Wednesday, November 30, 2016


புவியே புதிர்

தெரிந்தும்  தெரியாத கோலமே வாழ்க்கை!
புரிந்தும் புரியாத மாயையே வாழ்க்கை!
தெளிந்தும் தெளியாத ஞானமே வாழ்க்கை!
புவியே அவிழாப் புதிர்

கார்த்திகை விளக்கு
------------------------------------------
உள்ளம் கருவறைமேனியோர் ஆலயம்
தெள்ளத் தெளிவாக ஐம்புலனை நன்கடக்க
கவ்வும் இருளகற்றும் ஐந்து முகவிளக்கை
பண்புடனே ஏற்றுவாய் நீ.

Wednesday, November 23, 2016இரவின்
விழிகள்
மூடி இருப்பதால்
பகல்வேடங்கள்
தெரிவதில்லை


இதுதான் சொத்து

பட்டறிவின் முன்னே படிப்பறிவு செல்லாது!
எத்தனை கோடிகள் வைத்திருந்த போதிலும்
ஒப்பற்ற நாணயப் பண்பின்முன் செல்லாது!
நற்றமிழே! நற்பண்பே சொத்து.


Vov

வள்ளுவர் குரலை எதிரொலிக்கும்-- அதில்
வள்ளுவம் காட்டும் பொருளிருக்கும்!

நாட்டுக்கு நாடு உறுப்பினர்தான்
வீட்டுக்கு வீடு உறுப்பினர்தான்

இலக்கியம் கவிதை தத்துவங்கள்
எல்லாப் பதிவும் உண்டிங்கே
படங்கள் போட்டு கவிதைகள்
புகட்டும் முறயும் இங்குண்டு!

படங்கள் போட்டுத் திருக்குறளை
பொருத்திக் காட்டும் முறையுண்டு!

உளவியல் திருமூலர் இதிகாசம்
எல்லாச் சிறகும் விரியுமிங்கே!

போட்டி பொறாமை இருக்காது
வள்ளுவ ஒற்றுமை வீடிதுதான்
வந்து சேர்ந்தால் இதுபுரியும்
வந்தால் நன்மை உங்களுக்கே!

சூரியன் இங்கே மறையாது
விடிய விடிய வள்ளுவந்தான்

இருமனப் பெண்டிர்

ஒருவரை வாழ்த்துவதற் காக மனமே!
ஒருவரைத் தாழ்த்துவது நல்லதல்ல! என்றும்
இருமனப் பெண்டிர் நிலையெடுக்கும் போக்கு
கரும்புள்ளி யாக்கும் உணர்.

Sunday, November 20, 2016


போலி

காவி் யுடுத்திக்  கமண்டலத்தை ஏந்தினாலும்
ஆவிக்குள் அய்ம்புலன் பேராசை துள்ளினால்
போலித் துறவியென்றே எள்ளிநகை யாடுவார்!
வேலிக்குள் வாழ்ந்தால் மதிப்பு.


கடிதோச்சி

எச்சரிக்கை இன்றி எடுக்கப் படுகின்ற
அற்புத மான முடிவுகள் எல்லாமே
முற்றத்துச் சாக்கடையில் ஊற்றும் அமிழ்தாக
முற்றிலும் பாழாகும் பார்.


ஊரெல்லாம் பேசும் உணர்

ஊரை அடித்தே உலையிலே போடுகின்ற
கோழைத் தனந்தன்னை  நாடேசும்---  ஏழையாய்
வாழ்ந்தாலும் நேர்மை மணக்கின்ற உள்ளத்தை
ஊரெல்லாம் பேசும் உணர்.மலைப்பு

சிகரத்தில் ஏறி திரும்பித்தான் பார்த்தால்
கடந்துவந்த பாதை மலைப்பினைக் காட்டும்!
தடைகளைத் தாண்டிக் கடந்திடும் வாழ்வும்
நடைமுறையில் அப்படித்தான் பார்.

கப்பலோட்டிய தமிழன் நினைவு நாள்

18.11.2016

கப்பலோட்டி ஆங்கிலேய ஆட்சியை ஆட்டிவைத்த
நற்றமிழர்! செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்
நற்புகழும் செய்த தியாகமும் மங்காது!
எப்பொழுதும் வாழ்த்தி வணங்கு.

கறுப்புப் பணம்!

கொட்டினார் கொட்டியதைக் கட்டினார் !கட்டியதைப்
பெட்டியில் கொட்டினார்! பெட்டியைக் கட்டிலுக்
கொட்டியே கட்டிவைத்துத் தட்டிதட்டிக் கொட்டாவி
விட்டவரைச் சட்டமோ  தொட்டதும் தேளொன்று
கொட்டியது போலானார் கூறு.கறுப்புப் பணம்!

