Wednesday, July 30, 2008

ஏன் இப்படி?

தழையத் தழையத் தாவணி போட்டு
வளையல்கள் ஓசை தவழ--தலைவாரி
பூச்சூடி பூமணம் சூழத்தான் பூவையர்
போற்றிநின்ற பண்பாடு எங்கே?

Sunday, July 27, 2008

நோய்வந்தால் சருகாவோம்

தேக்குமர தேகத்தை நோய்களோ தாக்கிநின்றால்
காற்றில் சருகாக மாற்றிவிடும்--ஊற்றெடுத்த
ஆர்ப்பாட்டம் ஆணவம் ஆடம் பரமெல்லாம்
வேரிழந்து நிற்கும் நகைத்து.

நன்றாய் இருக்கின்ற நாள்களில் நாலுபேரைச்
சம்பாதி! அப்பொழுது தானிங்கே--நம்மைத்
துயரம் நெருக்கும் பொழுதில் துணையாய்க்
கரம்நீட்டி வந்துநிற்பார்! காண்.

Thursday, July 10, 2008

முதுமையின் முத்திரைகள்

குழிவிழுந்த கன்னம்! ஒளியிழந்த கண்கள்!
மொழிபிறழும் நாக்கு!நரைவிழுந்த கேசம்!
வலுவிழந்த கால்கள்!சுருங்கிவரும் மேனி!
உலுக்கும் முதுமைக்குச் சான்று.

நல்லதாய் நடக்கட்டும்

நடந்ததை இங்கே நடந்து முடிந்து
கடந்ததுதான் என்றே எண்ணி---நடப்பது
நல்லதாய் ஆகட்டும் என்னும் மனநிலையே
தொல்லையை நீக்கும் உணர்.

Monday, July 07, 2008

தாய் -- ஈகையின் சொத்து

பிழிந்தெடுத்த சக்கை! விதவிதமாய்த் துன்பம்
வழிந்ததைத் தாங்கிய கட்டை!--உயிரைத்
திரியாக்கித் தன் குடும்பம் என்னும் விளக்கை
எரியவைத்த ஈகையின் சொத்து.

பேரன் நிகில் அபிசேக்கின் கடவுள் வழிபாட்டு வரிகள்

நல்ல அறிவுடன் நல்ல குணங்களும்
நல்ல படிப்புடன் நல்லதோர் ஆரோக்யம்
இங்கேதான் நான்பெறவும் எல்லோரும் வழ்வதற்கும்
உன்னருளை வேண்டுகின்றேன் நான்.

Sunday, July 06, 2008

பக்குவமே பக்தி!

பக்திப் பழமாகி எண்ணற்றக் கோயிலுக்கோ
அக்கறை யோடிங்கே சென்றாலும்---பக்குவம்
எள்ளளவும் இல்லாத பக்தனை பக்தியோ
எள்ளிநகை யாடிநிற்கும் பார்.

பாலைவனப்பயணம்(DESERT SAFARI IN DUBAI)

மகிழுந்தோ துள்ள மணற்பரப்பில் எங்கள்
மகிழுந்து சென்றது! நாங்கள்---மகிழ்ந்தோம்
மனத்திற்குள் அச்சத்தின் வேர்கள் படர
மணலில் விரைந்ததே உந்து.

கண்களுக் கெட்டிய தூரம் மணற்பரப்பே!
எங்கும் மணற்குன்று! அங்கங்கே---செங்குத்தாய்
நின்று வரவேற்க வண்டி விளையாடும்
பங்கில் கலந்திருந்தோம் பார்த்து.

பள்ளத்தில் நாமும் பயணிக்கும் நேரத்தில்
துள்ளி மணற்குன்றின் மீதுதான்---உள்ளம்
குலுங்க உயரத்தை நோக்கி விரைவோம்!
சிலிர்ப்பில் திளைப்போம் உணர்ந்து.

செங்க்குத்தாய் ஏற்றங்கள்!ஏறிவிட்டோம் என்றதுமே
செங்க்குத்தாய்ப் பள்ளம்! இவைகளே----அங்குதான்
மாறிமாறி வந்து விளையாட்டுக் காட்டவே
ஓடுதம்மா வண்டி உருண்டு.

வண்டியின் சக்கரத்தில் பாலை மணற்குன்றின்
வண்ண மணலோ சுழல்களாய்ப்---பின்னிச்
சிதறுகின்ற கோலங்கள் கண்கொள்ளாக் காட்சி!
படம்பிடித்தால் இன்புறலாம் பார்த்து.

தொடங்கிய நேரம் முதலாக நெஞ்சில்
பதற்றம் இருந்தாலும் வண்டி---தடம்பற்றி
வந்தேதான் சாலையைத் தொட்டதும் அப்பாடா!
என்போம் பெருமூச்சு விட்டு.

இவனே மனிதன்!

