Wednesday, June 29, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

20  கேட்டிலும் துணிந்து நில்

கேடுகள் வாழ்வைத் தடுமாறச் செய்யலாம்!
கேடுகளின் தாக்கத்தால் கோழையாக மாறாமல்
கேடுகளை வெற்றிகொள்ள கண்ணே! துணிந்துநில்!
மாறும் ! நிலைமாறும் பார்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

19  கெடுப்பது சோர்வு

மலையென செல்வம் குவிந்திருந்த போதும்
களையெனச் சோம்பல் வளர்வதை நாளும்
நிலைகொள்ளச் செய்தால் செல்வம் அழியும்!
உலகில் கெடுப்பது சோர்வு.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

18  கூடித் தொழில் செய்
---------------------------------------------
தனிமரம் தோப்பாக மாறாது! ஆனால்
தனிமனிதன் கூட்டாகச் சேர்ந்து குழுவாய்
இணைந்து குழுவுணர்வால் ஒன்றுபட்(டு) உழைக்கும்
முனைப்பால் உயரலாம் நம்பு.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

17  குன்றென நிமிர்ந்து நில்

எத்தனைச் சோதனைகள் சுற்றி வளைத்தாலும்
அத்தனையும் இங்கே தவிடுபொடி யாவதற்குச்
சற்றும் கலங்காமல் குன்றாய் நிமிர்ந்தேதான்
முற்றும் இலக்குநோக்கி நில்

Tuesday, June 28, 2016

ரசித்தேன்

படீர்படீர் என இடியோசை
பளீர்பளீர் என மின்னலின் கீற்று
சுளீர்சுளீர் என பெருமழை தாக்கம்
கலீர்கலீர் என அருவியின் சிரிப்பு
கலகல வென்றே நதியின் ஓட்டம்
சிலுசிலு வென்று தென்றலின் தீண்டல்
கீச்கீச் சென்ற பறவையின் இன்னிசை
காச்மூச் சென விலங்குகளின் சத்தம்
ரசித்துரசித்து நடந்தேன் நான்தான்
அழகில்லை!

மழையில்லா நாடு, மரமில்லா காடு,
அலையில்லா ஆழி மலரில்லா சோலை
கலையில்லா சிற்பம் ஒலியில்லா வீணை
இவையிருந்தும் இல்லை அழகு.

நடுங்கினேன்

ஊட்டிக்குச் சென்றேன் நடுங்கவில்லை! போட்டிபோட்டு
வாட்டும்  கொடைக்கானல் சென்றேன் நடுங்கவில்லை!
நாட்டின் இமயமலை சென்றேன் நடுங்கவில்லை!
நாட்டில்  தமிழின்றி வாழ்க்கையென்றார் என்மனம்
வாட்ட நடுங்கினேன் பார்.

Sunday, June 26, 2016


தமிழ்நாடா?

மருத்துவக் கூடம் வணிக வளாகம்
பெரும்பள்ளிக் கூடம் உணவகம் என்றே
செருக்குடன் நிற்கின்ற காவலாளிக் கெல்லாம்
அருந்தமிழில் பேசத் தெரியாது! ஏவல்
புரிபவர்கள் பேசுவதும் வேற்றுமொழி தானே!
அருந்தமிழ் நாடென்றே சொல்லடி பாப்பா!
பெருமைதான் பாரதிக்கு! பார்.

புறத்தோற்றம் பொய்!

அரிதாரம் பூசி நடிக்கின்ற போது
வெளித்தோற்றம் போல அகத்தோற்றம் இல்லை!
அரிதாரப் பூச்சு கலைந்தேதான் போனால்
தெரிந்துவிடும் உண்மை உரு.

சொன்னபடி நட!

