Monday, October 27, 2014

காலத்தை வீணாக்காதே!

காலத்தை வீணாக்காதே!
----------------------------------------------------------------
மாணவ மாணவியர் தங்கள் கவனத்தை
ஊனமாக்கும் உல்லாச ஊடகங்கள் உள்ளன!
ஆனமட்டும் இங்கே தவிர்த்துப் படித்தால்தான்
பாமணக்கும் முன்னேற்றம் உண்டு.

படிக்கின்ற நேரம் படிக்கவேண்டும் நாளும்!
படிக்கவில்லை என்றால் கடந்துவிடும்  காலம்!
நொடிப்பொழுதும் மீண்டும் கிடைக்காது கண்ணே!
படிப்பதை இன்றே படி

Sunday, October 26, 2014

அனைவரும் கண்டுகொள்ளாதது ஏன்?
(அரசியல் வாதிகள் உள்பட)
----------------------------------------------------------------------
வண்டிகளில் மாடுகளைப் பூட்டிச் சுமைகளைக்
கண்டபடி ஏற்றும் கொடுமைபோல்--இங்கே
சுமக்க முடியாமல் புத்தகத்தைத் தோளில்
சுமக்கின்றார் பிள்ளைகள் பார்.

அரசாங்கம், பள்ளிகளின் நிர்வாகம் எல்லாம்
அலட்சியம் காட்டுகின்றார்! தளிரின் முதுகு
வளைந்துவிடும் என்னும் மருத்துவர் சொல்லை
விளையாட்டாய் எண்ணுவதும் ஏன்?

திரைப்படமும் தூண்டுகோல்
--------------------------------------------------
பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து
வன்முறையைத் தூண்டுகின்ற குற்றத்தைக கண்முன்னே
இங்கே திரைப்படத்தில் நாளும் அரங்கேற்றும்
வன்கொடுமை மாறுவ தென்று?

எப்படித்தான் காண்பார் வழி?
-----------------------------------------------------------
சுற்றிவந்து சிக்கல் குறுக்கும் நெடுக்குமாய்க்
கட்டங்கள் போட்டேதான் சிக்கவைத்துப் பார்த்திருந்தால்
சிக்கித் திணறுகின்ற மக்கள் தவித்திருப்பார்!
எப்படித்தான் காண்பார் வழி?

அகர வரிசைக் கவிதை!
-----------------------
அன்றாடம் ஆசை இதயத்தில் ஈனமானால்
உன்னைத்தான் ஊர்சுற்றி என்றேதான்  ஏளனமாய்
ஐந்துபேரும் தூற்றித்தான் ஒண்டாமல் ஓடுவார்
ஔவைத்  தமிழால்  இகழ்ந்து.

வாலியைப் போற்றுவோம்
------------------------------------------------------------------------
வாலியின் பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தன!
காவியப் பாவலன் விண்னுலகப் பாவலனாய்
தூவுகின்றான் தேன்மழைச் சாரலைப் பாடலாய்!
பாவலனைக் காண்பதுதான் என்று?

பணிக்கள உறவு
--------------------------------------
பணிபுரிந்த நாளில் தினந்தோறும் பார்த்தோம்!
பணிககளம் விட்டுப் பிரித்தது  காலம்!
மணிக்கணக்கில் சந்தித்த நாமோ இன்று
நினைவிலே சந்திக்கும் வாழ்வு.

பாரம்
----------
சும்மா இருப்பதே இன்பமென்றே எண்ணித்தான்
சும்மா இருக்கின்ற  சோம்பேறிக் கூட்டத்தை
இம்மண்ணும் தாங்காமல் எள்ளி நகையாடும்!
மண்ணுக்கே பாரம் இவர்.

