Friday, November 28, 2014

சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை அதிபர்
ராஜபக்சே இலங்கைத் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினார்
-------------------------------------------------------------------------------------------------
நம்புவோம் தமிழினமே!
-------------------------
சும்மா இருந்தாலே போதுமே! ராஜபட்சே
அங்கு நடக்கின்ற தேர்தலில் வெற்றி பெற
இந்தியா வாழ்த்துமாம்! தீவுத் தமிழினமே!
நன்றாக வாழலாம் நம்பு.

(28.11.2014)

தாயிடம் நாத்திகம்!
மனைவியிடம் ஆத்திகம்!
------------------------------------------------
திருமணத் திற்குமுன்! "கோயிலுக்கு வாடா!"
அருமையாய் அம்மா அழைப்பாள் மறுப்போம்!
பெருமை! பகுத்தறிவின் வெற்றி! நிமிர்வோம்!
திருமணம் ஆகி மனைவி அழைப்பாள்!
விருட்டென்று செல்வோம் விரைந்து! குழைவோம்!
உலுக்கும் பகுத்தறிவு பார்த்து.

ஆடிய ஆட்டமென்ன?
------------------------
உடலில் இரத்த ஓட்டம் உள்ள வரைக்கும்
அடங்கமாட்டோம்! சொன்னபடி கேட்கமாட்டோம்! ஆனால்
உடல்ரத்தம் சுண்டிவிட்டால் ஆட்டம் முடியும்!
அடங்கி முடங்குவோம் இங்கு.

Thursday, November 27, 2014

அஞ்சாதே! தயாராகு!
---------------------------
வயதான பின்பு மரணத்தை  ஏற்கும்
உரம்வேண்டும் நெஞ்சில்! தயாராக வேண்டும்!
மரணம் வருவ துறுதி! துணிந்தே
இயல்பாக ஏற்கப் பழகு.

குத்துமதிப்பாய் வாழாதே!
--------------------------
குத்து மதிப்பாய் வாழ முடிவெடுத்தால்
எப்படித் துல்லியமாய் வாழ்வது நாள்தோறும்?
அப்படி வாழ்ந்தால் முழுமை இருக்குமா?
இப்படி அப்படித்தான் வாழ்வு.

அக்கம்பக்கம் பழகு!
-------------------------
பக்கத்து வீடுகளில்  பேசிப் பழகவேண்டும்
அப்படிப் பேசினாலும் எல்லைக்குள் பேசவேண்டும்!
முற்றும் புறக்கணித்தல் நல்லதல்ல! நாலுபேர்
எப்படியும் தேவை நமக்கு.

கோபம் தவிர்!
-----------------
மற்றவர்கள குற்றம் சுமத்தினால் அத்தகைய
குற்றத்தில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்!
குற்றமில்லை என்றால் புறக்கணித்தல் நல்லது!
புற்றரவக் கோபம் தவிர்.

Wednesday, November 26, 2014

மற்றநாட்டு சட்டத்தை மீறாதே!
---------------------------------------------------------------------------------------------
எந்தெந்த நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்தாலும்
அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறாமல்
இந்தியர்கள் வாழவேண்டும்! மீறிவிட்டுப் போராடும்
ஒன்றைத் தவிர்ப்பது நன்று.

உயிரில் கலந்த மதுரை!
--------------------------
மீனாட்சி அம்மனின் கோயிலை மையமாக்கி
மாநகர் வீதி அடுக்காய் அமைத்துள்ள
கோலத்தின் பேரெழிலோ தாமரைப் பூவிரிந்த
காட்சியைக் காட்டுது  பார்.

எந்தநேரம் என்றாலும்  இல்லையென்று சொல்லாமல்
உண்ண உணவளிக்கும் தூங்கா நகரமாகும்!
செந்தமிழைப் பாவலர்கள் காக்க தமிழ்ச்சங்கம்
அன்றுகண்ட பண்டை நகர்.

சாதிமத பேதங்கள் இன்றி சமத்துவத்தின்
நீதிக்கே என்றும் கொடிபிடிக்கும் பொன்னகரம்!
ஓடிக் கடலில் கலக்காத வைகைத்தாய்
ஊடறுத்துச் செல்லும் நகர்.