குடிக்காதே என்றுசொல்லி நான்குடித்தால், பூவைப்
பறிக்காதே என்றுசொல்லி நான்பறித்தால், ஒழுக்க
நெறிகளைப் பின்பற்றச் சொல்லிவிட்டு நானோ
நெறிபிறழ்ந்தால் தப்பு! மனசாட்சி உன்னை
மதிப்பதற்குச் சொன்னபடி வாழ்.

சிறுகை அளாவிய கூழ்

குழந்தைக்குச் சோறூட்டும் போது குழந்தை
கரங்களால் சோறைப் பிசைந்து பிசைந்து
முழங்கை வழிய  வழிய நமக்கு
மழலை பொழிந்தேதான் ஊட்டிச் சிரிக்கும்!
மழலை  அளாவிய கூழ்.

நடமாடும் தெய்வங்கள்

அறிய முடியாத ஒன்றை  நித்தம்
அறிந்ததுபோல் ஆண்டவன் என்போம்--அறிந்துணரும்
பெற்றோர் நடமாடும் தெய்வங்கள் என்றாலும்
எத்தனைபேர் போற்றுகின்றார்? சொல்.
பெற்றோரை வாழ்த்து

வாழ்கின்ற காலத்தில் பெற்றோரை வாயார
வாழ்த்துங்கள்! பெற்றோர் மனங்குளிரும்! சென்றபின்பு
வாழ்த்தும் படையலும் யாரறிவார்? கண்மணியே!
வாழ்த்தி மகிழப் பழகு.

கதைக்குக் கவிதை
நண்பர்
திரு.பாலுநடராஜன் சொன்ன கதை

அம்மாவிடம் கோபித்து மைந்தன் வெளியேற
கண்ணா! தெருவோரம் செல்கின்ற நேரத்தில்
அங்கே புளியமரம் கீழே நடந்துசெல்!
என்றுனக்கு அம்மா நினைவு வருகிறதோ
அன்று திரும்பி வரும்போது வேப்பமர
தண்ணிழலில் நீயும் நடந்துவா என்றாளாம்!

புளியமரக் காற்று நலங்கெட வைக்கும்!
நலமளித்துக் காப்பதோ வேப்பமர மாகும்!
நலங்கெட்டான்! அம்மா நினைவுவர மைந்தன்
மனைநோக்கி வந்தான் விரைந்து.

ஆலமரம்

ஆலமரம் பார் பார்
அழகாய் இருக்குது பார்பார்

தூண்கள் போன்ற விழுதுகள்
ஊன்றி நிற்கும் வியப்பைப்பார்

படர்ந்திருக்கும் கிளைகளிலே
பறவைக் கூட்டம் பார்பார்

அருமையான நிழலிலே
வகுப்புகள் நடக்கும் அழகைப்பார்

ஆலும் வேலும் பல்லுக்கு
நாலும் இரண்டும் சொல்லுக்கு

ஆகா ஆகா ஆலமரம்
மக்கள் விரும்பும் ஆலமரம்

Monday, June 20, 2016

இயற்கையின் கவிதை

விடியல் பொழுது
விடிகிறது
பறவைக் கூட்டம்
பறக்கிறது
கடலின் அலைகள்
எழுகிறது
விண்ணைத் தொடவும்
முயல்கிறது
சோலைப் பூக்கள்
மலர்கின்றன
நறுமணம் இங்கே
தவழ்கிறது
உழவர் கூட்டம்
நடக்கிறது
உழைப்பின் மகத்துவம்
உரைக்கிறது
வாசலில் வண்ணக்
கோலங்கள்
வகைவகை யாக
பூக்கிறது
இயற்கை எழுதும்
கவிதையிது
இதயம் ரசித்து
மகிழ்கிறது

வளைந்துகொடு
------------------
நெளிவும் சுளிவும் மலைகளில் என்றால்
வழிகளைக் காட்டி இலக்கினில் சேர்க்கும்!
தெளிவாய் இவைகளை வாழ்க்கையில் போற்று!
புவியில் வசமாகும் வாழ்வு.

