கலங்காதே !
=====================
வடம்பிடித்து வந்த, கடமை பதித்த
தடத்தைத் திரும்பித்தான் பார்த்தேன்! ஆகா!
தடங்களில் எல்லாம் சாதனைக் காட்சி!
அடங்காத இன்பம் எனக்கு.
முடிந்தன என்கடமை என்றே நிமிர்ந்தேன்!
முடிந்த கடமைக் கயிற்றில் கழற்ற
முடியாத சிக்கல் முடிச்சொன்றைக் கண்டேன்!
ஒடிந்ததே எனுள்ளம் பார்.
ஒருசமயம் அந்த முடிச்சு, கழன்றே
உருமாறிப் போகும்!தெளிவும் தெரியும்!
ஒருசமயம் மீண்டும் முடிச்சு விழுந்தே
நெருடலை ஏற்படுத்தும் நின்று.
திகைப்பேன்!திசையெல்லாம் பார்ப்பேன்! தவிப்பேன்!
நகைப்பேன் என்னுள்! உலகம் முழுதும்
நடைமுறை வாழ்வில் இதுதான் இயல்பாம்!
துடைப்பேன் துயரைத் துணிந்து.
நான்படும் வேதனைதான் இங்கே பெரிதென்றே
கூனிக் குறுகி அடுத்தவீடு சென்றுபார்த்தால்
வானளவு வேதனையை என்னிடத்தில் சொல்கின்றார்!
ஆனமட்டும் வாழ்வை நகர்த்து.
நம்மருகில் இங்கே இடிவிழுந்த போதிலும்
அஞ்சாமல் நாமோ புறக்கணித்து வாழவேண்டும்!
நெஞ்சம் கலங்காமல் வாழப் பழகவேண்டும்!
அன்றுதான் நிம்மதி பார்.
0 Comments:
Post a Comment
<< Home