மத்தளம்
--------------
களைத்துப்போய்  வந்த மகனிடம் அம்மா
சளைக்காமல் அங்கே மருமகளைப் பற்றி
சரவெடி போட அறைக்குள் சென்றான்!
பரபர வென்றே வந்த மனைவி
தளமே அதிர்ந்திட மாமியாரைப் பற்றி
இரட்டை அணுகுண்டை வைத்தாள்! அவனோ
மிரண்டுபோய் நின்றான் மலைத்து

சுமைதாங்கி
----------------
நமக்குப் பிடிக்காத காட்சி நடக்கும்!
மனமோ தடுப்பதற்குத் துள்ளும்! ஆனால்
இனம்புரியா அச்சம் அமைதியாக்கிப் பார்க்கும்!
மனமோ சுமைதாங்கி தான்.

எல்லைப் பகுதியில் மக்கள்
---------------------------
திகிலின் பிடியில் தினசரி வாழ்க்கை!
தகிக்கும் உளைச்சல் மனத்தை உருக்க
இடிகளின் தாக்கம் மணித்துளி தோறும்!
திகிலின் பிடிநிலை பார்.

வகைவகையான  மனிதர்கள்
----------------------------
எதற்கெடுத் தாலும் கோபப் படுவோர்
எதற்கெடுத் தாலும்  சிரிப்பவர்கள் மற்றும்
முகவுணர்ச்சி காட்டாத மந்தமனம்  கொண்டோர்
தரணியில் மாந்தர் வகை.

வேகவேக மாக இடித்து  நடப்பவர்கள்!
வேகமற்ற ஆமைபோல் ஊர்ந்து நடப்பவர்கள்
ஆடலும் பாடலுமாய் ஆடி நடப்பவர்கள்
காதலில் ஒன்றிச்  சிரித்து நடப்பவர்கள்
மேதினி காட்டும் நடை.


தங்கள் பணிகளுக்கு மற்றவரை ஏவுவோர்
தன்வீட்டு வேலைகளை மட்டுமே செய்பவர்கள்
தன்வீட்டைப் பார்க்காமல் மற்றவர்க்குத் தொண்டுசெய்வோர்
அம்மா! மனிதரைப் பார்.

விட்டுக் கொடுப்போர்! முரண்டு பிடிப்பவர்கள்!
எப்படியும் சிண்டு முடியும் குணம்படைத்தோர்!
மற்றவரைப் பார்த்துப் பொறாமை அடைபவர்கள்!
இப்படியும் மாந்தர் உளர்.

இருப்பதை வைத்துத் திருப்தியுடன் வாழ்வோர்!
இருப்பதை விட்டுவிட்டு ஏக்கமுடன் வாழ்வோர்
துரும்பைத் தூணாக்கித் துள்ளிக் குதிப்போர்
அரும்பே! மனப்போக்கைப் பார்.

பணிவுடன் வாழ்வோர் பகட்டாக வாழ்வோர்
துணிவுடன் வாழ்வோர் பயத்துடன் வாழ்வோர்
கனிவுடன் வாழ்வோர் கடுகடுத்து வாழ்வோர்
மனித வகைகளைப் பார்.

பயன்படுதலே வாழ்க்கை
------------------------
விருந்தோம்பல் இல்லாத வீடும், விவேக
அரசாட்சி இல்லாத நாடும், பசுமை
மரங்களே இல்லாத காடும், தமிழே!
இருந்தும் பயனில்லை செப்பு.

அளவான மழையே அமுதம்
-------------------------
மழையதிகம் பெய்தால் பயிர்பச்சை நாசம்
மழைமிதமாய்ப் பெய்துவிட்டால் பற்றாக் குறைதான்
மழைபெய்ய வில்லை வறட்சியின் கோலம்
அளவே அமுதம் உணர்.

Monday, October 20, 2014

இப்படியும் சில வீடுகள்!
-------------------------
பெற்றோர்கள் பிள்ளைகளை நாள்தோறும் பாதுகாப்பாய்
அக்கறையாய் இங்கே வளர்த்துவிட்டார்!--நற்றமிழே!
அப்பா எனக்கென்றும்அம்மா உனக்கென்றும்
பெற்றோரைப் பாதுகாக்க பட்டிமன்றம் போடுகின்றார்
இப்போக்கு நல்லதா? சொல்.