எல்லை மீறாதே
------------------------------------
நம்பிக்கை ,ஆசை, எதிர்பார்ப்பு  சாப்பாடு
என்பவை யெல்லாம் அளவுகளை மீறினால்
துன்பத்தில் தள்ளித் துடிக்கவைக்கும் நம்மைத்தான்!
என்றுமே எல்லையை மீறினால் தொல்லைதான்!
சிந்தித்து வாழ்தல் சிறப்பு.

அமைதியான ராகம்
அருமையான ராகம்

சுமையிறங்கிப் போகும்
சுணக்கங்கள் ஓடும்
உளைச்சல்கள் விலகும்
உறுத்தல்கள் தளரும்

மனதுக்குள் இன்பம்
மறுமலர்ச்சி கொள்ளும்
முயற்சிக்குத் தூது
முனைந்துவரும் பாரு!

கோபமெனும் அனல்மீது
அமைதியெனும் நீரூற்று!

அமைதியான ராகம்
அருமையான ராகம்!

Sunday, June 19, 2016

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

12.ஒளடதங் குறை

குப்பை உணவும் துரித உணவுகளும்
அப்பப்பா எண்ணற்ற நோய்களை மேனிக்குள்
எப்படியோ தாக்கவைக்கும்! உண்ணும் உணவுகளில்
சற்றே கவனமுடன் உண்டால் மருந்துகளை
முற்றும் குறைக்கலாம் சொல்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

11.ஓய்தல் ஒழி

புற ஓய்வை இங்கே தவிர்த்தல் அரிதே!
அக ஓய்வுக் கிடங்கொடுத்தல் சோம்பலாக்கும்!உள்ளம்
சிறகை விரித்தென்றும் உற்சாகம் பொங்க
முடங்காமல்  பார்ப்ப தறிவு.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

10 ஒற்றுமை வலிமையாம்

ஒற்றுமை இல்லாத நாடுகளும் வீடுகளும்
முற்றும் சிதைந்தே அழிந்துவிடும்--- ஒற்றுமை
மட்டுமே காக்கும்  வலிமையாம்! மக்கள்நாம்
நற்றமிழ்போல் வாழ்வோம் நிமிர்ந்து.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

9 ஐம்பொறி ஆட்சிகொள்

புலனடக்கம் இன்றி மிருகம்போல் நாளும்
களங்கம்  சுமந்தேதான்  வாழ்வதை விட்டுப்
புலன்களைக் கட்டுப் படுத்தியே வாழ்ந்தால்
உலகம் வணங்கும் பணிந்து.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

8 ஏறுபோல் நட

கூறுபோட்டுப் பார்க்கின்ற வஞ்சகத்தைத் தோற்கடித்தே
ஏறுபோல் இங்கே நடைபோட்டு நம்நாட்டைப்
பாடுபட்டு வல்லரசாய் மாற்றிடவே தோள்கொடுப்போம்!
ஏடுபோற்ற இந்தியாவைப் பாடு.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

7.எண்ணுவது உயர்வு

குறுக்குவழி எண்ணங்கள் தாழ்வைக் கொடுக்கும்!
உறுத்தல்கள் இல்லா உயர்வான எண்ணம்
மிடுக்காக வாழ்வதற்கு நல்வழி காட்டும்!
தொடுக்கின்ற எண்ணம்போல் வாழ்வு.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

6.. ஊண்மிக விரும்பு
------------------------------------
ருசித்துப் புசிப்பதைக் காட்டிலும் நாளும்
பசித்துப் புசித்தால் உடல்நலம் உண்டு!
அதிகமாய் இன்றி அளவுடன் உண்டால்
விதிக்குள் அடங்கும் உடம்பு.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

5.உடலினை உறுதிசெய்

பிழைப்பதற் கேற்ற வருமானம் ஈட்ட,
அலைச்சல் உளைச்சலைத் தாங்கி
உழைப்பதற் கேற்ப உடலுறுதி வேண்டும்!
தழைக்க உடற்பயிற்சி செய்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

4.ஈகை திறன்

இருப்பதில் தன்னால் இயன்றதை இங்கே
தருவதே ஈகை! தரமறுத்துச் சேர்த்தால்
துரும்பும் உடன்வராது நீசெல்லும் நேரம்!
தருவதில் இன்பம் உணர்

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

3.இளைத்தல் இகழ்ச்சி.

