Saturday, September 27, 2008

வகை வகையான மனிதர்கள் !

சிரிப்பதற்கு காசு கேட்பார் !

மெல்லிய புன்னகை மட்டுமே சிந்துவார்!
துல்லியமாய் சற்றே அளந்தளந்து --மெல்ல
இதழ்மலர யோசித்துப் பார்த்துச் சிரிப்பை
உதிர்ப்பார் அளவாகத் தான்.

சத்தம்போட்டுச் சிரிப்பார்!

இவர்சிரித்தால் காடே அதிரும்! குலுங்கும்!
இவர்சிரிப்பைக் கேட்டவுடன் இங்கே -- எவரும்
சிரித்திடுவார்! அங்கே சிரிப்பலைகள் வந்து
சொரியவைக்கும் கண்ணீரைத் தான்.


சிரிக்கவே மாட்டார்!

இப்படி அப்படி எப்படிப் பேசினாலும்
உப்பளவு கூட சிரிக்கமாட்டார்!-- அப்படி
என்ன பிறவியோ இப்பிறவி என்றேதான்
நண்பர்கள் கூறிடுவார் பார்.

மலைவிழுங்கி மகாதேவன்!

கல்மழையே பெய்தாலும் இங்கே கலங்காமல்
புல்தரையைப் பார்ப்பதுபோல் பார்த்திருப்பார்!-- எள்ளளவு
பாதிப்பும் இல்லாமல் மாமலைபோல் இத்தகையோர்
ஊதிநிற்பார் சூழ்நிலையைத் தான்.

புறணிப் பாவலர்

எடுத்ததெற் கெல்லாம் நுழைந்து நுழைந்து
கொடுக்காக மாறும் இவரோ --அடுத்தவரைப்
பற்றியே பேசும் புறணியில் காலத்தை
வற்றிவிடச் செய்வார் தனித்து.

சிக்கலிலே சிக்காதவர்

மலைபோன்ற சிக்கல் மடுவாக மாறும்
நிலைஎடுத்தே நிம்மதியாய் வாழ்வார் --உலகமே
கோழை எனச்சொல்லும் !அந்தப் பெருந்தன்மை
கோழைத் தனமல்ல ! கூறு.

சிக்கலுக்கே சிக்கலாவார் !


துரும்புகளைத் தூணாக்கித் துள்ளிக் குதிக்கும்
இரும்புமனங் கொண்டவரும் உண்டு --கரும்பான
உள்ளம் இருந்தும் இவர்சிந்தும் வன்சொற்கள்
உள்ளத்தைப் பாதிக்கும் இங்கு.

நடைமுறை அறியாத கடமை வீரர்கள்!

கடமை! கடமை! இதையன்றி வேறு
நடப்பே அறியாதோர் கூட்டம் -- கடமை
முடிந்தேதான் ஓய்வெடுக்கும் போது உலகின்
நடைமுறையில் தத்தளிப்பார் பார்.

எரிமலை நாயகர்

பணிக்களத்தைப் போர்க்களமாய் மாற்றியே நாளும்
அணிப்பகையை ஏற்படுத்தி வாழ்வார் -- தனிமனித
ஆற்றல் இருந்தாலும் இக்குணத்தால் மற்றவர்கள்
தூற்றி விலகுவார் சொல்.


நடுநிலை நாயகர்

பகைவரா? நண்பரா? பார்க்காமல் இங்கே
அகத்தில் நடுநிலையைப் போற்றி --மகத்தாக
வாழ்ந்தே மறைவோரும் இங்கே வரலாறாய்
வாழ்ந்திருப்பார் என்றென்றும் தான்.

எதெற்கெடுத் தாலும் சிரிப்பார்

எதெற்கெடுத் தாலும் சிரிப்பவரைப் பார்த்தால்
உதறல் எடுக்கும் உடலில் -- பதறி
ஒதுங்குவோம் ! பைத்தியம் என்றே மனத்தில்
பதுங்குவோம் ! எண்ணுவோம்! பார்.

Friday, September 26, 2008

கல்வியே செல்வம்

கலைமகளின் செல்வம் கலையாத செல்வம்!
அலைமகளின் செல்வம் அலைபோல் -- கலையும்
விலகும்! திரளும்! மறையும்! நிலைத்து
வளர்வது கல்விதான் காண்.

பூமரமும் தனிமரமும்

பூமரம்

காரிகையின் அன்புக் கணவர் இறந்துவிட்டால்
பூவிழப்பாள்! பொட்டிழப்பாள்!வாழ்விருக்கும் --ஆவலுடன்
சுற்றங்கள் பிள்ளைகள் சீராகப் பூமரத்தைச்
சுற்றுவது போல்வருவார் சூழ்ந்து .

தனிமரம்

காரிகையை இங்கே கணவன் இழந்துவிட்டால்
வேரிழந்த பட்டமரம் போலாவான் -- பாரிலே
வாழ்விழந்தே தத்தளிப்பான் சுற்றத்தார் பிள்ளைகள்
சூழ்ந்தும் தனிமரந்தான்! செப்பு.

