Monday, February 28, 2011

மீனவரைக் காப்பது யார்?

==================================
இந்திய நாட்டின் அரசும் இலங்கையுடன்
எண்ணற்ற பேச்சுவார்த்தை மூலம் உணர்வுகளை
பண்புடன் இங்கே உரைத்தும் பயனில்லை!
இந்தியன்! என்செய்வான்? சொல்.

விலங்குகளைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு!
நிலமண்ணைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு!
தரணியிலே மீனவரைக் காப்பதற்கு நாடே!
ஒருசட்டம் இல்லையா? இங்கு!

நூற்றுக் கணக்கான மீனவரைச் சாகடித்தான்!
தூற்றாமல் பேச்சுவார்த்தை சொக்கட்டான் ஆடுகின்றார்!
ஏட்டுச் சுரைக்காய்த் தூது விடுகின்றார்!
காக்க முடியாதா? கூறு!

இலங்கை உணர்வை மதிக்கவேண்டும் என்றே
தயங்காமல் சொல்லும் குணத்தோரே! அந்தோ!
கலங்கிநிற்கும் மீனவரை நீங்கள் மதிக்கும்
உளம்பெற்றால் நன்றென்போம் நாம்.

எல்லையைத் தாண்டினால் சாகடிக்க வேண்டுமா?
எல்லையைத் தாண்டினால் காவலில் கொண்டுபோ!
இல்லையேல் நாட்டில் முறையிடு! இன்னுயிரைக்
கொல்வதற்கு நீயார்?.விளம்பு!

இலங்கையைக் கட்டுப் படுத்தும் துணிவை
இழந்ததேன் என்நாடே! இந்தியன் என்றால்
இலங்கைக்கேன் இந்த இளக்காரம்!அய்யோ!
துயரத்தைத் தீர்ப்பது யார்?

Sunday, February 27, 2011

சொந்தச் சிறகுகளுக்குள் குழந்தைகள்

===============================================
அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போகின்ற
பண்பாட்டின் கோலத்தில் வாழ்கின்ற காலகட்டம்!
எந்தநேரம் பெற்றோர் வருவார்கள் என்றேதான்
எண்ணத்தில் ஏக்கத்தைத் தேக்குகின்றார் பிள்ளைகள்!
வந்ததும் ஓடுகின்றார் பார்.

உள்நாட்டில் அம்மா ! வெளிநாட்டில் அப்பாதான்!
தள்ளுகின்றார் நாள்களைத்தான்!ஆண்டுக் கொருமுறை
பிள்ளைகள் அப்பாவைப் பார்க்கின்றார்!உள்ளத்தைச்
சொல்ல முடியவில்லை யே!

சொந்தநாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்க்கையைச்
சொந்தமாக்கும் சூழல்! குழந்தை வளர்ப்பிற்கு
இங்கிருந்து தாத்தாவோ பாட்டியோ செல்லவேண்டும்!
இங்காறு மாதங்கள்! அங்காறு மாதங்கள்!
திண்டாடும் வாழ்க்கை முறை.

காப்பகத்தில் சேர்க்கின்ற சூழ்நிலை வந்துவிட்டால்
ஏக்கமுடன் தான்வளரும் பிள்ளைகள்!பெற்றோரும்
ஆற்றாமைக் கோலத்தில் அன்றாடம் அல்லாடும்
தோற்றத்தில் வாழ்வார் துடித்து.

பாட்டியும் தாத்தாவும் உள்ள குடும்பத்தில்
காப்பகத் தேவை இருக்காது! பிள்ளைகள்
ஏக்கமின்றி நாள்தோறும் சொந்தச் சிறகுக்குள்
வாட்டமின்றி வாழ்கின்றார் இங்கு.

Saturday, February 26, 2011

மனித உடல் விந்தைப் புதிர்!

====================================
மனித உடலோ தொழிற்சாலை ஆகும்!
தனித்தனி யாகத் துறைகள் இயங்கும்!
அனைத்து உறுப்புகளும் சீராய் இருந்தால்
மனிதன் உணர்வான் நலம்.

தலைமுதலாய்க் கால்கள் முடிய நரம்பில்
சுரப்பிகள் தங்கு தடையின்றித் தத்தம்
வரம்பில் சுரந்திட வேண்டும்! இயக்கம்
வரம்புகளை மீறினால் வம்பு.

