Sunday, February 06, 2011

வருமுன் காத்தல் அறிவு!

============================
விளைநிலங்கள் மற்றுமிங்கே ஏரிகளை எல்லாம்
வளைத்து மனைகளாய் மாற்றிப் பிரித்துப்
பளபளக்கும் வீடுகளைக் கட்டி முடித்து
வளமனைகள் ஆக்கிவிட்டார் பார்.

மழைக்காலம் வந்து புயலும் மழையும்
விளையாட எத்தனிக்கும் போது, மழைநீர்
வழிந்தோட எந்த வழியுமின்றி நின்று
சுழல்கிறதே திக்கித் தவித்து.

தெருவெல்லாம் வெள்ளம்! மனைதோறும் வெள்ளம்!
பெருக்கேடுத்தே ஓட நடுங்கித்தான் மக்கள்
தெருத்தெருவாய் செல்கின்ற காட்சியில் வாழ்க்கை
மிரட்சியுடன் போகிறதே இங்கு.

கீழ்த்தளத்தில் வெள்ளம்! விரைகின்றார் மாடிக்கு!
பார்த்திருப்பார்!காத்திருப்பார்! உண்பதற்குப் பொட்டலங்கள்
வானில் இருந்து விழுந்திடுமா? என்றேதான்
வானை அளந்திருப்பார் பார்.

ஏரிகள் வாய்க்கால்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு
நேர்த்தியாய்த் திட்டமிட்டுக் கட்டிடங்கள் கட்டினால்
பேரழிவை நாமும் தவிர்த்தேதான் வாழலாம்!
பேரச்சம் தேவையில்லை சொல்.

அரசு, பொதுமக்கள் கூட்டணி சேர்ந்த
இருபிரிவுந் தானே பொறுப்பேற்க வேண்டும்!
இருதரப்பும் இங்கே விதிகளை மீறும்
செருக்கை ஒழித்து விதியை மதித்தால்
பெருவெள்ளம் சூழுமா?துன்பந்தான் நேருமா?
வருமுன் காத்தல் அறிவு.

0 Comments:

Post a Comment

<< Home