Friday, January 26, 2007

பாவேந்தரைப் போற்றுவோம்

முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கம்
தடைக்கல்லே என்றேதான் சாடி-- படையெடுக்கும்
பாக்களைப் பாடினார் பாவேந்தர்!இன்றளவும்
போற்றுகின்றோம் வாழ்வில் புரிந்து.

வாழ்வதற்கு சாப்பிடு

வாழ்வதற்கு சாப்பிடு மானிடனே நல்லதுதான்!
வாழ்விலும் நிம்மதி வந்துசேரும்-- வாழ்வதே
சாப்பிட மட்டுமென்ற சஞ்சலத்தில் ஆடிநின்றால்
தூற்றுவார் மக்களெனச் சொல்.

சாதனை செய்யுங்கள்

சூழ்நிலைகள் சூறா வளியாகச் சீறித்தான்
பாழ்படுத்திப் பார்த்தாலும் நம்பிக்கை -- வேரழிந்து
போகாமல் சிந்தித்துப் போக்குகளை மாற்றியே
சாதனை செய்யுங்கள் சந்தித்து.

Wednesday, January 17, 2007

காலைப்பொழுதில் கவிதை எழுத பட்டபாடு

கவிதை எழுத காலைப் பொழுதில் அவசர மாக அமர்ந்தேன் --கவிதைக் கருப்பொருளைச் சிந்தித்து காத்திருந்தேன்! சுரந்தது சோதனைதான் சூழ்ந்து. 

 அழைப்பு மணியை அடித்தார் ஒருவர்! விழைவுடன் சென்றே வினவ -- வளமான கீரை கொணர்ந்தேன்!கேளய்யா அம்மாவை! பார்த்தேன்!முறைத்தேன்!பணிந்து.

 அரைக்கீரை வாங்கியதும் அன்புடனே சென்றாள்! பரபரப்பாய் உட்கார்ந்து பார்த்தேன் -- அரைநொடியில் 
"அம்மா" குரல்கேட்டேன்! அங்கே சலவையாளர் 
நின்றார் துணியுடனே நேர்ந்து. 

 துணிவாங்கி வைத்துவிட்டு துள்ளித்தான் வந்தேன்! 
மணியடித்த சத்தத்தால் வாசல் -- தனையளந்தேன் 
தண்ணீரை விற்பவரோ தானே சிரித்திருந்தார்! 
வெந்நீராய்க் கொந்தளித்தேன் வெந்து.

 தண்ணீரைத் தந்தவரும் தன்வழியே சென்றுவிட்டார்! 
இன்னுமென்ன என்றே எழுதவந்தேன் -- அங்கேயோ
வாசலிலே பால்காரர் வந்தே மணியடித்தார்! காசெடுக்கச் சென்றேன் கடிந்து.

 அடுத்தடுத்து இவ்வாறு அன்பாகத் தொல்லை 
படையெடுக்கும் காலைநேரம் பாவம் -- உடைப்பெடுத்தா 
ஓடும் கவிதைகள்? உள்ளம் கலங்கிடவே மூடினேன் பேனாவை!மூச்.

 (எனது மகரயாழ் கவிதைத்தொகுப்பு நூலில் இருந்து)

நண்பர் எழில் புத்தன் கருத்து

அதிகாலை
அனைவரோடும்
தாங்கள் 
ஆற்றும் 
அன்புரை…
அவர்களுக்கு
கொடுக்கும்
ஊக்கம்…
அவர்களிடமிருந்து
நாம் பயிலும்
பாடங்கள்…
அனைத்தையும்
அழகாய்
அலங்கரித்து
விட்டீர்கள் 
அய்யா…


மனமார்ந்த நன்றிகள்!!!

வாழ்க்கையின் இயல்பு

பார்த்த இடங்கள் பழகிய காட்சிகள்
ஈர்த்த உலகமும் இங்கிருக்கும் --சேர்ந்திருந்து
வாழும் மனிதர்கள் மட்டும் மறைகின்றார்!
வாழ்க்கை இதுதானே இங்கு.

Monday, January 15, 2007

ஊர்கூடிப் பொங்கல்

ஊர்கூடிப் பொங்கலிட்டு ஒற்றுமையாய்க் கொண்டாடி
பாரில் சமத்துவப் பண்புகளை -- வேரோட
வைத்து வழிகாட்டி நிற்போம்! மகிழ்ந்திடுவோம்!
தைத்திரு நாளில் திளைத்து.

Thursday, January 11, 2007

ஒருமனித இராணுவம் மகாத்மா காந்தி


கலவரங்கள் வெடித்திருந்த கல்கத்தா நகருக்குள்
நிலைகுலையா நெஞ்சமுடன் நேர்மையாளர் நுழைந்திட்டார்!
வன்முறைக்கு உள்ளானோர் வழிநெடுகக் கூடிநின்றார்!
அண்ணலுக்கு எதிராக அனற்சொல்லால் கூச்சலிட்டார்!
எரிமலையாய்ச் சீறிநின்றார்!இடித்துரைத்தார்! சாடிநின்றார்!
கரங்கொண்டு கார்மீது கல்வீசி எதிர்த்திருந்தார்!
ஒருகையில் மேலாடை உரசிநிற்க, சமாதான
கரமெடுத்து மேலுயர்த்தி கல்மழைக்குள் நடந்துசென்றார்!
என்னையா தாக்கவேண்டும்? இதோநான் வருகின்றேன்!
கண்ணியவான் குரல்கொடுத்தார்! கலங்கவில்லை காந்தியண்ணல்!
தங்களைத்தான் நோக்கிவந்த தளிர்மேனி காந்திஜியைக்
கண்டவுடன் பொதுமக்கள் கற்சிலையாய் உறைந்துவிட்டார்!
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு சேவைசெய்ய வந்துள்ளேன்!
வன்முறையின் வெறியாட்ட மடைதிறந்தால் உயிர்துறப்பேன்!
என்றேதான் பலவாறு எடுத்துரைத்தார் நிலைவிளக்கி!
நன்முறைக்கு திரும்புமாறு நடைமுறைக்கு வித்திட்டார்!
தன்னுயிரைப் பணயமாக்கி தழைக்கவைத்தார் அமைதியினை!
வன்முறையைத் தடுத்துவிட்டார்! மனிதநேயம் சிறக்கவைத்தார்!
இராணுவத்தார் வன்முறையின் எரிமலையை அணைக்கவில்லை!
ஒருமனித இராணுவமாய் உத்தமர்தான் அணைத்துவிட்டார்!