இரத்தத்தைக் கொண்டுசெல்லும் நாளங்கள் எல்லாம்
கவனமாய் எல்லா உறுப்புக ளுக்கும்
தவறாமல் ஏற்கும் அளவை வழங்கி
பயணிக்க வேண்டும் நிதம்.

ஆலை இயந்திரங்கள் கொஞ்சம் பழுதானால்
வேலையே நின்றுவிடும்! மேனி உறுப்புகளை
நோய்களோ மொய்த்தால் இயக்கம் சுணங்கிவிடும்
நோய்கள் முடக்கும் உணர்.

செரிக்கும் உணவில் இருக்கும் வளத்தை
சலிக்காமல் நித்தம் உறுப்புக ளுக்கே
அளிக்கும் பணியை அயராமல் செய்து
பலத்தை வளர்த்திருக்கும் பார்.

செரித்தது போக கழிவுகள் எல்லாம்
வெளியேற இங்கே திரவம் , திடமாய்
நிலைகளுக் கேற்பவே துப்புரவு வேலை
களைத்தான் நடத்தும் நிதம்.

கழிவுகள் தங்கிக் கடமுடா செய்தால்
நெளிவார் , சுருண்டேதான் சோர்ந்து தளர்வார்!
சுழியில் அகப்பட்ட தக்கைபோல் மாறி
சுழன்றே முணங்குவார் சொல்.

படைத்தது யாரோ?இயக்குதல் யாரோ?
படையின் பணிவைப்போல் கட்டளை இட்டே
தடையின்றி நாளும் நடத்துவது யாரோ?
விடைதெரியா விந்தைப் புதிர்.

Wednesday, February 23, 2011

இல்லறப் பத்து!

====================================
1.விருந்தோம்பல்
===================
விருந்தினர் வந்து கலந்துற வாடி
பெருமிதம் கொள்வதோ அந்தவீட்டின் ஆண்பெண்
விருந்தோம்பல் பண்பின் சிறப்பினால் தானே !
விருந்தோம்பல் இல்லறத்தின் வேர்.
-----------------------------------------------------------------------------------
2.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை
=====================================
விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கைக்
கற்றுக் கொடுக்கும் இல்லறத்தைப் போற்றுங்கள்!
குற்றம் குறைகளை ஊதிப் பெரிதாக்கும்
குற்றத்தைச் செய்யாமல் வாழ்.
-------------------------------------------------------------------------------------
3.இணக்கமுடன் வாழ்க
====================
கணவன் மனைவி கருத்தொரு மித்தே
இணக்கமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் என்றும்!
பிணக்கத்தை ஊடுருவ விட்டால் ஐயோ!
அணைத்துவிடும் நிம்மதியைத் தான்.
-------------------------------------------------------------------------------------
4.இருபாலரும் சமம்.
===================
மகனோ மகளோ சமமாய்க் கருது!
உகந்த உரிமைகளை நாளும் வழங்கி
அகத்திலே பேதமின்றி கல்வியைத் தந்தால்
அகங்குளிர வாழ்வார் வளர்ந்து.
-------------------------------------------------------------------------------------
5.பண்புகளை ஊட்டுங்கள்
======================
நல்லநல்ல பண்புகளை நாள்தோறும் ஊட்டுங்கள்!
நல்லவராய் வல்லவராய் வாழ வழிவகுத்து
எல்லோரும் போற்றிடவே ஏற்றமுறச் செய்யுங்கள்!
எல்லைக்குள் வாழப் பழக்கு.
-------------------------------------------------------------------------------------
6.குழந்தைகளின் கடமை
===========================
பெற்றோர் இமையாகிப் பிள்ளைகளைக் காப்பதுபோல்
பெற்றோரை இங்கே குழந்தைகள் நாள்தோறும்
உற்றதுணை யாகியே நன்றி மறவாமல்
பெற்றோரைக் காக்கவேண்டும் பார்.
-------------------------------------------------------------------------------------
7.பெரியவர்களின் ஆசிகள்
=======================
அன்புடன் பண்பும் பணிவும் ஒழுக்கமும்
உண்மையும் நேர்மையும் ஒன்றிக் கலந்திட
என்றும் பெரியவர்கள் ஆசியுடன் இல்லறம்
மங்கலமாய் வாழவேண்டும் பார்.
-------------------------------------------------------------------------------------
8.சுற்றத்தார் வாழ்த்து
=====================
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்றேதான்
சுற்றம் தழைத்திட நாளும் பழகவேண்டும்!
அக்கறை காட்டி அனைவரின் வாழ்த்தையும்
பெற்றேதான் வாழ்தல் சிறப்பு.
-------------------------------------------------------------------------------------
9.விலக்கவேண்டியவை
================= ========
கோபம்,பொறாமை,சிடுசிடுப்பு ஆகியவற்றை
வேகமாய்க் காட்டிப் பழகினால் பெற்றெடுத்த
ஈடற்ற பிள்ளைகளும் இங்கே வெறுத்திடுவார்!
கோடரியாய் மாறாமல் வாழ்.
-------------------------------------------------------------------------------------
10.பெற்றோரே வழிகாட்டிகள்
===========================
அம்மாவும் அப்பாவும் தென்றல்போல் பழகவேண்டும்!
அஞ்சாமல் பிள்ளைகள் தேடிவந்து பேசவேண்டும்!
கண்டிப்பின் எல்லையைப் பெற்றோர் உணரவேண்டும்!
அன்பும் அரவணைப்பும் பிள்ளைகள் நேர்வழியில்
பண்புடன் வாழவைக்கும் பார்.
------------------------------------------------------------------------------------------