ஒருமித்து வாழவேண்டும்

கணவன் சரியில்லை என்றாலும் அந்தக்
கணவனை ஏற்ற மனைவி --மணங்கமழும்
வாழ்வில் சரியில்லை என்றாலும் நிம்மதி
பாழ்பட்டு வேரிழக்கும் பார்.

தாயமுதம்

என்னதான் பாட்டியும் தாத்தாவும் ஊட்டி ஊட்டி
நன்றாய் வளர்த்தாலும் தாய்தரும் -- கஞ்சியே
இங்கே குழந்தைக்கு அமுதமாய்த் தோன்றுமடி!
இன்பமுடன் வாழும் சிரித்து.

பொறுமையே நன்று

கருத்துக்கள் மோதி கணைகளாய்த் தாக்கி
நெருடலை ஏற்படுத்தி னாலும்--பருவத்தின்
பக்குவம் அவ்வளவே என்று பெரியவர்கள்
முற்றும் பொறுத்தலே நன்று.

உறவை முறிக்காதே

உறவின் இழைகள் அறுந்து விடாமல்
தொடரும் நிலைதான் உறவை வளர்த்து
சிறக்கவைத்துப் பார்க்கும்! அறுபடச் செய்தால்
உறவே முறிந்துவிடும்!பார்.

Thursday, September 25, 2008

நல்ல மனிதன்

இல்லக் கதவுகளைப் பூட்டலாம்!உன்னுடைய
உள்ளக் கதவுகளைப் பூட்டாதே!--உள்ளத்தில்
உள்ளதை உள்ளவாறு மாசின்றிச் சொல்பவனே
நல்ல மனிதன்!நவில்.

திருக்கோயில்

விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கை
கற்றுக் கொடுக்கும் குடும்பந்தான் -- ஒற்றுமையைப்
போற்றும் மனமே திருக்கோயில் ! மற்றெல்லாம்
தூற்றும் தெருக்கோயி லாம்.

Sunday, September 21, 2008

பாப்பா ! பாப்பா ! கண்ணுறங்கு!

பாப்பா பாப்பா கண்ணுறங்கு -- பல
தடைகளைத் தாண்டி கண்ணுறங்கு!

செல்போன் மணிகள் அடித்திடலாம் -- நீ
சிணுங்கா மல்தான் கண்ணுறங்கு!

வண்டிகள் சீறிப் பாய்ந்திடலாம் - கொஞ்சமும்
அலட்டா மல்தான் கண்ணுறங்கு!

தொலைக்காட் சிகளின் தொடர்களிலே --சண்டை
சத்தம் கேட்டாலும் கண்ணுறங்கு!

கிரைண்டர் ஓடும் ஓசையையே -- பாடும்
தாலாட் டாக்கி கண்ணுறங்கு!

தெருவில் விற்பனை செய்வோர்கள் --வீட்டு
மணியை அடித்தும் எழுப்பிடுவார்!

அனைத்தையும் மீறி கண்ணுறங்கு -- இந்த
உலகம் இப்படித்தான்! கண்ணுறங்கு!

ஒலிகள் எல்லாம் மாசேதான் -- அனைத்தும்
உனக்குப் பரிசேதான்! கண்ணுறங்கு.

மழலைகளுக்கு ஒலிமாசுதான் அன்பளிப்பு

பிறந்த குழந்தைகள் தூங்கி விழிக்கத்
தடங்கலற்ற சூழ்நிலைகள் அன்று--உறக்கம்
கலையாமல் தூங்கத் தடைகளைத் தாங்கக்
குழந்தை பழகியது இன்று.

தாலாட்டா?என்னவிலை? என்றுகேட்கும் காலத்தில்
தாலாட்டுப் பாட்டின் இனிமையை -- மாவாட்டும்
எந்திரங்கள் போடும் ஒலிதானோ என்றேதான்
எண்ணும் குழந்தைகள் இங்கு.

தூங்கத் தொடங்கியதும் செல்போன் மணியோசை !
தூங்கும் குழந்தை சிணுங்கிடும்--ஏங்கும் !
இருந்தாலும் இங்கே பழகிவிடும் ! மீறி
அரும்புகள் கண்ணுறங்கும் இங்கு.

தடதட வென்றேதான் வண்டிகளின் ஓசை!
பதறி எழுந்தாலும் நாளும் -- உதறிவிட்டுத்
தூங்கும் பழக்கத்தால் இங்கே குழந்தைகள்
ஏங்காமல் தூங்குதம்மா பார்.

செவியைப் பிளக்கும் ஒலிமாசு நாளும்
புவியில் பெருகிடும் கோலம் -- தவிக்கவைத்தே
பார்த்தாலும் நிர்வாகம் கண்டுகொள் ளாமல்தான்
பாரில் நடக்கிறது! பார்.