Saturday, October 18, 2014

நட்பின் வலிமை
------------------
உயிருக் குயிராய்ப் பழகிய நட்பில்
விரிசல் விழுத்தால் துடிக்கும் மனது!
தவித்துத் தவித்துத் தத்தளிக்க வைக்கும்!
தெளிவின்றி வாழ்வோம் நிதம்.

விலங்கை விலக்கு!
------------------------
மதுப்பழக்கம் ஏற்படுத்தும் போதை தெளியும்!
மதிமயங்கும் காமத்தின் போதை தெளியும்!
அதிகார போதை தெளியாது கண்ணே!
அடிமைப் படுத்தும் விலங்கு.
ஓய்ந்தபின் வாழ்க்கை
-------------------------------------
நாட்டிலே பேச்சாளர்! போகும் இடமெல்லாம்
கூட்டம் அலைமோதும்! ஆட்டம் முடிந்தது!
வீட்டில் முடங்கிவிட்டார்! பேசத் துணயில்லை!
பேச்சாளர் வாழும் நிலை.

உன்னைத் திருத்து
---------------------
சுட்டு விரல்நீட்டி மற்றவரைக் குற்றமென்பாய்!
மற்ற விரல்கள் உனைநோக்கி உள்ளதைச்
சற்றே உணர்ந்தால் பிறர்மீது நீயிங்கே
குற்றம் சுமத்துவாயோ? கூறு.
தொடர்கதை
-----------------
திருமணம் செய்து பிள்ளைகளைப்  பெற்றே
ஒருவாராய் ஆளாக்கிப் பார்ப்பதற்குள் ஆலைக்
கரும்பாய்ப் பிழிந்தெடுத்துச் சக்கையாக்கிப் பார்ப்பார்!
இருந்தாலும் ஏற்போம் தொடர்ந்து.

டாஸ்மாக்கை மூடு
-----------------------
மதுக்கடையை மூடென்றால் நாட்டில்  சிறைதான்!
மதுக்கடையை மூடாதே என்றால்  சிலைதான்!
எதற்கும் கடைகளை மூடென்று சொல்வோர்
மதுக்கடையை மூடுவாரோ சொல்?

சாதித்துக் காட்டு
----------------------
வசதியாய் வாழ்ந்து வசதி குறைந்தால்
கடந்ததை எண்ணிக் கவலைப் படாமல்
நடக்கின்ற சோதனையைச் சாதனையாய் மாற்று!
தடங்கலைத் தாண்டு நிமிர்ந்து.
உறியடித்தல்
----------------
நெறிக்கம்பம் மீது நடுநிலைப் பானை
அறியாமைத் தோளில் அகங்காரம் ஏறி
உறியடிக்கத் தாவி உடைக்கத்தான்  பார்க்க
வெறியாட்டக் கோலத்தைத் தூற்று.
நடைமுறை உண்மை
------------------------
அண்ணனும் தங்கையும் பாச மலர்களாய்
அன்பில் திளைத்தனர் இல்லறம் காணுமட்டும்!
தங்களுக் கென்று துணையும் குழந்தையும்
வந்தபின்பு வேறுபட்டார் ஏன்?
காலத்தின் கட்டளை!
-----------+----------
இத்தனைநாள் யாரிங்கே எங்கெங்கே வாழ்வதென்ற
கட்டளையைக் காலம் விடுக்கிறது மானிடனே!
அத்தகைய கட்டளையை மாற்ற முயலலாம்!
வெற்றிதோல்வி ஏற்கப் பழகு.
வாழ்வின் இயல்பு
--------------------
தென்றல் வருடினால் இன்பமாய்த் தோன்றும்!
வன்புயல் தாக்கினால் துன்பங்கள் ஊன்றும்!
தென்றலும் வன்புயலும் மாறிமாறித் தோன்றுவதே
மண்ணக வாழ்க்கை அறி.