சூழ்நிலையே தோன்றாமல் இங்கே மனிதனாய்
வாழ்வதோ என்றும் எளிதுதான்--- வாழ்விலே
சூழ்நிலைகள் தாக்கியும் மாறா மனிதனாய்
வாழ்பவனே உண்மை மனிதன்

Friday, July 04, 2008

DEAR CHILD A TO Z

A B C
WIDE IS SEA
D E F
WIND IS ROUGH
G H I
MOUNTAIN IS HIGH
J K L
YOU STUDY WELL
M N O
DON’T SAY NO
P Q R
LITTLE IS STAR
S T U
ALL LOVE YOU
V W X
AVOID THE TRICKS
Y Z
YOU ARE PARENTS’ PET.

Wednesday, July 02, 2008

துள்ளாதே!

பிறக்கும் பொழுதில் எதைக்கொண்டு வந்தோம்?
இறக்கும் பொழுதில் எதைக்கொண்டு செல்வோம்?
பறந்து திரிந்தலைந்து சேர்த்தவை எல்லாம்
உடன்வராது! துள்ளாமல் வாழ்.

(கரு:பகவத் கீதை)

தந்தை!

கடமைக் கடலில் கரைந்திட்ட காயம்!
சிறப்புடன் இங்கே குடும்பம்--அகங்குளிர
வாழக் கரைகாட்டி நின்ற ஒளிவிளக்கு!
நேயம் வணங்கும் நினைந்து.

வசந்தம் வராது!

இளமை வசந்தத்தில் நானும் முதுமை
இலையுதிர்வை எண்ண மறந்தேன்---இலையுதிர்வும்
வந்தது! மீண்டும் வசந்தம் இயற்கைக்கே!
என்றும் எனக்கில்லை பார்.

Tuesday, July 01, 2008

கருவறை>>>கல்லறை

கருவறையை விட்டு வெளியிலே வந்தே
ஒருவாறாய் நாளும் வளர்ந்து--பருவங்கள்
மாற்றப் பணிக்களம் சென்று பதவிகள்
ஏற்றே பரபரப்போம் இங்கு.

காலைமுதல் மாலைவரை காற்றாய்ப் பறந்தோடி
மாலை மரியாதை சூழ்ந்துவர---வேலையிலே
மும்முரமாய் ஈடுபட்டே ஓர்நாள் பணி ஓய்வில்
வந்திடுவோம் வீட்டிற்குள் நாம்.

முதல்மரி யாதை கிடைத்திருந்த கோலம்
பதர்போல் உதிர்ந்திட பாரில்---நடக்கத்
தொடங்கியதும் கோடியில் ஓர்புள்ளி யாக
நடத்தும் உலகம் திரண்டு.

அனுபவங்கள் தேடிவந்தே தூண்டிலிட்டுப் பார்க்கும்!
முணுமுணுப்பு புன்முறுவல் எல்லம்---அணுவணுவாய்
தேறிவரக் கல்லறைக்குச் செல்கின்ற நாள்வரும்
மேதினியில் ! செல்வோம் பிரிந்து.

உலகே நகைக்கும்!

இருந்த சுவடின்றி மக்கி மறையும்
ஒருநிலை கொண்டது வாழ்க்கை--செருக்கின்
நிழலாக மாறி நிலைகுலைந்து வாழ்ந்தால்
உலகே நகைக்கும் உணர்.

பெற்றோர்!

உலகம் இதுதான்! உலவடா என்றே
வளமான கல்வியைத் தந்து--தரமாக
வாழ்வதற்கு வாய்ப்புகளால் நம்மை நிமிரவைக்கும்
வேர்களே பெற்றோர் விளம்பு

வேலி தாண்டாதே!

ஆறடி மேனியோ ஆணவம் கொண்டேதான்
நூறடித் துள்ளித் திரிந்தாலும்---கூறடி
தோழி! ஒருபிடி சாம்பல் இறுதியில்!
வேலியைத் தாண்டுதல் தீது.

தாய்மை!

பத்துமாதம் தான்சுமந்து தேன்மழலைச் சித்திரத்தை
முத்தாகப் பெற்றெடுத்துப் பார்க்கின்றாள்--அத்தருணம்
தாய்மை தலைநிமிர்ந்து நிற்கிறது! தந்தையும்
தாயும் பெருமிதத்தில் ! பார்.

இல்லத்தரசி!

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
இல்லறத்தில் நுழைந்தேன்!

பெரிய குடும்பம்
சுமைகள் அதிகம்!
அம்மியில் மசாலாபோல்
அரைபடுகின்றேன்!

எனது சின்னச்சின்ன
ஆசைகள் கூட
அருந்ததி நட்சத்திரம்போல்
எட்டாத தூரத்தில்!

ஆனால் எனக்குப் பட்டம்
இல்லத்தரசி!

வாழ்க்கை இதுதான்!

இருந்த இடத்திற்கே அன்னியமாய் மாறும்
ஒருநிலை வந்துவிடும் வாழ்வில்-- வருந்தாதே
ம்ண்ணக வாழ்வின் இயல்பே அதுதானே
எண்ணத்தில் ஏந்தியே வாழ்.