Wednesday, April 27, 2011

வீடேது? கூடேது?
=========================
ஒருகாயம் இங்கே குணமாகும் முன்பே
குருதியைக் கொட்டும் மறுகாயம் என்றால்
பெருக்கெடுக்கும் வேதனைத் தீயிலே வெந்து
கருகுவதே வாழ்க்கையா?கூறு.

கற்கள் உறுத்த குனிந்துநான் பார்த்தபோது
கற்பாறை ஒன்றோ தலைமேல் விழுந்தது!
தட்டுத் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன்!
இப்படித்தான் வாழ்கின்றேன்! நான்.

யாரிங்கே எப்படித்தான் போனால்தான் என்னவென்றே
ஓரமாய் நானும் ஒதுங்கித்தான் சென்றாலும்
பாரத்தை நெஞ்சம் சுமக்கும் வலியினிலே
பாரில் துடிக்கின்றேன்! பார்.

பெருங்கடலில் துள்ளிவரும் பேரலைகள் கூட
ஒருநாள் அடங்கிவிடும் காட்சியுண்டு! ஆனால்
உருக்கும் உளைச்சலில் என்னைப் புரட்டும்
ஒருநிலை மாறாது! பார்.

ஆப்பில் அகப்பட்ட மந்தியைப் போலத்தான்
ஆட்டிப் படைக்கின்ற கூட்டத்தில் சிக்கிவிட்டேன்!
ஈட்டி முனைகளாய் வாழ்க்கையே மாறுமென்றால்
சாக்காடே பூக்காடு தான்!

வீடும், சுமந்திருக்கும் கூடும் நிலையில்லை!
ஓடுதடா வாழ்க்கை நதிபோல! ஓடியே
கூடுதடா சாவின் கடலைத்தான்! செத்தபின்
வீடேது? கூடேது? கூறு!

மதுரை பாபாராஜ்

Tuesday, April 26, 2011

காலைமுதல் இரவுவரை இல்லத்தரசி!

==================================
குங்குமக் கூடு திறக்கும் நளினம்போல்
மங்கையின் பூவிழிகள் தூக்கம் கலைந்தேதான்
இங்கே திறந்தன! கண்ணாடி பார்த்திருந்த
பொன்மகள் நாணினாள் பார்.

எழுந்தாள்! நடந்தாள்! கடமைகள் என்னும்
குழந்தைகள் ஒவ்வொன்றாய் வந்து -- தழுவித்
தழுவி, அடம்பிடிக்க ஒவ்வொன்றாய்ப் பார்த்தே
மலைக்காமல் கொஞ்சினாள் அங்கு.

அவரவர்க் கேற்றாற்போல் அன்பைப் பகிர்ந்தே
தவழவிட்டுப் பார்ப்பாள் மகிழ்ந்து -- அவளது
பங்களிப்புப் பண்பாட்டில் வீடே கலகலப்பாய்
இன்பத்தில் கூடிநிற்கும் சொல்.

துன்பங்கள் சூழும் பொழுதில் துவளாமல்
என்னென்ன செய்யவேண்டும் என்றேதான் -- நன்றாய்க்
கணக்கிட்டுக் கச்சிதமாய் ஆறுதலைத் தந்தே
இணக்கமுடன் நின்றிருப்பாள் வந்து.

கருத்துக்கள் வேறுபடும் நேரத்தில் கோபம்
சுருக்கென்று வந்தாலும் அந்த --ஒருபொழுதில்
சீறுவாள்! காரணத்தை ஆராய்ந்தே மாறுவாள்!
தேறுவாள்! தேற்றுவாள்! செப்பு.

தவறுகள் யாரிடம் என்பதைக் காட்டி
உரசலை நீக்கி மறப்பாள் -- தரணியில்
ஒற்றுமை காக்கும் திறமை இவளுக்கோ
கற்காமல் வந்ததைக் காண்.

பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர் சென்றுவிட்டார்!
எள்ளளவும் தன்சுமை இங்கே குறையவில்லை!
நல்லவளோ உண்டது கொஞ்சந்தான்! நேரமில்லை!
தள்ளிவைத்தாள் ஓய்வை உணர்.

