Saturday, July 30, 2016


101  (உ)லோகநூல் கற்றுணர்

பட்டங்கள் கற்றும் உலக நடப்புகளில்
பட்டறி வில்லாத மாந்தரின் வாழ்க்கைப்
பட்டமோ நூலறுந்த பட்டமாகும்! இவ்வுலகைக்
கற்றுணர்ந்து வாழ்தல் சிறப்பு.



100  (உ)லுத்தரை இகழ்

மலைபோல செல்வம் குவிந்திருந்த போதும்
அலைத்துளி  கூட வறியவர்க்( கு)  ஈயா
சிலைமனங் கொண்ட உலுத்தரை நாளும்
தலைநாணும் வண்ணம் இகழ்.


99  லீலை இவ்வுலகு

வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும்
சுற்றிச் சுழலும் விளையாட்டு மைதானக்
கட்டமைப்பு கொண்டதே இவ்வுலக வாழ்க்கையாம்!
சுற்றுகள் மாறிவரும் பார்.


98  லாவகம் பயிற்சி செய்

செயலிலே ஈர்ப்புவரும்! அத்தகைய ஈர்ப்பு
பழக்கமாகும்! அந்தப் பழக்கம் பயிற்சிக்
களமாகித் தேர்ச்சிகொள்ள வைக்கும்! முழுமை
அரணாக மாறிநிற்கும் காத்து.


யாரறிவார்?

யார்யாருக்( கு)  எந்தநேரம் எந்தத் திறமைகள்
வேர்விடும் என்பதை யாரும் அறிவதில்லை!
நேரம் வெளிப்படுத்தும்! நம்மை வளப்படுத்தும்!
யாரறிவார்? யார்திறமை? சொல்.


97  லவம் பல வெள்ளமாம்

குறுந்தொகையை நாள்தோறும் சேமித்து வைத்தால்
நெடுந்தொகை யாகப் பல்கிப் பெருகி
சிறுதுளி பெருவெள்ளம் போல் மாறி இங்கே
இடுக்கண் களையும் உணர்.


96  ரௌத்ரம் பழகு

எறும்பைத் தடுத்தால் எறும்பும் சினக்கும்!
பொறுமைக்கும் எல்லை இருக்கிறது! மீறி
நசுக்கிப் பிழிந்தால் சினந்தெழ வேண்டும்!
தடுப்பதற்கு கோபம் பழகு.


95  ரோதனம் தவிர்

வேதனை வேழங்கள் முட்டுகின்ற நேரத்தில்
சோதனை நாகங்கள் சீறுகின்ற வேளையில்
ஊடறுக்க எத்தனித்துப் பொங்கிவரும் கண்ணீரைச்
சூசகமாய் இங்கே தவிர்.


94  ரேகையில் கனி கொள்

உள்ளங்கை கோடுகளும் மேடுகளும் வாழ்க்கையைத்
தெள்ளத் தெளிவாய்க் கணிக்கலாம்! மாந்தர்கள்
எல்லாம் அவைசெயல் என்றே முயற்சிக்குத்
தொல்லை கொடுத்தால் சினந்தே முறியடித்து
வெல்லவேண்டும் சூழலைத் தான்.


நீ
------
எங்கே
இருக்கிறாய்
நீ?
உனக்குள்ளே
இருக்கும்
நீயைச்
செம்மைப் படுத்து
நாள்தோறும்!
நொடிதோறும்!
விளங்காத
மெய்ப்பொருள்
விளங்கும்!


93  ரூபம் செம்மை செய்

உனக்குள் இருக்கின்ற நற்பண்பை மேலும்
மணக்கவைக்க மேம்படுத்திச் செம்மைப் படுத்த
தினமும் முயற்சி எடுத்தால்  உலகம்
குணக்குன்(று ) எனப்போற்றும் பார்.


92  ருசி பல வென்று உணர்

அய்ம்புலன்கள் தூண்டும் சுவைகளுக் கேற்றவண்ணம்
துள்ளி நடம்புரிந்தால்  கோளாறு சூழ்ந்துவிடும்!
எல்லாம் அளவுடன் எல்லைக்குள் வென்றிருந்தால்
தொல்லை நெருங்கா துணர்.



91  ரீதி தவறேல்

நேர்வழியா உன்வழி? சற்றும் கலங்காதே!
ஆர்த்தெழும் பேரலைகள்! ஆடிவரும் மாமலைகள்!
சூழ்நிலையைச் சந்தித்தே வெற்றிகொள்! மாறிவிடும்!
நேர்வழியே வெல்லும் நிமிர்ந்து.


பெண்ணாதிக்கம்

கண்டதே காட்சியாய்க் கொண்டதே கோலமாய்ப்
பெண்கள் அடங்காமல் ஆணவத்தை மூச்சாக்கி
கண்டபடி வாழ பிடிவாதம் செய்வதே
பெண்களின் ஆதிக்கப் போக்கு.

90  ராஜஸம் பயில்

நற்செயலைத் தேர்ந்தெடு! தேர்ந்தெடுக்கும் நற்செயலில்
விற்பன்ன ராவதற்கு நாளும் கவனமுடன்
முற்றும் நுணுக்கத்தைக் கற்றுக்கொள்! அத்துறையில்
அற்புதமாய் முன்னேற லாம்.

