Sunday, May 31, 2015

நாடுசுற்றும் நல்லவர் !
---------------  -------------------
வீடு கொடுக்கின்றேன் மக்களுக்கு என்றுசொன்னார்!
நாடுநாடாய்ச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்!
நாடுகளைச் சுற்றி முடித்துவிட்டு நாடுவந்து
வீடுகள் தந்திடுவார் நம்பு.

கருவேப்பிலை!
-----------------
வேண்டிய போது மதிப்பளித்துப் பேசுவார்!
வேண்டாத போது முகஞ்சுழித்துப் பேசுவார்!
அம்மா! கருவேப் பிலைபோல  எண்ணினால்
உண்மை மதிப்பா அது?

கற்பனைக்கோடு!
-------------------
உற்றார் உறவினர்கள் பெற்றோர்கள் என்னதான்
ஒட்டி உறவாடி நின்றாலும் எல்லைக்குள்
எட்டநின்று பார்க்கின்ற மூன்றாம் மனிதர்தான்!
கற்பனைக் கோடுண்டு காண்.

மலரும் வாழ்வும்
---------------
அரும்பில் இருந்தே இதழித ழாக
விரிந்து விரிந்து மலராகி மண்ணில்
சருகாய் உதிர்வது போலத்தான் வாழ்க்கைப்
பருவங்கள் மாறும் மறைந்து.

தனிமரம்!
------------
தனியாக வந்தோம் தனியாகச் செல்வோம்!
மனிதரின் வாழ்க்கை இடைப்பட்ட காலம்!
தனிமரம் தோப்புகளைத் தந்துவிட்டு மீண்டும்
தனிமரமாய் மாறுவது வாழ்வு

மணநாள் 40 ஆண்டு நிறைவு
29.05.1975-- 29.05.2015
-------------------------------
இல்லறத்தில் நாற்பதாம் ஆண்டுதனை நாங்கள்
உள்ளம் மகிழ நிறைவுசெய்து வாழ்கின்றோம்!
நல்லறத்தைக் காத்தேதான் நாளும் வளர்கின்றோம்!
நல்வாழ்த்தே என்றும் துணை.

எங்கள் மகளாய் சுபாதேவி மற்றும்
எங்கள் மகனாய் எழிலரசன் பெற்றோம்!
அன்புக் குழந்தைகள் ஆற்றலுடன் வாழ்கின்றார்
எங்களுக் கிமையானார் இன்று.

மகளின் கணவர் பெயரோ ரவிதான்
கடமைப் பொறுப்போ மருத்துவ வேலை
அகங்குளிர மைந்தன் சுசாந்த்சிரி ராமும்
குடும்பமாக வாழ்கின்றார் இங்கு.

மகனின் மனைவியாய் சத்திய பாமா
கடமைப் பொறுப்போ கணினித் துறையில்
அகங்குளிர மைந்தர்  நிகிலும் வருணும்
குடும்பமாக வாழ்கின்றார் இங்கு..

முத்துத் தமிழ்போல மூன்று பேரன்கள்
ஒட்டி உறவாட காலம் கரைகிறது
இத்தகைய வாழ்க்கை அமைந்திருக்கும் இன்பத்தில்
நற்றமிழ்போல் வாழ்கின்றோம் பார்.

எங்கள்  குடும்பம் இனிய குடும்பந்தான்
எங்கள் குடும்பம் உழைக்கும் குடும்பந்தான்
இங்கே படிப்படியாய் நாள்தோறும் முன்னேறும்
பண்புதான் எங்கள் சிறப்பு.

மதுரை   பாபாராஜ்
வசந்தா பாபாராஜ்

Saturday, May 23, 2015

அன்பே அமுதம்!
-----------------------------
அன்பினைக் காட்டு குழந்தைகள் தேடிவரும்!
வன்முறை காட்டு குழந்தைகள் ஓடிவிடும்!
பிஞ்சு மனதில் அமுதத்தை ஊற்றுங்கள்!
அன்பே அமுதம் உணர்.

வீட்டிற்குள் மரங்கள்!
------------------------------------------
மரங்களை வெட்டிவிட்டு நாமிங்கே நாளும்
வளமனைகள் கட்டுகின்றோம்! மீண்டும் மரத்தை
வளர்க்கின்றோம் வீட்டிற்குள்! அம்மம்மா வாழ்வில்
மரமின்றி நாமில்லை! சொல் .

உலகம்!
--------------
நாடி நரம்புகள் எல்லாம் தளராமல்
ஓடி உழைக்கின்ற மட்டும்தான் தேடுவார்!
நாடி நரம்பு தளர்ந்து படுத்துவிட்டால்
தேடி வருவார்யார்?  சொல்.