Tuesday, February 22, 2011

உறவு நிலைக்கப் பழகு!
====================================
மிகவும் நெருங்கி உரசவும் வேண்டாம்!
மிகவும் விலகி நெருடாவும் வேண்டாம்!
அகங்குளிர நாளும் அளவுடன் என்றும்
உறவு நிலைக்கப் பழகு.
=========================================
சிரிப்பில் நடிகன்
==============================
வெளியில் சிரிப்பு!உள்ளேயோ கண்ணீர்
சிரித்துச் சிரித்துக் குலுங்கிடச் செய்து
சிரிப்பை நடிப்பாய் உதிர்த்திட நானோ
சிரிப்பில் நடிகனானேன் !செப்பு.
=========================================
தாக்குப் பிடி!
=================
மூக்குள்ள மட்டும் சளிச்சிக்கல் உண்டம்மா!
தாக்குப் பிடித்துச் சமாளிக்க வேண்டும்நாம்!
வாட்டுகின்ற சிக்கலும் வாழ்வில் இதுபோல்தான்!
தாக்குப் பிடிக்கப் பழகு.
============================================
மலைக்காதே!
=====================
அலைபோல வாழ்வில் திரண்டுவரும் சிக்கல்
நிலைகுலைய வைக்கும்! நிலைகுலைய வேண்டாம்!
மலைபோல் நிமிர்ந்தால் அலைசலித்தே ஓயும்!
மலைக்காதே!சந்தித்து நில்.
=============================================

கற்பூர வாசனை அறிவோம் !

கற்பூர வாசனை அறிவோம் !
==================================
குடும்பத்தின் கற்பூரத் தென்றலின் நல்ல
நறுமமணந் தன்னை அறியாதோர் வாழ்க்கை
கடும்புயல் சூழ்ந்த கடலாகும்!உள்ளம்
தடுமாறத் தத்தளிப்பார்! சாற்று .

நீருக்கே ஆபத்து

============================
பலமாடிக் கட்டிடங்கள் கட்டிப் பெருக்கி
நிலத்தடி நீரை தினமும் உறிஞ்சி
நிலத்தைச் சுரண்டினால் நீர்வளம் குன்றி
தளர்ந்திடும் மண்வளம் சாற்று.

பேராசை பேரழிவு!

==========================================
முட்செடியைத் தின்றே இரத்தம் வழிந்தாலும்
ஒட்டகம் முட்செடியை நாடிநிற்கும்!-- எப்படியம்
பேரழிவே என்றாலும் மாந்தர்கள் பேராசை
வேரறுக்க மாட்டார் விளம்பு.

பெண்களுக்கு அழகு மறைத்தல்

==========================================
முந்தானை மார்பில் சரிந்தால் இழுத்துவிட்டு
நெஞ்சை மறைத்திருந்த கோலம் மலையேறி
முந்தானை இன்றியே மார்பைத் திறந்துபோடும்
இந்த அலங்கோலம் ஏன்?