Wednesday, July 27, 2016


89  ரஸத்திலே தேர்ச்சிகொள்

யாரென்ன சொன்னாலும் நம்பாமல் மெய்ப்பொருளைத்
தேர்ந்து தெளிந்து பகுத்தறியும் ஆற்றலில்
ஊர்மெச்சும் வண்ணம் விவேகியாய் வாழவேண்டும்!
ஊறிவரும் நற்பெயர் தான்.



88  யௌவனம் காத்தல் செய்.

நறுமணப் பூச்சோ அழகைக் கெடுக்கும்!
சுறுசுறுப் பொன்றே அழகைக் கொடுக்கும்!
முதுமையில் கூடசுறுசுறுப்பாய் வாழும்
மிடுக்கான பண்பேஅழகு.

86  யவனர் போல் முயற்சி கொள்

கடின உழைப்பு,விடாமுயற்சி மற்றும்
நொடிப்பொழுதும் மாறாத நம்பிக்கை கொண்டே
விதியெனச் சொல்லித் திரிவதை விட்டே
மதியால் யவனராக மாறு.

Tuesday, July 26, 2016


85  மௌட்டியந் தனைக் கொல்

கற்றுத் தெளியத் தெளிய அறிவொளி
பட்டொளி வீசும்!அறியாமைக் காரிருள்
சட்டென்று நீங்கும்!  அறிவால் அறியாமை
முற்றும் விலகும் உணர்.


84  மோனம் போற்று

அமைதியாய் எங்கிருக்க வேண்டுமோ, அங்கே
அமைதி கடைப்பிடித்தல்  பண்பாகும்! அன்றி
மனம்போன போக்கில் கண்டநேரம் பேசும்
குணமோ வெறுப்பிற்கே வித்து.


83  மொய்ம்புறத் தவம் செய்

பணவலிமை எல்லாம் வலிமையா? இல்லை
மனவலிமை ஒன்றே நிலைக்கும் வலிமை!
மனவலிமை வாழ்க்கையின் ஆணிவே ராகும்!
சுணக்கத்தைப் போக்கும் மருந்து.



82  மேழி போற்று

வேளாண்மை இல்லையேல் வேளைக் குணவில்லை!
வேலையின்றி வாழ்வோம் ! உணவின்றி வாழ்வோமா?
வேளாண்மை போற்றாத நாடுண்டோ?  இவ்வுலகம்
வாழ்வதற்கே அச்சாணி இஃது.


81  மெல்லத் தெரிந்து சொல்

சொல்வதற்கு முன்னால் சொல்லும் விவரத்தைத்
தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு சிந்தித்துச்
சொல்லவேண்டும்! இங்கே அரைகுறையாய்ச் சொல்லாதே!
தொய்வெனின் நம்பமாட்டார்! சொல்.


80.மூப்பினுக்கு இடம் கொடேல்

மதுமைப் பருவமா! என்றஞ்சி வாழும்
கொடுமையை விட்டொழி! வாழ்க்கையில் நாமோ
உடுத்துகின்ற ஆடைபோல் நாமணியும் ஒன்றே!
ஒடுங்காதே! மூப்பை உதறு.


79  முனையிலே முகத்து நில்

வேகத்தின் உச்சாணிக் கொம்பிலேறி நிற்கின்ற
தாகம் துணிவல்ல! நாளும் விவேகத்தின்
தேடலின் அஞ்சாமை துணிவாகும்! அத்தகைய
மாசற்ற பண்பே துணிவு.


78  மீளுமாறு உணர்ந்து கொள்

சூழ்நிலைகள் பாதகமாய் மாறியதே என்றிங்கே
ஆழ்மனத்தில் சோர்வடைந்து போகாமல் சிந்தித்தே
சோர்வைக் களைந்தெறிந்தே பீனிக்ஸ் பறவைபோல்
வாழ்விலே மீண்டெழப் பார்.


77  மிடிமையில் அழிந்திடேல்

விரக்திக்குத் தூண்டுகின்ற ஏழ்மையும் ,ஏழ்மை
சுரக்கின்ற துன்பமும் சீண்டித்தான் பார்க்கும்!
களமிறங்கிச் சந்தித்து வாழவேண்டும்!  வாழ்வை
இழக்காமல் வாழப் பழகு.


76  மானம் போற்று

அண்டிக் கெடுத்தல் ,துரோகம் புரிவது
தன்மானந் தன்னை இழக்கும் செயலாகும்!
உன்மானம் போக்கும் செயல்களை விட்டுவிடு!
தன்மானம் காத்தல் அறிவு.


75  மந்திரம் வலிமை

இலக்குகளை நோக்கி விடாப்பிடி யாக
உளத்தினிலே தேக்கி முயற்சிகளில் மட்டும்
தளர்ச்சியே இன்றி உழைத்தாலே போதும்!
சுரந்துவரும் வெற்றி உணர்.


மறக்காதே!
------------------------
வாழ்வில் உறவுகள் புதிதாகத் தோன்றுகின்ற
வாய்ப்புகள் உண்டு! பழகலாம் நட்புடன்!
வாழ்வின் பழைய உறவுகளை ஏறெடுத்துப்
பார்க்காமல் போவது தப்பு.



நம்பிக்கையே வாழ்க்கை!

