Wednesday, July 29, 2015

மாண்புமிகு அப்துல்கலாம் இறுதி ஊர்வலம்

மாண்புமிகு அப்துல்கலாம்
இறுதி ஊர்வலம்
    30.07.2015
--------------------------------------
இந்தியாவை வல்லரசாய் மாற்றுவோம் என்றேதான்
இங்கே உறுதி எடுத்துப் பாடுபட்டாய்!
பண்பகத்தின் சான்றோனே! இறுதிநிலை ஊர்வலத்தில்
எங்களுக்குச் சோகத்தைத் தந்துவிட்டுச் செல்வதேனோ?
உன்கனவை நாங்கள் நினைவாக்கிக் காட்டுவோம்!
என்றுறுதி ஏற்போம் இன்று.

கடைத்தேற்றம் எங்கே?
--------------------------  ----------
கடையனுக்கும் இங்கே கடைத்தேற்றம் எங்கே?
நடைமுறையில் இல்லை! எனச்சொல்வேன் அம்மா!
முடைநாற்றம் வீச பிடிமானம் இன்றி
அடைபட்டு வாழ்கின்றான் பார்.

தமிழ்வளம்!
-----------------------
சொற்பஞ்சம் உள்ள எனக்கே கவியெழுத
சொற்கள் உதவிசெய்ய முன்வந்து நிற்குமென்றால்
நற்றமிழில் நுண்மான் நுழைபுலம் கொண்டவர்க்கு
எப்படி வந்துநிற்கும்? சொல்.

கணினியை
அறிந்துகொள்!
-------------------------
மாற்றங்கள் ஏற்பட்டால் மாற்றத்திற் கேற்றவண்ணம்
ஆற்றலை மேம்படுத்தி வாழ்தல் அறிவுடைமை!
ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்க மறுக்காதே!
மாற்றத்தை ஏற்கப் பழகு

Monday, July 27, 2015

அனைவரின் கடமை!
-----------------------------------
அறிவுத் திருக்கோயில் பள்ளிகள் என்போம்!
அறிவொளியைத் தூண்டுவோர் ஆசிரியர் என்போம்!
படித்துப் பயன்பெறுவோர் மாணவர் என்போம்!
படித்தால் எதிர்காலம் உண்டு.

தாயின் பெருமிதம்!
----------------------------------
வெய்யில் மழையென்று பாராமல் பாடுபட்டுப்
பிள்ளையை நாளும் வளர்த்தேதான் ஆளாக்கி
நல்லவராய் வல்லவராய்ப் பார்க்கும் திருநாளில்
உள்ளம் மகிழ்ந்திருப்பாள் தாய்.

Friday, July 24, 2015

இன்றைய வாழ்க்கை!
ஒரு வீடு மூன்றுசாவி!
-----------------------------------
ஒன்று மனைவியிடம் ஒன்று கணவனிடம்
ஒன்று பணியாளுக் கென்றிங்கே மூன்றுசாவி
தன்னைத் தனித்தனியாய் வைத்திருப்பார்! யார்முந்தி
வந்தவரோ பூட்டைத் திறந்தேதான் வீட்டுக்குள்
சென்றிடுவார் இன்றிது வாழ்வு.

சென்னையில் மழை!
-------------------------------------
இடிமுழக்கம் மின்னல் மழையென்று வானம்
அடித்து நகரை இரவில் புரட்டி
எடுத்த சுவடின்றி காலைப் பொழுதில்
உறுத்தலே இன்றி அமைதி உருவை
எடுத்து விடிந்தது பார்.

மொழிவளர
-------------------------------
இலக்கணத்தை ஒட்டி எழுதவேண்டும் என்றால்
புலவர்கள் மட்டும் எழுத முடியும்!
இலக்கணம் கொஞ்சம் நெகிழ்ந்து கொடுத்தால்
வளரும் மொழிவளம் இங்கு.

மறக்காதே!
------------------------
வாழ்வில் உறவுகள் புதிதாகத் தோன்றுகின்ற
வாய்ப்புகள் உண்டு! பழகலாம் நட்புடன்!
வாழ்வின் பழைய உறவுகளை ஏறெடுத்துப்
பார்க்காமல் போவது தப்பு.

Wednesday, July 22, 2015

தாழ்ந்தவர்!
----------------------
செல்வம் மலைபோல் குவிந்திருந்த போதிலும்
உள்ளத்தில் கள்ளங் கபடம் நிறைந்திருந்தால்
செல்வந்தர் இல்லை! உயர்ந்தவரும் இல்லை!
இவ்வுலகில் தாழ்ந்தவர் தான்.