Friday, May 22, 2015

தாய்லாந்து சுற்றுலா!
10.05.15---14.05.15
உடன்வந்த சுற்றுலா நண்பர்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
      திரு&திருமதி.பூர்ணசந்திரன்--திரு&திருமதி.K.R.லெட்சுமிநாராயணன்
                  திரு&திருமதி.பாபாராஜ்
   திரு.A..கண்ணன்--திரு.P.ராஜேந்திரன்--திரு.K.சந்திரன்--திரு.S..சீத்தாராமன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10.05.15
-----------------
சென்னை நகர்விட்டே எங்கள் விமானந்தான்
விண்ணகத்தில் பாய்ந்து பறக்கத் தொடங்கியது!
மண்ணக சொர்க்கமாம் தாய்லாந்து நாட்டிலே
வந்திறங்க மகிழ்ந்தோம் ரசித்து.
---------------------------------------------------------------------------------------------
11.05.15
-----------
கடற்கரை--வைரச்சுரங்கம்--
கடைவீதி
------------------------------------------------
கடற்பரப்பைக் கண்குளிரப் பார்த்தோம்! பிறகு
அடடா! வைரச் சுரங்கத்தைக் கண்டு களித்தோம்!
சுடரும் இருட்டும் சுழன்று வந்தே
தொடர்ந்ததே  அற்புதம் அங்கு.

கடைவீதி தன்னில் நடையுலா சென்றோம்!
நடைபாதை விட்டே கடையை அமைத்துத்
தடையின்றி விற்க வழிவகுத்த பண்பு
நிறைவினைத் தந்தது சொல்.


12.05.15
-------------
பவளத்தீவு
---------------------
கடல்நீரில் கால்வைத்தே தத்தளித்து நாங்கள்
படகிலே ஏறிப் புறப்பட்டோம்! அந்தப்
படகோ கடலைக் கிழித்தேதான் துள்ளிக்
கடலிலே தண்ணீரை அள்ளியே வீசி
உடலை நனைத்தது பார்.

பாராசூட் சாகசம்
-----------------------------
உடலில் குதிகுடையைக் கட்டி, கயிறைப்
படகில் இணைத்தார்! படகங்கே பாயும்!
சிறகு விரித்துக் குதிகுடை விண்ணில்
பறக்க மனிதனின் சாகசம் கண்டே
உடல்சிலிர்க்க மெய்மறந்தோம் நின்று.


தீவில் இறங்கினோம்! சாய்வு நாற்காலி
ஆவலைத்தான் தூண்டிவிட சாய்ந்தேதான் ஓய்வெடுத்தோம்!
கூவித்தான் விற்ற இளநீரை வாங்கித்தான்
நாவினிக்க ஏற்றோம் சுவைத்து.

13.05.15
----------
சீல் சாகசம்
--------------
கடற்சிங்கம் சாகசக் காட்சிகள் ஆகா!
கடலிலே வாழ்கின்ற இந்த விலங்கின்
தடம்பதித்த சாகசம் கண்டு களித்தோம்!
நடந்தோம் வியப்பிலே ஆழ்ந்து.

யானைகள் சாகசம்!
------------------------------------
யானைகள் ஊர்வலமாய் ஒன்றன்பின் ஒன்றாக
மாமலைகள் நிற்பதைப்போல் வந்தே நின்றன!
காணக் கிடைக்காத காட்சியைப் பார்ப்பதைப்போல்
யானைகளைப் பார்த்தோம் ரசித்து.

கால்தூக்கி நின்றன! பந்தாடிக் காட்டின!
தூரிகையால் ஓவியங்கள் தீட்டியதைப் பார்த்ததும்
தூவிய இன்பத்தில் அற்புதத்தில் மெய்மறந்தோம்!
கால்களை ஊன்றி இருக்கையில் உட்கார்ந்த
கோலத்தைப் பார்த்தோம் களித்து.

சாகசம் பார்த்ததில் உள்ளத் துணிவுடன்
சாகசம் செய்ய இருவரோ முன்வந்தார்!
யானை இரண்டு நடந்தேதான் வந்தன!
வீரரும் வீராங் கனையும் படுத்திருக்க
வேழமோ காலொன்றைத் தூக்கி மங்கையைக்
காலால் மிதிப்பது போலவே பாசாங்கு
காட்டித்தான் தாண்டியது! வீரரிடம் இத்தகைய
காட்சியைக் காட்டியது! வேறொரு யானையோ
போக்குகாடி மங்கையைத் தாண்டித்தான் வீரர்
பார்த்திருக்க கிச்சுகிச்சு மூட்டியதும் கும்பிட்டார்!
வீரரைத் தாண்டியதும் நிம்மதியாய் மூச்சுவிட்டோம்!
வேழங்கள் வாழ்க நிதம்.