கவிதைகள்
மெய்ப்பொருள் காண்!
-----------------------
சொல்வதை எல்லாம் தவறாய்ப் புரிந்துகொண்டால்
சொல்லவும் தோணாது சொல்வதைக் காட்டிலும்
சொல்லாமல் செல்வதே மேலென்றே எண்ணுவார்!
சொல்வதில் உண்மை அறி.
கண்ணாடி
----------------------
பேச்சைப்  பரிமாறும் நேரத்தில் கேட்பவர்கள்
காட்டும் முகத்தின் உணர்ச்சிகளே,உள்ளத்தில்
ஏற்படும் தாக்கத்தைத் தெள்ளத் தெளிவாகக்
காட்டுகின்ற கண்ணாடி யாம்.
அனுசரிக்கப் பழகு
-----------------------
அனுசரித்துப் போனால் அமைதியான வாழ்க்கை!
அனுசரிக்க வில்லை அமளியான வாழ்க்கை!
அனுசரித்து வாழப் பழகிக்கொள்! கண்ணே!
குணத்தைப் பொருத்ததே வாழ்வு.
மயக்கும் மகுடி
----------------------
இலவசம் தள்ளுபடி என்பவை எல்லாம்
உலக வணிகத்தில் விற்பனை செய்யும்
களமமைக்கும் தந்திரங்கள்! மக்கள் தெரிந்தே
மயங்கும் மகுடியைப் பார்.
மழலையின் வலிமை!
-----------------------
மனைவி கணவன் கடும்சண்டை போட்டார்!
இணையர் மழலை சிணுங்கித்தான் வந்தாள்!
அணைத்துக் கொஞ்சினர்! சண்டை மறைந்து
மனையில் இறுக்கமில்லை பார்.

கண்ணேறும் பூசணியும்
------------------------
நாட்டிலே கண்ணேறு போகிறதோ இல்லையோ
போட்டிபோட்டுப் பூசணிக்காய் போட்டுடைத்து வீதியெல்லாம்
கீற்று வழுக்கிவிட வாகனங்கள் தத்தளிக்கும்
காட்சியைக் காண்கிறோம் நாம்.
வாய்மை வெல்லுமா?
--------------------------
செய்தி: நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம்
----------------------------
வாய்மைக்கும் நேர்மைக்கும் வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டு
நேர்மை தவறாத ஊழலற்ற ஆட்சியென்றால்
கேழ்வரகில் நெய்யொழுகும் என்றுசொல்லும் தந்திரந்தான்!
வாய்மையே வெல்லுமாம் நம்பு.
நன்றி மறவாதே
--------------------
நன்றி விசுவாசம் இல்லாத மாந்தர்கள்
என்னதான் இங்கே உயர்ந்தாலும் தாழ்ந்தவரே!
இந்தக் குணங்களைப் பின்பற்றும் மக்களை
என்றும் வணங்கும் உலகு.
நாவடக்கம் தேவை!
----------------------
கண்டபடி பேசுகின்ற நாவை அடக்காமல்
இங்கே நிதானம் இழந்துவிட்டால்---உன்னை
 மனசாட்சியே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
தினமும்  இகழும் நகைத்து.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வின் அனுபவம்
--------------------
இப்படித்தான் இங்கே நடக்கவேண்டும் என்றிருந்தால்
அப்படித்தான் எப்படியும் இங்கே நடந்துவிடும்!
இப்படியும் அப்படியும் செய்தால் தடுக்கவோ?
கற்றேன் அனுபவத்தில் நான்.

களங்கமின்றி வாழ்
-----------------------
வெள்ளைத் துணியில் கரும்புள்ளி ஏற்பட்டால்
எல்லோரும் அந்தக் கரும்புள்ளி தன்னையே
சொல்லிசொல்லிக் காட்டுவார்! பண்பில் களங்கமோ
புள்ளி அளவெனினும் தீது.