Saturday, February 26, 2011

மனித உடல் விந்தைப் புதிர்!

====================================
மனித உடலோ தொழிற்சாலை ஆகும்!
தனித்தனி யாகத் துறைகள் இயங்கும்!
அனைத்து உறுப்புகளும் சீராய் இருந்தால்
மனிதன் உணர்வான் நலம்.

தலைமுதலாய்க் கால்கள் முடிய நரம்பில்
சுரப்பிகள் தங்கு தடையின்றித் தத்தம்
வரம்பில் சுரந்திட வேண்டும்! இயக்கம்
வரம்புகளை மீறினால் வம்பு.

இரத்தத்தைக் கொண்டுசெல்லும் நாளங்கள் எல்லாம்
கவனமாய் எல்லா உறுப்புக ளுக்கும்
தவறாமல் ஏற்கும் அளவை வழங்கி
பயணிக்க வேண்டும் நிதம்.

ஆலை இயந்திரங்கள் கொஞ்சம் பழுதானால்
வேலையே நின்றுவிடும்! மேனி உறுப்புகளை
நோய்களோ மொய்த்தால் இயக்கம் சுணங்கிவிடும்
நோய்கள் முடக்கும் உணர்.

செரிக்கும் உணவில் இருக்கும் வளத்தை
சலிக்காமல் நித்தம் உறுப்புக ளுக்கே
அளிக்கும் பணியை அயராமல் செய்து
பலத்தை வளர்த்திருக்கும் பார்.

செரித்தது போக கழிவுகள் எல்லாம்
வெளியேற இங்கே திரவம் , திடமாய்
நிலைகளுக் கேற்பவே துப்புரவு வேலை
களைத்தான் நடத்தும் நிதம்.

கழிவுகள் தங்கிக் கடமுடா செய்தால்
நெளிவார் , சுருண்டேதான் சோர்ந்து தளர்வார்!
சுழியில் அகப்பட்ட தக்கைபோல் மாறி
சுழன்றே முணங்குவார் சொல்.

படைத்தது யாரோ?இயக்குதல் யாரோ?
படையின் பணிவைப்போல் கட்டளை இட்டே
தடையின்றி நாளும் நடத்துவது யாரோ?
விடைதெரியா விந்தைப் புதிர்.

0 Comments:

Post a Comment

<< Home