Tuesday, July 21, 2015

வாழ்க்கை!
--------------------
தென்றல் எனநினைத்து நெஞ்சம் குளிர்ந்திருந்தால்
வன்புயலாய் மாறித்தான் வாட்டி எடுத்துவிடும்!
வன்புயலோ என்றெண்ணி நின்றிருந்தால் தென்றலாய்
வந்தணைத்துக் கொஞ்சும் சிரித்து.

மாண்புமிகு மோடி வாழ்க!
----------------------------------------
மோடி அமைச்சரிங்கே மோடிக்கு உதவியதால்
மோடி அமைச்சரை நீக்கமாட்டார்! மோடிக்கு
கோடிவேலை உள்ளதால் மோடிவேலை இல்லையிது!
மோடியை வாழ்த்தி வணங்கு

மதத்தைப் புறக்கணி!
-----------------------------------
மதங்கள் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!
மதவெறியைத் தூண்டி அமளியை நாளும்
படமெடுத்துச் சீறத் துணைபுரியு மென்றால்
மதத்தைப் புறக்கணித்தல் நன்று.

-மனிதனை மதி!
---------------------------+
மனிதனை இங்கே மதிக்கும் மதத்தை
மனிதன் மதிப்பான்! ஒதுக்கும் மதத்தை
மனிதன் எப்படி ஏற்பான்? தமிழே!
மனிதனை ஏற்றால் மதம்.

Saturday, July 18, 2015

வளர்கிறது நம் நாடு!
விடுதலை நாள்
      15.08.2015
------------------------- ---------
கழனி தொடங்கி கணினி வரைக்கும்
வளர்ச்சியில் சாதனை வெற்றிக் கொடியைத்
தளர்ச்சியின்றி நாட்டுகின்றார் இந்தியர்கள் எங்கும்!
வளர்கின்ற தாய்நாட்டைப் பார்.

மற்றநாட்டைப் போல வளர்ச்சியில் தொய்வுண்டு! பல்வேறு
சுற்றடுக்குக் காரணங்கள் அதற்குண்டு! செந்தமிழே!
தொட்டுத் தொடர்கின்ற சோதனையின் கொம்பொடித்து
வெற்றிநடை போடுகின்றோம் நாம்.

விடுதலைக்குப் பின்னே துறைதோறும் ஏற்றம்!
புதுமைப் பொலிவுடன் அருமைப் பணிகள்!
மிடுக்குடன் சொல்வோம் இந்தியன் என்றே!
அடுந்துநாம் வல்லரசு தான்.

கழனி--கணினி
---------------------------
கழனியில் காலும் கணினியில் கையும்
சளைக்காமல் இங்கே உழைக்கின்ற பாங்கால்
தலைநிமிர்ந்து நாடுகளும் வீடுகளும் வாழும்
நிலைமை மலரந்தது பார்.

நிமிர்ந்து சொல்!
--------------------------------------
நல்லதைச் சொன்னால் சினங்கொள்வார் என்றாலும்
நல்லதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்!--துள்ளிவரும்
வேலும் திரும்பிவிடும்! வன்பகையும் சிந்தித்துத்
தோள்கொடுக்கும் நட்புடன் வந்து.

கண்ணீரே ஆறுதல்!
-----+------------------------
கண்ணீர் சுரப்பிகள் இல்லையென்றால்  ஆனந்தக்
கண்ணீரும், நம்மை வதைக்கும் அவலத்தின்
கண்ணீரும் தேங்கும் நிலையெடுக்கும்! அம்மம்மா!
வன்கொடுமைக் குள்ளாகும் வாழ்வு.

சாலையே நடைபாதை!
---------------------------------------
வர்க்கபேத மின்றி நடைபாதை மீதெல்லாம்
எல்லாப் பொருள்களையும் வைத்தே அடைத்துவிட்டார்!
எல்லோரும் சாலையில் தானே நடக்கின்றோம்!
தொல்லைக்கு யார்தான் பொறுப்பு?

ஏற்றத்திற்கு!
--------------------------
வாய்ப்பைத் தடைக்கல்லாய் எண்ணும் எதிர்மறை
நோய்மனங் கொண்டவர்கள் முன்னேற்றம் காண்பதெங்கே?
வாழ்வில் தடைக்கல்லை வாய்ப்பாக்கும் ஆற்றல்தான்
நேர்வழி ஏற்றம் தரும்.