அங்காடி பள்ளிகள் கல்லூரி ஆலைகள்
வண்டிப் பணிமனைகள் வண்ணத்தால் நெய்தேதான்
கண்ணைக் கவரும் நெசவுத் தறியாளர்கள்
என்றே சுழலும் நகர்.

தூரமற்ற சுற்றளவைக் கொண்டதால் எண்ணியதும்
ஆர்வமுடன் உற்றார் உறவினர் நண்பரை
காரில் மிதிவண்டி மற்றும் நடந்தேதான்
பார்த்து மகிழ்ந்திடுவோம் நாம்.

திருப்பரங் குன்றம் பழமுதிர் சோலை
தெருவில் தினமும் நிகழ்ச்சி விழாக்கள்
பெருமை பகர்ந்திடும் மல்லிகைப் பூக்கள்
அருமை மதுரை அழகு.

தெப்பக் குளமும் மகாலும் பெயர்சொல்லும்!
நட்புடன் மும்மதக் கோயில் வழிபாடு!
கட்சி அரசியல் பேச்சில் அனல்பறக்கும்!
எப்பொழுதும் கொண்டாட்டந் தான்.

அழகர் மலையழகும் ஆனை மலையும்
அழகான நாக மலையழகு மற்றும்
சிலைபோல் பசுமலையும் கண்கொள்ளாக் காட்சி!
இயற்கையின் கைவண்ணம் பார்.

பிறந்து வளர்ந்த மதுரை நகரை
உறவில் உயிரில் கலந்த நகரை
மறக்க முடியுமா? ஏக்கச் சுமையை
மறைக்க முடியுமா நான்?

கல்வி கருவிதான்!
-------------------------------------------
கல்வியைக் கற்பதால் மட்டுமே வாழ்க்கையில்
நல்லொழுக்கப் பண்புகளை ஏற்பாரோ--உள்ளத்தின்
உள்ளுணர்வில் ஏற்றால்தான் வாழ்க்கையில் பின்பற்றி
நல்லவராய் மாறிடுவோம் நாம்.

Tuesday, November 25, 2014

காலத்தை நம்பு!
--------------------------------------------
எப்போது யாருக்கு வாழ்வில் திருப்பங்கள்
எப்படி உண்டாகும் என்பதைக் காலந்தான்
தப்பாமல் உண்டாக்கி வாழவைக்கும் கண்மணியே!
எப்படியும் வாழ்வுண்டு நம்பு.

நிறைவின் விளிம்பில்
-------------------------------------------------
பிறந்தேன்! வளர்ந்தேன்! படித்தேன்! பணியில்
பறந்தேன்! கவிதைச் சிறகில் களித்தேன்!
குறைவற்ற இல்லறத்தைக் கண்டேன்!
நிறைவின் விளிம்பிலே இன்று..

திரைப்படத்தில் ரசிக்கலாம்
------------------------------------------------------------------
திரைப்படத்தில் காட்டுகின்ற கோபதாபக் காட்சி
அரங்கத்தில் இல்லறத்தில் நாள்தோறும் காணும்
களமானால் உள்ளத்தில் வேதனையே மிஞ்சும்!
திரைப்படமும் வாழ்க்கையும் வேறு

பகுத்தறிவால் எடைபோடு
------------------------------------------------
யாரென்ன சொன்னாலும் உந்தன் பகுத்தறிவால்
சீர்தூக்கிச் சிந்தித்தே நாளும் எடைபோட்டுப்
பார்த்து முடிவெடுத்தால் வாழ்விலே நிம்மதியின்
வேர்கள் தழைக்கும் உணர்.

மீத்தேன் திட்டத்தைக்
கைவிடு!    25.11.14
-------------------------
மீத்தேன் கிணறுகளைத் தோண்டத் தொடங்கிவிட்டால்
நாட்டின் விளைநிலங்கள் காணாமல் போய்விடும்!
ஆற்றுப் படுகைகளில் தண்ணீர் வறண்டுவிடும்!
வாட்டும் வறுமையில் தஞ்சை விவசாயி
ஓட்டம் எடுக்கின்ற சூழ்நிலை உண்டாகும்!
நாட்டுமக்கள் வாழ்க்கையைப் பாலை வனமாக்கும்!
ஆட்சியே! தூக்கம் கலை!