சோர்வுக் கிடங்கொடுத்தால் சோம்பல் உருவாகும்!
ஆர்வம் முயற்சிகள் பின்தங்கும்! முன்னேற்றம்
வேரிழக்கும்! அச்சாணி தூர்ந்து நகராத
தேராகும் வாழ்க்கை உணர்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி

2.ஆண்மைதவறேல்!

வாய்மையை நேர்மையை வாழ்வாக மாற்றிவிடு!
பாய்ந்துவரும் சோதனையைச் சாதனை யாக்கிவிடு!
ஊர்தூற்றிப் பார்த்தாலும் ஆண்மை தவறாமல்
பார்போற்ற வாழ்வதற்குப் பார்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடி
------------------------------------------------------------------
1.அச்சம் தவிர்!

பாம்பைத் தவிர்க்க பயந்துநான் ஓடினேன்!
பாயும் புலிகண்டேன்!  வேகமாக ஓடினேன்!
பாய்ந்துவந்த வெள்ளப் பெருக்கோ எதிர்வர
சோர்ந்திடாமல் நின்றே எதிர்கொண்டேன்! எல்லாம்
மாயமாய்ப் போனதே பார்.

Saturday, June 18, 2016

ஆற்றலை நம்பு

கூட்டைத் துறந்தே சிறகை விரித்திடு!
காற்றைக் கிழித்தே பறக்க முயற்சிசெய்!
காற்றை வசப்படுத்து! விண்ணை அளக்கலாம்!
ஆற்றலை நம்பிப் பற.

Thursday, June 16, 2016

தோற்றவர் வென்றார்

ஊடலில் மட்டுமா தோற்றவர் வென்றிருந்தார்!
வீடதிர பேரக் குழந்தைகள் வம்பிழுக்கும்
ஈடற்ற போரில் பாட்டியும் தாத்தாவும்
ஓடித்தான் தோற்பாரே வென்று.

காக்கும் கரமாவோம்

போதிய சட்டங்கள் நாட்டில் இருந்தாலும்
ஊதி அணைப்பதில் மக்களின்  பங்குண்டு!
ஊதி அணைக்காமல் காக்கும் கரங்களானால்
கேடின்றி வாழலாம் நாடு.மொழியின் மொழியை விழியால் மொழிந்தாள்!
மொழிந்தது என்ன? மொழியின் பொருளைத்
தெளிவதற் குள்ளே கலகல வென்று
சிரித்தாள் கள்ளச் சிரிப்பு.இசையாகம்!

மலையின் முகிடும்
முகிலின் இதழும்
உரசிச் செல்ல
விழுந்தது அமுதச்சாரல்

சாரல் மண்ணில்
பட்டுத் தெறித்ததும்
மண்மகள் சிலிர்த்தாள்
சிலிர்த்துச் சிரித்தாள்!

சிரிப்பின் அழகை
ரசிக்கச் சாரல்
மழையாய் மாறி
மணலில் கலக்க

கலகலப் பாக
மாறிய சிரிப்பில்
சிரிப்பின் இசையும்
துளியின் இசையும்

கலந்து கலந்து
எட்டுத் திக்கும்
எதிரொலி யாக
எழுகடல் ஓசை
இணைய இணைய

இசைமொழி நாதம்
அண்ட சராசர
மெங்கனும் கேட்க
யாகம் யாகம்
யாகந்தான்!

