Thursday, July 29, 2010

பாவம்! அறியாக் குழந்தை!

===========================
காற்றால் மழையால் இடியால் கலங்கவைத்து
நேற்றிரவு கூத்தடித்த வானமா இன்றுகாலை
மாற்றமின்றி ஒன்றும் அறியாக் குழந்தைபோல்
தோற்றத்தைக் காட்டுவது சொல்.

Wednesday, July 28, 2010

இனப்பற்று!

===================
காகம் தெருவில் இறந்து கிடந்தது!
காகங்கள் ஏங்கிப் பறந்து கரைந்தன!
தேடுகின்ற அந்தப் பறவைகள் கூடிநின்று
வாடுகின்ற கோலத்தைப் பார்.

மனிதன் தெருவில் இறந்து கிடந்தான்!
மனித இனமோ ஒதுங்கி நடந்தது!
இனப்பற்றில் காகம் உயர்ந்து பறக்க
மனிதனோ தாழ்ந்தான் நடந்து.

Tuesday, July 27, 2010

மனிதமரம்!

===================
எந்த மரத்தில் எதுவிளைய வேண்டுமோ
அந்த மரத்தில் அதுவிளையும்!வாழவைக்கும்!
மண்ணில் மனிதமரம் பண்பின் விளைச்சலின்றி
அண்டிக் கெடுப்பதேன் கூறு.

கம்பராமாயணக் காட்சிகள்

"கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர்இயன்ற மதிக்கும் உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஓர் தொல்மறு,
ஆரியன்!பிறந்து ஆக்கினையாம் அரோ!"(4135)
====================================================
கருமை நிறத்தில் நிலவுக்கு விண்ணில்
ஒருகளங்கம் உள்ளதால், மண்ணிலே உன்னால்
ஒருகளங்கம் சூரிய வம்சத்தில் ஊன்றும்
கருத்துடன் இந்தப் பழிச்செயலைச் செய்யும்
கருத்துனக்குத் தோன்றியதோ? கூறு.
======================================================

"மற்று ஒருத்தன் வலிந்து அறை கூவ, வந்து
உற்ற என்னை, ஒளித்து, உயிர் உண்ட நீ,
இற்றையில் , பிறர்க்கும் இகல்ஏறு என
நிற்றிபோலும்? கிடந்த நிலத்து அரோ?"(4136)
================================================
என்தம்பி சுக்கிரீவன் தானே வலியவந்து
என்னைத்தான் போருக்கு அழைத்தான்! அதையேற்று
வந்தபோது யாரும் அறியாத வாறிங்கே
என்னை மறைந்திருந்து அம்பெய்து என்னுயுரை
இங்கே கவர்ந்ததற்கு வெட்கப் படவேண்டும்!
மண்ணில் தளர்ந்து விழுந்திருக்கும் நேரத்தில்
கண்ணெதிரே ஏதோ வலிமை பொருந்திய
கண்கவர் ஆண்சிங்கம் செய்தற் கரியசெயல்
ஒன்றினைச் செய்ததைப் போல செருக்குடன்
வந்தேதான் நிற்கின்றாய்! வெட்கமாய் இல்லையா?
என்றே கனன்றுரைத்தான் காண்.
===================================================
"நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும், சீலமும் போற்றலை;
வாலியைப் படுத்தாய் அலை; மண் அற
வேலியைப் படுத்தாய்,விறல் வீரனே!"(4137)
================================================
சாத்திர நூலின் விதிமுறையை,முன்னோர்கள்
காத்த வழக்கத்தை மற்றும் மனுநேறியைப்
போற்றுகின்ற உன்னுடைய நல்லொழுக் கத்தையோ
ஏற்று மதித்து நடக்கவில்லை! உன்மனமோ
ஏதோ தனிமனிதன் வாலியை வென்றதாக
நாடறிய இங்கே இறுமாப்புக் கொள்ளாதே!
நாடுகாக்கும் நல்லரசர் போற்றும் அறநெறிக்குப்
பாடுபட்டுக் கட்டிய வேலியை முற்றிலும்
கூறுபோட்டு, அய்யோ! அடியோ டழித்துவிட்டாய்!
சாடுகிறான் வாலிதான் சாற்று.
====================================================
"தாரம் மற்றொருவன் கொள, தன் கையில்
பார வெஞ்சிலை வீரம் பழுதுற!
நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே?"(4138)
====================================================
உன்மனைவி சீதையை அந்தோ! ஓரரக்கன்
வஞ்சனை செய்தே அபகரித்துச் சென்றுவிட்டான்!
அந்த அரக்கனைப் பின்தொடர்ந்து உன்வில்லால்
வஞ்சகனைக் கொன்றேதான் இல்லாளை மீட்டுவர
இங்கே இயலாத நீயேன் கரத்திலே
தொங்குகின்ற வில்லைச் சுமைபோலத் தாங்குகின்றாய் ?
உன்வீரம் என்றும் பழிப்புக் கிடமாகும்!
என்கையில் ஆயுதமே இல்லாமல் நின்றபோது
என்னுடன் நேருக்கு நேராகப் போரிடாமல்
எங்கோ மறைந்திருந்து மார்பிலே அம்பெய்து
என்னுயிரைக் காவுகொண்டாய்! இத்தகைய வில்வீரம்
எங்கேனும் கண்டதுண்டா? என்றே உலகத்தார்
உன்னைத்தான் போற்றுவரோ?உன்னுடைய வில்வித்தை
தன்னுள் விளைவிக்கும் வல்லமை தானிதுவோ?
என்றே இகழ்ந்துரைத்தான் !பார்.
=================================================
என்று, தானும் எயிறு பொடிபடத்
தின்று, காந்தி,விழிவழித்தீ உக,
அன்று, அவ்வாலி அனையன கூறினான்;
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான்.(4139)
===========================================
பற்கள் பொடியாக, கடித்துச் சினந்தேதான்
உக்கிரமாய்க் கண்களில் தீப்பொறி சிந்திவர
வாலி விடுத்த பழிமொழி அம்புகளை
வேலிஎனும் பண்பாம் பொறுமையுடன் ராமனோ
ஈரமனம் கொண்டேதான் கேட்டுவிட்டுத் தன்பதிலை
சாரமுடன் கூறினான் பார்.
=====================================================

வாலியின் பழிச்சொற்களுக்கு இராமனின் மறுமொழி!(பாடல்:4140--4150)

"பிலம் புக்காய் நெடுநாள் பெயராய்" எனாப்
புலம்புற்று, உன்வழிப் போதலுற்றான் தனை,
குளம் புக்கு ஆன்ற முதியர், "குறிக்கொள் நீ
அலம் பொன் தாரவனே!அரசு" என்றலும்.(4140)
================================================
மாயாவி என்னும் அரக்கன் உனைஎதிர்க்க,
மாயாவி ஓடஓட அங்கே குகைக்குள்ளே
வேழமென பின்சென்று போர்புரிந்தாய் வீரமுடன்!
காலம் இருபத்தெட் டாண்டுகள் சென்றன!
நீவர வில்லையென உன்தம்பி சுக்ரீவன்
தான்சென்று பார்க்க விரும்பிய நேரத்தில்
சான்றோர் தடுத்தனர்! தம்பியும் உட்சென்றால்
தங்களது நாடோ அரசனே இல்லாமல்
நொந்துபோய் தத்தளிக்கும்!போகவேண்டாம்! என்றனர்!
எங்களுக்கு நீதான் அரசனாய் ஆகவேண்டும்!
பங்கமின்றி காக்கவேண்டும்! என்றனர் எல்லோரும்!
இந்தநிலை தோன்றியதே அன்று.
======================================================
"வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாளக் கிளையும் இறத் தடிந்து,
யானும் மாள்வென்; இருந்து அரசு ஆள்கிலேன்;
"ஊனம் ஆன உரை பகர்ந்தீர் "என.(4141)
================================================
என்னுடைய அண்ணனைக் கொன்ற அரக்கனையும்
பன்பற்றோன் சுற்றத்தார் எல்லோரும் மாளுகின்ற
வண்ணம்நான் செய்துவிட்டு நானும் இறந்திடுவேன் !
என்னண்ணன் இல்லாமல் நான்மட்டும் வேந்தனாகும்
எண்ணம், பழிச்சொல்லை ஏந்தும் அறிவுரையை
இங்கேன் உரைத்தீர்? எனக்கேட்டே சுக்கிரீவன்
உன்னுயிர்த் தம்பியானான் பார்.
===================================================

