Tuesday, May 18, 2010

இதுதான் திருப்தி

======================
பெரும்பொருளை வானளவு தந்தாலும் மாந்தர்
திருப்தியுடன் போதுமென்று சொல்லமாட்டார் ! ஆனால்
ஒருசாண் வயிறளவு உண்பதற்குத் தந்தால்
திருப்தியுடன் போதுமென்பார்! செப்பு.

சேய்கூட நம்பாது!

-----------------------------------------
கூழுக்கும் கஞ்சிக்கும் ஏழைகள் தத்தளித்து
நாள்தோறும் திண்டாடும் வாழ்விலே விண்முட்டும்
கோயிலைக் காட்டிக் கடவுளை நம்பென்றால்
சேய்கூட நம்பாது செப்பு.

Tuesday, May 11, 2010

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

==============================
பெரியாழ்வார் திருமொழி
--------------------------------------------------------
298.ஆயர்கள் கன்றுகளை இங்கே திருடித்தான்
போவதைப்போல் என்மகளின் உள்ளம் கவர்ந்தேதான்
தாய்க்குத் தெரியாமல் கூட்டித்தான் சென்றுவிட்டான்
மாயவன் கண்ணன்தான் பார்.

இத்தகைய செய்கை எனது குடும்பத்தைத்
தத்தளிக்க வைத்துத் தலைகுனிய வைக்காதா?
அக்கறையில் தாய்தான் புலம்புகின்றாள் ! கண்ணனின்
அத்தகைய வன்செயல் கண்டு.

313.காளியன் நாகத்தின் பொய்கை கலங்கிட
தாவிக் குதித்து படங்களின்மேல் நாட்டிய
ஊழியைக் கண்ணனாட அந்தோ! சரணடைந்தான்!
காளியனை மன்னித்தான் பார்.

சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளங்கள்:
=================================================
318.பரசுராமன் ஏந்திய விஷ்ணு தனுசை
கரங்களில் ஏந்தி இலக்கெது என்றே
தவத்தை அழித்ததோர் செய்தியைச் சொல்லி
உவந்தான் அடையாளம் என்று.

319.நீங்களும் ராமனும் காட்டில் தனித்திருந்து
தேன்மணந்த நேரத்தில் தங்களது மல்லிகைப்
பூமணக்கும் மாலையால் அண்ணலைக் கட்டியதை
நாமணக்க சொன்னேன் பணிந்து.


320.கூனி விரித்த வலையிலே கைகேயி
ஊனமனம் கொண்டு தசரதன் நொந்துபோக
நாணமின்றித் தன்வரம் கேட்டே இராமனைக்
கானகம் செல்லவைத்தாள்!அண்ணலின் தம்பியும்
கானகத்தில் உள்ளான் தொடர்ந்து வந்தேதான்!
ஈனமனம் பெற்றவள் கைகேயியின் வஞ்சகம்
நானளிக்கும் செய்தி அறி.

321.கங்கைக் கரையிலே வாழும் குகனுடன்
பண்புமணம் வீசுகின்ற நட்பை இராமன்தான்
தன்மனம் நாட தழைக்கவைத்தான்! இக்காட்சி
இன்னொரு செய்தியாம் கேள்.

322.வனவாசம் ஏற்றபோது சித்ரகூடந் தன்னில்
மனமுவந்து வந்து இராமனைப் போற்றி
மனந்திருமபி நாடாள வாராய் என்றான்
குணக்குன்றாம் தம்பி பரதன்தான்! இந்த
மனங்கவரும் பண்பு நிகழ்வை நானும்
மணக்கும் செய்தியாய் உங்களுக்குச் சொல்லி
மனங்களிதது நிற்கின்றேன் நான்.

323.இந்திரன் மைந்தன் ஜயந்தனோ காகமாய்
வந்தேதான் உங்களது மார்பினைத் தீண்டிவிட்டான்!
கண்டதும் இராமன் சினந்து கணைவிடுத்தான்!
அண்டமெலாம் ஓடியும் தப்ப முடியாமல்
அண்ணலிடம் வந்தே சரணடைந்த நேரத்தில்
கண்னொன்றின் பார்வையோ போகுமாறு சாபமிட்டார்!
இந்தசெய்தி உங்கள்பார் வைக்கு.