டிதோச்சி மெல்ல எறி

கண்டிக்கவும் வேண்டும் கடுமையும் கூடாது!
அந்த நிலையில் அறிவுரைகள் நாம்சொன்னால்
நன்றாய்ப் புரிந்துகொள்ள முன்வருவார்! யாருமே
அன்புக் கடிமைதான் பார்.

Monday, June 13, 2016


பட்டறிவே மெய்!

கட்டிக் கொடுத்தனுப்பும் சோறும் ,அறிவுரை
கொட்டி வழியனுப்பும் சொற்களும் எத்தனைநாள்
ஒட்டி உறவாடும்? நாள்தோறும் ஏற்படும்
பட்டறிவே என்றும் துணை.இறைவி படத்தின்
இறுதி வசனம்!
------------------------------------------
நெடில் குறில்
ஆண்-- பெண்

நெடில்தொட்டுவாழ்வில் குறிலும் அதைப்போல்
குறில்தொட்டு நாளும் நெடிலும் இணைந்தே
மகிழ்ச்சியுடன் இல்லறத்தில் வாழவேண்டும் என்ற
நெறியை நெடில்குறிலில் காண்.இல்லறத் தூண்கள்!

ஆண்மைக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும்
பாங்காய்த் தழைத்தல் அறிவியல் உண்மைதான்!
ஆண்மைக்குள் பெண்மையே அன்பாகும்! பெண்மைக்குள்
ஆண்மை அரவணைக்கும் பண்பாகும்! இல்லறத்தின்
தூண்களே இவ்விரண்டும் தான்.


ஆண்மைதவறேல்!

வாய்மையை நேர்மையை வாழ்வாக மாற்றிவிடு!
பாய்ந்துவரும் சோதனையைச் சாதனை யாக்கிவிடு!
ஊர்தூற்றிப் பார்த்தாலும் ஆண்மை தவறாமல்
பார்போற்ற வாழ்வதற்குப் பார்.

அச்சம் தவிர்!

பாம்பைத் தவிர்க்க பயந்துநான் ஓடினேன்!
பாயும் புலிகண்டேன்!  வேகமாக ஓடினேன்!
பாய்ந்துவந்த வெள்ளப் பெருக்கோ எதிர்வர
சோர்ந்திடாமல் நின்றே எதிர்கொண்டேன்! எல்லாம்
மாயமாய்ப் போனதே பார்.

திருந்து

அவரவர் எல்லை அவரவர்  கூற்று!
இவர்தான் சரியா? அவர்தான் சரியா?
எவரென் றபோதும் மெய்ப்பொருளைப் பார்ப்போம்!
தவறெனின் உன்னைத் திருத்து.

முரணைத் தவிர்!

மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆணை
வெறுப்பதற்குத் தூண்டுதல்கள் என்றால்-- கெடுக்கும்
எதிர்மறை எண்ணங்கள் பெண்களை ஆண்கள்
வெறுப்பதற்குக் காரணங்கள் பார்.

இரண்டையும் விட்டுவிட்டே இல்லறத்தில் உள்ளம்
முரண்படாமல் வாழ்ந்தால் குழந்தை, குடும்பம்
தரணிமெச்ச நாள்தோறும் வாழும் நிமிர்ந்து!
கலகமின்றி வாழப் பழகு.

Friday, June 10, 2016

உணர்வுகொள்!

உணர்ச்சிகள் வேறு! உணர்வுகள் வேறு!
உணர்ச்சியோ தோன்றி மறையும் குமிழி!
உணர்வோ படர்ந்து நிலைக்கும் விழுது!
உணர்வே செயலுக் கழகு.

வழியும் உளியும்!

வாய்ப்புகளும் சூழ்நிலையும் வாழ்வின் அடித்தளங்கள்!
வாய்ப்பு!திறமையைக் காட்டுகின்ற  வழியாகும்!
சூழ்நிலை பண்பைச் செதுக்கும் உளியாகும்!
வாழ்க்கை வசப்படும் நம்பு.

