Sunday, February 04, 2007

ஈழத்தமிழினம்!

ஈழத் தமிழினமோ இன்னலுக்குள் சிக்கித்தான்
வாழ வழிதேடி வீதிகளில்-- ஓலமிட்டே
ஓடுகின்ற காட்சிகளை ஊடகத்தில், ஏடுகளில்
போடுகின்றார் ஏங்குகின்றோம்! போ!

அகதிகளாய் திக்கற்று அய்யகோ! அம்மா!
இடம்பெயர்ந்து இந்தியத் தாயின் - அகநதேடி
வந்தே குவிகின்றார்!நாமும் வரவேற்று
தந்தே உதவுகிறோம் சாற்று.

சொந்தமண்ணில் விட்டுத் தொலைத்துவிட்ட வாழ்க்கையை
வந்தமண்ணில் காண வழியில்லை! - என்றாலும்
ஏதோ ஒதுங்க இடங்கிடைத்த நிம்மதியில்
தூதுவிட்டே வாழ்கின்றார் சொல்.

வெங்கொடுமைச் சாக்காட்டில் வெந்துழலும் மக்களுக்குத்
தென்படுமா நம்பிக்கைத் தீர்வொன்று? -- இன்னல்
எரிமலைதான் அங்கே அடங்கிடுமா ?மீண்டும்
வருமோ அமைதியான வாழ்வு?

மத்தியில் ஆள்வோரும் மாநிலத்தில் ஆள்வோரும்
தக்கதொரு தீர்ப்பு தழைப்பதற்கே -- அக்கறை
கொண்டே அணுகினால் கூடிவரும் நல்லமைதி!
வண்டமிழே! வாழ்வை வழங்கு.

வாழ்வின் இயல்பு

தனியாக வந்தோம்! தனியாக செல்வோம்!
இணைந்த உறவுகள் எல்லாம் -- இணைப்புகளாய்
வந்தவாறே அங்கங்கே வாழ்வில் கழன்றுவிடும் !
இந்தநிலை வாழ்வின் இயல்பு.

Friday, February 02, 2007

தன்னலம்

எல்லாம் கிடைத்திருந்தும் ஏனோ மனத்தளவில்
பொல்லாத கற்பனைகள் பொங்கிவர -- இல்லத்தில்
கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டாட்டம் போடுகின்றார்?
தன்னலத்தில் வாழ்கின்றார் சாற்று.

நல்வழியைக்காட்டு

இப்படிப் போனால் இடிவிழும் என்றே
அப்படிப் போனேன்! அடிகளோ -- முற்றுகை
இட்டே முறைத்தன! எப்படிப் போவதோ?
நற்றமிழே நல்வழியைக் காட்டு.

வயிறு

தேவை எனத்தெரிந்தால் தேக்கும் நிலையெடுக்கும்!
தேவைக் கதிகமெனில் தேடி வெளியேற்றும்!
ஈவிரக்கம் காட்டுகின்ற இந்த வயிறைத்தான்
நாவடக்கிக் காக்கவேண்டும் நாம்.

நாடு வளம்பெற உழைப்போம்

நாடு நமக்கென்ன செய்ததென்று கேட்காதே!
நாடு வளம்பெற நாமென்ன --பாடுபட்டோம்
என்றே உழைத்தால் உயர்த்தலாம் நாட்டைத்தான்!
நன்றாக வாழலாம் நாம்.

பண்பாடே பாழாகும் பார்

இப்படித்தான் வாழவேண்டும் என்ற முறையின்றி
எப்படியும் வாழலாம் என்றிருந்தால் -- நற்றமிழே!
வன்முறையும் வக்கிரமும் கூத்தாடிக் கொண்டாடும்!
பண்பாடே பாழாகும் பார்.

பெரியாரின் தொண்டு நிலைக்கும்!

பகுத்தறிவுச் சிந்தனையைப் பாமரர்க்கும் தூண்டி
வகுத்திட்டார் நன்னெறியை வாழி!-- அகம்போற்றும்
தந்தை பெரியாரின் தன்மானத் தொண்டு
நின்று வாழும் நிலைத்து.

பகுத்தறிவுப் பாசறை!

பகுத்தறிவுப் பாசறையாய்த் தந்தை பெரியார்
வகுத்திட்ட வாழ்வியலின் எண்ணம் -- மகத்தான
மாற்றம் சமத்துவத்தை மக்களுக்குள் உண்டாக்கி
ஏற்றத்தைத் தந்ததே இன்று.