"பற்றி ஆன்ற படைத்தலை வீரரும்,
முற்று உணர்ந்த முதியரும்,முன்பரும்,
"இற்றது உம அரசு எய்தலையேல்" என,
கொற்று நன்முடி கொண்டது, இக்கோதிலான்."(4142)
=====================================================
சுக்கிரீவன் ஆள மறுத்தபோது ஆற்றலில்
மிக்கத் தளபதிகள், மற்றும் அமைச்சர்கள்,
மக்களும் உன்பின்னே வந்தே உயிர்விடும்
சுக்கிரீவன் எண்ணத்தை அங்கே தடுத்தேதான்
"இப்போது மன்னன் பொறுப்பைத் தவிர்த்திட்டால்
எப்போதும் இந்நாடு கெட்டழியும்" என்றனர்!
வற்புறுத்தல் தம்பியின் எண்ணத்தை மாற்றியது!
பற்றின்றி அம்மகுடம் தாங்கித்தான் ஆட்சியைக்
குற்றமற ஏற்றான்!நடந்ததே இஃதுதான்!
அக்கறையாய் வாலியே கேள்.
=============================================
"வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்;
"எந்தை!என்கண், இனத்தவர் ஆற்றலால் ,
தந்தது உன் அரசு," என்று,தரிக்கிலான்
முந்தை உற்றது சொல்ல, முனிந்து நீ.(4143)
=========================================================
மாயாவி என்னும் அரக்கனைக் கொன்றுவிட்டு
நேராக நீவந்தாய்! உன்னை வணங்கினான்!
தாய்கண்ட சேய்போல் மகிழ்ந்திருந்தான்! தந்தையைப்
போலான அண்ணனே ! மூத்தவர்கள் வற்புறுத்த
காலத்தால் நானோ உடன்பட வில்லையன்னா!
கோல நிகழ்வைத் தொகுத்தளிக்க முற்பட்டான்!
சாரமின்றி தம்பியின் கூற்றை மறுத்துவிட்டாய்!
வேழம்போல் கோபித்தாய்! என்றே இராமன்தான்
சாரமுடன் சொல்லிநின்றான் அங்கு.
======================================================
"கொல்லல் உற்றனை உம்பியை; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை;
"அல்லல் செய்யேல்; உனக்கு அபயம்; பிழை
புல்லல்"; என்னவும், புல்லலை; பொங்கினாய்;"(4144)
====================================================
தம்பியிடம் குற்றமில்லை என்றுணர்ந்த பின்னரும்
அண்ணனான நீயோ இரக்கத்தைக் காட்டாமல்
தம்பியைக் கொல்ல முயற்சித்தாய்; அவனுன்னை
அன்பால் பணிந்து "நானுனக்குத் தஞ்சமென்றும்,
துன்புறுத்த வேண்டாம், எனவணங்கிக் கேட்டபோதும்
வஞ்சினம் கொண்டேதான் பொங்கி எழுந்தாயே,"
என்றான் இராமன் அளந்து.
========================================================
"ஊற்றம் முற்று உடையான்,"உனக்கு ஆர் அமர்
தோற்றும்" என்று தொழுது, உயர் கையனைக்
"கூற்றம் உண்ணக் கொடுப்பென்" என்று எண்ணினாய்;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான்."(4145)
========================================================
சூரியன் மைந்தனாம் சுக்கிரீவன் உன்னையோ
பாரில் எதிர்க்கும் முழுஆற்றல் பெற்றிருந்தும்
"போரில் உடன்பிறப்பை மோதுவது நல்லதல்ல"
நயமுடன் சிந்தித்து "நானும் எனதணியில்
போரிடும் வீரர்கள் எல்லோரும் உன்னிடம்
நேரடியாய்த் தோற்றவர் ஆனோம்" எனக்கூறி
சீலமுடன் தங்கள் கைகளைத் தூக்கியே
ஆர்வமுடன் உன்னைத் தொழுதிருந்தான் என்றாலும்
நீயோ "அவனை இயமன் சுவைக்குமாறு
ஊழியாய் மாறியே கொன்றிடுவேன்" என்றுரைத்தே
ஆவி பறிக்க முனைந்தாய்! பயந்துபோய்
பாரிலுள்ள நான்கு திசைகளின் எல்லைக்கும்
பாய்ந்தே அதற்கப்பால் அஞ்சித்தான் சென்றடைந்தான்!
வாலியே! கேட்டுணர்தல் நன்று.
=========================================================
"அன்னதன்மை அறிந்தும் அருளலை ;
பின்னவன் இவன் என்பதும் பேணலை,"
வன்னி தான் இடும் சாப வரம்புடைப்
பொன் மலைக்கு அவன் நண்ணலின்,போகலை ."(4146)
============================================================
இக்கணமே உன்னிடம் தோற்றேன் எனப்பயந்தே
திக்குகளின் எல்லைவரை ஓடியதைக் கண்டுனர்ந்தும்,
சற்றும் கருணையைக் காட்டவில்லை !உன்னுடன்
ஒட்டுற வாடும் உடன்பிறந்த தம்பியென்றும்
பற்றுவைக்க வில்லை!மதங்க முனிவரின்
சுட்டெரிக்கும் சாபத்தின் எல்லைக்குள் உட்பட்ட
கட்டழகு கொண்ட ருசியமுக பர்வதத்தை
சுக்கிரீவன் சேர்ந்ததால் போரைத் தொடரவில்லை!
சுக்கிரீவன் இன்னும் உயிருடன் வாழ்கின்றான்!
உற்றபதில் சொன்னான் தெளிந்து.
==========================================================
"ஈரம் ஆவதும் , இற்பிறப்பு ஆவதும்,
வீரம் ஆவதும், கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும், மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவதும், தாங்கும் தருக்கு அதோ!"(4147)
===============================================================
பிறரிடம் அன்பைப் பொழிவதும், நல்ல
பிறவி எடுத்துக் குடிப்பயன் கண்டு
சிறப்பதும், வீரத்தைப் பெற்றிருக்கும் பண்பும் ,
அகஇருளை நீக்குகின்ற கல்வியைக் கற்று
மகத்தாக மேம்பட்டு வாழ்வதும் இங்கே
அகவாழ்வில் வேறொருவன் இல்லாளின் கற்பை
அபகரிக்கா வண்ணம் அவளை இமைபோல்
கடமையாய்ப் பாதுகாக்கும் பேராண்மை என்ற
தடம்பதிக்கும் நல்ல நிலைக்களன் விட்டே
தடம்புரண்ட வாலியே! கேள்.
=======================================================
"மறம் திறம்பல் "வலியம்" எனா மனம்
புறம் திறம்ப, எளியவர்ப் பொங்குதல்;
அறம் திறம்பல், அருங்கடி மங்கையர்
திறம் திறம்பல்:தெளிவுடையோர்க்கு எலாம்."(4148)
=========================================================
கற்றறிந்தோர், வீரத்தை விட்டு வழுவுதல்
இத்தரணி மீது வலிமை கொண்டவர்
எக்காலும் நானென்ற அந்தச் செருக்கினால்
அற்பமாய் உள்ளத்தில் மாறுபட்டுக் கண்ணெதிரில்
சற்றே வலிமை குறைந்தவரைப் பார்த்தேதான்
புற்றரவம் போல சினம்கொண்டு சீறுதலாம்!
அற்புத அறப்பண்பை விட்டு வழுவுதல்
கற்புநெறி சார்ந்த மகளிரிடம் வன்மனத்தால்
முற்றும் முறைகேடாய் எண்ணி நடப்பதாம்!
நெற்றியடி போலுரைத்தான் நின்று.
================================================================
"தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை;எண்ணினால்,
அருமை உம்பி தன ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை, எய்தப் பெறுதியோ?"(4149)
==================================================
அறப்பண்போ இத்தகைய நற்சிறப்பைக் கொண்ட
சிறப்புகள் கொண்டது என்பதையும் அந்தச்
சிறப்புகளின் இம்மை மறுமைப் பயனை
அகத்திலே சிந்தித்துப் பார்க்கவில்லை! பார்த்தே
எடைபோட் டிருந்தால்நீ உன்தம்பி நாளும்
அகம்போற்றும் நல்ல மனைவியாம் கற்பில்
சிறந்த உருமையை உன்பெருமை எல்லாம்
சிதைந்துபோக அக்குலப் பெண்ணைக் கவர்ந்தே
முறையின்றி உன்னுடைய தாரமாய் ஆகித்
தடம்புரண்டு நிற்பாயோ? சாற்று.