சொன்னபடி செய்
---------------------------------------------
எண்சாண் உடம்புக்குள் கொள்கை அகல்விளக்கை
உன்னால் அணையாமல் காக்க முடிகிறதா?
என்றும் அறிவுரை சொல்தல் எளிதுதான்!
சொன்னபடி செய்வோரைப் போற்று!

கல்வியின் வேர்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்றார்-- கற்றுவிட்டுக்
கண்டபடி வாழ்பவர்கள் மாந்தருள் அற்பர்கள்!
பண்புகளேகல்வியின் வேர்.

இன்சொல்லால் திருத்து

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடலென்றார்--- வன்சொல்லால்
புண்படுத்திப் பேசுவோரை நாமிங்கே நாள்தோறும்
இன்சொல்லால் பண்படுத்தல் நன்று.

நன்று

கணவனை நாளும் மதிப்பது நன்று!
மனைவியை அன்புடன் நேசித்தல் நன்று!
இணையர் மழலையைக் கொஞ்சுதல் நன்று!
மனையில் நிலைக்கும் மகிழ்வு.

வேகமோ சோதனை!

காற்றடித்தால் சோதனை! நாட்டிலே மாமழை
ஊற்றிப் பெருக்கெடுத்தால் சோதனை! வெய்யிலோ
வாட்டிப் பொசுக்கினால் சோதனை! மூன்றுமே
ஆக்கத்தின் காக்கும் கரங்களானால்  நன்மையே!
போற்றி வரவேற்போம் நாம்.

பக்குவம்

மாற்றுக் கருத்தை மதிக்கின்ற பக்குவமே
ஊற்றெடுக்கும் ஆற்றலில் உள்ள குறைகளின்
சூட்சுமத்தால் நம்மைச் செதுக்கும் உளியாகும்!
ஏற்றுத் திருந்துவதே பண்பு.

அரசுக்குத் தயக்கம் ஏன்?
-----------------------------------------------------------
சிகரட் பிடித்தல் மதுவைக் குடித்தல்
வகைதொகை இல்லாமல் வன்முறைக் கூத்து
இடம்பெறாமல் இங்கே சினிமா இல்லை!
தடுத்து நிறுத்தும் பணியில் அரசு
தடுக்காமல் பார்த்திருப்ப தேன்?

Friday, June 03, 2016

எனது அக்கா மகன் பாலமுரளி எழுதிய
இனவேர் சிறுகதை தினமலர் வாரமலரில் வெளியானது.
வாழ்த்துகிறேன்

இனவேர்!

இனவேர் சிறுகதை! நன்கு படித்தால்
இனத்துக்கே வேராகி மக்களின் வாழ்வை
மணங்கமழச் செய்யலாம் என்ற கருத்தை
மனத்திலே ஊன்றியது பார்.

பால முரளி சிறுகதை ஆற்றலை
ஞாலம் அறிகின்ற வாய்ப்பைத் தினமலர்
மூலம் கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றோம்!
தாரணி போற்றும் தொடர்ந்து.

தாழ்வு நிலையில்லை!
----------------------------------------------
ஒருகதவு மூடிவிட்டால் உள்ளம் உடைந்தே
இருட்டுக்குள் வாழ்வதுபோல் எண்ணி--உருகாதே!
வாழ்வில் மறுகதவு இங்கே வழிகாட்டும்!
தாழ்வு, நிலையில்லை சாற்று.

எங்கள் திருமணநாள்
    இன்று 29.05.2016

நாற்பத்தோ ராண்டுகள் இல்லற வாழ்க்கையில்
ஊற்றெடுக்கும் ஒற்றுமையில் மக்களுடன் வாழ்கின்றோம்!
ஆக்கபூர்வ மாக கடமைகள் செய்கின்றோம்!
ஏக்கமின்றி  வாழ்கின்றோம் இங்கு.