Monday, January 31, 2011

முழுப்பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் வித்தகர்கள்!
=============================================================
அரசியல் கட்சி தொடங்கிவிட்டால் போதும்!
துரும்புகூட இங்கே தலைவராகித் துள்ளும்!
வரிசையாக நிற்கும் புகழ்பாடிக் கூட்டம்!
பரபரப்பாய் மாறிடுவார் பார்.

இதுவரையில் எங்கிருந்தார்? யாரறிவார் கண்ணே?
இதுவரையில் என்னசெய்தார்? யாரறிவார் கண்ணே?
புதுவேடம் பூண்டேதான் தாய்நாட்டைக் காக்கும்
புதுத் தியாகி யாவார் துணிந்து.

காசிருக்கும் !நெஞ்சிலே மாசிருக்கும்! கூட்டமோ
தேசத்தைக் காக்கும் தலைவரென்பார்! ஏந்தலென்பார்!
மாசு மறுவற்ற தங்கமென்பார்! புத்தரென்பார்!
பாச மழைபொழிவார் பார்த்து.

மாநாடு! ஊர்வலங்கள்! மாவட்டந் தோறுமிங்கே!
தேனாகப் பேசிடுவார்! கூட்டம் ரசித்திருக்கும்!
தேனாறு ஓடவைப்பார் என்றேதான் நம்பிடுவார்!
காணக்கண் கோடிவேண்டும் கூறு.

தேர்தல் களத்தில் தொடங்குகின்ற தில்லுமுல்லு
வேரோடி நன்கு விழுதுவிடும் ஆட்சியில்!
யார்பக்கம் சாய்ந்தால் அமைச்சராகும் வாய்ப்பிருக்கும்!
தேர்ந்தெடுப்பார் தன்னலத்தால் தான்.

நாட்டு நலமிங்கே பின்சென்று தங்கிவிடும்!
வீட்டு நலமே முனைப்பாக முன்நிற்கும்!
வாக்களித்தோர் செய்வ தறியாமல் தத்தளிக்க
ஏக்கமுடன் நாள்நகரும் கூறு.

பூசணிக் காய்தன்னைச் சோற்றில் மறைக்கின்ற
நாசக் கலையிலே வித்தகராய் மாறிடுவார்!
கூசாமல் பொய்சொல்லி வாய்மையே வெல்லுமென்பார்!
வேதனை தீருமா? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home