Monday, January 31, 2011

முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் வித்தகர்கள்!
=============================================================
அரசியல் கட்சி தொடங்கிவிட்டால் போதும்!
துரும்புகூட இங்கே தலைவராகித் துள்ளும்!
வரிசையாக நிற்கும் புகழ்பாடிக் கூட்டம்!
பரபரப்பாய் மாறிடுவார் பார்.

இதுவரையில் எங்கிருந்தார்? யாரறிவார் கண்ணே?
இதுவரையில் என்னசெய்தார்? யாரறிவார் கண்ணே?
புதுவேடம் பூண்டேதான் தாய்நாட்டைக் காக்கும்
புதுத் தியாகி யாவார் துணிந்து.

காசிருக்கும் !நெஞ்சிலே மாசிருக்கும்! கூட்டமோ
தேசத்தைக் காக்கும் தலைவரென்பார்! ஏந்தலென்பார்!
மாசு மறுவற்ற தங்கமென்பார்! புத்தரென்பார்!
பாச மழைபொழிவார் பார்த்து.

மாநாடு! ஊர்வலங்கள்! மாவட்டந் தோறுமிங்கே!
தேனாகப் பேசிடுவார்! கூட்டம் ரசித்திருக்கும்!
தேனாறு ஓடவைப்பார் என்றேதான் நம்பிடுவார்!
காணக்கண் கோடிவேண்டும் கூறு.

தேர்தல் களத்தில் தொடங்குகின்ற தில்லுமுல்லு
வேரோடி நன்கு விழுதுவிடும் ஆட்சியில்!
யார்பக்கம் சாய்ந்தால் அமைச்சராகும் வாய்ப்பிருக்கும்!
தேர்ந்தெடுப்பார் தன்னலத்தால் தான்.

நாட்டு நலமிங்கே பின்சென்று தங்கிவிடும்!
வீட்டு நலமே முனைப்பாக முன்நிற்கும்!
வாக்களித்தோர் செய்வ தறியாமல் தத்தளிக்க
ஏக்கமுடன் நாள்நகரும் கூறு.

பூசணிக் காய்தன்னைச் சோற்றில் மறைக்கின்ற
நாசக் கலையிலே வித்தகராய் மாறிடுவார்!
கூசாமல் பொய்சொல்லி வாய்மையே வெல்லுமென்பார்!
வேதனை தீருமா? சொல்.

மதுரை பாபாராஜ்

Sunday, January 30, 2011

நன்றி மறவாதே!
=========================
தண்ணீர்தான் ஊற்றுகின்றோம்! நன்றி மறவாமல்
இங்கே மரமோ கனிகளைக் காய்களைத்
தந்து நிமிர்கிறது! என்னதான் செய்தாலும்
அம்மா! மனிதனோ நன்றி மறக்கின்றான்!
என்றென்றும் தாழ்வுற்றான் ஏன்?

மதுரை பாபாராஜ்

இந்தியத் தாயின் ஏக்கம்!
====================================
என்வீட்டுக் கூட்டுக்குள் அய்யோ! விரிசல்கள்!
என்னபாவம் நான்செய்தேன்? என்நாடே!சொல்வாயா?
கண்முன்னே ஒற்றுமையைக் காண்பேனா?மாட்டேனா?
புண்பட்டு வாடுகின்றேன் பார்.
==========================================================
சோலையும் பாலையும்!
=============================================
கிட்டப் பழகி பகைப்பதை விட்டுவிட்டு
எட்டப் பழகி உறவை வளர்த்திடுவோம்!
ஒற்றுமை வாழ்க்கையைச் சோலையாக்கும்!வேற்றுமை
வெட்டவெளிப் பாலையாக்கும் பார்.
-============================================================

Thursday, January 20, 2011

சுவிட்சர்லாந்து வங்கியில் கறுப்புப் பணம்!
==================================================
வருமானம் ஈட்டும் வரிக்கணக்கில் இங்கே
ஒருரூபாய் தன்னைக் குறைத்துவிட்டால் போதும்!
வரியேய்ப்பு என்றே அறிக்கையைத் தந்து
வரிவசூல் செய்கின்றார் பார்.