Tuesday, July 14, 2015

நிமிர்ந்து நில்!
-------------------------
எல்லோரும் நல்லவரே! வாழ்க்கையில் சூழ்நிலைகள்
நல்லவரைக் கெட்டவராய் மாறிவிடத் தூண்டிலிடும்!
உள்ளத்தைத் தூண்டிலிலே சிக்க விடாமல்தான்
வெல்லவேண்டும் என்றும் நிமிர்ந்து.

கடமையே மூச்சு!
----------------------------
இருக்கும் வரையில் கடமையைச் செய்யத்
தெருவில் தினமும் நடப்பேன் நடப்பேன்!
வலுவை இழந்தும் தளர்ந்து நடப்பேன்!
இருப்பே கடமையில் தான்.

எம் எஸ் வி
இயற்கையில் கலந்துவிட்டார்

14.07.2015
---------------------------------------------------------------------------
மெல்லிசை மன்னர் விசுவநாதன் மக்களை
மெல்லிசையால் நாளும் கவர்ந்தவர்! விண்ணகத்தில்
மெல்லிசை மீட்ட இயற்கைத்தாய் ஆட்கொண்டாள்!
நல்லவரைப் போற்று நினைந்து.

Monday, July 13, 2015

உண்மையான பக்தி!
----------------------------------
இல்லறத்தில் உள்ளவர்கள் பக்தனாக பக்தையாக
அல்லும் பகலும் இருப்பதைக் காட்டிலும்
நல்லறம் காத்துக் குடும்பக் கடமைகளைச்
செய்வதே பக்தியாகும் செப்பு.

ஆன்மிகம் வசப்படும்
-----------------------------------
ஊனக்கண் ஆன்மிகத்தைப் பார்க்க முடியாது!
ஞானக்கண் நம்பிக்கை மற்றும் முயற்சியால்
ஆனமட்டும் ஆன்மிகத்தை நாமோ உணரலாம்!
ஞானக்கண் மோனநிலை தான்.

தியாகவர்க்கம்!
----------------------------
மேலடுக்கில் உள்ளவரா மானியம் உண்டம்மா!
கீழடுக்கில் உள்ளவரா மானியம் உண்டம்மா!
மேலுமின்றிக் கீழுமின்றி என்றும் நடுத்தரமா?
மானியத்தை இங்கே தியாகம் செய்தால்தான்
ஏழைகள் வீட்டில் அடுப்பெரியும்! சொல்கின்றார்!
கேழ்வரகில் நெய்வருமாம் கேள்.

அடித்தால் வெறுக்கும்!
---------------------------------+-
அன்புடன் நல்ல அறிவுரைகள் கூறினால்
கன்றுகளும் கேட்கும்! கனிமழலைக் கேட்காதா?
அன்பால் அரவணைத்து வாழ்ந்தால் விரும்பிவரும்!
வம்படியா? தூற்றும் வெறுத்து.

படிப்பது கடமை!
-------------------------------
படிப்பின் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வை
மதிப்பீடு செய்யும் அளவுகோ லில்லை!
விடியலின் பூபாளம் எல்லோர்க்கும் உண்டு!
படிக்கும் கடமையைச் செய்.

நெருங்காதே!
----------------------------
விருந்தோம்பல், நண்பர்கள் வட்டம் என்றே
அரும்பும் குடிப்பழக்கம் நாளும் பொழுதும்
பெருகும் அடிமைப் படுத்தி நகைக்கும்!
நெருங்காதே அப்பழக்கம் தீது.

Thursday, July 09, 2015

களைகள்!
--------------------
பிளவுகளை உண்டாக்கும் பேச்சும், பொறாமைக்
களத்தை உருவாக்கும் போக்கும் , சினத்தைக்
கிளறிப் பதம்பார்க்கும் சொல்லும் வாழ்வின்
தளத்தைத் தகர்த்துவிடும் சாற்று.

உணவும் பணமும்!
---------------------------------
உணவளித்துப் பார்த்தால் வயிறு நிறையும்!
மனதாரப் போதுமென்பார்! மக்கள்—பணங்கொடுத்தால்
 எவ்வளவு தந்தாலும் போதுமென்று மட்டும்
சொல்லமாட்டார்!வேண்டுமென்பார் இங்கு.