இரவுப் பொழுதில் அனைவரும் வந்தார்!
சரசர வென்றே கடமை -- பரபரவென்றே
மாற்ற மறந்துவிட்டாள் தன்னை! ஒருவாறாய்
ஏக்கமுடன் தூங்கவந்தாள் மாது.

காலைமுதல் மாலைவரை ஓய்வின்றி இல்லறத்தைச்
சோலையாக மாற்றியவள் தூங்குகின்ற -- வேளைதான்
ஓய்வெனினும் ஓயாமல் நாளை உழைப்பதற்கே
ஓய்வை வலிந்தேற்பாள் இன்று.

கடலலைகள் ஓயாது என்பார் கவிஞர்!
கடமை அலைகளில் ஓய்வின்றித் துள்ளி
நடம்புரியும் மங்கையைப் பார்த்ததும் இந்தக்
கடலலைகள் நாணும் உணர்.

மதுரை பாபாராஜ்

Friday, April 22, 2011

ராகபேதம்!

============================
ஒற்றுமை நாரில் தொடுத்த மலர்களாக
அக்குடும்பம் வாழ்ந்திருந்த கோலத்தை மாற்றியே
அக்கக்காய் இங்கே பிரிந்துநின்று வாழ்கின்றார்!
இக்கோலம் தந்தது யார்?

அக்காவும் தம்பியும் அண்ணனும் தங்கையும்
எத்தகைய வேறுபாட்டை இங்கே சுமந்தாலும்
ஒற்றுமைக் கோட்டை அழிக்காமல் வழ்ந்திடுவார்!
பற்றிப் படராது பார்.

தங்களுக் கென்றே குடும்பம் அமைந்ததும்
தங்களுக் கென்றே குழந்தை பிறந்ததும்
எங்கிருந்து வேறுபாடு எப்படித்தான் தோன்றுமோ!
கொந்தளிப்பில் வாழ்ந்திருப்பார் இங்கு.

என்வீடு உன்வீடு என்குழந்தை உன்குழந்தை
வம்புகள் வீண்பேச்சு கோபம் வெறுப்புடன்
அன்றாடம் போராட்டம் என்றே உலவுகின்றார்!
இந்தநிலை ஏனோ இயம்பு?

மலர்களின் எண்ணிக்கை கூடினால் இங்கே
வளர்ந்து மணக்கவேண்டும் ! வாழ்விலோ நாரைக்
கலைந்தெறிந்து நாளும் பிரிந்தேதான் வாழ்ந்தால்
உளைச்சல்தான் மிஞ்சும் உணர்.

பெற்றோரைப் பேணுகின்ற தங்கள் கடமையிலும்
பெற்றெடுத்த பிள்ளைகள் கூறுபோட்டுப் பார்க்கின்றார்!
நற்றமிழே! இங்கே பணச்சிக்கல் வந்துவிட்டால்
பெற்றோரும் வேம்பாவார்! கூறு.

திருமணம் செய்வதற்கு முன்பிருந்த ராகம்
திருமணம் செய்ததற்குப் பின்னிங்கே நாளும்
முரண்பட்டுக் கேட்கிறதே! இத்தகைய போக்கோ
உலகமெலாம் உள்ளதைப் பார்.

Thursday, April 14, 2011

அன்னா ஹசாரே இயக்கத்தை அரசியல் ஆக்காதே!

=============================================
இந்திய நாட்டின் ஒழுக்கத்தைச் சீர்குலைக்கும்
வன்முறைச் சூறையாம் ஊழல் ஒழிந்திடவே
அன்னா ஹசாரேதான் உண்ணா விரதத்தைத்
தன்னலம் இன்றியே மேற்கொண்டார்! ஆதரவு
பொங்கிவந்த ஆவேசம் மத்திய ஆட்சியை
சிந்திக்க வைத்தது! செப்பு.

புரட்சியை நாளும் திரைப்படத்தில் காட்டிப்
புரட்டும் தமிழ்நடிகர் யாரையும் காணோம்!
புரட்சியை ஏட்டுச் சுரைக்காயாய் மாற்ற
திரையில் கரைந்துவிட்டார்! காண்.