********************************************
கவிதையை வெளியிட்ட
பாரதமணி இதழுக்கு நன்றி
********************************************
 Posted by Picasa

Wednesday, January 10, 2007

காதல் வெண்பாக்கள்

மல்லிச் சரம்சூடி மங்கை நடந்துவந்தால்
கல்லும் கவிபாடும் கண்மணியே --புல்லும்
நடனமாடும்! நற்றமிழ்ப் பாவலன் நெஞ்சம்
படும்பாட்டை என்னென்பேன்? பார்த்து.

முல்லைக் குறுநகையும்,முந்தானை தென்றலிலே
செல்லமாகத் தொட்டசைந்தும் சேயிழையின் - இல்லறத்துக்
காதலுக்குத் தூதுவிட்டு பாவினத்தைக் காதோடு
காதாகப் பாடுதடி காண்.

அசையும் கொடியோ!அலையும் இடையோ!
இசையின் வடிவோ!இனிய - நகையோ
கசியும் அமுதோ!கடையிதழ்த் தேனோ!
பசியை உசுப்புகின்றாள் பார்.

கண்களால் என்மேல் கலாட்டா செய்கின்றாய்!
அம்புகளால் அய்யோ! துளைக்கின்றாய்!- உந்தன்
நிழலால் நெருங்கியே நிம்மதியைப் பந்தாய்
உருட்டி உதைக்கின்றாய்!ஏன்?

ஏன்?

மரங்கள் வளர்ப்போம்! மழையும் பெறுவோம்!
உரங்கள் இடுவோம்! உழவில் -- தரமாய்
விளைச்சல் பெருகும்! விவசாயி மட்டும்
அலைவான் அனற்பசியில் ஏன்?

ஏறுபோல் பீடு நடை

கூறுபோட்டுப் பார்க்கும் குறுகிய எண்ணங்கள்
தாறுமாறாய் ஏற்படுத்தும் சஞ்சலத்தை -வீறுகொண்ட
ஆறுபோல் ஆர்த்தெழுந்தே சந்திக்கும் நாட்டுக்கே
ஏறுபோல் பீடு நடை.

சொற்கேட்டலின்பம் செவிக்கு

திருக்குறள் வெண்பாப் போட்டி

ஈற்றடி:சொற்கேட்டலின்பம் செவிக்கு

வெண்பா:

கண்படுத்தும் இன்சொல்லால் காதலர்கள் இன்புறுவார்!
புண்படுத்தும் சொற்களாலே புல்லர்கள் - தன்மனத்தில்
அற்பமாகத் துள்ளிடுவார்! சான்றோரின் பண்படுத்தும்
சொற்கேட்டலின்பம் செவிக்கு

வன்பசி

காய்கறி விற்றுக் கடும்வறுமை போக்கிட
தாய்க்குலம் தத்தளிக்கும் வாழ்க்கையில் - சேய்களோ
ஏக்கத்தை ஏந்தி எரிமலையாம் வன்பசியின்
தாக்கத்தில் வாடும் தளர்ந்து.

Tuesday, January 09, 2007

எல்லாம் சிலகாலம் (ஆட்டோ வாசகம்)

இன்பம் சிலகாலம்! இன்னல் சிலகாலம்!
என்றே சுழன்றுவரும் இவ்வாழ்வில் - இன்பத்தில்
துள்ளாதே! துன்பத்தில் என்றும் துவளாதே!
எல்லாம் சிலகாலந் தான்.

தண்டனை வேண்டும்

பொய்வழக்கு போடுகின்றார் ! போகின்ற திக்கெல்லாம்
மெய்வருத்தி உள்ளம் உருக்குலைவார் - மெய்வழியோ
வென்றால் விடுதலைதான்! பொய்வழக்கு போட்டவர்க்கு
தண்டனை ஏனில்லை சாற்று.

குற்றமுள்ள நெஞ்சம்

குற்றத்தை எண்ணிக் குமுறும் நிலையெடுத்துக்
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் - குற்றத்தைச்
செய்வதற்கு முன்னால் சிறிதளவு சிந்தித்தால்
துள்ளித் துடிப்பாயோ சொல்

இனிப்பும் கசப்பும்

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்கும்
இனிதான வாழ்க்கை இனிப்பு - மனிதன்
தறிகெட்டு வாழ்கின்ற வாழ்க்கை கசப்பு!
வெறிதான் அழிவுக்கு வித்து.

AN APPLE A DAY KEEPS DOCTOR AWAY

ஆப்பிள் பழமொன்றைப் பாப்பா அனுதினமும்
சாப்பிட்டால் நோய்களோ தாக்காது--நாட்டில்
மருத்துவரை நம்பியே வாழவேண்டாம்!இந்தக்
கருத்து நலமளிக்கும் காண்.