Monday, November 24, 2014

கோடிகள் பேசுமா?
----------------------
கோடிக் கணக்கில் வருமானம் பார்த்துவிட்டேன்!
தேடலில் வாழ்ந்தேன் குழந்தைகளைப் பார்க்கவில்லை!
ஓடிஓடி ஓய்ந்துவிட்டேன்! பிள்ளைகள் தேடலில்
ஓடுவதால் என்னுடன் பேசவோ நேரமில்லை!
கோடிகள் பேசுமா? காலம் நகர்கிறது!
ஈடில்லா ஏக்கத்தில் நான்.

இயல்பாய் இரு!
------------------
எதுநடந்த போதும் முகவாட்டம் வேண்டாம்!
எதுநடக்க வேண்டும் அதுநடந்தே தீரும்!
எதுவுமே நம்கையில் இல்லை! இயல்பாய்
எதையும் நினைக்கப் பழகு.

எபோலா ஒழிந்துபோ! 24.11.2014
--------------------------------------------------
கண்ணுக் கெதிரே மரணப் பிடிகளில்
அன்புக் குடும்பத்தார் மாண்டு மடிகின்றார்!
என்ன கொடுமை எபோலாவின் வன்கொடுமை!
இன்றே ஒழிந்துபோ நீ.

களர்நிலமா?விளைநிலமா?
------------------------------------------------
வளர்ப்பு முறைகள் சரியில்லை என்றால்
வளர்கின்ற பண்புகளும் தாறுமாறாய்ச் செல்லும்!
களர்நிலமா? இல்லை விளைநிலமா? எல்லாம்
வளர்ப்பைப் பொறுத்தது தான்.

இந்தியா டுடே இதழ் 26.11.2014
சாதனையாளர் பட்டியல்
-------------------------------------------------------------------------
என் தம்பி மகன் பீட்சா-ஜிகர்தண்டா இயக்குனர்
கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு வாழ்த்து
----------------------------------------------------------------------------
சாதனை யாளர்கள் பட்டியலில்  அய்ந்தாம்எண்
சாதித்தார் நம்கார்த்திக்! சோதனையின் கொம்பொடித்துச்
சாதித்துக் காட்டிவிட்டார்!வண்டமிழ்போல் வாழியவே!
சாதனையை வாழ்த்து மகிழ்ந்து.

வறுமையின் கொடுமை
-----------------------------------------------
ஒருவர் பயன்படுத்தி தேவையில்லை என்ற
பொருள்களை மற்றொருவர் தேவையென்று சொல்லி
கருத்தாய் எடுத்துப் பயன்படுத்து கின்றார்!
உருகவைக்கும் ஏழ்மையைப் பார்.

சொன்னா கேளுங்க!
------------------------------------------
குடித்துவிட்டு ஓட்டாதே! செல்போனைக் காதில்
பிடித்தபடி வாகனத்தை ஓட்டாதே! என்றே
அறிவுரை, எச்சரிக்கை தந்தாலும் மக்கள்
புறக்கணிப்பால் நேரும் விபத்து.

சட்டத்தை மதிப்போம்
------------------------------------------
சட்ட விதிகளைப் பின்பற்றி வாழ்ந்திருந்தால்
எக்கணமும் நிம்மதியாய் வாழலாம் கண்மணியே!
சட்டத்தை மீறி இருட்டுவாழ்க்கை வாழ்ந்திருந்தால்
அச்சமே வாழ்க்கையாகும் பார்.

நம்பிக்கை தளராதே!
------------------------
நம்பிக்கை வைத்தால் மணலும் கயிறாகும்!
நம்பிக்கை இல்லை கயிறும் மணலாகும்!
நம்பிக்கை என்றும் தளராமல் பார்த்துக்கொள்!
உன்வாழ்க்கை உன்வசந் தான்.

இருவேடம்!
------------------
இருக்கும் வரையில் புறக்கணித்து நிற்பார்!
இருந்தவர் இங்கே இறந்ததும் வந்து
பெருந்திரளாய்க் கூடிநின்றே தேம்பி அழுவார்!
இருவேடம் பண்பல்ல பார்.

மலர்க்கொத்தா? துப்பாக்கியா?
----------------------------------------------------
வணங்கும் கரத்தில் மலர்க்கொத்தா? போற்று!
அனல்கக்கும் குண்டேந்தும் துப்பாக்கி என்றால்
வணங்குகின்ற சாக்கில் உயிர்பறிக்க வந்த
குணக்கேடர் என்றேதான் தூற்று.

