Tuesday, February 22, 2011

சிதற விடாதே !
======================

எடுத்ததற் கெல்லாம் குறைகாணும் போக்கை
உடனடி யாகத்தான் மாற்றிட வேண்டும்!
படரவிட்டு வேடிக்கைப் பார்த்தால் , கண்ணே!
உடைந்து சிதறும் உறவு.

அம்மா வருவாயா?
==================
பெற்றெடுத்தாய்!பேணி வளர்த்தாய்!நலங்காக்க
சற்றும் தளராமல் தோளில் சுமந்துகொண்டு
எத்தனை நாள்கள் நடந்தாய் சலிப்பின்றி!
எப்படி நன்றிசொல்வேன் நான்?

பள்ளியில் சேர்ப்பதற்குப் பள்ளிக்குப் பள்ளிதான்
துள்ளித் திரிந்தாயே ஆர்வப் பெருக்குடன்!
பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்த யாகத்தை
எள்ளளவும் இங்கே மறந்தால் மனிதனில்லை!
கல்லைக் கனியவைத்தாய் நீ.

படிப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டாய்!
நடிப்பின்றி பாசமழை என்மேல் பொழிந்தாய்!
துடிப்பாயே வீட்டுக்குத் தாமதமாக வந்தால்!
படிக்கட்டில் காத்திருப்பா யே!

பச்சிளம் பாலகனா? என்றுகேட்டால் டில்லிக்கே
அற்புத வேந்தன்தான் நீயெனினும் என்றும்
கற்கண்டு பாலகன்தான் நீயெனக்கு என்பாயே!
நற்றமிழே எங்குசென்றாய் நீ?

நான்கவிதை பாடியதை காதாரக் கேட்டுவிட்டாய்!
தேன்மணக்கும் சொல்லால் கவிராஜன் என்றாயே!
ஆண்மகன்தான் அம்மா!நானும் கலங்குகின்றேன்!
ஏன்சென்றாய் என்னம்மா சொல்!

ஐம்பத்து ஐந்துநாட்கள் அம்மா!மரணத்தின்
மொய்த்தெடுக்கும் அம்புகளால் பின்னிப் பிணைந்தேதான்
இவ்வுலகின் எந்த உணர்வுகளும் தோன்றாமல்
நைந்து படுத்திருந்தாய் நீ.

சுற்றிநின்று வேடிக்கைப் பார்த்திருந்தோம் நாள்தோறும்!
அற்புதமாய் ஆன்மீகப் பாடல்கள் பாடுவாயே!
நெக்குருகி கண்களில் நீர்வழியப் பாடுவாயே!
அத்தனை சாமிகளும் உன்னை வதைத்ததேனோ?
இப்பொழுதும் எண்ணிக் கலங்குகிறோம் என்செய்ய?
பட்டது நீதானே! நேரம் முடிந்ததும்
சிட்டென விண்ணில் சிறகடித்துச் சென்றுவிட்டாய்!
நித்தமும் ஏங்குகின்றோம் பார்.

அம்மா வருவாயா! என்னை அணைப்பாயா!
உன்மடியில் என்தலையை வைத்தே அழவேண்டும்!
தன்னந் தனிமையிலே நானோ தவிக்கின்றேன்!
என்றுதான் நிம்மதியோ?சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home