ஊழலை நாங்கள் விரட்டுவோம் என்றேதான்
காரமாய்ப் பேசும் அரசியல் வாதிகள்
தூரமாய் நின்றுதான் வேடிக்கை பர்த்தனர்!
ஊழலின் சிற்பிகளைப் பார்.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஆதரவை
முன்வந்து தந்தார்! வெளிநாடும் தன்பங்கை
முந்திவந்து காட்டியது! ஆனால் தமிழ்நாடே!
கண்மூடிக் கொண்டதேன்? கூறு.

மத்தியில் ஆளும் அரசியல் வர்க்கத்தார்
அக்கறையாய் ஊழல் எதிர்ப்பு மசோதாவை
மக்களே பாராட்டும் வண்ணம் நிறைவேற்றி
நற்பெயர் பெற்றால் நலம்.

இதையும் அரசியல் ஆக்குகின்ற போக்கைக்
கடைப்பிடித்தால் நாடே அணிதிரளும்! அன்று
தடையுடைக்கும் வெள்ளத்தை யாரும் இங்கே
தடுக்க முடியாது! சாற்று.

அன்றாடம் மக்கள் முணுமுணுத்து நொந்துபோகும்
இந்தப் பிரச்சனைக்குப் போராடி நிற்பதாலே
அன்னா ஹசாரே அதர்மத்தை வெல்வதற்கு
வந்த அவதாரம் ! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கண்டிப்பின் பயன் நன்மையே !

================================
பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்றே குழந்தைகள்
துள்ளி அழுவதும் பெற்றோர் அவர்களை
அள்ளித் துடிதுடிக்க நாளும் அனுப்புவதும்
பள்ளியின் காட்சிதன் பார்.

அழுதால் அனுப்பமாட்டார் என்ற எண்ணம்
விழுந்துவிட்டால் நாளும் அழுதிடுவார் இங்கு!
அழஅழ பள்ளிக்(கு) அனுப்புவது நாளும்
குழந்தை உயர்வதற்கே! சொல்.

இப்படிச் செய்தாலும் பள்ளிக்கு நாமிங்கே
எப்படியும் சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தை
அப்படியே பிள்ளைகள் உள்வாங்கும் பக்குவத்தில்
கற்பதற்கு நாடுவார் காண்.

பள்ளிக்குள் சென்றதும் ஆசானைப் பார்த்ததும்
பள்ளியில் மாணவர்கள் கூட்டத்தைப் பார்த்ததும்
துள்ளியழும் பிள்ளைகள் சட்டென்றே மாறிடுவார்!
பள்ளிதான் பிள்ளைக்குக் காப்பு.

மதுரை பாபாராஜ்

Sunday, April 10, 2011

மக்களாட்சியா?

===============
நகரங்கள் எல்லாம் வளர்ச்சியை நாளும்
மகத்தாகக் கண்டேதான் முன்னேற்றம் காணும்!
அகங்குளிரும் வாழ்க்கை! அடிப்படைத் தேவை
வகைவகையாய் உண்டிங்கே பார்.

உயிர்நாடி யான கிராமத்தைப் பார்த்தால்
உயிரோட்டம் இல்லாத கோலந்தான் உண்டு!
சலிக்காமல் என்றும் உழைக்கின்ற மக்கள்
நலிந்தேதான் வாழ்கின்றார் ஏன்?

வளங்கள் எல்லாம் நகரிலும், வாட்டித்
தளரவைக்கும் ஏழ்மை கிராமத் திலுமே
வலம்வரும் என்றால் மக்களாட்சி என்ற
பெயரெதற்கு? சிந்திப்போம் இன்று.

வாழ்வின் அடிப்படைத் தேவை கிராமத்தில்
வாழ்கின்ற மக்களுக்கு நளும் கிடைப்பதற்குச்
சூளுரைத்தே அட்சி அமைக்கின்ற கட்சிக்கே
தேர்தலில் வக்களிப்போம் வா.

விலைவாசி ஏறாத ஆட்சியைத் தா!

===============================
இலவசங்கள் பட்டியலே தேர்தல் அறிக்கை!
தரங்கெட்டுப் போன அரசியலின் வேட்கை!
தலைநிமிர்ந்து வந்தேதான் வாக்குகள் கேட்கும்
நிலையெண்ணி நொந்துபோனோம் நாம்.