அன்றுமின்றும்
--------------------
காசில்லை! தன்னல மாசில்லை! கூடிவாழ்ந்தார்!
காசுண்டு! தன்னல மாசுண்டு!கூடிவாழும்
பாசமில்லை நேசமில்லை வேடதாரி யாகிவிட்டார்!
நாடறிந்த அன்றுமின்றும் பார்.

Saturday, November 22, 2014

நாம்தான் பொறுப்பு
----------------------
நாள்கள்தான் காரணமோ? கோள்கள்தான் காரணமோ?
ஆளும் மனமும் அணுகு முறைகளும்
கோலெடுத்து நாளும் குரங்காட்டம் போட்டுநின்றால்
யார்பொறுப்போ? நாம்தான் பொறுப்பு.

அற்பக் களை!
-------------------
விட்டுக் கொடுப்பவர்கள் வெற்றிக் கனிபறிப்பார்!
விட்டுக் கொடுக்காமல் வம்படி செய்பவர்கள்
கற்றவ ராயினும் அற்பக் களையாவார்!
வெற்றி வெறுக்கும் விளம்பு.

விதைப்பவர் ஒருவர்!
அறுப்பவர் ஒருவர்!
---------------------------
காற்று, பறவைகள் மண்ணில் விதைகளைப்
போட்டுவிட்டுச் செல்லும்! வளரும் பயிரினத்தால்
போட்டவர்க்கு நன்மையில்லை! மற்றவர்க்கு நன்மையுண்டு!
நாட்டில் தலைமுறைக்கே வாழ்வு.

-நேர சுழற்சி
--------------------
நாட்டுக்கு நாடு மணிப்பொறி நேரத்தில்
மாற்றங்கள் காண்போம்! அதற்கேற்ப --நாட்டுமக்கள்
அந்தந்த நேரம் தொடர்புகொண்டு பேசும் சுழற்சியில்
இங்கே படரும் உறவு.

கண்ணோட்டத்தின் வண்ணம்
------------------------------------------------------------
அற்புதமே என்று சிலபேர் மதிக்கின்றார்!
அற்பமே என்று சிலபேர் மிதிக்கின்றார்!
அற்புதமா? அற்பமா? பார்வையின் கண்ணோட்டச்
சித்திரத்தின் வண்ணமென்று சாற்று.

பனிமலை--எரிமலை
---------------------------------------
தோற்றம், புறத்தில் பனிமலை! உள்ளுக்குள்
சீற்றம் அனலாய் எரிமலை! இப்படிக்
காட்சிகள் மாறுகின்ற வாழ்க்கையில் எப்படி
ஊற்றெடுக்கும் நிம்மதி தான்.

ஆணவம் தீது!
-----------------
பெண்ணுக்கோ ஆணுக்கோ ஆணவக் காற்றடித்தால்
தன்னந் தனிமரமாய் மாற்றித்தான் நிற்கவைக்கும்!
 தன்னிழலே பார்த்து வெறுக்கும்! நகைத்திருக்கும்!
வண்டமிழே! ஆணவம் தீது.

Wednesday, November 19, 2014

சுணக்கம் தவிர்
----------------;------
யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் எந்தநேரம்
வேர்பிடிக்கும் என்றே தெரியாது--வாய்ப்பை
உணர்ந்து பயன்படுத்தி முன்னேற வேண்டும்!
சுணக்கம் சரிவைத் தரும்.

-பகட்டு பாதுகாப்பல்ல!
------------------------
நடமாடும் தங்க நகைக்கடையாய்ப் பெண்கள்
நடமாடும் கோலம் அவசியந் தானா?
பதறவைக்கும் இக்கோலம் பாதுகாப் பல்ல!
நடப்பை உணர்ந்து நட.

தோளிலா? காலிலா?
------------------------
வாழ்க்கை! நறுமணம் வீசும் மலர்மாலை!
தோளில் அணிந்து மகிழ்வதும் பிய்த்தெறிந்து
காலில் மிதித்துப் பாழாக்கிப் பார்ப்பதும்
வாழ்வின் மனப்போக்கு தான்.