கோடிக் கணக்கில் வருமானம் காட்டாமல்
கோடிப் பணத்தை சுவிட்சர்லாந் வங்கியைத்
தேடிப்போய் கட்டிவிட்டு நம்நாட்டை ஏமாற்றி
கோடீஸ்வரர் ஆகிவிட்டார் இங்கு.

கணக்கிலே கட்டாமல் வங்கியிலே போட்ட
கணக்கற்ற அந்தப் பணத்திற்கு நாங்கள்
வணங்கி வரிவசூல் செய்வோம்! அதனால்
இணங்கமாட்டோம்! நீதிமன்றம் கேட்கின்ற அந்தக்
கணக்குவைத்தோர் பட்டியலைக் காட்டமாட்டோம் என்றே
இணங்க மறுப்பதேன்? கூறு.

பொதுமக்கள் செய்தால் வரியேய்ப்பு என்பார்!
பதுக்குவோர்கள் செய்தால் உரிமைதான் என்பார்!
தொடுவானந் தன்னை அடைந்திடவும் கூடும்!
நடுநிலையும் நல்லரசும்? போ!

மதுரை பாபாராஜ்

இளமையும் முதுமையும்
============================
இளமைப் பருவம் தவறுகளை நம்பும்!
இளமைக்குப் பின்னே முதுமைப் பருவம்
களங்கமற்ற உண்மையைச் சந்தேகக் கண்ணால்
கலக்கமுடன் பார்த்திருக்கும் காண்.

நோய்களைத் தவிர்த்தல் அரிது
=========================================
இந்தப் பிறவியில் நம்முடைய தேகத்தை
எந்தெந்த நோய்களெல்லாம் எப்படித் தாக்கவேண்டும்
என்னும் நியதியை மாற்றவும் கூடுமோ?
என்றும் கடினந்தான் சொல்.

பாசாங்கு!
=======================================
பார்வை தெரிந்தாலும் பாசாங்கு செய்தேதான்
பார்வை தெரியவில்லை என்பதைப்போல் ஊழலின்
நாயகர்கள் யார்யார் எனத்தெரிந்த போதிலும்
நேயமுடன் காப்பதேன்? கூறு.

Wednesday, January 19, 2011

ENGLISH -- THAMIZH TRANSLATION
------------------------------------------------------------------
NOTHING CAN DESTROY IRON BUT ITS OWN RUST CAN ;
NOTHING CAN DESTROY A PERSON BUT HIS MINDSET CAN.
(SMS RECEIVED FROM MY FRIEND MR.A.LINGARAJ KANNAN)
=========================================================================
இரும்பை அழித்தல் மிகக்கடினம்! ஆனால்
இரும்பின் துருவே இரும்பை அழிக்கும்!
மனிதன் அழிதல் எதனாலும் அல்ல!
மனப்போக்கி னால்தான் உணர்.

தண்டனை உண்டு!
===================
கள்ளப் பணத்தைக் கடவுளின் உண்டியலில்
அள்ளியே போட்டதும் கள்ள மனங்கொண்டோர்
நல்லவராய் மாறுவரோ? தண்டனை நிச்சயம்
இவ்வுலகில் மானிடனே உண்டு.

மடமை !
===============================
வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பதே
வாழ்வில் அறிவுடைமை யாகுமடா!-- ஊழ்வினை
என்றுரைத்து வாய்ப்பை நழுவவிடும் மந்தநிலை
என்றும் மடமையடா! பார்.

பகைமைக்கு வேர்!
===================================
சொத்துரிமை இல்லாத மக்கள் சமுதாயம்
மட்டுமே நிம்மதியாய் வாழ முடியுமிங்கே!
சொத்துரிமை என்றும் பகைமைக்கு வேராகும்!
பித்தனாக்கிப் பாழ்படுத்தும் பார்.

உயர்வும் தாழ்வும்!
=========================================
எளிமை, பணிவு, பிறரை மதித்தல்
உயிரெனக் கொண்டால் உயர்வது திண்ணம்!
துளியளவும் ஏற்காமல் துள்ளித் திரிந்தால்
சரியவைத்துத் தாழ்த்திவிடும் பார்.

பாசச் சிறை!
=====================================
பாசச் சிறைக்குள்ளே சிக்கித் தவிப்பவர்கள்
ஆசை முடிச்சைக் கழற்ற முடியவில்லை!
வேடம் பலவேடம் வாழ்க்கை அரங்கத்தில்!
பாடங்கள் கற்கின்றார் பார்.