Wednesday, July 08, 2015

இப்படி இருக்காதே!
-------------------------------
நமக்குப் பிடித்தவரா நாளும் தலையில்
சுமந்துகொண்டு போற்றிப் புகழ்வோம்! தமிழே!
நமக்குப் பிடிக்கவில்லை என்றால்  இகழ்வோம்!
மனதில் நடுநிலையைப் போற்று.

ALL BIRDS FIND A SHELTER DURING RAIN.
BUT EAGLE AVOIDS RAIN BY FLYING ABOVE
THE CLOUDS.

PROBLEMS ARE COMMON, BUT ATTITUDE
MAKES THE DIFFERENCE.

DR.A.P.J.ABDULKALAM


பறவைகள் எல்லாம் மழைபெய்யக் கண்டால்
இடம்தேடிப் போகும் ஒதுங்க! கழுகோ
சிறகை விரித்து மழைமேகம் தாண்டிப்
பறந்தே தவிர்த்திருக்கும் பார்.
சிக்கல் பொதுவாகும்! உள்ளத்தின் அக்கறை
சிக்கலைத் தீர்க்கும் அணுகுமுறை ஆகியவற்றில்
மக்களிங்கே வேறுபட்டு நின்று செயல்படுவார்!
சிக்கலைச் சிந்தித்து வெல்.

தமிழாக்கம்
மதுரை பாபாராஜ்

போலியாய் வாழாதே!
--------------------------------------
போலித் தனமான நட்பும் உறவுகளும்
கேலிக் குரியதாய் மாறி அவமானம்
ஈவிரக்க மின்றித் தலைகுனிய வைக்கும்!
போலித் தனமோ இழிவு.

கல்வியின் பயன்
-----------------------------
கற்பது கூட பெரிதில்லை வாழ்க்கையில்!
கற்றுத் தெளிந்தபின் நற்பண்பைப் போற்றித்தான்
குற்றமின்றி வாழ்தல் பெரிதாகும்! நற்றமிழே!
கற்றதைக் கண்களாய்ப் போற்று.

முகநூலே நடைமுறை
----------------------------------++
புத்தகத்தை வாங்குங்கள் என்றே அலைந்தாலும்
புத்தகத்தை வாங்க முகஞ்சுழிப்பார்! - சற்றே
முகநூலில் உங்கள் படைப்புகளைப் போட்டால்
முகமலர்ந்து பார்ப்பார் படித்து.

பொறுப்பேற்பாரோ?
-----------------------------------
விளம்பரத்தில் காசு கிடைக்கிறதே என்று
தயங்காமல் மக்களை வாங்குவதற்குத் தூண்டும்
களத்தின் உயிர்த்துடிப்பாய் நாளும் நடிப்போர்
தரப்பொறுப்பை ஏற்பாரோ? சொல்.

போக்கை மாற்று!
--------------------------------
நடிப்பின் பெயரால் அந்தரங்கம் எல்லாம்
அதிரடியாய் இங்கே அரங்கத்தில் காட்டும்
நெறிமறந்த போக்கில் திரையுலகம் சென்றால்
மதிக்க மனம்வருமோ? சொல்.


தவிக்கவைக்காதே!
----------------------------------
அடுக்ககம் கட்டி நிலத்தடி நீரைக்
கடுகள வாக்கித் தவித்திடும் மாந்தர்
உறுத்தலே இன்றி மகிழ்வதும் ஏனோ?
அடுத்த தலைமுறையைப் பார்

மனமே காரணம்!
-------------------
இருக்கும் வசதிகளை வைத்து மனத்தில்
திருப்தியுடன் வாழ்வார் கிராமத்து மக்கள்!
அருமை வசதிகள் நாளும் கிடைத்தும்
திருப்தியின்றி வாழ்வார் நகரத்து மக்கள்!
இருப்பதில் நிம்மதி கொள்.

மனக்கோயில்!
------------- -----------------  -----
பணக்கோயில்! ஆண்டவர் ஏற்கமாட்டார்! கண்ணே!
மனக்கோயில் கட்டி ஒழுக்கமுடன் வாழ்ந்தால்
தினந்தோறும் ஆண்டவர் தேடிவந்து நிற்பார்!
மனத்தால் வணங்கு நிதம்.

உயிர்மூச்சு!
----- ----------------
தள்ளாமை, இல்லாமை, கல்லாமை என்றிங்கே
பல்வகை ஆமைகள் எல்லாமே இவ்வுலகில்
வெள்ளாமை இல்லாத சூழ்நிலையால் உண்டாகும்!
வெள்ளாமை வாழ்க்கையின் மூச்சு