இன்று கிடைக்கவில்லை என்றெண்ணி ஏங்காதே!
கண்மணியே! நேற்றுவரை இங்கே கிடைத்ததை
எண்ணி திருப்திகொள்! நாளை கிடைக்குமென்று
நம்பிக்கை கொண்டே நட.



74  போர்த்தொழில் பழகு

தற்காத்துக் கொள்ளும் கலையறிதல் நல்லது!
அப்பப்பா வம்புகளைத் தூண்டிவிட்டுத் தாக்கவரும்
மட்டமான மாந்தருக்குத் தக்கபாடம் கற்பிக்க
தற்காத்துக்  கொள்ளவேண்டும் பெண்



73  பொய்ம்மை இகழ்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித்தான்
நல்லவர்போல் நாளும் நடிக்கின்ற வஞ்சகரை
எள்ளளவும் நம்பாதே! நட்பைத் தொடராதே!
பொய்மையைத் தூற்றவேண்டும் சொல்.


72  பேய்களுக்கு அஞ்சேல்

தனக்குத்தான் எல்லாம் தெரியுமென்று நாளும்
மனக்கோட்டை கட்டியே ஆணவத்தின் தோளில்
தினவெடுத் தாடும் வெறிகொண்டோர் தம்மை
மனத்தாலும் தீண்டாதே இங்கு.

Thursday, July 21, 2016

வாழும் கலை


வாழும்கலை!

தண்ணீர் கலங்களுக் கேற்ப வடிவெடுக்கும்!
இன்றிங்கே பெற்றோர் இருவரும் வேலைக்குச்
சென்றுவரும் சூழ்நிலையில் பிள்ளைகள் தங்களை
அந்தந்தச் சூழலுக் கேற்ப அனுசரித்து
அன்றாடம்  மாற்றித்தான் வாழும் கலையறிந்தார்!
என்னமாற்றம் இம்மாற்றம் பார்.


மாசிலனாகு!

பகைக்கும் மனமோ  புகைச்சலைக் கக்கும்!
புகைச்சல் மனமோ வெறுப்பினைக் கக்கும்!
குறைகாணும்  உள்ளம்  குமுறலைக் கக்கும்!
முடைநாற்றப் பாதை தவிர்.


71  பெரிதினும் பெரிது கேள்!

எண்ணற்ற செல்வங்கள் எப்படித்தான் வந்தாலும்
கண்போன்ற கல்வியெனும் ஒப்பற்ற செல்வம்போல்
மண்ணுலகச் செல்வங்கள் இங்கே நிலைக்காது!
என்றுமே கல்வி பெரிது.


70  பூமி இழந்திடேல்

நிலத்தை இழந்தே நிலக்கிழா ருக்கே
உலகத்தில் கொத்தடிமை யாகாதே! நாட்டைச்
சுரண்டுகின்ற வர்க்கத்தின் காலடியில்  வைத்தே
நிரந்தரமாய் இங்கே அடிமையாய்  மாறிக்
கலக்கத்தில் வாழாதே நீ.



69  புதியன விரும்பு

ஆக்கபூர்வ மாற்றம் அனைவருக்கும் நல்லதே!
ஆக்கத்தை விட்டே அழிவுக்குத் தோள்கொடுத்தால்
நாட்டுக்கும் மக்களுக்கும் கேடாக மாறிவிடும்!
மாற்றத்தால் ஆக்கத்தை நாட்டு.


68  பீழைக்கு இடம் கொடேல்

விளக்கம்
துன்பத்திற்கு இடம் கொடுக்காதே

துன்பம் வரும்பொழுது கோழையாக மாறிவிட்டால்
எண்ணம் தடுமாறும்! பண்புகூட தத்தளிக்கும்!
துன்பத்தைச் சந்திக்கும் பக்குவம் பெற்றுவிட்டால்
துன்பம் பறந்தோடும் பார்.



67  பிணத்தினைப் போற்றேல்

மற்றவரைப் பற்றிக் கவலை கிடையாது!
எப்பொழுதும் தன்னலச் சிந்தனையே வாழ்க்கையாக
அட்டையைப் போன்றோர் பிணத்திற்கே ஒப்பாவார்!
முற்றும் புறக்கணித்தல் நன்று.


66  பாட்டினில் அன்புசெய்

மொழியுள்  இசையும் இசையுள் மொழியும்
செழித்துக் கலந்தே இதயம் சிலிர்க்க
பொழியப் பொழிய உயிர்கள் தழைக்கும்!
உயிரின அன்புமொழி பாட்டு.

65  பணத்தினைப் பெருக்கு

ஈத்துவக்கும்  இன்பம் பெறுவதற்கோ அன்றாடம்
ஈட்டவேண்டும் ஈட்டிப் பெருக்கவேண்டும் நல்வழியில்
நாட்டமுடன் இங்கே பணத்தைத்தான்! ஈகையே
வாட்டத்தைப் போக்கும் மருந்து.

Monday, July 18, 2016


64  நோற்பது கைவிடேல்

மதநெறியைப் போற்றி ஒழுக்கமுடன் வாழும்
அகமுடையோர் பண்புகளும் நோற்பதும் ஒன்றே!
மதநெறியைச்  சொல்லி ஒழுக்கம்  தவிர்த்து
புறநெறியாய் நோற்பதோ வேடமின்றி என்ன?
அகத்தூய்மை ஆன்மிகம் ! சொல்.