நா என்செய்யும்?
-------------------
பற்களில் சிக்கிய செத்தையை நாக்குதான்
தொட்டுத் துருத்தித் துருத்தி வெளிக்கொணர்ந்து
விட்டுவிட்டே நிம்மதி காணும்! உளைச்சலை
எப்படி நாநீக்கும்? சொல்.--

மனித வெடிகுண்டு
--------------------
முடிந்தால் குடும்பத்தை ஒன்றுசேர்க்க வேண்டும்!
முடியவில்ல என்றால் ஒதுங்கிநிற்க வேண்டும்!
வெடிகுண்டாய் மாறி சிதைப்போரை நாடே!
மதிகெட்டோர் என்றேதான் சாடு.

Tuesday, November 18, 2014

சரக்கடிக்காதே கெட்டுப் போகாதே
நடுத்தெருவில் குடும்பத்தை நிக்கவைக்காதே

அம்மா மொகத்தை பாரு
அப்பா மொகத்தை பாரு
சம்சாரம் முகத்தை பாரு
பிள்ளைங்க முகத்தை பாரு

ஏக்கப் பெருமூச்சு
சோகச் சித்திர மாச்சு(சரக்கடிக்காதே)

ஒட்டிப் போன வயித்த்ப் பாரு
ஒலர்ந்து போன கன்னம் பாரு
குடியால வந்த வினை நெனச்சுப்பாரு
உடனடியா திருந்தப்பாரு
(சரக்கடிக்காதே)

போலித்தனம் வேண்டாம்
--------------------------
தெரியாத ஒன்றைத் தெரிந்தது போலத்
தெரியுமென்று சொல்லுகின்ற போலித் தனத்தால்
சிரிப்புக்கே ஆளாக்கிக் கேலிப் பொருளாய்த்
தரணியில் மாற்றிவிடும் சாற்று.

இருப்பதில் நிம்மதி காண்போம்
----------------------
உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
கணக்கிட்டுக் காலம் கொடுப்பதை வைத்து
மனநிறைவு கொள்தல் சிறப்பு.

கேட்டுப் பெறுவதல்ல
----------------------
கேட்டுப் பெறும் பொருளா மரியாதை?
காட்டும் பணிவில் நளினமான பண்புகளைப்
போற்றித் தருவார் மரியாதை மற்றவர்கள்!
போற்றுமாறு நாம்நடத்தல் பண்பு.

விழுந்தேனாம்!
11.11.2014
காலை 2.30 மணி
------------------
நின்றேனாம் சுற்றிச் சுழன்றேனாம் அப்படியே
கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தேனாம்
கண்ணீர் வழிய அலறித்தான் சூழ்ந்திருந்தார்
கண்விழித்துப் பார்த்தேன் திகைத்து.

பகட்டு, வேட்டு
---------------------+
உடலை மறைக்கத்தான் ஆடை! நாளும்
பகட்டைப் பறைசாற்ற தேவையில்லை ஆடை!
அகத்தின் எளிமையை ஆடையில்  காட்டு!
பகட்டு, வாழ்க்கைக்கு வேட்டு.

ஆட்டுவிக்கும் காலம்
------------------------
இப்படித்தான் வாழவேண்டும்என்றே கணக்கிடுவோம்!
 இப்படித்தான் வாழ்வதற்குக் காலம் வழிகாட்டும்!
அப்படித்தான் நம்மால் வாழ முடியுமிங்கே!
இத்தரணி வாழ்க்கை இது.
சரக்கடிக்காதே கெட்டுப் போகாதே
நடுத்தெருவில் குடும்பத்தை நிக்கவைக்காதே

அம்மா மொகத்தை பாரு
அப்பா மொகத்தை பாரு
சம்சாரம் முகத்தை பாரு
பிள்ளைங்க முகத்தை பாரு

ஏக்கப் பெருமூச்சு
சோகச் சித்திர மாச்சு(சரக்கடிக்காதே)

ஒட்டிப் போன வயித்த்ப் பாரு
ஒலர்ந்து போன கன்னம் பாரு
குடியால வந்த வினை நெனச்சுப்பாரு
உடனடியா திருந்தப்பாரு
(சரக்கடிக்காதே)

அஞ்சறைப் பெட்டி
       அன்று
------------------
அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களில்
என்னென்ன எங்கெங்கே உள்ளதென்று பெண்களோ
கண்களால் பார்க்காமல் கையால் எடுத்திடுவார்!
அன்றைய காட்சி இது.
-------------------------
                இன்று
--------------------------
கண்ணாடி மூடிபோட்ட அஞ்சப்றைப் பெட்டியில்
என்ன பொருட்கள் எங்கெங்கே உள்ளதென்று
கண்களால் பார்த்தேதான் பெண்கள் எடுக்கின்றார்!
இன்றைய காட்சி இது.

