Friday, August 23, 2019

வேதியல் மாற்றம் தவிர்!

கூடி விளையாடு பாப்பா! எனச்சொல்லிப்
பாடிக் களித்தவன் முண்டாசு பாரதி!
கூடி விளையாடும் நேரத்தில்  பொம்மைகள்
மோதி உடைந்துவிடும்! பிள்ளை அழுதிருக்கும்!
ஓடிப்போய் அம்மா விடந்தான் புகாரளிக்கும்!
வேதியல் மாற்றம் தவிர்க்க பெரியவர்கள்
மோதாமல் நிற்கவேண்டும்  சொல்.

மதுரை பாபாராஜ்



Wednesday, August 21, 2019

எதிர்பார்க்காதே!

எதையும் எதிர்பார்க்கா மல்தான் இயற்கை
கடமையைச் செய்துவிட்டு நிம்மதியாய் வாழும்!
எதையும் எதிர்பார்த்தே செய்யும் மனிதன்
பதட்டமுடன் வாழ்ந்திருப்பான் நிம்மதி இன்றி!
எதிர்பார்த்தால் ஏமாற்றந் தான்.

மணியும் கணக்கும் தளங்கள்!

பணிகள் அனைத்தும் மணிக்குள் கணக்குள்
இணையும் விதியில் தொடங்கும் முடியும்!
மணியும் கணக்கும் தவறும் நிலையில்
பணிகள் முடங்கும் உணர்.

Sunday, August 18, 2019

இணையரே பொறுப்பு!

துடுப்பை இணைந்தே இருபுறம் போட்டால்
படகுப் பயணம் மகிழ்ச்சி யாகும்!
குடும்பப் படகை இணையர் இணைந்தே
துடுப்பைப் போல இயங்கினால் வாழ்வில்
படரும் மகிழ்ச்சி நிலைத்து.

மதுரை பாபாராஜ்

Monday, August 05, 2019

காட்சிப் பிழைகள்!

வாழ்வின் திசைகளோ மாறுகின்ற சூட்சுமத்தில்
சூழ்நிலைகள் மாறிமாறிக் காட்சிப் பிழைகளைப்
பார்வைக்குள் தோற்றுவித்துப் பந்தாடிப்
பார்த்திருக்கும்!
நேர்மறையா? இல்லை எதிர்மறையா? என்பதன்
காரணத்தின் சாட்சி மனம்.

மதுரை பாபாராஜ்

இணையர் முதுமையிலும் அழகே!

இளமை முதலாய் முதுமை தொடர்ந்து
உளத்தில் பதிந்த கணவன் மனைவி
வளர்சிதை மாற்ற கிழட்டு முகங்கள்
நிலைத்த இளமைப் பருவ உருவைக்
கலைக்க மறுக்கும்! நினைக்க நினைக்க
கலையா இளமை முதுமைக் குள்ளே
உலவும் அழகாய் இருவ ருக்குள்
நிலையாய்ப் படரும் தொடர்ந்து.

மதுரை பாபாராஜ்

Saturday, August 03, 2019

அனுசரிப்பதே வாழ்வு!

எங்கோ பணியாற்றி ஓய்வடைந்த பின்னரோ
தங்கள் குழந்தைகள் வாழ்கின்ற ஊர்களில்
தங்கி உடன்வாழும் வாய்ப்புகளின் சூழ்நிலைகள்
எங்கெங்கோ நம்மை நிலைகொள்ள வைக்கின்ற
தன்மைகள் கொண்டதே வாழ்வின் இயல்பாகும்!
என்றும் அனுசரித்தல் வாழ்வு.

மதுரை பாபாராஜ்