324.பொன்னிற மானையோ நீங்கள் விரும்பியதால்
இன்னுயிர் ராமனும் வில்லேந்திச் சென்றவுடன்
தம்பி இலக்குவனும் தங்களின் கட்டளைக்கு
தொண்டுசெய்ய அண்ணனைத் தேடியே சென்றுவிட்டார்!
பண்பரசி! இச்செய்தியும் ஒன்று.
============================================================
325.வானரச் சேனை திசைநான்கில் சென்றதும்
ராமனும் என்னிடம் இந்த அடையாளம்
தேன்மொழியில் சொல்லித்தான் இந்தக் கணையாழி
ஏந்தியேதான் செல்லென்றார் தந்து.
============================================================
326.சிவதனுசு வில்லை முறித்த இராமன்
கரத்தில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்தாள்!
சரியான செய்திகள் என்றேதான் சொல்லிக்
களித்திருந்தாள் சீதைதான் அங்கு.

(அனுமன் சொல்லிய அடையாளங்கள் முடிந்தன)

=================================================================
443.நெய்க்குடத்தில் ஏறும் எறும்புகள் போலத்தான்
மொய்த்திருக்கும் நோய்களே! என்னுடலை விட்டேதான்
துய்க்காமல் சென்றிடுவீர்! என்னுள் திருமால்தான்
மெய்க்காவல் காக்கின்றார் பார்.

477. ஆழிக்குள் சென்றேதான் நீரெடுத்துக் கொண்டுவந்து
ஊழியிலும் அந்தத் திருமாலின் மேனிபோல்
வானம் கறுத்தும் வலக்கரச் சக்கரம்போல்
ஊனமாக்கும் மின்னலை உண்டாக்கி, ஏந்துகின்ற
சங்காம் வலம்புரி போல இடிமுழங்க
விண்ணகமும் போற்றுகின்ற சார்ங்கமெனும் வில்லிருந்து
அம்புமழை பெய்ததுபோல் மண்மேல் மழைகொட்ட
அன்புடனே வாராய் வருணனே! வேண்டியேதான்
இங்குநாங்கள் மார்கழியில் நீராட இவ்வுலகம்
மங்கலத்தில் பொங்கவேண்டும்!வா.


609.திருவரங்க நாயகன் செல்வ வளத்தைப்
பெருமலைபோல் பெற்றிருந்தும் என்கோல் வளையை
உருவிவிட்டார்! அன்பர் குறையிதனால் தீர்ந்தே
திருப்தி அடைவாரோ? செப்பு.

612.கைப்பொருளை மட்டும் கவர்ந்திட வில்லையடி!
மெய்ப்பொருளை மேனியை எல்லாம் அபகரித்தார்!
வைத்தவிழி நோகத்தான் பார்க்கவைக்கும் எம்பெருமான்
வித்தையினை என்சொல்ல?நான்.

தேவகியின் நிலையே இன்றும் தொடர்கிறது.
================================================
கண்ணனைப் பெற்றவள் தேவகி! ஆனாலும்
கண்ணன் புரிந்த குழந்தைக் குறும்புகளைக்
கண்ணாரக் கண்டு களித்தாள் யசோதைதான்!
இன்புற தேவகி பேறுபெற வில்லையே!

இன்றிங்கே பெற்றோர் பணிகளுக்குச் செல்கின்றார்!
கண்குளிர தேன்மழலை செய்யும் குறும்புகளைக்
கண்டு கழிப்பவர்கள் தாத்தாவும் பாட்டியும்தான்!
இன்புறும் அப்பேறு பெற்றவர்க் கில்லையே!
இன்றும் தொடர்கதைதான்! பார்.
==================================================
816. திருச்சந்த விருத்தம் --(திருமழிசை ஆழ்வார்)
===================================================
நிற்பதும் ஓர் வெற்பதந்து இருப்பும்விண் கிடப்பதும்.....
===================================================
வேங்கடத்தில் மாதவன் நிற்பான்! வைகுண்டம்
ஏந்துவதோ வீற்றிருக்கும் கோலம்!அலைவீசும்
பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்ட கோலமாம்!
பாக்கள் புகழ்பாடும் முக்கோலக் காட்சிகள்
நீக்கமற என்நெஞ்சில் அம்மா!நடக்கிறதே!
பாக்யவான் நான்தான் பார்.
=========================================================

Thursday, May 06, 2010

கம்பராமாயணக் காட்சிகள்

இராவணன் ஜடாயு போர்:

கொடியை அறுத்தல்
========================
இடிப்பு ஒத்த முழக்கின்,இருஞ்சிறை வீசி எற்றி,
முடிப் பத்திகளைப் படிஇட்டு, முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்றவன் , காண்தகும் நீண்ட வீணைக்
கொடிப்பற்றி ஒடித்து , உயர்வானவர் ஆசி கொண்டான்.(3525)
=============================================================
பத்துக் கிரீடத்தைப் பந்தாடித் தள்ளிவிட
எத்தனித்துப் பாய்ந்த சடாயுவோ நீளமான
வீணைக் கொடியினைக் காற்றிலே பந்தாட
வானவர்கள் வாழ்த்தினார் அங்கு.

வில்லைச் சிதைத்தல்
=======================
சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்ட, சிறகால் அடித்தான் சில: வள் உகிரால்
கண்டப்படுத்தான் சில:காலனும் காண உட்கும்
துண்டப்படையால்,சிலைதுண்ட துண்டங்கள் கண்டான்.(3527)
===============================================================
மழைப்பெருக்காய் அம்புகளோ ஒன்றுசேர்ந்து தாக்கி
நிலைகுலைய வைத்தான் இராவணன்! ஆனால்
கலங்காமல் மூக்கால் சடாயுவோ வில்லை
உலுக்கி ஒடித்துவிட்டான் அங்கு.
===============================================================

காதணியைப் பறித்துச் செல்லுதல்
======================================
மீட்டும் அணுகா, நெடுவெங்கண் அனந்த நாகம்
வாட்டும் கலுழன் என, வன்தலை பத்தின்மீதும்
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேமவில்கால்
கோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான்.(3528)
===================================================================
இருப்புவில்லை அங்கே இராவணன் முந்தி
கரங்களால் தூக்கி வளைப்பதற்குள் மூக்கால்
இராவணனின் பத்துத் தலைகளின் மீதும்
உராய்ந்து காதுகளின் குண்டலங்கள் தம்மைப்
பறித்தெடுத்து மேலே கிளம்பி சடாயு
மறைந்தது வானிலே சென்று.

தேவர்கள் அஞ்சுதல்
=========================
எழுந்தான் தட மார்பினல், ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிடப் பெய்து, எடுத்து ஆர்த்து, அரக்கன்
பொழிந்தான்,புகர் வாளிகள் மீளவும்;"போர்ச் சடாயு
விழுந்தான்" என அஞ்சினர், விண்ணவர் வெய்து உயிர்த்தார்.(3529)
==================================================================
கழுகு சடாயுவின் மார்பினை நோக்கி
அழுத்தமாக ஈரேழு அம்புகளை விட்டான்!
அழுந்திப் பாயாமல் வந்தன! மேலும்
மழைபோல் அம்புகளைக் கொட்டினான்! தேவர்
நிலைகுலைந்தார்! கண்முன் சடாயு விழுந்தான்!
மலையென அஞ்சிப் பெருமூச்சு விட்டார்!
கழுகரசன் தப்பினான் பார்.
==================================================================
சடாயு ராவணனின் கவசத்தை அறுத்து எறிதல்
==================================================
ஒத்தான் உடனே உயிர்த்தான்;உருத்தான்;அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால்
கொத்தா, நகத்தால் குடையா,சிறையால் புடையா ,
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான்.(3531)
===========================================================
மயங்கிக் கிடந்தவன் மீண்டும் எழுந்தான்!
இராவணனின் தோள்களில் தாவிக் குடைந்தான்!
இராவணன் மார்புக் கவசத்தை வீழ்த்தி
இராவணனை அஞ்சவைத்தான் அங்கு.
================================================================

வில்லைப் பறித்தல்
==================================
அறுத்தானை, அரக்கனும்,ஐம்பதொடு ஐம்பது அம்பு
செறித்தான் தடமார்பில்;செறித்தலும்,தேவர் அஞ்சி
வெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லை மூக்கால்
பறித்தான் பறவைக்கு இறை,விண்ணவர் ஆர்ப்ப.(3532)
==========================================================
அரக்கனோ அம்புகளை மார்பில் செலுத்த
அரண்டனர் தேவர்கள்! ஆனால் சடாயு
அரக்கனின் வில்லையோ பற்களால் பற்றி
தளராமல் கவ்விநின்றான் காண்.

