத்தைப் பார்த்தளக்க
பாரில் கருவியுண்டோ? கூறு.

தெய்வத்திரு அய்யாவுக்கு நினைவேந்தல்!
24.11.17
------------------------------------------------------------------
சிதம்பரம் அய்யாவின் ஆளுமைப் பண்பும்
சிறந்த அணுகுமுறை ஆற்றலும் அன்புச்
சிறகுக்குள் என்னை அரவணைத்த பாங்கும்
மறக்க முடியாதே இங்கு.

Thursday, November 23, 2017

துவளும் மனம்!

எடுத்த பிறவியில் இல்லறத்தில் சேர்ந்தோம்!
அடுத்தடுத்தே இன்பமும் துன்பமும் மாறி
படுத்தி எடுத்தும் மகிழ்ந்தே சிரித்தோம்!
எடுத்த பிறவி முடிக்கின்ற நேரம்
எதிலுமே சிக்கலில்லை! ஆனால் மனங்கள்
துடிக்கிறதே நாளும் துவண்டு.

சுமைதாங்கிக்கல்!(23.11.17)

எதையெதையோ தாங்கும்  சுமைதாங்கிக் கல்லாய்
நடைமுறையில் மாறி நடக்கின்றேன் நாளும்!
படைவரிசை போல உளைச்சல்கள் வந்தே

தடையின்றித் தாக்குவ தேன்?