பறவைகள் சாகசம்
BIRD SHOW
--------------------------------------
ஆங்கிலத்தில் ஒன்றுமுதல் பத்துவரை சொல்லியது!
பாங்குடனே ஆங்கிலப் பாடல்கள் பாடியது!
பார்வையாளர் கையில் பலூனை வைத்திருக்க
பாய்ந்து பறந்துவந்து பலூனை வெடிக்கவைத்த
நேர்த்தியைப் பார்த்தோம்! மிதிவண்டிகள் ஓட்டின!
ஆர்வமுடன் பார்த்தோம் விழைந்து.

உளவாளிகள் சாகசம்
SPY SHOW
--------------------------------------------
திரைப்படம் பார்ப்பதுபோல் மெய்சிலிர்க்கும் சண்டை!
விரைந்துவந்த படகுகள் தண்ணீரை அள்ளிக்
கரைகடந்து பார்வையாளர்கள் மீதங்கே வீச
தலைமுதல் கால்வரை மேனி நனைய
மலைத்துத் திகைத்தோம்! துப்பாக்கிச் சண்டை
நிலைகுலைய வைத்த வெடிகுண்டு சத்தம்
அவையே குலுங்க அதிரடிக் காட்சி
கலைநயத்தைப் பார்த்தோம் வியந்து.

டால்பின் சாகசம்!
DOLPHIN SHOW
-----------------------------------------
இப்படியும் மீன்கள்தான் பாடுமோ? ஆடுமோ?
முத்தங் கொடுக்குமோ? பந்தாட்டம் போடுமோ?
மொத்தமாக மெலெழும்பி வந்து குதிக்குமோ?
எத்தனை ஆற்றல்கள்! எத்தனை சாகசங்கள்!
எப்படித்தான் இந்தப் பயிற்சியைத் தந்தாரோ?
அத்தனையும் அற்புதந்தான் சொல்.

வன உலா!
SAFARAI
-------------------------------
வண்டியில் ஏறி வனஉலா சென்றிருந்தோம்!
வண்டிசென்ற பாதையில் ஒட்டகம், மான்கள்,
விண்ணைத் தொடுவதுபோல் நின்ற சிவிங்கிகள்,
கண்டாலே அஞ்சவைக்கும் காட்டுப் புலிவகைகள்!
நெஞ்சை அதிரவைக்கும் காண்டா மிருகங்கள்!
என்றங்கே வாழும் விலங்குகளைப் பார்த்ததும்
எங்களுக்குள் உற்சாக வெள்ளம் பெருக்கெடுக்க
சென்றுவந்தோம் கண்டுவந்தோம்! நன்கு!


கட்டிடங்கள்--கோயில்கள்
------------------------------------------------
விண்முட்டும் வண்ணவண்ணக் கட்டிடங்கள்! எங்கெங்கும்
கண்கவரும் விற்பனைக் கூட வளாகங்கள்!
எங்கெங்கும் புத்தருக்குக் கோயில்கள்! பொற்சிலைகள்!
வண்ணக் கலைநுணுக்கம் ஏந்துகின்ற கோயில்கள்
நம்மை வியப்பின் சிகரத்தில் நிற்கவைக்கும்!
நின்றிருப்பார், உட்கார்ந்தும் படுத்தும் பலநிலையில்
அம்மம்மா! புத்தர் திருஉருவக் கோலங்கள்!
எங்கும் அமைதியான சூழலின் ஆட்சிதான்!
கண்டு ரசித்தோம் வியந்து.


தனிச்சிறப்பு  
-------------------------
இனிப்பான மாங்காய், புளியங்காய் மற்றும்
கனிச்சிறப்பு கொண்ட இளநீர்க் குவியல்!
அணியணியாய்ச் செல்லும் ரதம்போன்ற ஆட்டோ!
தனிச்சிறப்பாம் தாய்லாந்தில்! சாற்று.

நண்பர்கள் பத்துபேர் தாய்லாந்தைச் சுற்றிவந்தோம்!
அன்பாகப் பேசிப் பழகினோம்! எல்லோரும்
சொன்ன நகைச்சுவையில் நேரம் கழிந்ததே
அங்கே தெரியவில்லை! நான்காம்நாள் நாங்களோ
நெஞ்சம் கணக்க நினைவைச் சுமந்தேதான்
கண்கவரும் தாய்லாந்தை விட்டுப் புறப்பட்டோம்!
எங்கள் விமானத்தில் தாய்நாடு வந்தடைந்தோம்!
நெஞ்சில் நினைவுகள்! கண்களில் நீர்த்திரை!
அன்பில் கரைந்தோம் நனைந்து.