சடாயு வில்லை ஒடித்தல்
=========================
மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட,
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி,
தாளால் இறுத்தான், தழல்வண்ணன் தடக்கை வில்லைத்
தோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன்.(3534)
==================================================================
வாயிலே கவ்விய வில்லைக் கைகளாலே
வாயில் இருந்தே எடுத்தேதான் கால்களால்
பாரதிர தேவர் மகிழ ஒடித்தெறிந்தான்!
வீரம் வென்றதுபார் அங்கு.
--------------------------------------------------------------சடாயு சூலப் படையைத் தாக்குதல்
=======================================
"ஆற்றான் இவன் என்று உணராது; என் ஆற்றல் காண்"என்று ,
ஏற்றான் எருவைக்கு இறை, முத்தலை எஃகம், மார்பில்;
"மேல் தான் இது செய்பவர் யார்?" என, விண்ணுளோர்கள்
தோற்றாது நின்றார், தம தோள்புடை கொட்டி ஆர்த்தார்.(3536)
==============================================================
சூலப் படையை ஏவினான் அவ்வரக்கன்!
சூலா யுதந்தன்னை மார்பிலே ஏந்தினான்
நாலா புறம்நின்ற தேவர்கள் பாராட்டி
தோள்தட்டி நின்றார் மகிழ்ந்து.

சூலப் படை திரும்பி இராவணனை அடைதல்
====================================================
பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்,
இன்நோக்கியர் இல்வழி எய்திய நல் விருந்தும்,
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த
மென்நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அவ்வேல்.(3537)
==================================================================
விலைமாதின் இன்பம் கிடைக்காமல் நொந்து
தலைகுனிந்து செல்லும் வறியவர்கள் போல,
விருந்தோம்பல் அன்பு கிடைக்காத போது
விருந்தினர்கள் அங்கே விருந்துண்ணோம் என்றே
திரும்புகின்ற கோலத்தை ஏந்துவது போல ,
தவமேற்கும் யோகியைக் காதல் வலையில்
தவிக்கவைக்க பெண்டிர்கள் கொண்ட ஆசை
தவிடுபொடி யாகிட அத்தகைய மாதர்
புவியில் தலைகுனிந்து வந்தவழி பார்த்துத்
திரும்புவதைப் போல, இராவணன் எய்த
செருக்குள்ள முத்தலைச் சூலமும் நாணித்
திரும்பியது அரக்கனிடம் !செப்பு.
------------------------------------------------------------------------------------

தேர்ப்பாகன் தலையைச் சடாயு அறுத்தெறிதல்
=============================================================
வேகம்முடன், வேல் இழந்தான் படை வேறு எடாமுன் ,
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்
பாகன் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்
மோகம்படைத்தான் உளைவுஎய்த, முகத்து எறிந்தான்.(3538)
=================================================================
அடுத்தடுத்து ஆயுதத்தை ஏந்தி வீச,
எடுப்பதற்குள் தேர்ப்பாகன் நோக,தலையை
அறுத்தெறிந்தான் அங்கே சடாயு ! அரக்கன்
முகத்தில் எறிந்தான் விரைந்து.
-------------------------------------------------------------------------------------
சடாயு நிலத்தில் விழுதல்
======================================
எறிந்தான்தனை நோக்கி , இராவணன், நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான்; முனிந்து , ஆண்டது ஓர் ஆடகத் தண்டு வாங்கி,
பொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழ, புடைத்தான்;
மறிந்தான் எருவைக்கு இறை, மால்வரை போல மண்மேல்.(3539)
==================================================================
தண்டா யுதத்தை எடுத்தான் இராவணன்!
அந்தோ! நெருப்புக் கொழுந்தெரிய தாக்கினான்!
அன்புக் கழுகரசன் மண்ணில் விழுந்துவிட்டான் !
பெண்ணரசி துன்புற்றாள் பார்த்து.

