Thursday, April 05, 2007

நம்பிக்கை ஒளி

கேள்விக் குறியாகி கேட்பதற்கே ஆளின்றி
வாழ்க்கை வழியின்றித் தத்தளிக்கும் -- கோலத்தில்
எங்கேயோ வாசல் திறந்து வரவேற்கும்!
குன்றாய் நிமிரவைக்கும் கூறு.

மனவறுமை

பணவறுமை இங்கே படைக்கின்ற துன்பம்
மனஉளைச்சல் தந்தாலும் மாறும் -- மனிதா!
மனவறுமை ஏற்படுத்தும் வாழ்வின் துயரம்
குணக்கேடன் ஆக்கிவிடும் கூறு.

திருக்குறளே ஆணிவேர்

அறத்துப்பால் நன்னெறியை அன்றாடம் வாழ்வில்
மறக்காமல் பின்பற்றி வாழ்ந்தால் -- சிறப்பான
பண்பை விளக்கும் பொருட்பால் பொங்கிவர
இன்பம் நிலைக்கும் இயம்பு.

உலகப் பொதுமறையாய் உள்ளம் குறளை
நிலையாக ஏற்கும் நிலைதான் -- உலகில்
அனைத்துமத நல்லிணக்கம் ஆணிவேராய் ஊன்ற
வினைமுடுக்கும் என்றே விளம்பு.

ஒற்றுமை சரிந்தது

தலைநிமிர்ந்து நின்றேன்! தலைக்கணம் இல்லை!
நிலையுணர்ந்து வாழ்கின்றேன் நித்தம் -- மலைபோல்
நெடிதுயர்ந்த ஒற்றுமை நெற்றியடி வாங்க
துடித்தேன்! சரிந்தேன் ! துவண்டு.

நம்பிக்கையோடு நடைபோடு

வாழ்க்கை என்பது களிமண்தான் --அதில்
வடிவம் காண்பது உன்மனந்தான்!

சூழ்நிலை சுற்றி வளைத்தாலும்
தூண்டில் போட்டே இழுத்தாலும்
கோழை யாக மாறாதே !
கூச்சல் போட்டே ஓடாதே!

மலையைப் போல நின்றிடுவாய்!
மலைப்பைத் தூக்கி எறிந்திடுவாய்!
நிலையைப் புரிந்தே செயல்படுவாய்!
நேர்மையாய் நின்றே வென்றிடுவாய்!

எத்தனைக் கதவும் மூடட்டும்!
இன்னொரு கதவு திறந்துவிடும்!
முற்றிலும் நிலைகள் மாறிவிடும்!
முன்னேற் றங்கள் ஊறிவரும்!

நம்பிக்கை யோடு நடைபோடு!
நாலையும் நன்றாய் எடைபோடு!
நாணயம் ஒழுக்கத்தை மூச்சாக்கு!
நாளும் வெற்றியை வீச்சாக்கு!

பனித்துளி

மனிதனை இங்கே மரணம் நெருங்கி
மணித்துளியில் காற்றில் மறையும் -- பனித்துளியாய்
மாற்றி மறைந்திடச் செய்கின்ற வாழ்விது!
ஊற்றெடுக்கும் உட்பகையோ ஏன்?