===================================================
"ஆதலாலும், அவன் எனக்கு ஆர் உயிர்க்
காதலான் எனலானும், நிற் கட்டனென்;
ஏதிலாரும் , எளியர் என்றால்,அவர்
தீது தீர்ப்பது, என் சிந்தைக் கருத்து அரோ!"(4150)
=====================================================
இத்தகைய குற்றங்கள் எல்லாம்நீ செய்ததாலும்,
முத்துநிகர் உன்தம்பி சுக்ரீவன் என்னுடைய
உற்ற உயிர்த்தோழன் போன்றவன் ஆதலாலும்,
முற்றும் களைபறிப்ப தைப்போல் உனைக்கொல்லும்
அக்கறை கொண்டேன்! அயலராய் என்னுடன்
எந்தத் தொடர்புகளும் இல்லா திருந்தாலும்
இங்கே வலிமை குறைந்தவராய் வாழ்பவரின்
துன்பத்தை நீக்கி அவர்களைக் காப்பதே
என்கொள்கை என்றான் முடித்து.
===========================================================
வாலியின் மறுமொழி !(4 பாடல்கள்)

"பிழைத்த தன்மை இது " எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது
இழைத்த வாலி,"இயல்பு அல இத்துணை;
விழைத்திறம் தொழில்", என்ன விளம்புவான்.(4151)
=========================================================
உந்தன் அறிவுரைகள் எங்களுக்(கு) ஏற்காது !
எங்கள் மனம்போன போக்கிலே வாழ்கின்றோம்!
எங்கள் இனமுறைகள் அப்படித்தான்! என்றுரைத்தே
தன்கருத்தை வாலிசொன்னான் பார்.
============================================================
"ஐய! நுங்கள் அருங்குலக் கற்பின் அப்
பொய்இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
செய்திலன், எமைத் தேமலர் மேலவன்
எய்தின் எய்தியது ஆக இயற்றினான்."(4152)
================================================================
உங்கள் சமுதாயம் பின்பற்றும் கற்புநெறி
எங்களிடம் இல்லையே! எங்கெங்கே யார்யாரோ
அங்கங்கே அப்படியே இன்புறுவோம்! இப்படித்தான்
எங்களது வாழ்க்கை முறை.
====================================================================
"மணமும் இல்லை மறைநெறி வந்தன;
குணமும் இல்லை குலமுதற்கு ஒத்தன;
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்,
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!"(4153)
========================================================================
வானர வாழ்விலே வேதநெறி இல்லறப்
பூமணம் இல்லை! குலமரபு நற்பண்பின்
பாமணமும் இல்லை! மனம்போன போக்கில்தான்
வானரர் வாழ்கின்றோம் பார்.
==================================================================
"பெற்றி மற்று இது; பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலென்; நீ அது கோடியால்
வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய்!" எனச்
சொற்ற சொல் தகைக்கு உற்றது சொல்லுவான்.(4154)
=========================================================
வெல்ல முடியாத என்னையே வென்றவனே!
நல்ல குலகுனங்கள் இல்லாப் பிறவிநாங்கள்!
அவ்வழியில் சிந்தித்தால் நான்குற்றம் செய்யவில்லை!
உள்ளத்தில் ஏற்றுக்கொள் நீ.
==================================================================

Monday, July 26, 2010

எந்தவகை நியாயம்

======================
சொந்தக் குழந்தைகள் சொன்னபடி கேட்காமல்
தங்கள் விருப்பப் படிநடந்தால் -- வாழ்விற்குள்
வந்தபிள்ளை சொன்னபடி கேட்க எதிர்பார்த்தல்
எந்த வகைநியாயம் ? கூறு!

மிருகமனம்!

====================
ஆதரவே இல்லாத மக்களுக்கு நாள்தோறும்
ஆதரவைத் தந்தால் மனிதமனம்--ஆதரவின்
தண்ணிழலில் வாழ்பவர்க்குத் தந்தால் மிருகமனம்!
சிந்தித்தே ஆதரவைத் தா.

கண்மூடி வாழாதே!

===========================
வம்பை விலைகொடுத்து வாங்குவ(து) என்பதும்
தன்மனைவி உள்ளபோதே இன்னொரு பெண்ணையும்
தன்னுடன் சேர்ப்பதும் ஒன்றுதான்! நிம்மதி
என்பதே கானலாகும் காண்.

உன்னையே நம்பும் மனைவியை மக்களைத்
துன்புறுத்தி வாழ்தல் சரிதானா? மானிடனே!
கண்டபடி கண்மூடி வாழ்ந்தால் அவமானம்
உன்னை உலுக்கும் உணர்.

பனிப்போர்!

================
குழந்தை பிறக்கும் வரையிலே ஒன்றாய்க்
குலவி மகிழ்வோர் அவரவர்க் கென்று
குழந்தை பிறந்ததும் கண்ணோட்டம் மாறும்
களத்திலே நிற்பதேன்? சாற்று!

எப்பொழுது பிள்ளைகள் எப்படிச் சண்டையைத்
தத்தெடுப்பார்? என்றே தெரியாது! தப்பாகத்
தத்தெடுக்கும் போது சமாதானம் செய்துவிட்டே
அப்புறத்தில் நிற்கவேண்டும் அங்கு.

என்பிள்ளை என்றென்றும் நல்லவன்தான் ஆனாலும்
உன்பிள்ளை இப்படியா செய்வதென்றே பெற்றோர்கள்
தங்களுக்குள் நாளும் பனிப்போர் தொடங்கிவிட்டால்
என்றுதான் நிம்மதி?கூறு.

நோக்கத்தைப் பார்!

=========================
இருப்பவர்கள் கோடிரூபாய் தந்தாலும் இங்கே
ஒருரூபாய், இல்லாதோர் தந்தால் அதுதான்
ஒருகோடி ரூபாய்க் கிணையாகும்! அன்பே!
தருவதில் நோக்கத்தைப் பார்.

Sunday, July 25, 2010

கம்பன் கவியே கவி!

வேலூர் கம்பன் கழகம் கவிதைப் போட்டிக்கு அனுப்பியது
================================================================
வால்மீகி காவியத்தை வண்டமிழர் பண்பாட்டின்
நேர்த்தி குறையாமல் நற்றமிழில் - தோய்த்தேதான்
இன்றளவும் என்றும் நிலைக்குமாறு தந்துவக்கும்
கம்பன் கவியே கவி.

சடையப்ப வள்ளலின் ஊக்கத்தால் ஆக்கம்
தடையின்றிக் காவியமாய் மாற -- முறையாக
தன்புலமை ஆற்றலை நன்றியுடன் பாடுகின்ற
கம்பன் கவியே கவி.

பெற்றோரின் ஆணை எதுவெனினும் பிள்ளைகள்
தட்டாமல் ஏற்றேதான் கீழ்ப்படியும் -- அற்புதப்
பண்புகளை நெஞ்சில் இழையோட வைத்திருக்கும்
கம்பன் கவியே கவி.

கணவனைச் சுற்றியே வாழ்வில் நடக்கும்
மனைவியின் மாண்புதனைக் காட்டி -- மனத்திலே
பெண்மையைப் போற்றி வணங்கவைக்கும் பாங்கிலே
கம்பன் கவியே கவி.