63  நொந்தது சாகும்

பணச்சோர்வை நாமோ மனத்துணிவால் வெல்வோம்!
சுமைச்சோர்வு தன்னைச் சிறுஓய்வால் வெல்வோம்!
மனச்சோர்வு வந்தால் விரக்திதான் தோன்றும்!
மனச்சோர்வைப் பந்தாடு நீ.


62  நையப் புடை

எதிர்மறைப் பண்புகளை நையப் புடைத்தால்
நதிப்பெருக்காய் நேர்மறைப் பண்புகள் நாளும்
குடியேறும் ஆழ்மனதில்! எல்லோரும் நம்மை
மதிக்க உயர்ந்திடுவோம்  நாம்.



61  நேர்படப் பேசு

சொல்வதை என்றும் சுருக்கமாகப் பேசவேண்டும்!
சொல்லத் தெரியுமென்று ஊர்ப்பயணம் போவோரின்
சொல்லைக் கவனிப்போர் சோர்வுக்கே ஆளாவார்!
சொல்வதை நேர்படப் பேசு.

60  நெற்றி சுருக்கிடேல்

எதற்கெடுத் தாலும் எரிந்து விழுதல்
முகத்தில் சிடுசிடுப்பு கோபதாபம்  என்றே
நிதமும் இருப்பதை விட்டு விடுங்கள்!
முகமலர்ச்சி என்றும் அழகு.


59  நூலினை பகுத்துணர்

மேலோட்ட மாகப் படித்துவிட்டு நானுமிங்கே
நூல்களைப் படித்தேன் எனச்சொல்லி வாழாதே!
நூல்களை ஆழ்ந்து படித்துப் புரிந்துகொள்!
நூல்கள் அறிவளிக்கும் ஊற்று.

58  நுனி அளவு செல்

துரும்பை அசைப்பதற்கும் எச்சரிக்கை வேண்டும்!
துரும்புதானே என்று கவனமின்றி செய்தால்
வருமுன்னே காவாதான் வாழ்க்கையைப் போல
பெருந்தீங்கைச் சந்திப்போம் செப்பு.

Saturday, July 16, 2016


எனது பின்னணி

பயிரியலில் பட்டப் படிப்புப் படித்தேன்!
தொழிலில் கணக்குப் பிரிவில் பணிகள்!
கவிதைத் துறையில் படைப்பு மழைதான்!
தமிழே! எனக்குள் முரண்.

செய்தியும் கவிதையும்(16.07.16)

அஞ்சல் நிலையத்தில் கங்கைநீர் விற்பனை!
மஞ்சளுடன் குங்குமம்
மற்றும் திருநீரும்
அஞ்சலகத்தில் விற்கக் கூடுமென்று நம்கலைஞர்
சிந்தித்துக் கூறுவதும் மெய்.

மதச்சார்பே இல்லாத நம்நாடு என்றே
நடக்கின்றோம் நன்னடை போட்டேதான் நாமும்!
நடப்பதைப் பார்த்தால் முன்பின் முரண்தான்!
மதச்சார்பு மக்களாட்சி தீங்கு.


57  நீதி நூல் பயில்

மேதினியில் நீதிநூலைக் கற்றறிந்தால் போதாது!
நீதி நெறிகளைப் பின்பற்றி மற்றவர்க்கும்
நீதிவழி வாழும் வழிகாட்டி யாகவேண்டும்!
நீதிவழி நிம்மதிக்கு வித்து.

இன்னா செய்தாரை ஒறுத்தல்

அம்மா
குழந்தையைக்
கண்டிக்க
கையில்
சூடுபோட்டாள்!
வலி
பொறுக்க முடியாமல்
குழந்தை
அலறியது
அம்மா!


களங்கள்!

வளர்ந்து நிலைபெறும் மட்டும் அருமைக்
குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை!
நிலைசேரும் போது பெற்றோரோ வாழ்வில்
தளர்நடை காண்பார்! சுழற்சி முறையில்
குழந்தைகள் நோக்கியே சார்ந்திருக்கும் வாழ்க்கை !
வளர்ச்சி தளர்ச்சிக்குத் தோள்.


ஏற்றத்திற்கு!
--------------------------
வாய்ப்பைத் தடைக்கல்லாய் எண்ணும் எதிர்மறை
நோய்மனங் கொண்டவர்கள் முன்னேற்றம் காண்பதெங்கே?
வாழ்வில் தடைக்கல்லை வாய்ப்பாக்கும் ஆற்றல்தான்
நேர்வழி ஏற்றம் தரும்.


56  நினைப்பது முடியும்

விளக்கம்
நம்பிக்கையோடு இரு.

நரம்பில்லா வீணையும் நம்பிக்கை யற்ற
செயல்களும் ஒன்றே! எதைச்செய்த போதும்
முயற்சியில் நம்பிக்கை கொண்டிறங்க வேண்டும்!
செயல்கள் நிறைவேறும் செப்பு.


பெருந்தலைவர் காமராசர்
வாழ்க!
----------------------------------------------------
சிறந்த மனிதர் சிவகாமி மைந்தர்!
பிறவிக்கு நாளும் சிறப்பளித்த ஏந்தல்!
கடமையில் நேர்மை எளிமையான வாழ்க்கை
தடம்பதித்த காமராசர் நற்புகழ் வாழ்க!
மகத்தான நம்மவரைப் போற்று!