தேர்க்குதிரைகளைச் சடாயு அழித்தல்
=========================================
பாய்ந்தான்; அவன்பல் மனித்தண்டு பறித்து எறிந்தான்;
ஏய்ந்து ஆர்கதித் தேர்ப்பரி எட்டினொடு எட்டும் எஞ்சித்
தீய்ந்து ஆசுஅற வீசி, அத்திண் திறல் துண்ட வாளால்
காய்ந்தான்; கவர்ந்தான் உயிர்; காலனும் கைவிதிர்தான்.(3542)
===============================================================
சீதை துயருற்ற கோலத்தைக் கண்டேதான்
வேகமாய்ச் சடாயு பறந்தேதான் தண்டத்தை
தாகமுடன் கைப்பற்றி வீசி எறிந்தான்!
வாகாக மூக்கைப் பயன்படுத்தி தேரிலே
தோகைபோல் பூட்டிய துள்ளும் பதினாறு
வேகக் குதிரைகளை வாளால் வன்புயலாய்
வீசி அழித்திட்டான்! ஆற்றலைக் கண்டேதான்
ஓடினான் கூற்றுவன் அங்கு.

இராவணன் தேரையும், அம்பறாத்
தூணியையும் சடாயு அழித்தல்
=================================================
திண்தேர் அழித்து,ஆங்கு அவன் திண்புறம் சேர்ந்த தூணி
விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இல்லாமை ,
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான் .(3543)
===========================================================
கருமியின் பெட்டியில் பூட்டிய செல்வம்
ஒருவருக்கும் என்றும் பயன்படாது! வில்லை
இழந்த இராவணனின் அம்புகளும் அங்கே
பயனின்றி அம்பறாத் தூணியில் தங்கும்
நிலையில் இருந்ததைக் கூரிய காலால்
மலைத்திடும் வண்ணம் பிடுங்கி, சடாயு
நிலைகுலைய வீசினான் பார்.


இராவணன் மூர்ச்சித்து விழுதல்
--------------------------------------------------------------
மாச்சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி , சிறகால் புடைத்தான் ; உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்;
"போச்சு;இத்தனை போலும்நின் ஆற்றல்?" எனப் புகன்றான்.(3544)
=================================================================
அரக்கன் இராவணன் மார்பிலும் தோள்கள்
பரப்பிலும் ஓங்கி சடாயு அடித்தான்!
தரைமீது மூர்ச்சித்து வீழ்ந்தான்! மயங்கிச்
சரிந்தான் தலையினைச் சாய்த்து.

இராவணன் வாள்கொண்டு சடாயுவைத் தாக்குதல்
========================================================
அவ்வேலையினே முனிந்தான்; முனிந்து, ஆற்றலன்;அவ்
வெவ்வேல் அரக்கன் விடல்ஆம் படை வேறு காணான்;
"இவ்வேலையினே, இவன் இன் உயிர் உண்பென்" என்னா,
செவ்வே, பிழையா நெடுவாள் உறைதீர்த்து, எறிந்தான்.(3545)
=============================================================
குறிதவறா சந்திர காசமென்னும் வாளை
உறையில் இருந்தே எடுத்தான்! வீசி
எறிந்தான்! சடாயு சிறகுகளை வெட்டி
எறிந்தது! தத்தளித்து மண்ணில் விழுந்தான்!
அன்று, மலைகளுக் கெல்லாம் சிறகுகள்
கொண்டிருந்த வாய்ப்பால் இடம்பெயர்ந்து சென்றேதான்
துன்பத்தைத் தந்தன! வானரசன் இந்திரன்
தன்னுடைய வச்சிரா யுதப்படை கொண்டேதான்
தாக்கிச் சிறகுகளை வெட்டி எறிந்துவிட்டான்!
அப்போது மண்ணில் விழுந்த மலைபோல
இப்போது இச்சடாயு வீழ்ந்தான் சிறகிழந்து
குற்றம் நிமிர்ந்தது வென்று.


சீதையை இராவணன் அசோகா வனத்தில் சிறை வைத்தல்
=========================================================
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டு போய் ,
செஞ்சவே திருஉருத் தீண்ட அஞ்சுவான்,
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண், ஆயிடை ,
சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான் அரோ.(3564)
===========================================================
மண்ணொடு சீதையைக் கொண்டுசென்ற பாவியோ
அங்கத்தைத் தீண்டவும் அஞ்சிய உள்ளத்தான்
வஞ்சிக் கொடியை அசோகா வனத்திலே
சிம்சுபா என்னும் மரத்தின் அடியிலே
தன்னினப் பெண்களின் மத்தியில் காவலில்
அங்கே சிறையிட்டான் பார்.
--------------------------------------------------------------