Wednesday, June 18, 2014

மதிமயக்கம் கொள்ளாதே!
-----------------------------------------------------
நடிப்பைத் தொழிலாக மேற்கொண்டு வாழும்
நடிகை நடிகரைத் தெய்வமாக எண்ணி
மதிமயங்கி வாழாதே! உங்குடும்பம் உன்னைக்
கதியென்று நிற்பதைப் பார்.
----------------------------------------------------------------------------------------

கோபம்!
---------------------
நெருப்புக் கணைகளாய்ச் சொற்கள் பறக்கும்!
நெருப்பாய் எதிர்கொண்டால் வளரும் பகைதான்!
நெருப்பை அணைக்கின்ற தண்ணீராய் மாறு!
உருவிழந்து போகும் சினம்.
--------------------------

Thursday, June 12, 2014

தமிழ்நாடு முதலமைச்சரின் அணுகுமுறை
-------------------------------------------------------------------------------
அம்மா உணவகம்-- அம்மா உப்பு
-------------------------------------------------------------------------------------------------------------
(அன்றாடம் பயன்படுத்துவோருக்கே இதன் அருமை புரியும்)
--------------------------------------------------------------------------------------------------------------------
உணவைக் கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்! அம்மா
உணவகத்தில் எல்லாம் மலிவுவிலை! மேலும்
உணவில் சுவைசேர்க்கும் உப்பையும் தந்தார்!
தினமும் நினைவில் நிலைத்து.
------------------------------------------------------------------------------------------------------------

Monday, June 02, 2014

அந்தமான் இன்பச் சுற்றுலா 16.05.14---20.05.14
------------------------------------------------------------------------------------------------
16.05.14
-----------------
சென்னை-அந்தமான் விமானப் பயணம்
-----------------------------------------------------------------------
வெண்மேகம் கீழும் கருமேகம் மேலேயும்
எங்கள் விமானம் நடுவில் பறந்திருக்க
கண்கொள்ளாக் காட்சியை வானம் வழங்கியதை
அங்கே ரசித்திருந்தோம் பார்த்து.

நீலவண்ண வானத்தில் வெண்பஞ்சு மேகங்கள்
கோலத் திருவுருவைக் காட்டி மிதந்திருக்க
பார்த்தோம்! ரசித்தோம்! விமானப் பயணத்தில்!
ஆர்வத்தில் துள்ளியது நெஞ்சு.

செல்லுலார் சிறை
==========================
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டு
வெங்கொடுமைச் சாக்காட்டில் வெந்துழன்ற மானிடர்கள்
தங்களது தேக்குமரத் தேகத்தில் வெள்ளையரின்
பொங்கும் மிருகவெறித் தாக்குதலை ஏற்றேதான்
தன்னந் தனியேதான் வான்பருந்தின் கால்களிலே
சின்னஞ் சிறிய பறவைகளாய்ச் சிக்கினர்!
நெஞ்சம் தகிக்கிறது போ!

மாலையில் அங்கே ஒலிஒளிக் காட்சிகண்டோம்!
ஓலம் அவலம் பெருங்கல்லாய் நெஞ்சத்தில்
பாரமாய் வந்தழுத்த வர்ணனை சோகத்தில்
ஈரந்தான் கண்கள்! அழுது.

17.05.14
-------------
ஜாரவாஸ் ஆதிவாசிகள் காடு--சுண்ணாம்பு பாறைக் குகை
----------------------------------------------------------------------------------------------------------
காட்டுவாசி ஆதிவாசி மக்களைப் பார்ப்பதற்கு
நாட்டுவாசி மக்கள் விருப்புடன் சென்றிருந்தோம்!
காட்டில் மரங்கள் உயரமாய் நின்றிருக்க
ஏற்றம் இறக்கம் தெருவை அழகுசெய்ய
ஊற்றெடுத்த ஆர்வத்தில் கண்கள் சுழன்றன!
காட்டுவாசி தாயை, குழந்தைகள் மூவரை
காட்சிப் பொருளாகப் பார்த்தோம் ஒருநொடி!
காடே அவர்களுக்கு வீடு.