காட்டுமிராண்டி ஆக்கும்
டாஸ்மாக்கை மூடு
-------------------------
தந்தை குடிகாரன்! தங்கள் மகளையே
தந்தையை  நம்பி விடமுடி யாமல்தாய்
நொந்து நடுங்கும் செய்தியை நான்படித்தேன்!
கண்றாவி! டாஸ்மாக்கை மூடு

Monday, November 03, 2014

ஆபாசக் கண்காட்சி
-------------------------
பெண்களோ ஆண்களோ ஆடை அணிவதில்
என்றும் நளினம் இருக்கவேண்டும்! ஆபாசக்
கண்காட்சி ஆக்குவது நல்லதல்ல ! கண்மணியே
பண்பாட்டைக் காக்கவேண்டும் நாம்.

Sunday, November 02, 2014

சின்னத் திரையில்
----------------------------------
கொடுமை கடுமை பொறாமை குதர்க்கம்
சுடுசொல் வெறுப்பு  உருட்டல் மிரட்டல்
கடத்தல் உதைத்தல் பழித்தல் பிரித்தல்
தொடரின் கருவாகும் பார்.

தரமான ஊழலற்ற ஆட்சியைப்போல் சின்னத்
திரையில் அபூர்வமாய் நல்ல தொடர்கள்
தலைநீட்டிப் பார்ப்பதுண்டு! பார்த்து ரசிப்பார்!
கலையே சமுதாய ஆடி.

தொடர்மழை!
-----------------------------
சின்னத் திரைத் தொடர்களில் ஊற்றெடுக்கும்
கண்ணீர் பொழியும் தொடர்மழையை நாட்டுக்குள்
கொஞ்சம் திருப்பிவிட்டால் மக்களுக்குப் போதுமான
தண்ணீர் கிடைத்துவிடும் சாற்று

சேய்களின் கவசம்
-------------------------------------------
தாயின் அரவணைப்பும் தந்தையின் கண்டிப்பும்
சேய்களை நல்லவராய் வல்லவராய் மாற்றிவிடும்!
தாய்தந்தை காட்டும் அணுகுமுறை மட்டுமே
சேயின் கவசம் உணர்.

பொருளில்லார்க்கு
---------------------------------
வருமானம் இல்லாமல் வாழ்பவனை இங்கே
துரும்பும் மதிக்காமல் துள்ளித்தான் போகும்!
வருமானம் உள்ளவர்க்கே உண்டு மதிப்பு!
பொருளே  உயர்திணை! பார்.

சமத்துவம்
------------------------
பெண்களும் ஆண்களும் சேர்ந்தே  பணிகளில்
தங்களது ஆற்றலைச் சாதனையாய் மாற்றுகின்றார்!
பொன்னான வாய்ப்பில் சமத்துவம் கண்டுவிட்டார்!
என்றும் வளமாகும் வாழ்வு.

சமத்துவத்தை ஆக்கத்தின் வேராக்கி வாழ்ந்தால்
மணங்கமழும் வாழ்க்கை! வக்கிரமாய் மாற்றிவிட்டால்
மனதின் உளைச்சலில் நிம்மதி போகும்!
அனலில் புழுவாகும் வாழ்வு.
---------------------------------------------------------------------------------------------

பொறுப்புணர்ந்து செயல்படு
-------------------------------------------
அன்றாடம் வீடுகளில் சாலைகளில் குப்பையைக்
கண்ணுங் கருத்துமாய்த் துப்புரவு செய்தாலே
கண்ணாடி போலத்தான் சுத்தமாகும் நாடிங்கே!
என்று பொறுப்புணர்வார்? சொல்.

தூக்கு தண்டனையா?
-------------------------------------
ஈழத்தில் அப்பாவி மக்களைச்சுட்டொழித்த
காலனுக்கு யார்தருவார் தணடனை? கண்மணியே!
காலமெல்லாம் மீனவர்கள் இப்படியா வாழவேண்டும்?
பாரதப் பேரரசே சொல்.