பெண்ணாசை கொண்டே இராவணன் கூட்டத்தார்
என்னென்ன போர்முறைக்கு வித்திட்டார் --- பொங்கிவந்த
தன்னலக் கூத்துக்கள் தோல்விக்கே மூலமென்ற
கம்பன் கவியே கவி.

ராமன் நினைத்தால் மணித்துளி போதுமே!
பூமணக்கும் சீதையுடன் சேர்ந்திருப்பான் --- ஆனாலும்
மண்ணில் அவதாரம் வெற்றிபெற வைத்திட்ட
கம்பன் கவியே கவி.



ஆற்றல் இருந்தாலும் நன்னெறியை வாழ்விலே
போற்றாமல் வன்முறையில் சென்றுவிட்டால் -- தூற்றுகின்ற
தண்டனை நிச்சயம் என்பதைக் காட்டுகின்ற
கம்பன் கவியே கவி.


அவையடக்கம், நட்பு, எளிமை, பணிவு
இவையெல்லாம் வாழ்வில் இருந்தால் -- அவனியில்
என்றும் உயர்வுதான் என்றே உணர்த்துகின்ற
கம்பன் கவியே கவி.


காவியப் போக்கின் படைப்புகள் எல்லாமே
சீர்மிகு பின்னலாய் நீக்கமற -- ஆழ்நிலை
அன்பினை உள்ளம் வெளிப்படுத்தத் தூண்டிவிடும்
கம்பன் கவியே கவி.

எண்ணற்ற காவியங்கள் பாரில் இருந்தாலும்
பண்பால், தரத்தால்,கவிதைச் செழுமையால்
கம்பன் படைப்பில் நிமிர்ந்துவிட்டான்! அத்தகைய
கம்பன் கவியே கவி.

Monday, July 19, 2010

கம்பராமாயணக் காட்சிகள்

பம்பைக்காட்சிகள்
========================
"களிப்படா மனத்தவன் காணின், கற்பு எனும்
கிளிப்படா மொழியவள் விழியின்கேள் எனத்
துளிப்படா நயனங்கள் துளிப்பச் சோரும்" என்று
ஒளிப்படாது ஆயிடை ஒளிக்கும் மீனது.(3821)
==============================================
தங்களைக் கண்டால் கயல்விழி சீதையை
எண்ணி அழுவான் இராமனென்றே மீன்களெல்லாம்
தங்களை நீருக்குள் மூழ்கி மறைத்திருக்கும்
பண்புடைய மீன்களைக் கொண்டது பம்பைஎனும்
தண்ணீர் உறவாடும் பொய்கை!இராமனைப்
புண்படுத்த வில்லை உணர்.
=======================================================
ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்ததாம் என,
ஓர்வுஇல கிளவிகள் ஒன்றோடு ஒப்புஇல,
சோர்வுஇல, விளம்பு புள் துவன்றுகின்றது.(3825)
================================================
மொழிகள் பதினெட்டில் நல்ல புலமைத்
தெளிவற்றோர் கூடிநின்று ஆரவாரம் செய்யும்
ஒலிபோல் பறவைகள் அங்கே எழுப்பும்
ஒலிகளோ பொய்கையின் பக்கமெல்லாம் சுற்றிக்
கலந்ஹ்து நிறைந்து விளங்கின ! அம்மா
கலகலப்பின் உச்சமது பார்.
====================================================
வார் அளித்தழை மாம்பிடி வாயிடைக்
கார் அளிக்கலுழிக் கருங் கைம்மலை
நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன்
பேர் அளிக்குப் பிறந்தஇல் ஆயினான்.(3845)
=============================================
பெண்யானை வாய்க்குள்ளே தண்ணீரை ஆண்யானை
அன்புடனே கொண்டுவந்து ஊட்டுவதைக் கண்டராமன்
தன்மனைவி சீதைக்கு ஊட்ட முடியவில்லை
என்றேங்கி நின்றானே பார்த்து.
==================================================

"மற்று இனி உரைப்பது என்னே?
வானிடை, மண்ணில், உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
தீயரே எனினும் ,உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;
உன்கிளை எனது;என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என்
இன்னுயிர்த் துணைவன் " என்றான்.(3916)
==================================================
விண்ணிலும் மண்ணிலும் உன்னைப் பகைத்தவர்
என்னைப் பகைத்தவராம்! உன்னுடைய நண்பர்கள்
என்னுடைய நண்பர்கள்!தீயோரே ஆனாலும்
நண்பரே! உன்றன் உறவினர்கள் இவ்வுலகில்
என்றன் உறவினர்கள்! என்னுடைய சுற்றமும்
உன்னுடைய சுற்றமே!நீயென் உயிர்நண்பன்!
என்றுரைத்து சுக்கிரீவன் நட்பில் திளைத்தேதான்
சொன்னான் இராமன் மகிழ்ந்து.
============================================================
அயர்வு இல்கேள்வி சால் அறிஞர் வேலைமுன்,
பயில்வுஇல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல்,
குயிலும், மாமணிக் குழுவும்,சோதியால்,
வெயிலும்,வெள்ளி வெண்மதியும் மேம்படா.(3921)
=================================================================
கற்றறிந்தோர் உள்ள அவையிலே, கேள்விஞானம்
கற்காதோர் விற்பன்ன ராகமாட்டார்! அஃதேபோல்
அந்த நிழல்தரு சோலையில் உள்ளாடும்
பொன்னும் நவரத் தினங்களும் வீசுகின்ற
மின்னொளியை சூரியன் பாய்ச்சும் வெயிலொளியும்
தண்ணிலவின் தேனொளியும் விஞ்ச முடியவில்லை!
கம்பனின் கற்பனையைப் பார்.
வாலியின் வலிமை
============================================
மெய்க்கொள் வாலினால், மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழிஅரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ?(3937)
===========================================
தன்னுடைய வாலால் இராவணனை வாலியோ
நன்றாகக் கட்டி இழுத்தபோது ராவணன்
புண்பட்டுச் செல்லா இடமில்லை! ரத்தமோ
சிந்தா இடமில்லை! செப்பு.
==============================================

மராமரத்தின் மகிமை
==========================
நீடு நாள்களும் ,கோள்களும் என்ன, மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ, மலர் எனப் பொலிகின்ற வளத்த;
ஓடு மாச்சுடர் வெண்மதிக்கு , உள் கறுப்பு,உயர்ந்த
கோடு தேய்த்தலின் ,களங்கம் உற்றால் எனும் குறிய.(3974)
===========================================================
ஒன்பதை மூன்றால் பெருக்கிவரின் விண்மீன்கள்
ஒன்பது கோள்கள் எல்லாம் மராமரத்தின்
தொன்மைக் கிளைகளில் பூக்களாய்ப் பூத்தேதான்
வண்ணமலர்க் கோலத்தைக் காட்சியாய்க் காட்டின!
இந்த மராமரக் கொம்புகள் உட்சென்றே
அந்த நிலவை உரசியதால் உண்டான
புண்ணின் தழும்பே சிறுபகுதி மங்கலாய்
வெண்ணிலவில் தோன்றும் கருப்புநிற மாகுமென்றே
கம்பன் உரைக்கின்றான் கேள்.

இராமனின் அம்பு மராமரத்தைத் துளைத்தல்
==============================================
ஏழு மாமரம் உருவி,கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும்,ஊடுபுக்கு,உருவி,பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது , அவ்விராகவன் பகழி;
ஏழு கண்டபின் உருவுமால்,ஒழிவது அன்று இன்னும்.(3984)
=============================================================
இராமன் அனுப்பிய ஓரம்பு ஏழு
மராமரக் கூட்டத்துள் சென்று துளைத்து
மராமரத்தைத் தாண்டின! ஏழின் தொகுப்பில்
வேறொன்றும் இல்லாத காரணத்தால் ராமனிடம்
நேராய்த் திரும்பி அம்பறாத் தூணியில்
வேர்பதித்து நின்றது பார்.