55  நாளெல்லாம் வினை செய்

விளக்கம்
சுறுசுறுப்பாக இரு..சோம்பி இராதே.

முப்படை மற்றும் விவசாயி ஓய்வெடுத்தால்
எப்படி நாடிருக்கும்? மக்கள் உயிரிருக்கும்?
மக்கள்நாம்  நாளும்  உழைக்கவேண்டும் அப்படியே!
அப்படி வாழப் பழகு.


54  நன்று கருது

விளக்கம்
நல்லனவற்றை செய்ய எண்ணு; விரும்பு.

நல்லதை நல்லதென்றே ஏற்கின்ற உள்ளத்தில்
துள்ளாது பொல்லாத எண்ணங்கள்! எப்போதும்
நல்லதை நாடியே நல்லதைச் செய்யவேண்டும்!
நல்வழி தானே அறம்.

Wednesday, July 13, 2016

53  தவத்தினை நிதம் புரி

நல்லதை கெட்டதை நன்றாக சிந்தித்தே
உள்ளத்தால் நல்லதை நாள்தோறும் பின்பற்றி
இவ்வுலகில் வாழ்வதே நல்ல தவமாகும்!
நல்லதையே நாடு தினம்


52  தோல்வியிற் கலங்கேல்

வெற்றியும் தோல்வியும் வாழ்வின் நிகழ்வுகள்!
வெற்றியில் ஆடாதே! தோல்வியில் வாடாதே!
முற்றும் சமநிலையில் ஏற்கின்ற பக்குவத்தைக்
கற்றால் கலக்கமில்லை காண்..

51  தொன்மைக்கு அஞ்சேல்

விளக்கம்
பழமைக் (பழமையானமூட நம்பிக்கைகளைக் )கண்டு பயந்து பின்பற்றாதே.

மூடப் பழக்கத்தை வேகமாய்ப் பின்பற்றும்
மோகத்தைவிட்டுவிடு! அச்சத்தைத் தூக்கியெறி!
வேகத்தை விட்டே விவேகத்தால் சிந்தித்தால்
நாடறிய வாழலாம் நன்கு.


50  தையலை உயர்வு செய்

பெண்களை போகப் பொருளாகக் காட்டுகின்றார்
அன்றாடம் ஊடகத்தில்! இந்த எதிர்மறை
எண்ணத்தைக் கண்டிப்போம்!வாழ்வில் மதிப்பளிப்போம்!
இன்னும் சமஉரிமை கேள்விக் குறியானால்
உன்மனம் சாடும் நகைத்து.



49  தேசத்தைக் காத்தல் செய்

தாய்நாட்டைச் சீர்குலைக்க வன்முறையோ வல்லூறாய்
நாள்தோறும் வட்டமிட்டு வேடிக்கைக் காட்டுதடா!
சூளுரைப்போம்! ஒற்றுமைக்குத் தோள்கொடுப்போம்! நம்நாட்டின்
வேராவோம் காப்பதற்குச் சூழ்ந்து

48  தெய்வம் நீ என்று உணர்

மனத்துக்கண் மாசில னாகிவிட்டால் தெய்வம்
மணக்கின்ற கோயிலாக மாறும் மனம்!
மனமிங்கே கோயிலானால் நீதானே தெய்வம்!
குணங்களிலே தெய்வமாய்க் காட்டு.

Monday, July 11, 2016



47  தூற்றுதல் ஒழி

விளக்கம்
ஒருவரையும் பழிக்காதே.

போற்றிப்பார்!உள்ளம் குளிர்வார்! கண்மணியே!
தூற்றிப்பார்!  வாடித் துடிப்பார்! கலங்குவார்!
போற்றுவதைப் போற்று, அரும்பும் தருவாகும்!
தூற்றிப் பழிப்பதோ தீது.


46  துன்பம் மறந்திடு

எழுந்து மறையும் அலையினங்கள் போல
உலுக்கி மறைந்திடும் துன்பங்கள் எல்லாம்!
கலங்காமல் துன்பத்தை நாளும் மறந்தே
உழைப்பையே நம்பிமுன் னேறு.


45  தீயோர்க்கு அஞ்சேல்

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கு
செருக்குகளும் துள்ளும் வெறிகொண்டோர் தீயோர்!
இருந்தாலும் நாமவர்க்கோ அஞ்சாமல் என்றும்
ஒழுக்கமுடன்  வாழ்தல்  சிறப்பு.



44  திருவினை வென்று வாழ்

முயற்சிகள் செய்வோம்! கடமைகள் செய்வோம்!
பலன்கள் கிடைக்கும்! கிடைக்காமல் போகும்!
கவலைப் படாதே! நேரம் கனியும்!
உழைப்பிற்கு வெற்றிமாலை உண்டு.


43  தாழ்ந்து நடவேல்

விளக்கம்
(யாருக்கும்) தாழ்ந்து போகாதே...அடிமையாக இராதே.

அடக்கம் பணிவென்னும் வாழ்வியல் வேறு!
அதற்காக தாழ்ந்தே அடிபணிதல்  தீது!
மடமையை நீக்கு! அறிவொளி ஏற்று!
சுடர்முகம் தூக்கி நட.

42  தன்மை இழவேல்

விளக்கம்
உன் இயல்பையும், பெருமையையும், (நல்ல) குணத்தையும், அழித்துக் கொள்ளாதே.