Thursday, November 17, 2016பாலாவின் நாட்டுக்குறளிசைக்கு வாழ்த்து!
17.11.16

ஏட்டுக்குள் வாழும் குறள்களை பாலாவின்
நாட்டுக் குறளிசைப் பாடல்கள்-- வீட்டுக்குள்
கொண்டுபோய் சேர்க்கும்! அய்யமில்லை! இத்தொண்டை
வண்டமிழ்த்தாய் வாழ்த்துகின்றாள்  பார்.

காட்சி மாற்றம்!

இமாலய ஆற்றல்! பணிக்களத்தில் சொன்னார்!
சமுதாய வீதியில் ஓய்ந்துபோய் வந்தேன்!
இமைகளே என்னைத் துரும்பாக்கிப் பார்க்க
அமைதியாய்ப் பார்த்தேன் நகர்ந்து.

Tuesday, November 15, 2016

கண்கள்
எதையெதையோ பார்த்தாலும் நல்லதை மட்டும்
கடைந்தெடுத்துத் தேக்கினால் நன்று--- அதைவிட்டுக்
கண்டதைத் தேக்கினால் உள்ளத்தில் மாசுகள்
தங்கிக் கலங்கவைக்கும்! சாற்று.

குழந்தைகள் நாள் வாழ்த்து 14.11.16

குழந்தை மனங்கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்
குழந்தைத் தனத்தைத் தவிர்த்து.

Saturday, November 12, 2016

ஏட்டுச் சுரைக்காய்

நாட்டு நடப்புகளைக் காணுகின்ற நேரத்தில்
ஏட்டுச் சுரைக்காய் கறிசமைக்க தோதாமோ?
நாட்டுப் பழமொழிதான் உள்ளத்தில் தோன்றுதம்மா!
காட்சிகளைப் பார்த்திருப்போம் நாம்.

கரியாகிப் போனது காசு

வரிஏய்ப்புச் செய்து பதுக்கிய ரூபாய்
ஒருநாள் அரசாணை மூலம் -- செருக்கின்
அரியணை ஆட்டம் அடங்கிட இங்கே
கரியாகிப் போனதே காசு.

Thursday, November 10, 2016

Rivers don't drink water....They flow & carry..!!
No prejudice on who drinks it.

Trees don't eat fruits..!!  They bear & give ...
No prejudice on who eats it.

Clouds don’t bath...They shower...
No prejudice on whom or where to shower.
So, let's perform our KARMA knowing nothing is ours...except to play our role !!!

இயற்கையைப்பார்

( மொழிபெயர்ப்பு)

நதிகளோ நீரைக் குடிப்பதில்லை! நாளும்
துடித்தே சுமந்துசெல்லும்! யார்குடிப்பார் என்று
நொடிப்பொழுதும் எண்ணுவதில்லை! ஆனால்
கடமையைச் செய்யும் களித்து.

மரங்கள் கனிகளை உண்பதில்லை! நாளும்
தவறாமல் தானே சுமந்துநிற்கும்! இங்கே
எவருண்பார் என்றெண்ணம் இன்றி, கடமை
முயற்சியில் வாழ்கிறது பார்.

கார்முகில் வான்மழையை இங்கே பொழிகிறது!
யாருக்கோ எவ்விடமோ என்றேதான் பார்ப்பதில்லை!
சார்பின்றித் தன்கடமை தன்னைப் பருவத்தில்
ஆர்வமுடன் செய்கிறது பார்.

நாம்நம் கடமையை நாள்தோறும் செய்திடுவோம்!
ஏங்காமல் என்ன வருகிறதோ ஏற்றுவாழ்வோம்!
 தேங்கும் எதிர்பார்ப்பைத் தூக்கி எறிந்திடுவோம்!
தேனகமாய் மாறும் அகம்


தந்தை முத்துசுப்பு நினைவுநாள்!

வாழ்க்கை நிறைவெய்திய ஆண்டு 11.11.1980

நேர்மை கடமை அறநெறி இம்மூன்றை
வாழ்வியலாய் மாற்றித்தான் வாழ்ந்திருந்த தந்தை!
தாள்பணிந்து நாங்கள் வணங்குகிறோம்! ஆசிகளை
நாள்தோறும் நாடுகிறோம் இங்கு.

பாப்பாப் பாடல்

காகமும் தாகமும்

காகம் ஒன்று வந்தது
தாகம் வாட்ட நின்றது

குடத்தை அங்கே கண்டது
தாகம் தீர்க்க நினைத்தது

குடத்தை எட்டிப் பார்த்தது
தண்ணீர்  அடியில் இருந்தது

அருகில் கிடந்த கற்களை
ஒவ்வொன் றாக குடத்திற்குள்

அலகால் கவ்விப் போட்டது
தண்ணீர் மேலே வந்ததும்

தாகம் தீர குடித்தது
மீண்டும் பறந்து சென்றது

வசப்படுத்து!

நடக்கும் நிகழ்வுகளின் போக்கிலே சென்று
கடப்பது தானிங்கே வாழ்க்கை-- தடைக்கற்கள்
ஏற்பட்டால் நம்பிக்கை கொண்டே கடந்திடு!
நாற்றிசையும் உன்வசந்தான் பார்.