வாலியைக் கொல்லும் வழிவகைகள் பற்றி ஆலோசித்தல்
=========================================================
அவ்விடத்து இராமன் ,"நீ அழைத்து , வாலி ஆனதோர்
வெவ்விடத்தின் வந்து, போர் விளைக்கும் ஏல்வை,வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது;என் கருத்து இது"என்றனன்;
தெவ் அடக்கும் வென்றியானும், "நன்று இது" என்று சிந்தியா.(4049)
================================================================
இருவரும் ஆண்மையுடன் போரிடும் நேரம்
ஒருவரும் என்னை அறியாத வண்ணம்
திரைமறைவில் நானும் மறைவிடத்தில் நின்றே
விரையவைப்பேன் அம்பைத்தான் வாலியை நோக்கி
உரைத்தான் இராமன் உவந்து.

ஆட்சியைக் கைப்பற்றும் அந்த வெறிஎன்ற
கூட்டுக்குள் துள்ளிக் குதித்திருந்த சுக்ரீவன்
போற்றினான் இத்தகைய சூழ்ச்சித் திறனைத்தான் !
ஆற்றல் நகர்ந்தது பார்.

வாலியைத் தாரை தடுத்தல்
=================================
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள்,இடை விலக்கினாள்;
வாயிடைப் புகைவர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.(4061)
================================================
என்னுடன் போர்செய்ய வாலியே! வந்துவிடு
என்றேதான் சுக்ரீவன் அண்டம் குலுங்கிட
அண்ணனை அங்கே அழைத்ததும் வாலியோ
பொங்கிச் சினந்தெழுந்தான் பார்.

ஊழி முடிவிலே உண்டாகும் ஊழித்தீ
கோலத்தில் வாலி வெகுண்டெழுந்தான் போர்செய்ய!
ஆலகால நஞ்சுபோல தோற்றம் உருப்பெற
வாலி புறப்பட்டான் அங்கு.

வாலியைத் தாரை தடுக்க முயற்சித்தாள்!
வாய்பொழிந்த கோபப் புகையினாலும் கண்களில்
தீய்ந்துவந்த கோபத் தீயினாலும் தாரையின்
கார்குழல் தீய்ந்தது பார்.

சுக்ரீவனுக்குத் துணை கிடைத்திருக்கிறது
என்று தாரை கூறுதல்
============================================
"கொற்றவ! நின் பெரும் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன் முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்;
பெற்றிலன் பெருந்திறல்; பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது, நெடுந்துணை உடைமையால் "என்றாள்.(4063)
=======================================================
என்றென்றும் வெற்றி உனக்குத்தான் என்றறிந்தும்
உன்தம்பி போருக் கழைக்கின்றான் இங்கென்றால்
உன்னையும் வெல்லும் பெருந்துணை பெற்றுவிட்டான்
என்றுரைத்தே எச்சரித்தாள் மாது.

வாலியின் ஆற்றல்
=======================
"பெயர்வுற வலிக்கவும் , மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி,யான்,அது
தயிர் எனக் கடைந்து, அவர்க்கு அமுதம் தந்தது,
மயில் இயல் குயில் மொழி! மறக்கல் ஆவதோ?"(4066)
=======================================================
பாற்கடலில் மத்து தடுமாறிச் சுழன்றபோது
ஆற்றலற்ற தன்மையில் தேவர் அசுரர்கள்
ஊக்கமின்றி பார்த்துத் திகைத்தேதான் நின்றனர்!
ஊக்கமுடன் நான்வாங்கி பாற்கடலைக் கிண்டியே
ஆக்கமுடன் அங்கே அமுதத்தைத் தந்திருந்தேன்!
ஆற்றலை நீயோ உலகோ மறுப்பீரோ?
தோற்பது என்பதை வாலி வரலாற்றில்
காட்ட முடியுமா? சொல்.

"பேதையர் எதிர்குவர் எனினும்,பெற்றுடை
ஊதிய வரங்களும், உரமும்,உள்ளதில்
பாதியும் என்னதால்; பகைப்பது எங்கனம்?
நீ துயர் ஒழிக!" என நின்று கூறினான்.(4068)
===============================================

என்னுடன் போரிட வந்தால் வருவோரின்
உண்மையான ஆற்றலில் பாதிஇங்கே என்னிடத்தில்
வந்துசேரும் என்ற சிவவரம் உள்ளது!
பண்பரசி! வாடவேண்டாம்!உன்கவலை தேவையில்லை !
வென்று வருவேன்! எனக்கூறி தாரைக்கு
அன்புரை சொன்னான் நிமிர்ந்து.
=======================================================
தாரை, " இராமன் சுக்ரீவனுக்குத் துணை" எனல்
===============================================
அன்னது கேட்டவள்,"அரச! ஆயவற்கு
இன்னுயிர் நட்பு அமைந்து, இராமன் என்பவன்
உன்னுயிர் கோடற்கு உடன் வந்தான்" எனத்
துன்னிய அன்பினர் சொல்லினார்" என்றாள்.(4069)
=================================================
உன்னுயிரை மாய்க்க இராமனை உன்தம்பி
தன்துணையாய்ப் பெற்றிருக்கும் செய்தியினைக் கூறினார்கள்!
என்றேதான் எச்சரித்தாள் வாலியை தாரைதான்!
அன்பின் உயிர்த்துடிப்பைப் பார்.

வாலி இராமனின் நற்பண்புகளை எடுத்துரைத்தல்
(4070 --- 4074)
==============================================
ராமனின் நற்பண்பை எல்லாம் தொகுத்துரைத்தான்!
ராமனா சுக்ரீவனின் கூட்டணியில் சேர்ந்திடுவான்?
பூமகளே! யாரோ தவறாக உன்னிடத்தில்
ஈனமனங் கொண்டே உரைத்திருப்பார்! பண்பாளன்
ஊனமனங் கொண்டே அம்பினை என்மீது
வீணாய்த் தொடுக்கமாட்டான்! என்றே உரைத்திருந்தான்!
மானவள் நொந்தாள் ! துடித்து.
====================================================
வாலி -- சுக்ரீவன் போர் வர்ணனை
==========================================
உரத்தினால் மடுத்து உந்துவர்;பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசித்து எற்றுவர்;கடிப்பர்;நின்று இடிப்பர் ;
மரத்தினால் அடித்து உரப்புவர்;பொருப்பு இனம் வாங்கிச்
சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர்;தெழிப்பர்;தீ விழிப்பர்.(4094)
=================================================================

மார்பினால் தாக்குவர்;கால்களால் தாக்குவர்;
வீரக் கைகளால் தாக்குவர்;பற்களை
தாகம் பெருகக் கடித்திருப்பர்;அவ்விருவர்
வேகமாய் நேருக்கு நேராக மோதிடுவர்;
வேருடன் மாமரத்தைத் தூக்கி அடித்திடுவர்;
பார்ப்போர் நடுங்க மலைகளைத் தூக்கித்தான்
ஆர்த்தெழுந்தே அங்கே எறிந்திடுவர்;தீப்பொறி
சீறிப் பறப்பதுபோல் நோக்குவர்;தாக்குவர்!
போரிட்ட கோலமிது பார்.
=====================================================

சுக்ரீவன் ராமனிடம் ஓடிவருதல்
=====================================
மலைந்த போது இனைந்து, இரவிசேய்,ஐயன் மாட்டு அணுகி,
உலைந்த சிந்தையோடு உணங்கினன்,வணங்கிட ,"உள்ளம்
குலைந்திடேல்; உமை வேற்றுமை தெரிந்திலம்;கொடிப்பூ
மிலைந்து செல்க " என விடுத்தனன்;எதிர்த்தனன் மீட்டும்.(4100)
=================================================================
தாக்குப் பிடிக்க முடியாமல் சுக்ரீவன்
ஏக்கமுடன் ராமனிடம் ஓடிவந்தான்! ராமனோ
காக்கின்றேன்!உங்களுக்குள் வேறுபாடு காண்பதில்
தோற்பதால் நீயோ கொடிப்பூ சூடிக்கொள்!
காற்றெனப் போரிட வாலியிடம் செல்லென்றான் !
கூற்றென ஓடினான் பார்.