தலைமுறை மாற்றம்

தலைமுறையின் மாற்றம் நடைமுறையை மாற்றி
நிலைகுலையச் செய்கின்ற போக்கோ --தலைகுனியச்
செய்கிறதே!நல்லொழுக்கப் பண்புகளோ சீரழிந்தே
உள்ளத்தை வாட்டுதம்மா ! சொல்.

Saturday, September 20, 2008

வக்கிரங்கள் வென்றதில்லை

வெண்பனித் தோட்டமாம் காஷ்மீர் , குருதியிலே
செந்நிறமாய் மாறிநிற்கும் கோலத்தைக் --கண்டேதான்
கண்கள் குளமாகப் பார்த்திருக்கும் ஏக்கத்தில்
நொந்து துவள்கின்றோம்! சொல்.

அகமதாபாத் மாநகரைக் குண்டுகளால் தாக்கி
அகங்கள் ரணமாக இங்கே --பதறிக்
கதறியழும் காட்சியைப் பார்த்தே துடித்து
நடுங்கி நிலைகுலைந்தோம் பார்.

பெங்களூரு மாநகரைப் பாதகர்கள் குண்டுவைத்துத்
தங்களது வக்கிரத்தைக் கட்டவிழ்த்தார் --என்ன
கொடுமையோ இக்கொடுமை என்றே பதறி
ஒடுங்கி உருக்குலைந்தோம் பார்.

அன்றாடம் மக்கள் நடமாடும் டில்லியில்
அங்காடி வீதிகளில் அங்கங்கே -- குண்டுகளை
வைத்தார் ! குருதியாறு ஓடிய காட்சியிலே
அச்சத்தால் தேம்பிநின்றோம் !பார்.

பெற்றெடுத்த தாயைக் கதறியழ வைப்பவனை
உற்றமகன் என்றா உரைத்திடுவார்?-- பெற்றெடுத்த
இந்திய நாட்டைச் சிதைப்போரை இந்தியத்தாய்
இந்தியன் என்பாளோ ? கூறு.

அப்பாவி மக்களை அன்றாடம் கொல்கின்ற
இச்செயலோ கோழைத் தனந்தான் -- எப்படியும்
தண்டனை உண்டு உறுதியாக !வக்கிரங்கள்
வென்றதில்லை! உண்மை!திருந்து.

Monday, September 15, 2008

நல்லதே நடக்கும்

நடந்ததை இங்கே நடந்து முடிந்து
கடந்துதான் என்றே எண்ணி --நடப்பது
நல்லதாய் ஆகட்டும் என்னும் மனநிலையே
தொல்லையை நீக்கும் உணர்.

இருட்டில் ஒரு நிலவு!

ஊரெல்லாம் மின்வெட்டு!
வீடெல்லாம் கும்மிருட்டு!
ஆனால்
அடுப்படியில் மட்டும்
முழு நிலவு வெளிச்சம் !
ஆம்!
என் மனைவியின் முகம்!

யார் யாரோ தேரிழுப்பார்!

யாருடன் யாரிருப்பார்? யார்தான் நிலைத்திருப்பார்?
யாருக்கு யார்நண்பர்? யார்பகைவர்?--யாருக்கோ
யாரையோ சேர்த்து வைத்துத் தாளமிட யார்யாரோ
தேரிழுப்பார்! இங்கிதுதான் வாழ்வு.

Thursday, September 11, 2008

மதுவைத் தீண்டாதே

படித்தவர்கள் பண்பிழந்த கோலத்தில் நின்று
குடித்துவிட்டுக் கூத்தடிக்கும் போக்கு -- மதியிழக்க
வைத்தே அவமானச் சின்னமாக்கி பார்க்குதம்மா!
நச்சைத்தான் தீண்டாமல் வாழ் .

உறுத்தாதா உள்ளம்!

வேண்டி ய்வர்களாம் வேண்டா தவ்ர்களாம்!
ஏனிந்தப் பாகுபாடு? வேறுபாடு --கூனிக்
குறுகுதடா! நடுநிலையின் முள்முறிந்த கோலம் !
உறுத்தாதா உள்ளம் ? உரை.

Wednesday, September 03, 2008

ரணகளம் !

உலகில் பிறக்கும் அனைவருக்கும் வாழ
உரிமை இருக்கிறது ! ஆனால் -- வரிந்துகட்டும்
வர்க்கபேதம் மக்களை வாட்டும் ரணகளமாய்த்
துள்ளவைத்துப் பார்ப்பதேனோ சொல் .

Tuesday, September 02, 2008

தவிப்பு

இயற்கை உருவாக்கும் சீரழிவைத் தாங்கித்
துயரம் விலகிடும் போது -- செயற்கைத்
துயரங்கள் தூண்டிலிட்டு வேடிக்கை பார்ப்பதால்
மயங்கித் தவிக்கின்றோம் பார்.