ஆக்கபூர்வ திட்டத்தைக் கூறாமல் வக்கிரத்தின்
ஆட்டத்தை நாளும் அரங்கேற்றிப் பார்க்கின்றார்!
வாக்களிக்கும் மக்களே ! சிந்தித்துச் சீர்தூக்கி
வாக்களித்தால் வாழும்நம் நாடு!

நல்லவரை வல்லவரை ஊழல் மகுடிக்கு
எள்ளளவும் இங்கே மயங்காத உத்தமரை
உள்ளத்தில் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டுமிங்கே!
நல்லரசைக் காண உதவு.

இலவசத்தின் பட்டியலில் போட்டிக்குப் போட்டி!
மலைப்பினிலே மக்களிங்கே வாயடைத்துப் போனார்!
விலைவாசி ஏறாத ஆட்சியைத் தந்தால்
இலவசமே தேவையில்லை இங்கு.


மதுரை பாபாராஜ்

Thursday, April 07, 2011

இது ஒரு தேர்தல் காலம்!

=============================
அண்ணனென்பார்! தம்பியென்பார்! தங்கை, தமக்கையென்பார்!
முந்திவந்து தங்களுக்கே வாக்களிக்க வேண்டுமென்பார்!
மன்னர்கள் நீங்களென்பார்! தொண்டர்கள் நாங்களென்பார்!
கண்முன்னே வேடதாரி பார்.

ஊர்வலங்கள்! தேர்தல் தெருக்கூட்டம் நாள்தோறும்!
நார்நாராய் நாட்டின் அமைதியைத் தான்கிழிப்பார்!
சேராதார் எல்லோரும் சேர்ந்தேதான் கூட்டணியில்
ஊர்நகைக்க வந்திருப்பார் பார்.

வகைவகையாய் வாக்குறுதி தந்திடுவார் வந்து!
தொகைதொகையாய் அள்ளிப் பணந்தருவார் வந்து!
திகைத்துநிற்கும் வாக்காளர் காலில் விழுந்தே
திகைக்கவைப்பார் வேட்பாளர் தான்.

தேர்தல் முடிந்தே அரசை அமைத்துவிட்டால்
யாரும் தொகுதிக்குள் எட்டியே பார்க்கமாட்டார்!
பார்ப்பதற்கு நாம்சென்றால் வாக்களித்த நம்மைத்தான்
யாரென்று கேட்பார் சிரித்து.

நம்நாட்டு மக்களாட்சித் தேர்தல் நடைமுறைகள்
இன்றும் தொடர்கதையாய் இப்படித்தான் உள்ளது!
என்றிது மாறுமோ? ஏக்கம் மறைந்திடுமோ?
அன்றுதான் இங்கே விடிவு.

பகையைப் பொசுக்கு!

======================
வீட்டுக்குள் வந்தோர் பகைவரே என்றாலும்
காட்டும் வரவேற்பில் உட்பகை மாறிவிடும்!
மாற்றம் உருவாக மார்க்கம் அதுதானே!
தேக்கும் பகையைப் பொசுக்கு.

பகைமனப் போக்குகளைப் பந்தாட விட்டால்
நகைக்கவைத்துப் பார்த்திருக்கும்! நம்மனமே நம்மை
இகழும்!! இடித்துரைக்கும்! தூற்றும் துளைத்து!
அகத்தில் இருள்சூழும் பார்.

நீறுபூத்து நிற்கும் நெருப்பாக இல்லாமல்
நீரால் அணைந்துபோன தீயாக ஆகிவிட்டால்
சீராட்டும் நிம்மதி வாசலுக்குத் தேடிவரும்!
போராட்டம் நின்றுவிடும் சொல்..

காதல் திருமணங்கள்

=========================
ஆண்களும் பெண்களும் சேர்ந்து பணிபுரியும்
பண்பாட்டில் காதலிக்கும் வாய்ப்புகள் ஏராளம்!
பெண்ணும் முடிவெடுப்பாள்!ஆணும் முடிவெடுப்பான்!
கண்ணெதிரே காண்கின்றோம் நாம்.

தந்தைக்கும் தாய்க்கும் தகவல்தான் வந்துசேரும்!
அன்புடன் ஆசிகளைத் தந்தே ஒதுங்கவேண்டும்!
தங்கள் கருத்துத் திணிப்பினை ஏற்கமாட்டார்!
இந்தக் கோலந்தான் இன்று.