இராமபாணம் வாலியின் மார்பைத் துளைத்தல்
(4102-4103-4105)
==================================================
சுக்ரீவன் மீண்டும் வருவதைக் கண்ணுற்றான் !
சுக்ரீவன் தொய்ந்து விழுமாறு வாலியோ
சுற்றி உயிர்த்தலங்கள் உள்ள இடத்திலெல்லாம்
குத்தினான்!ஓங்கி அடித்தான்!உதைத்திருந்தான்!
தத்தளித்து மூச்சுவாங்க சுக்ரீவன் ராமனை
உற்றுநோக்கி காத்தருள கண்களால் தூதுவிட்டான்!
பற்றி எடுத்தேதான் வாலி உயரத்தில்
உக்கிரமாய்த் தூக்கி நெருக்கினான்!மண்தரையில்
நச்சென்று மொத நினைத்தான்! அந்தநேரம்
சற்று மறைந்திருந்த ராமனோ அம்பினை
விட்டான்!விரைந்தது! வாலியின் மார்பினுள்
நற்கனி வாழைப் பழந்தன்னில் ஊசியொன்று
அப்படியே மென்மையாய் ஊடுருவிச் செல்வதுபோல்
பற்றி நுழைந்தது பார்.

வாலியின் கை நெகிழ்தல்
==========================
சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்து,
வையம் மீதிடைக் கிடந்த, போர் அடு திறல் வாலி,
வெய்யவன் தரு மதலையை, மிடல் கொடு கவரும்
கைநெகிழ்ந்தனன்; நெகிழ்ந்திலன் கடுங்கணை கவர்தல் .(4107)
=============================================================
ராமபாணம் மார்பைத் துளைத்தவுடன் வாலியோ
வானளாவும் மேனியுள்ள தம்பியைப் பற்றிநின்ற
தூண்போன்ற தன்கைப் பிடிநெகிழ அம்பினைப்
பாங்குடன் பற்றி உள்ளே புகாவண்ணம்
தான்தடுத்து அங்கே நிறுத்தியே வீழ்ந்திருந்தான்!
வான்புகழ் வீரனானான் பார்
============================================================
அம்பின் தன்மை பற்றி எண்ணுதல்
=======================================
"நேமிதான் கொலோ?நீலகண்டன் நெடுஞ்சூல
ஆமிது ஆம் கொலோ?அன்று எனின், குன்று உருவு அயிலும்,
நாம இந்திரன் வச்சிரப்படையும் ,என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ?யாது?,"எனப் புழுங்கும்.(4112)
===============================================================
திருமாலின் சக்கர ஆயுதமோ?இல்லை
திருநீல கண்டனின் சூலமோ?அன்றிக்
கிரௌஞ்ச மாமலையைத் தாக்க முருகன்
கரமெய்த வேற்படையோ?குன்றின் சிறகை
தரையில் அறுத்தெறிய இந்திரன் வீசி
நிலைகுலைய வைத்த வச்சிரமோ?உள்ளம்
கலங்கத் தவித்திருந்தான் காண்.

வாலி அம்பினை நோக்குதல்
==================================
பறித்த வாளியைப் பருவலித் தடக்கையால் பற்றி,
"இறுப்பென்" என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன்;
"முறிப்பென் என்னிலும் , முறிவது அன்றாம்"என மொழியா,
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன்.(4118)
---------------------------------------------------------------------------------------------------------
வாலி பெயர்த்தெடுத்தான் அம்பினை!தன்னுடைய
வேழ வலிமைகொண்ட புண்கைகளால் பற்றினான்!
ஆழப் பதிந்திருந்த அம்பை முறிப்பதற்கோ
தாழ மறுக்கிறது!என்னால் முடியவில்லை!
தூயதோர் ஆற்றல் படைத்த கணைமீது
வேரென ஊன்றிப் பொறித்த பெயரைத்தான்
ஊரறிய பார்க்க விரும்பியே நோக்கினான்!
பார்புகழ வாழ்ந்தவன்தான் பார்.
--------------------------------------------------------------

அம்பில் இராமநாமத்தைக் காணுதல்
=======================================
மும்மைசால் உலகுக்கெல்லாம் , மூலமந்திரத்தை,முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்.(4119)
================================================================
மூவுலகில் வாழ்வோர்க்கும் தன்னை வணங்குவோர்க்கும்
காருண்ய நாயகனாய்த் தன்னை அர்ப்பணிக்கும்
நேயத்தைக் கொண்டவனும், ஏழு பிறவிக்கும்
நோயகற்றும் மாமருந்தாய் உள்ளவனும் ராமன்தான்!
தாய்க்குநிகர் ராமனின் நாமத்தை அவ்வம்பு
ஓவியமாய் ஏந்திநின்ற கோலத்தைக் கண்ணுற்றான்!
வாலிதான் பார்த்திருந்தான் பார்.

இராமன் செயல்குறித்து வாலி நாணுதலும்,வருந்துதலும்
===========================================================
" இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன், தோன்றலால், வேத நல்நூல்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும்,தொல்லை
நல்லறம் துறந்தது" என்னா, நகைவர நாண் உட்கொண்டான்.(4120)
==================================================================
அன்னையின் அன்பிற்கும் தந்தையின் வாய்மைக்கும்
உண்மை உருகொடுக்க இல்லறத்தை விட்டேகி
புண்படுத்தும் காட்டிற்குள் வாழ்வதற்குச் சென்றுவிட்ட
பொன்மான ராமனோ சூரிய வம்சத்தார்
தொன்றுதொட்டுப் பின்பற்றி வந்த அறநெறி
தன்னை வழுவவிட்ட பாங்கினை எண்ணினான்!
தன்னுள்ளே எள்ளல் சிரிப்புவந்த போதிலும்
நொந்துபோய் வெட்கினான் அங்கு.
==============================================================
வாலி துயர நிலை
===================================
வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்; வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும்;" இதுவும் தான் ஓர் ஓங்கு அறமோ?" என்று உன்னும்;
முள்கிடும் குழியில் புக்க மூரிவெம் களிநல்யானை
தொள் கொடும் கிடந்தது என்ன, துயர் உழந்து அழிந்துசோர்வான்.(4121)
==================================================================
இதுவும் ஒருவகை யுத்த தருமம்!
வெறுப்புடன் இக்கருத்தைச் சொல்லி முணங்கி
நடுங்கவைக்கும் வேழமொன்று கண்ணி வலையில்
கறுமேனி சிக்கிய கோலத்தில் ரத்தம்
மிகுதியாய் ஓடுகின்ற சேற்றில் கிடந்தான்!
படுத்ததால் சோர்ந்தான் தளர்ந்து.
===================================================================
வாலியின் முன் இராமன் தோன்றுதல்
===========================================
"இறை திறம்பினனால்; என்னே இழிந்துளோர்இயற்கை?என்னில்
முறை திறம்பினனால்"என்று, மொழிகின்ற முகத்தான் முன்னர் ,
மறைதிறம்பாத வாய்மை மன்னர்க்கு,முன்னம் சொன்ன
துறைதிறம்பாமல் காக்கத் தோன்றினான்,வந்து தோன்ற.(4122)
==================================================================
பண்பாளன் ராமனே இங்கே நெறிபிறழ்ந்தால்
எங்களைப் போன்ற குரங்கினத்தார் பண்புகள்
என்னாகும்? என்றே வருத்தமுகம் கொண்டிருக்கும்
புண்பட்ட வாலியின்முன் ராமனோ வந்துநின்றான்!
தன்னகச் சீற்றத்தை வாலியோ கேள்விகளாய்
பொங்கிவரக் கேட்கின்றான் பார்.
==============================================

வாலி இராமனை இகழ்ந்து பேசுதல்
(பாடல்கள் 4123--4139)