நயமாய்ப் பேசுவோம்

========================
வரிசையாய் இங்கே எறும்புகள் செல்லும்!
ஒருவிரல் வைத்தே இடையூறு செய்தால்
திரும்பிச் சினந்தே கடிப்பதற்குச் சீறும்!
துரும்பின் அளவாம் எறும்புக்கே கோபம்
வருமென்றால் மாந்தர் பொறுமையைக் குத்திப்
புரட்டும் நிலைஎடுத்தால் அந்தப் பொறுமை
சரியும்!சரியும்! பகுத்தறிவு கூறும்
வரம்பையும் மீறி மறந்தே சினப்பார்!
பரபரப் பாகப் பழிச்சொல் சுமத்தி
அவப்பெயர் சூட்டும் அறிவிலிப் போக்கால்
சுவர்தான் எழும்பும்!உறவில் விரிசல்
பரவும்! அமைதியோ கானலாய் மாறும்!
நயமுடன் பேசப் பழகு.

கலங்காதே !

=====================
வடம்பிடித்து வந்த, கடமை பதித்த
தடத்தைத் திரும்பித்தான் பார்த்தேன்! ஆகா!
தடங்களில் எல்லாம் சாதனைக் காட்சி!
அடங்காத இன்பம் எனக்கு.

முடிந்தன என்கடமை என்றே நிமிர்ந்தேன்!
முடிந்த கடமைக் கயிற்றில் கழற்ற
முடியாத சிக்கல் முடிச்சொன்றைக் கண்டேன்!
ஒடிந்ததே எனுள்ளம் பார்.

ஒருசமயம் அந்த முடிச்சு, கழன்றே
உருமாறிப் போகும்!தெளிவும் தெரியும்!
ஒருசமயம் மீண்டும் முடிச்சு விழுந்தே
நெருடலை ஏற்படுத்தும் நின்று.

திகைப்பேன்!திசையெல்லாம் பார்ப்பேன்! தவிப்பேன்!
நகைப்பேன் என்னுள்! உலகம் முழுதும்
நடைமுறை வாழ்வில் இதுதான் இயல்பாம்!
துடைப்பேன் துயரைத் துணிந்து.

நான்படும் வேதனைதான் இங்கே பெரிதென்றே
கூனிக் குறுகி அடுத்தவீடு சென்றுபார்த்தால்
வானளவு வேதனையை என்னிடத்தில் சொல்கின்றார்!
ஆனமட்டும் வாழ்வை நகர்த்து.

நம்மருகில் இங்கே இடிவிழுந்த போதிலும்
அஞ்சாமல் நாமோ புறக்கணித்து வாழவேண்டும்!
நெஞ்சம் கலங்காமல் வாழப் பழகவேண்டும்!
அன்றுதான் நிம்மதி பார்.

சிதற விடாதே !
======================

எடுத்ததற் கெல்லாம் குறைகாணும் போக்கை
உடனடி யாகத்தான் மாற்றிட வேண்டும்!
படரவிட்டு வேடிக்கைப் பார்த்தால் , கண்ணே!
உடைந்து சிதறும் உறவு.

அம்மா வருவாயா?
==================
பெற்றெடுத்தாய்!பேணி வளர்த்தாய்!நலங்காக்க
சற்றும் தளராமல் தோளில் சுமந்துகொண்டு
எத்தனை நாள்கள் நடந்தாய் சலிப்பின்றி!
எப்படி நன்றிசொல்வேன் நான்?

பள்ளியில் சேர்ப்பதற்குப் பள்ளிக்குப் பள்ளிதான்
துள்ளித் திரிந்தாயே ஆர்வப் பெருக்குடன்!
பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்த யாகத்தை
எள்ளளவும் இங்கே மறந்தால் மனிதனில்லை!
கல்லைக் கனியவைத்தாய் நீ.

படிப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டாய்!
நடிப்பின்றி பாசமழை என்மேல் பொழிந்தாய்!
துடிப்பாயே வீட்டுக்குத் தாமதமாக வந்தால்!
படிக்கட்டில் காத்திருப்பா யே!

பச்சிளம் பாலகனா? என்றுகேட்டால் டில்லிக்கே
அற்புத வேந்தன்தான் நீயெனினும் என்றும்
கற்கண்டு பாலகன்தான் நீயெனக்கு என்பாயே!
நற்றமிழே எங்குசென்றாய் நீ?