என்னென்ன சூழ்நிலைகள் எப்படித்தான் தாக்கினாலும்
நன்னெறியைப் பின்பற்றும் உன்னியல்பை மாற்றாதே!
புண்படுத்தும் மாந்தரையும் பண்படுத்திக் காட்டவேண்டும்!
பண்பகமாய் வாழ்தல் மதிப்பு.

Sunday, July 10, 2016


பாரதியின் புதிய ஆத்திச்சூடி

41.ஞேயங் காத்தல் செய்

விளக்கம்
அறியப்படும் பொருளையும்,
இறைவனையும், நட்பையும் இழக்காதே.

படிப்பறிவை,பட்டறிவை,இல்லறத்தைப் போற்றும்
நெறியறிவை,கடமைகள் என்னும் இறையை,
துடிக்கின்ற மெய்யான நட்பின் இழையை
மதியே! இழக்காதே நீ.


40  ஞெகிழ்வ தருளின்

விளக்கம்
(ஒருவரது) முகம், அல்லது வாழ்க்கையை மலர்தல் செய். உதவி செய்

உதவியைக்  கேட்டும் செய்யாதோர் கீழோர்!
உதவியைக் கேட்காமல் செய்வோரே மேலோர்!
உதவியை அன்புடன் மற்றவர் உள்ளம்,
முகம்மலர செய்தல் சிறப்பு.


எனக்குத் தெரிந்தது

ஊரைத் திருத்தும் திறமை எனக்கில்லை!
பாரை அளக்கும் கருவியும் நானில்லை!
கூரையில் ஓட்டை இருக்குதென்று சொல்கின்ற
பார்வை எனக்குண்டு பார்.


39  ஞிமிரென இன்புறு

விளக்கம்
நிமிர்ந்து(முதுகெலும்போடு) வாழ்.தீயவைக்குத் தாழ்ந்து போகாதே.

முதுகெலும் பிங்கே வளைய உழைத்தால்
மிடுக்காய் நிமிர்ந்தேதான் வாழலாம்! ஆனால்
முதுகெலும்பை நாளும் வளைக்காமல் சோம்பல்
முறுக்கில் நிமிர்ந்தேதான் வாழ்தலோ கேடு!
நடுங்காதே தீமைகள் கண்டு.



38  ஞாயிறு போற்று

விளக்கம்
சூரியனை துதி செய்.

உலகை உசுப்பி இயக்கத்தைத் தூண்டி
அலுவல்கள் எல்லாம் அரங்கேற வைத்தே
நலமும் வளமும் உயிரினம் காண
தளமாகும் ஞாயிறைப் போற்று.


37  ஞமிலி போல் வாழேல்

விளக்கம்
நாயைப் போல் வாழாதே (அடிமையாக இராதே)

நன்றி மறந்தால் மனிதனல்ல! என்றாலும்
நன்றியுடன் வாழவேண்டும் என்பதை முன்வைத்தே
என்றும் அடிமையாய் வாழ்தல் சரியல்ல!
நன்றியே வாழ்க்கைக்கு வேர்.

36  சௌரியந் தவறேல்

விளக்கம்
வீரத்தைத் தவற விடாதே. வீரத்தை விட்டு விடாதே.

வாழ்வென்னும் போர்க்களத்தில் நல்லொழுக்கப் பண்புடன்
வாழ்வதே வீரமாகும்! அப்படி வாழ்வதற்கு
நேரும் இடையூறைத் தாண்டுவதும் வீரமாகும்!
ஈரமனம் வீரமனந் தான்.

Thursday, July 07, 2016

பட்டறிவு!

புத்தகம் மட்டுமே வாழ்வல்ல!சற்றெழுந்து
வாழ்வென்னும் புத்தகத்தை நீயுணர -- பாய்ந்துவா!
கூட்டைத் துறந்துவா!ஆகா இயற்கையின் பாவினங்கள்
காட்சியைக் கற்றுணர வா.

அலைக்கரத்தின் ஆட்டம் மேகத்தின் மூட்டம்
மலையின் உயரங்கள் சூரியனின் விந்தை
நிலவின் அமுதம் அருவியின் பாட்டு
சலசலத் தோடும் நதிகள் பண்கள்
கலகலக்கும் புள்ளினம் கண்கவரும் காட்டில்
உலவும் விலங்கு  இவையெல்லாம் வாழும்
உலகமே மற்றொரு புத்தகம் வாசி!
வளர்த்துக்கொள் பட்டறிவைத் தான்

வம்பைத் தவிர்

பேசும் தொனியில் இருந்தே மனதிற்குள்
வீசுவது தென்றலா? வன்புயலா? என்றேதான்
நாசூக்காய் நாமறிந்து பேசினால் சிக்கலில்லை!
தாறுமாறாய்ப் பேசினால் வம்பு.

இப்படி இருக்காதே!
-------------------------------
நமக்குப் பிடித்தவரா நாளும் தலையில்
சுமந்துகொண்டு போற்றிப் புகழ்வோம்! தமிழே!
நமக்குப் பிடிக்கவில்லை என்றால்  இகழ்வோம்!
மனதில் நடுநிலையைப் போற்று.