கண்ணுற்றான் வாலி, நீலக்கார் முகில், கமலம் பூத்து,
மண்ணுற்று, வரிவில் ஏந்தி , வருவதேபோலும் மாலை;
புண்ணுற்றது அனைய சோரிப் பொறியொடும் பொடிப்ப,நோக்கி,
"எண் உற்றாய் என்செய்தாய்?" என்று, ஏசுவான் இயம்பறுற்றான்.(4123)
=====================================================================
கருமேகம் தாமரைப் பூக்களால் பூத்து
கரங்களில் கட்டமைந்த வில்லேந்தி வந்தே
உலகிலே நிற்பதுபோல் தன்னெதிரே வந்த
அவதார ராமனைக் கண்களால் உற்றுக்
கனன்றேதான் பார்த்தே "அனைவ ரிடத்தும்
மனங்களில் வாழ்பவனே! என்ன நினைத்தாய்?
மனங்கவர் ராமனே!என்னசெய் கின்றாய்?"
மனங்கலங்கி சொற்கள் இகழ்ச்சியாய்த் துள்ள
வினவினான் வாலி துவண்டு.
===============================================================
"வாய்மையும் , மரபும் காத்து,மன்உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே?
தீமைதான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கன்று ஆமோ?
தாய்மையும் அன்றி நட்பும், தருமமும் தழுவி நின்றாய்!"(4124)
=============================================================
பண்புத் திலகம் தசரதனின் ராமனே!
மண்ணுலகில் தீமையைத் தான்மட்டும் செய்யாமல்
அன்புடன் மற்றவரும் தீமையை விட்டுவிட்டு
என்றும் விலக்கிநிற்க, நீயின்று தீமையைத்
தனலத்தால் செய்துவிட்டால் அத்தீமை தீங்கின்றி
நன்மையைச் செய்ததாய் மாறிடுமோ?" மன்னனே!
உன்பதிலை என்னிடத்தில் கூறு.
==================================================================
"குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னதன்றோ?
வளம் இது; இவ்வுலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால்,திண்மை
அலமரச் செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?"((4125)
=====================================================================
பிறப்பால் உயர்ந்தோன் ; படிப்பால் உயர்ந்தோன்;
மகத்தான வெற்றிகளோ ஏராளம் கொண்டோன்;
சுடரொளி வீசும் உலகின் தலைவன்;
புடம்போட்ட தாய்மைக் குணங்களுடன் காக்கும்
அகம்கொண்ட சான்றோன்! இத்தகைய பண்பை
அகம்புறம் ஏந்தும் சிறப்புகளை எல்லாம்
மறந்துவிட்ட பாங்கில் மறைந்திருந்து அம்பை
அறத்திற்கு மாறாய் தொடுத்த செயலால்
தடம்புரண்ட காரணத்தால் நாங்களோ உன்மேல்
படரவைத்த நம்பிக்கை வேரிழந்து போக
தடமமைத்து இன்று நிலைகுலையச் செய்தே
கசந்கவைத்தாய் நீதிக் கொடியைத்தான் ! அய்யோ!
இடறுதே உன்மதிப்பு! இங்கு.
====================================================
"கோஇயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்,
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பிள்ளை, திகைத்தனை போலும் செய்கை?"(4126)
==================================================================
சித்திரம்போல் பேரழகு கொண்டிருக்கும் ராமா!
இத்தரணி மெச்சும் அரசியல் நீதியும்
முத்தான பேரறமும் உங்கள் குலத்திலே
சுற்றமுடன் வழ்ந்தோர்க் குரிமை யுடையது!
குற்றமற்ற மன்னன் சனகன் குலமகளாம் ,
வெற்றியுடன் பாற்கடலில் பெற்ற அமிழ்துடன்
அற்புதமாய் வந்த திருமகளாம் சீதையை,
உற்றதுணை உந்தன் மனைவியாம் சீதையை
இக்கணம் நீயோ பிரிந்துவிட்டாய்! அத்துயரில்
இக்களத்தில் என்னதான் செய்கின்றோம் என்றுநீ
சற்றும் உணராமல் சிந்தை தடுமாற
கற்றவனே மாறிவிட்டாய்! நீ.
============================================================
"அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல்,அதற்கு வேறோர்
குரங்கினத்து அரசைக் கொல்ல, மனுநெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீபூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்?" (4127)
===============================================================
அரக்கர் இனம்சார்ந்த ராவணன் உந்தன்
அழகு மனைவியாம் சீதையை அன்று
வரம்பினை மீறி அபகரித்துச் சென்றான்!
துயரத்தில் உன்னைக் கலங்கிட வைத்தான்!
அதற்காக அந்தச் செயலில் துளியும்
தொடர்பில்லா என்னைநீ கொல்வது இங்கே
தகாத செயல்தான்! மனுநீதி இந்தக்
கபடத்தைச் செய்வதற்குச் சொல்கிறதா? சொல்லு!
தவறுக்குக் காரணம் அய்யா! ஒருவன்!
தவறே புரியா ஒருவனுக்கு உங்கள்
மனுநீதி தண்டனை தன்னைத் தருமோ?
அருளை இரக்கத்தை எங்கே புதைத்தாய்?
கரும்புள்ளி கொண்டதுன் பண்பு.
===============================================
"ஒலிகடல் உலகம் தன்னில், ஊர்தரும் குரங்கின் மாடே
கலியது காலம் வந்து பரந்ததோ? கருணை வள்ளால்!
மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம்தானும்?
வலியவர் மெலிவு செய்தால், புகழன்றி, வசையின்றாமோ?"(4128)
===================================================================
மரம்விட்டு நாளும் மரம்தாவி வாழும்
குரங்குகள் மட்டுமே தீமை புரியும்
கலிகாலம் வந்ததோ? நன்னடத்தை மற்றும்
ஒழுக்கத்தை என்றும் மெலியவர்கள் மட்டும்
கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளோ?வாழ்வில்
இவைகள் வலியார்,மெலியார்கள் என்ற
இருவகை மாந்தர்க்கும் என்றென்றும் நாளும்
புவியில் பொதுவான பண்புகள் தானே!
வலிமை உடையோர் மெலியோரை வாட்டி
களித்திட்டால் அந்த வலியோரை நோக்கி
பழிகளே வாராதோ?என்னசெய்த போதும்
குவியுமோ இங்கே புகழ்மகுடம்? செப்பு!
புவிவணங்கும் ராமா! புகல்..
=============================================

"கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு இவ்வரசை நல்கி
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன் மேல் உண்டோ?"(4129)
========================================================================
உனக்குரிய நல்லரசை தம்பி பரதன்
மனதார ஆள்வதற்குத் தந்துவிட்டு, இந்த
வனப்பகுதி கிட்கிந்தை காட்டுக்கு வந்தாய்!
மனங்குளிர நீயோ அயோத்தி அரசை
குணக்குன்று தம்பிக்குத் தந்தாய்! சரிதான்!
எனக்குரிய கிட்கிந்தை நாட்டரசை நீயோ
எனைக்கொன்ற பின்பெந்தன் தம்பிக்கு ஈயும்
மனத்தால் நடைமுறைக்கு மாறாக நீயோ
வனத்தில் புதுமையான ஒன்றைப் புரிந்தாய்!
மனங்கவர் ராமனே! உன்னைவிடச் சான்றோன்
இனத்திலே வேறுயார் உள்ளார்? இந்தக்
குணச்செயலைக் காட்டிலும் மேம்பட்ட வேறு
குணச்செயல்தான் உண்டோ? எனக்கேட்டு வாலி
மனத்தால் இகழ்கின்றான் அங்கு.
========================================================
"அறைகழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது, ஆண்மைத்
துறையெனல் ஆயிற்று அன்றே? "தொன்மையின் நன்நூற்கு எல்லாம்,
இறைவன் நீ; என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறையல்ல செய்தான்"என்று, முனிதியோ? முனிவுஇலாதாய்!"(4130)
==================================================================
என்மேல், மறைந்திருந்து அம்பைத் தொடுத்ததால்
முன்னோர் வழியாம் அறவழியை விட்டேதான்
இன்று வழுவிவிட்டாய்! நீயோ இராவணன்
மண்ணகத்தில் ஏதோ அறத்தைப் புறந்தள்ளி
நன்னெறியை நீதியையே மீறிவிட்டான் என்றேதான்
வஞ்சினம் கொள்ளத் தகுதி உனக்குண்டோ?
என்றேதான் ஏசுகின்றான் வாலி சினந்தேதான்!
தன்னிலை கூறினான் சாற்று.
====================================================================
"இருவர் போர் எதிரும் காலை, இருவரும் நல் உற்றாரே ;
ஒருவர் மேல் கருணை தூண்டி, ஒருவர் மேல் ஒளித்து நின்று,
வரிசிலை குழைய வாங்கி,வாய் அம்பு மருமத்து எய்தல் ,
தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம்."(4131)
==================================================================
ஒருவர்க் கொருவர் எதிர்த்துக் களப்போர்
புரிந்திடும் நேரத்தில் மூன்றாம் நபரோ
இருவரையும் நல்ல உறவினராய் எண்ணிக்
கருதுதல் வேண்டும்! அதைவிடுத்து அங்கே
ஒருவர்மேல் நட்பைப் பொழிந்தும் மற்றும்
ஒருவர்மேல் வன்பகை கொண்டு மறைந்து
வளைவில்லில் நாணேற்றிக் கொல்லும் செயலோ
தருமமா? அன்றி அதர்மமா? அய்யா!
கரும்புள்ளி ஏந்தும் நடுநிலை யற்ற
ஒருசெயல் என்பது மட்டும் உறுதி!
சுருக்கென்று சாடினான் பார்.
==============================================
"வீரம் அன்று;விதி அன்று;மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரமன்று; பகையன்று; பண்பு அழிந்து,
ஈரம் இன்றி இது என்செய்தவாறு நீ?"(4132)
================================================
உன்செயல் வீரச் செயலல்ல ராமனே!
என்னுடன் நேருக்கு நேரிங்கே போர்செய்யும்
எண்ணமின்றி இங்கே மறைந்திருந்தே அம்பெய்தாய்!
உன்றன் மனுமகான் நூலில் எழுதிய
நன்னெறிச் சட்டம் இதுவல்ல! இக்களத்தின்
மண்ணிலே யாரோ இவருக்குப் போர்நடக்க
மன்னவனே! மூன்றாம் மனிதனாக நீயிங்கே
எங்கள் பகையில் தலையிட்டாய்! இச்செயல்
உண்மையின் பாற்பட்ட தில்லை! எந்தவித
நன்னெறிக் காரணமும் இன்றி எனைவதைத்தாய்!
உங்கள் குலத்துக் குரிமையான பூமிக்கோ
என்றன் சிறிய உடல் ஒன்றும் சுமையல்ல!
முன்பகை என்றும் நமக்குள் கிடையாது!
நெஞ்சில் இரக்கமின்றி இவ்வாறு செய்துவிட்டாய்!
இந்தச் செயலைநீ ஏன்செய்தாய் என்பதுதான்
இன்னும் எனக்குப் புரியவில்லை! என்றேதான்
தன்கருத்தை வாலிசொன்னான் அங்கு.
================================================

"இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற
பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு
ஒருமை நோக்கி, ஒருவற்கு உதவளோ?"(4133)
===================================================
தன்னிடம் வந்த இருவரிடம் உள்ளாடும்
நன்மையைத் தீமையை நன்றாய் எடைபோட்டு
என்றும் நடுநிலைமை நின்று நிலைத்திட
தன்தீர்ப்பைச் சொல்லுதல் நல்லறமாம்! அவ்வாறு
இங்கே நடக்காமல் நீயின்று செய்ததுபோல்
நெஞ்சிலே குற்றத்தை ஏற்றே ஒருபக்கம்
தன்மனம் ஏற்ற ஒருவருக்கு மட்டுமே
தன்னுதவி செய்தல் அறம்காத்தல் ஆகுமா?
மண்ணில் இதுதான் நியாயமோ என்றேதான்
தன்சொல்லால் சாடுகின்றான்! சாற்று.
================================================
"செயலைச் சேற்ற பகை தெறுவான் தெரிந்து,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின் ,
புயலைப் பற்றும் அப்பொங்கு அரி போக்கி, ஓர்
முயலைப் பற்றுவது , என்ன முயற்சியோ?".(4134)
=================================================
உன்னுடைய காவலுக்குத் தீமையைச் செய்துவிட்டு
உன்மனைவி அன்புமனச் சீதையைத் தன்னிடத்தில்
கொண்டுபோய் அங்கே சிறைவைத்த ராவணனைக்
கண்முன் அழிக்கக் கருதிய நீயிங்கே
நன்றாக ஆராய்ந்து மேகத்தைத் தாவித்தான்
தன்பிடியால் பற்றுகின்ற கோபம் அலைகளாய்ப்
பொங்கிவரும் ஆண்சிங்கம் தன்னையே தேர்ந்தெடுத்து
உன்னுடைய கூட்டணியில் சேர்க்காமல்,என்றென்றும்
அஞ்சி நடுங்கும் முயலைத் துணையாக
இங்குநீ சேர்த்தாயே ! என்ன முயற்சியிது?
இந்த முயற்சியால் தோன்றுகின்ற நன்மையென்ன?
இந்த முயற்சி பயனற்ற ஒன்றாகும்!
தன்கருத்தைச் சொன்னான் துணிந்து.
=========================================================

Saturday, July 17, 2010

மாற்றம் விதிவழிதான்!

============= ==============
மூக்குள்ள மட்டும் சளியிருக்கும் என்றதோர்
வாக்குண்டு! வாழ்க்கைக் குடும்பத்தில் வந்துசேர்வோர்
தாக்குவதும், தாங்குவதும் நாளும் நடப்பதுதான்!
மாற்றம் விதிவழிதான் சாற்று.

மதுரை பாபாராஜ்

Monday, July 05, 2010

கடமையின் நிறைவு!

========================
முறுவல் இதழ்களில் எச்சில் வழிய
துறுதுறு வென்றே சுழன்றுத் திரிந்து
நறுஞ்சுவை தாய்ப்பால் அமுதம் பருகும்
சிறுமிப் பருவம், அரும்பு.

தவழ்ந்து தவழ்ந்து விழுந்து விழுந்து
அலறி அழுது தவிக்க வைத்து
மழலை பொழிந்து மனத்தைக் கவர்ந்து
வளரும் பருவம் அடுத்து.

சுவரைப் பிடித்து நடையைப் பழக
தவறிச் சரிந்ததும் அம்மாவைப் பார்த்து
பரபர வென்றே அணைத்துப் பிடித்து
உவக்கும் பருவம் அடுத்து.

ஆடுவாள் ஓடுவாள் தேடியே சென்றதும்
மூடுவாள் கண்களை! தாயோ ஒருகவளஞ்
சோறு தருவதற்குள் சோர்ந்து தடுமாறி
வாடுவாள் அங்கே தளர்ந்து.

துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில்
அள்ளி அரவணைப்பாள்! நாள்தோறும் பாடத்தை
சொல்லித் தருவதில் ஆசானாய் அம்மாதான்
கல்விச் சுனையாவாள் காண்.

பள்ளிக்கு வந்திடுவாள் தன்மைகள் முன்னேற்றம்
எவ்வாறு என்றே கணித்து ரசித்திருப்பாள்!
இவ்வுலகில் தன்மைகள் பட்டப் படிப்புதனை
வெல்வதற்குத் தோள்கொடுப்பாள் இங்கு.

கல்லூரி வாழ்வை முடித்து வெளிவந்தே
அல்லாடி அன்றாடம் வேலைக்குச் சென்றிடும்
முல்லைக் கொடியை மலைத்தே ரசித்திருப்பாள்!
தொல்லை மறப்பாள் மகிழ்ந்து.

மணப்பருவம் வந்ததும் இல்லறத்தை ஏற்க
கணவனைத் தேடும் படலத்தில் வெற்றி
கனிந்ததும் தங்கள் கடமை நிறைவில்
அமர்ந்திருப்பார் பெற்றோர் உவந்து.

Sunday, July 04, 2010

அழையா விருந்தினர்கள்

==================================
இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் வாசலில்
வந்துவந்து போகும் அழையா விருந்தினர்கள்!
வந்தபோதும் தாங்கிக்கொள்! சென்றபோதும் தாங்கிக்கொள்!
இங்கே இரண்டும் இயல்பு..