மதுரை பாபாராஜ்
----------------------------------------------------------------------------------------------------------------------------------


Saturday, May 16, 2015

பன்மொழி பேசுகின்ற ஆற்றலோ அற்புதந்தான்!
என்றாலும் எந்த மொழியறிந்தும் துள்ளாமல்
எங்கும் நிறைகுடம்போல் நாளும் ததும்பாமல்
மண்ணகத்தில் வாழ்தல் சிறப்பு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

அன்னையர் தினம் !
     10.05.15
--------------------;
அம்மா! நடமாடும் தெய்வம்! பாசத்தால்
அன்புச் சிறகால் அரவணைக்கும் பூந்தென்றல்!
பண்புகளைக் கற்றுத் தருகின்ற  பேராசான்!
கண்டிப்பைக் காட்டுவாள்! கண்ணிமையாய்க் காத்திருப்பாள்!
தன்னை  உருக்கி உழைக்கும்  மெழுகுவர்த்தி!
என்றும்  வணங்கினால் வாழ்வு!


Saturday, May 09, 2015

குறளைப் பரப்பு!
-----------------------------------
மதத்தைப் பரப்பி மனிதநேயக் காற்றை
விதவிதமாக மாசு படுத்துவதை விட்டுக்
குறளைப் பரப்பி அகமாசை நீக்கும்
கடமையைச் செய்தால் உயர்வு.

Thursday, May 07, 2015

உழைப்பே சுவை!
---------------------------------
சமையலின் பின்னணியில் உள்ள உழைப்பை
நினைத்தால்  சுவையின் குறைகள் விலகும்!
மனதில் உழைப்பின் நிறைவினை ஏற்றால்
சுமையில்லை இங்கே குறை.

தமிழின் ஒளி!
--------------------------
தமிழின்  சிகரம் அகரம்! ழகரம்!
தமிழின் இமைகள் இலக்கண மாகும்!
தமிழின் விழிகள் இலக்கிய மாகும்!
தமிழின் ஒளியே குறள்.

தமிழால் வளர்கின்றோம்!
---------------------------------------------
தாயை வளர்க்கின்றேன் என்பதும் நாட்டிலே
தாய்த்தமிழை நான்வளர்ப்பேன் என்பதும் ஒன்றுதான்!
சேய்களிடம் உள்ள அறியாமை போன்றதே!
தாயிடம் சேயும் தமிழிடம் மக்களும்
நாளும் வளர்வதே மெய்.

Wednesday, May 06, 2015

தவறான வழிகாட்டல்!
--------------------------
இந்த முகவரிக்கு எப்படிச் செல்வதென்றேன்?
சொன்ன திசையெல்லாம்  சென்றேன்! தமிழ்த்தாயே!
வந்தேன் புறப்பட்ட இடத்துக்கே! இப்படித்தான்
மண்ணக வாழ்வில் தவறாய் வழிகாட்ட
முன்னேறத் தத்தளிப்பார் இங்கு.

Tuesday, May 05, 2015

இல்லாமை!
--------------------------------
அல்லும் பகலும் அயரா துழைத்தாலும்
அல்லாடு கின்றார் அடிப்படைத் தேவைக்கே!
இல்லாமை இப்படி ஆட்டிப் படைக்குமென்றால்
எல்லாம் இறைவன் செயல்?

நிகரே இல்லை!
----------------------
கோயில் மணியோசை கேட்டாலே  இன்பந்தான்!
கோயிலென்னும் இல்லறத்தில் சேயின் குரலோசை
கோயில் மணியோசை இன்பத்தை விஞ்சிவிடும்!
சேயின் மழலை அமுது.

Saturday, May 02, 2015

எல்லாம் நம்கையில்!
------------------------
முள்ளொன்று காலிலே தைத்துவிட்டால் நாமிங்கே
முள்ளையும் நீக்கவேண்டும்! காலையும் காக்கவேண்டும்!
இல்லறத்துச் சிக்கலையும் இப்படித்தான் தீர்க்கவேண்டும்!
எல்லாமே நம்கையில் தான்.

விடியல் உன்வசம்!
----------------------
இடிவிழுந்தால் என்ன? அடிவிழுந்தால் என்ன?
துடிக்காதே! துச்சமென எண்ணிநடை போடு!
இடியை  அடியை உனதடிமை யாக்கு!
விடியலை உன்வச மாக்கு.

வட்டத்தில் ஓடினால்?
--------------------------------------
வட்டத்தைச் சுற்றிசுற்றி ஓடும் மனிதர்கள்
எப்படிச் சந்திப்பார் சிக்கலைத் தீர்ப்பதற்கு?
இப்படித்தான் இல்லறத்தில்
சிக்கலற்ற சிக்கலையும்
சிக்கலாக்கி வாழ்வார் சிலர்.

வட்டத்தை விட்டு வெளியில் வரவேண்டும்!
விட்டுக் கொடுக்கின்ற பக்குவத்தைக் கற்கவேண்டும்!
கற்றுத் தெளிந்தே அனுசரித்து வாழ்ந்தால்தான்
எப்பொழுதும் நிம்மதி உண்டு.