35  சோதிடம் தனை இகழ்

சோதிடத்தை நம்பி முயற்சிகளைக் கைவிட்டால்
சோதனைகள் நம்மை விலங்கிட்டுப் பந்தாடும்!
ஈடற்ற உழைப்பை மூலதன மாக்கிவிடு!
தேடலுக்குக் காண்பாய் விடை.

34  சொல்வது தெளிந்து சொல்

சொல்லும் கருத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு
சொல்வதை முன்னுக்குப் பின்னே முரணின்றி
தெள்ளத் தெளிவாகச் சொன்னால்தான் கேட்பவரின்
உள்ளமும் ஏற்கும் தெளிந்து.

33  சைகையிற் பொருள் உணர்

வாழ்க்கையில் ஏற்றங்கள் மற்றும்  இறக்கங்கள் ,
சூழ்நிலைகள் காட்டும் சைகைகள் கண்மணியே!
சார்ந்து பொருளணர்ந்து வாழும் வழியுணர்ந்தால்
சூழ்நிலையை வெல்லலாம் நாம்.

Wednesday, July 06, 2016


30  சூரரைப் போற்று

விளக்கம்
சூரியனைப் போற்று.
----------------------------------+------

பகலவனின் வன்கதிரை ஓசோன் படலம்
கடமையாய் நாளும் வடிகட்டி பாரை
இதமாகக் காப்பதற்குத் தோள்கொடு! மாசால்
கறைப்படுத்தி வாழ்ந்தால் மண்ணுலக வாழ்க்கை
முறைசிதைந்து போகும்! பகலவனைப்போற்ற
சிறைவைக்கும் மாசைத்  தவிர்.

24 கவ்வியதை விடேல்

நல்லவராய் வல்லவராய் வாழ்வில் உயர்த்துகின்ற
நல்ல குணங்களை எந்த நிலையிலும்
தள்ளிவைக்க எண்ணாமல் எப்பொழுதும் பின்பற்று!ச
தெள்ளமுத்ச் சுவைதான் வாழ்வு.


உழைப்பே உயர்வு!

மலரைப் பிழிந்நால் நறுமணம் உண்டு!
பழத்தைப் பிழிந்தால் பழரசம் உண்டு!
உழைப்பின் பிழிவால் உயர்வுதான் உண்டு!
உழைக்கத் தயங்காதே நீ.


29  சுமையினுக்கு இளைத்திடேல்

பொறுப்பும் கடமையும் வாழ்வின் விழிகள்!
கடுக்காய் கொடுக்காமல் ஏற்றுச் சுமந்தால்
மிடுக்குடன் வாழலாம்! தட்டிக் கழித்தால்
சுடுமணல் பாலைதான் வாழ்வு.


28  சீறுவோர்ச் சீறு

கனலாய்ச் சினங்கொண்டு சீறினால் நீயோ
புனலாக மாறித்தான் அன்பாலே சீறு!
அனலணைந்தே ஆறும் சினந்தான்! நாணும்
மனத்தால் திருந்துவார் பார்.


பேத்தி

விஷ்ணுப் பிரியாவுக்குப்

பிறந்தநாள் வாழ்த்து

22 ----- 23

06.07.16

இருபத் திரண்டை நிறைவுசெய்தே இன்று
இருபத்து மூன்றில் நடைபோடும் பேத்தி
அருந்தமிழ்போல் பல்லாண்டு வாழ்க! வளர்க!
கருத்துடன் வள்ளுவத்தைப் பின்பற்றி நாளும்
அருமையாய் வாழிய நீடு.


27  சிதையா நெஞ்சுகொள்

நிலையற்ற எண்ணம் நிலையற்ற பேச்சு
நிலைகளை மாற்றும் குழப்பமான உள்ளம்
அலைபாயும் போக்குகளை விட்டே மனதை
நிலைப்படுத்தி வாழப் பழகு.


26 சாவதற்கு அஞ்சேல்

நல்லொழுக்கப் பண்புடன் வாழ்கின்ற நேரத்தில்
இவ்வுலகம் புண்படுத்திப் பார்க்கும் நிலையெடுக்கும்!
எள்ளி நகையாடல் சாவுக்கே ஒப்பாகும்!
எள்ளளவும் மாறாமல் சந்திக்கும் அஞ்சாமை
இவ்வுலக வாழ்வின் உயிர்.


Ayya Durai M:
Life is not complex. We are complex.
Life is simple, and
 the simple thing is the right thing.-Oscar Wilde. Good morning.

வாழ்க்கையோ சிக்கலல்ல! நாம்தான் படுசிக்கல்!
வாழ்க்கை எளிதே! எளிதான அம்சமோ
வாழும் சரியான அம்சந்தான்!  நற்றமிழே!
வாழ்க்கையை வாழப் பழகு.


வல்லமை!

ஏதோ உலகிலே நாம்தான் இமாலய
சாதனையைச் செய்துவிட்டோம் என்று நினைத்திருப்போம்!
போகிற போக்கில் அதைவிட மாபெரும்
சாதனையை மற்றொருவர் செய்துவிட்டுச் சென்றிருப்பார்!
சாதிக்கும் ஆற்றல் பொது.




25  சரித்திர தேர்ச்சி கொள்

இல்லத்தின் பின்னணியும் நாட்டின் வரலாறும்
தெள்ளத் தெளிவாகக் கற்றுத் தெளியவேண்டும்!
கல்வியைத் தாண்டி அறிந்துகொண்டால் நல்லது!
இவ்விரண்டும் வாழ்வின் துணை.