கொடுத்துவைத்த கோலம்
--------------------------------------------------------------------------
நடமாட்டம் உள்ளவரை நம்மை மதிப்பார்!
நடமாட்டம் ஓய்ந்ததும் நம்மை வெறுப்பார்!
நடமாடும் கோலத்தில் நாமோ இறந்தால்
கொடுத்துவைத்த கோலந்தான் கூறு.

தூற்றாமல் வாழ்!
-------------------------------------------------------------------
இவரா இறந்தார்? இவரைப்போல் இந்த
அவனியில் யாரிருப்பார்? என்றுபோற்ற வேண்டும்!
இவர்தான் இறந்தாரா! நல்லவேளை போனார்
இவரென்றே எண்ணவைத்தல் கேடு.

எல்லாமே நாவால்தான்!
----------------------------------------------------------------------
நல்லதைப் பேசு! அனைவரும் நாடுவார்!
அல்லதைப் பேசு ! இருப்பவரும் ஓடுவார்!
எல்லாமே நரம்பற்ற நாவில் உருவாகும்
சொல்லால்தான்! நாவை அடக்கு.

நோயின் தாக்கம்!
--------------------------------------------------------------------
நோய்களின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்காமல்
சாய்ந்து விழும்நேரம் மேனி சுருண்டுவிடும்!
காய்ந்த சருகாகும்! துள்ளிக் குதித்ததெல்லாம்
ஓய்ந்தே அடங்கும் உணர்.

Thursday, January 13, 2011

பொல்லாத வாழ்வு!
======================
எல்லாம் இருந்தும் மனதிலே நிம்மதி
எள்ளளவும் இல்லாத வாழ்விலே என்னதான்
எல்லாம் இருந்தாலும் வாடவைத்துப் பந்தாடும்
பொல்லாத வாழ்வுதான்! சொல்.

சுமைகள் சுமையல்ல!
=============================
நமது சுமைகள் நமக்காகத் தானே!
நமது சுமைகளை மற்றவர் தோளில்
சுமத்த நினைப்பதோ என்றும் தவறு!
சுமைகள் சுமையல்ல என்றெண்ணி வாழ்ந்தால்
சுமைகள் வலிக்காது பார்.

புரியாத புதிர்!
==================
கண்களை மூடிப் பிறந்த பொழுதும்
உலகம் எனக்குப் புரியவில்லை!
கண்களைத் திறந்து வாழும் பொழுதும்
உலகம் எனக்குப் புரியவில்லை!
கண்களை மூடி இறக்கும் பொழுதும்
உலகம் எனக்குப் புரியாது!
பிறந்தது முதலாய் இறப்பது வரைக்கும்
புரியாப் புதிர்தான் இவ்வுலகம்.

புற அழகு பொய்!
===================
என்னை எனக்காக இங்கே மதிக்கவேண்டும்!
என்னுடலில் மின்னும் நகைபார்த்து ஆடைபார்த்து
என்னை மதித்தால் வெறுப்பேன்!அகஅழகே
உண்மை! புறஅழகோ பொய்.

கூட்டை அழிக்காதே!
=========================
ஆக்கபூர்வ எண்ணத்தை அன்றாடம் உள்ளத்தில்
தேக்கும் நிலையெடுத்து நிம்மதியாய் வாழவேண்டும்!
வேற்றுமைக்கு வித்தூன்றும் அர்த்தமற்ற எண்ணங்கள்
கூட்டை அழித்துவிடும் கூறு.

வாழ்வின் வேர்!
=======================
முன்கோபம் கொள்ளாதே!உட்பகையைத் தேக்காதே!
புண்படுத்திப் பேசாதே! போக்கிழந்து போகாதே!
தன்னலத்தைப் போற்றாதே!வேதனையைத் தூவாதே!
பண்புகளே வாழ்க்கைக்கு வேர்.

அய்யோ!மனமே!
=================
கசக்கிப் பிழிந்து துவைத்த துணியை
கசக்கிக் கசக்கி முறுக்கிக் கிழிந்தும்
கசக்கிப் பிழிந்தால் துணியின் உயிரோ
கதறிச் சரிந்திடும் காண்.