நான்கவிதை பாடியதை காதாரக் கேட்டுவிட்டாய்!
தேன்மணக்கும் சொல்லால் கவிராஜன் என்றாயே!
ஆண்மகன்தான் அம்மா!நானும் கலங்குகின்றேன்!
ஏன்சென்றாய் என்னம்மா சொல்!

ஐம்பத்து ஐந்துநாட்கள் அம்மா!மரணத்தின்
மொய்த்தெடுக்கும் அம்புகளால் பின்னிப் பிணைந்தேதான்
இவ்வுலகின் எந்த உணர்வுகளும் தோன்றாமல்
நைந்து படுத்திருந்தாய் நீ.

சுற்றிநின்று வேடிக்கைப் பார்த்திருந்தோம் நாள்தோறும்!
அற்புதமாய் ஆன்மீகப் பாடல்கள் பாடுவாயே!
நெக்குருகி கண்களில் நீர்வழியப் பாடுவாயே!
அத்தனை சாமிகளும் உன்னை வதைத்ததேனோ?
இப்பொழுதும் எண்ணிக் கலங்குகிறோம் என்செய்ய?
பட்டது நீதானே! நேரம் முடிந்ததும்
சிட்டென விண்ணில் சிறகடித்துச் சென்றுவிட்டாய்!
நித்தமும் ஏங்குகின்றோம் பார்.

அம்மா வருவாயா! என்னை அணைப்பாயா!
உன்மடியில் என்தலையை வைத்தே அழவேண்டும்!
தன்னந் தனிமையிலே நானோ தவிக்கின்றேன்!
என்றுதான் நிம்மதியோ?சொல்.

மதுரை பாபாராஜ்

Sunday, February 06, 2011

நெருடல்

==================
உறவும் உரிமையும் உள்ளவொரு வீட்டில்
உறவில் நெருடல்! உரிமையில் மாசு!
கடந்திடும் ஒவ்வொரு நாளும் கலக்கம்!
அகத்தினில் நிம்மதி ஏது?

வருமுன் காத்தல் அறிவு!

============================
விளைநிலங்கள் மற்றுமிங்கே ஏரிகளை எல்லாம்
வளைத்து மனைகளாய் மாற்றிப் பிரித்துப்
பளபளக்கும் வீடுகளைக் கட்டி முடித்து
வளமனைகள் ஆக்கிவிட்டார் பார்.

மழைக்காலம் வந்து புயலும் மழையும்
விளையாட எத்தனிக்கும் போது, மழைநீர்
வழிந்தோட எந்த வழியுமின்றி நின்று
சுழல்கிறதே திக்கித் தவித்து.

தெருவெல்லாம் வெள்ளம்! மனைதோறும் வெள்ளம்!
பெருக்கேடுத்தே ஓட நடுங்கித்தான் மக்கள்
தெருத்தெருவாய் செல்கின்ற காட்சியில் வாழ்க்கை
மிரட்சியுடன் போகிறதே இங்கு.

கீழ்த்தளத்தில் வெள்ளம்! விரைகின்றார் மாடிக்கு!
பார்த்திருப்பார்!காத்திருப்பார்! உண்பதற்குப் பொட்டலங்கள்
வானில் இருந்து விழுந்திடுமா? என்றேதான்
வானை அளந்திருப்பார் பார்.

ஏரிகள் வாய்க்கால்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு
நேர்த்தியாய்த் திட்டமிட்டுக் கட்டிடங்கள் கட்டினால்
பேரழிவை நாமும் தவிர்த்தேதான் வாழலாம்!
பேரச்சம் தேவையில்லை சொல்.

அரசு, பொதுமக்கள் கூட்டணி சேர்ந்த
இருபிரிவுந் தானே பொறுப்பேற்க வேண்டும்!
இருதரப்பும் இங்கே விதிகளை மீறும்
செருக்கை ஒழித்து விதியை மதித்தால்
பெருவெள்ளம் சூழுமா?துன்பந்தான் நேருமா?
வருமுன் காத்தல் அறிவு.

வீரரே ஓடுகின்றார்!