மலையும் குன்றும்

பணமலையாய் ஆவதுஎப்படி என்றே
தினமும் படிப்பதைக் காட்டிலும் வாழ்வில்
குணக்குன்றாய் மாறுவது எப்படி என்றே
மனதை வளப்படுத்தல் நன்று.

Sunday, July 03, 2016


கோளாறு

பெண்களும் ஆண்களும் தங்கள் வழிகளில்
அன்றாடம் வாழ்ந்திருப்பார்! ஆண்களின் பாதையில்
பெண்களோ பெண்களின் பாதையில் ஆண்களோ
கண்களால் தூதுவிடும்  கோளாறில் சிக்கினால்
தென்றல் புயலாகும் பார்.

புரியாத புதிர்

பிடித்தால் புகழ்வார்! இடித்தால் இகழ்வார்!
நடித்தால் திரள்வார்! நசிந்தால் கலைவார்!
அடித்தால் பணிவார்! மதித்தால்  குதிப்பார்!
இதுதான் மனிதன் குணம்!


கரு: ஒரு குழுவில் வந்த பதிவு

நிறைகளைப்பார்

குயிலே! கருப்பின்றி நீயிருந்தால்  நன்று!
எழில்ரோஜா! முள்ளின்றி நீயிருந்தால் நன்று!
கவிக்க டலே! உப்பின்றி நீயிருந்தால் நன்று!
சரிமனிதா! நீயேன் குறைகளை மட்டும்
தெரிவுசெய்து சொல்கின்றாய்  எங்கள் நிறையைப்
புரிந்துகொள்ளும் பக்குவம்கொள்  நன்று!


நிம்மதி உன்பார்வையில்

கிடைத்திருக்கும் வாழ்வை ரசிப்பதை விட்டுக்
குறைகளை எண்ணிக் குமைந்திட வேண்டாம்!
நிறைகளை எண்ணியே நிம்மதி கொள்வோம்!
நிறைகளில் மகிழப் பழகு.
கடையனுக்கும் கடைத்தேற்றம்?

படுஉயர மாமலையோ இப்பக்கம்! அம்மா!
கிடுகிடு பள்ளமோ அப்பக்கம்! கண்ணே!
தடுமாறித் தத்தளிக்க வைக்கும் வறுமை!
படும்பாடு திண்டாட்டந் தான்.

குரல்

அறவழியில்
ஈட்டும்
பொருள்தரும்
இன்பம்
பிறவழி
என்றும்
துயர்.


நிம்மதி உன்பார்வையில்

கிடைத்திருக்கும் வாழ்வை ரசிப்பதை விட்டுக்
குறைகளை எண்ணிக் குமைந்திட வேண்டாம்!
நிறைகளை எண்ணியே நிம்மதி கொள்வோம்!
நிறைகளில் மகிழப் பழகு.


நதியிணைப்பு

கண்டபடி பாய்ந்தோடும் வெள்ளத்தால் சேதங்கள்
அம்மம்மா சொல்லித்தான் மாளாது-- கண்மணியே
நாட்டின் நதிகளை எல்லாம் இணைத்துவிட்டால்
காக்கலாம் நம்நாட்டைத் தான்.

மாநிலங்கள் போர்க்கொடி தூக்குவதைப் பாருங்கள்!
ஏனிந்தப் போக்கோ தெரியவில்லை! வீணாகிப்
போனாலும் போகலாம் இந்தியாவில் மற்றெந்த
மாநில மக்களுக்கும் தண்ணீர் கிடையாது
என்ற எதிர்ப்பினைச் சாடு.



மாயை

உனக்காக நானா? எனக்காக நீயா?
மனதாலே எண்ணிப்பார் யாருக்கு யாரோ?
உனக்கென்றும்  இல்லை! எனக்கென்றும் இல்லை!
கணக்கெல்லாம் மாயை உணர்.


வள்ளுவம் வெல்லும்!

கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை!

இந்திய நாட்டின் ஹரித்வார் நகரத்தில்
கங்கைக் கரையில் திருவள் ளுவருக்கு
அன்பாய்ச் சிலைவைத்து வள்ளுவரைப் போற்றுகின்றார்!
நன்றியுடன் என்றும் வணங்கு.



சோம்பலே எதிரி!

ஆக்கத்தின் வானத்தை நீயளக்க வேண்டாமா?
தூக்கத்தை நீக்கிவிடு! சோம்பலைத் தூக்கியெறி!
ஊக்கச் சிறகை விரித்தே எழுந்திடு!
ஏக்கம் தெறித்தோடும் பார்.


23 கோல்கைக் கொண்டு வாழ்

இப்பக்கம் அப்பக்கம் என்றேதான் சாயாமல்
எப்பக்கம் இங்கே நியாயம் இருக்கிறதோ
அப்பக்கம் தீர்ப்பை நடுநிலையில் நின்றேதான்
அச்சமின்றி சொல் நிமிர்ந்து.

22 கொடுமையை எதிர்த்து    நில்.

முன்னேறிச் செல்லும் எறும்பைத் தடுத்துப்பார்
தன்வழி மாற்றி முயற்சித்தே முன்னேறும்!
உன்வழியில் இங்கே தடைக்கல்லா? சிக்கலை
என்றும் அறவழியில் தாண்டு.