படகுப் பயணம்
-----------------------------
நீரிலே மிதந்துசென்ற எங்கள் விசைப்படகு
வேலிபோல் சூழ்ந்த சதுப்புநிலத் தாவரங்கள்
மேலே திரண்டிருக்க எங்கள் படகோட்டி
நேரேயும் சுற்றி வளைந்து வளைந்துமே
லாவகமாய் ஓட்டிய வித்தையில் மெய்சிலிர்க்க
ஆவலுடன் சென்றிருந்தோம் அங்கு.

கடலலையை ஊடறுத்து எங்கள் படகு
அடலேறாய் முன்னேற சுண்ணாம்புப் பாறை
குகையிருக்கும் அக்கரையில் நாங்கள் இறங்கி
குகைநோக்கிச் சென்றோம் நடந்து.

குகைப்பாதை
------------------------------
கற்களும் பாறையும் சாலையாய் மாறிநிற்க
தத்தித் தவழ்ந்து தடுமாறிச் சென்றிருந்தோம்!
வெற்றியுடன் நாங்கள் குகையைக் கண்டதும்
அத்தனைத் துன்பமும் நீங்கித்தான் இன்பத்தின்
புத்துணர்ச்சி பெற்றோம் திளைத்து.

18.05.14
---------------------
ராஸ் தீவை நோக்கிப் பயணம்
---------------------------------------------
வெள்ளையர்கள் தங்கி வசதியாய் வாழ்வதற்குக்
கள்ளமனங் கொண்டே தொழிலாள வர்க்கத்தை
சொல்லொண்ணாத் துயரத்தில் தள்ளி நிறுவினர்!
செய்தபாவம் கொஞ்சமோ? செப்பு.

நிலநடுக்கம் தாக்கி நிலத்தை நடுவில்
பிளந்துவிட்ட காரணத்தால் வெள்ளையர் அஞ்சிக்
கலங்கியே ஓடிவிட்டார்! போர்ட்பிளேரைத் தங்கள்
தலைநகராய் மாற்றிவிட்டார் அன்று.

வசதியாய் வாழ்ந்திருந்த கட்டிடங்கள் எல்லாம்
தடயமாய் மாறி இடிந்துபோன காட்சி
படமாக நிற்கிறதே இங்குதான்! ஜப்பான்
பதுங்குகுழி பார்த்தோம் வியந்து.

மீன் கண்காட்சி
------------------------------
இத்தனை மீன்கள் கடல்வாழ் உயிரினமா?
எப்படி என்றே வியக்கின்ற சிந்தனையில்
அப்படி இப்படி என்றேதான் பார்த்திருந்தோம்!
இத்தனையா ஆழிக்குள்! ஓ!

19.05.14
-----------------
ஹேவ்லாக் தீவுக்குப் பயணம்
-----------------------------------------------------------
கப்பல் நிகர்த்தப் படகில் கடல்மீது
அப்பப்பா அப்படியும் இப்படியும் ஆடியும்
எப்படியோ துள்ளிவந்த பேரலையைச் சந்தித்து
சுற்றுலாத் தீவான ஹேவ்லாக் தீவுக்குள்
அக்கறையாய்ச் சென்றோம் மகிழ்ந்து.

மழையில் முழுதும் நனைந்தோம்! தெள்ளத்
தெளிவான கண்ணாடி போன்ற கடல்நீர்!
சிலிர்ப்புடன் கால்நனைத்தோம்! அந்தக் கடலில்
அலைகளின் கூத்தாட்டம் கண்கொள்ளாக் காட்சி!
அலைகள் உயர்ந்தால் மனிதரும் சேர்ந்தே
அலைகளுடன் ஆடிய கோலம் அருமை!
அலையின் இசையே இசை.

20.05.14
---------------
அந்தமானைச் சுற்றி இயற்கையின் தூரிகை
கண்கவரும் காட்சியைப் பச்சைப் பசேலென்றே
எங்கும் வரைந்திருக்கும் கோலத்தில் மெய்சிலிர்த்தோம்!
அந்தமான் என்றால் அழகு.

அந்தமானை விட்டே விமானத்தில் ஏறினோம்!
அந்தமான் நீங்கினாலும் உள்ளத்தில் அந்தமான்
சொந்தமான் போல நினைவிலே ஒன்றியது!
நெஞ்சத்தில் ஏக்கச் சுமை.