=========================
போர்க்களத்தில் பாய்ந்துவந்து தாக்கும் கணைகளைத்
தூள்தூளாய் ஆக்குகின்ற வீரர்கள் -- வாழ்க்கையில்
தாக்கும் கவலைக் கணைகளைச் சந்திக்க
ஊக்கமின்றி ஓடுகின்றார்!பார்.

Thursday, February 03, 2011

நடைமுறைக் காட்சிகள்

=========================
கடலின் கரையைக் கடல்நீர் அரிக்கும்!
மடைப்புனல் தானே மடையைச் சிதைக்கும்!
உறவிழை தன்னை உறவே அறுக்கும்!
நடைமுறைக் காட்சிகள் பார்.

பூனையும் எலியும்

==========================
கவலையென்னும் பூனை மனஎலியை விட்டுவிட்டுக்
கவ்விப் பிடித்துப் பிடித்தே அணுவணுவாய்த்
துள்ளவைத்துப் பார்த்தே உயிரைப் பறித்துவிடும்!
முள்ளாய் உறுத்துதடா வாழ்வு.

ஏழுகடல் தண்ணீரும் போதாது!
===============================
ஊழலின் தாண்டவம் ஊழியை விஞ்சிடும்!
ஆரவாரம் செய்யும் அரசியல் கரங்களின்
பாவக் கறைநீங்க ஏழுகடல் தண்ணீரும்
போதாது! போதாது! போ!
====================================================

ஏன்?
=============
கால்கள் வலிக்க வலிக்க நடக்கின்றேன்!
தோள்கள் தளரத் தளர சுமக்கின்றேன்!
ஊழ்வினைத் தாக்கிக் களிக்க ரசிக்கின்றேன்!
கோலங்கள் மாறுமா?கூறு.
==================================================

எடுபிடிக் கோலம்!
====================
அவரவர் சிக்கல் அவரவர்க்கு என்றே
அவரவர் இங்கே ஒதுங்கித்தான் செல்வார்!
அவரவர், நாளும் எடுபிடிக் கோலம்
அவரவர்க் கேற்ப எடுப்பதைப் பார்த்தால்
அவரவர் வாழ்வில் விதிகளின் தாக்கம்
தவறுவ தில்லை உணர்.
===================================================

Wednesday, February 02, 2011

சுய தண்டனை!
======================
என்னை மதித்துப் பழகு! செருப்பாக
என்றும் உழைத்திருப்பேன்!நண்பனே!-- என்னையோ
புண்படுத்திப் பார்த்தால் ஒதுங்கும் நிலையெடுத்து
தண்டனைக் குள்ளாவேன்! சாற்று.

Tuesday, February 01, 2011

திருந்து அல்லது திருத்து!
==========================
மரியாதை என்னவிலை? என்றேதான் கேட்டுக்
களிக்கும் படித்தவர்கள் கீழோர்- மரியாதைப்
பண்பில் மிளிரும் படிக்காதோர் மேலோர்!
உன்னைத் திருத்தப் பழகு.
==================================================
வாழ்வின் பயன்
===================
கற்பதன் நன்மையைச் சற்றும் உணராதோர்
கற்பூர வாசனை தன்னை அறியாதார்!
அற்பப் பதராவார்! அட்டுமந்தைக் கூட்டமாவார்!
கற்பதே வாழ்வின் ஒளி.
==================================================

வாய்மையே வெல்லும்!
=============================
ஊழலைச் செய்து விட்டே
ஊழலே இல்லை என்றால்
ஊழலும் மறைந்து போமோ?
ஊழலின் கறைதான் போமோ?

ஊரெலாம் கூட்டம் போட்டு
உரக்கவே கூவி னாலும்
பாரெலாம் நகைத்து நிற்கும்
பார்ப்பவர் பரிக சிப்பார்!

எத்தனை ஆவ ணங்கள்!
எத்தனை அறிக்கைச் சாட்டை!
எத்தனை விவர மூட்டை!
என்றெலாம் இருந்த போதும்

அத்தனையும் பொய்தான் என்றே
அடித்துதான் சொன்ன போதும்
புத்தனாய் மாறும் வேடம்
புவியிலே கலைந்து போகும்!

பொய்களின் கவர்ச்சி எல்லாம்
புள்ளியாய் மறைந்து போகும்!
மெய்வழி வாய்மை ஒன்றே
மிடுக்குடன் வென்று காட்டும்!

மதுரை பாபாராஜ்