Saturday, October 31, 2009

சிதைந்த குடியிருப்பு!சிதையாத நினைவுகள்!

===============================================
அப்பாவும் அம்மாவும் அண்ணனும் தம்பியும்
அக்காவும் தங்கையும் கூடி உறவாடி
அக்கால வாழ்வில் மகிழ்ந்து களித்திருந்தோம்
அக்கோலம் இன்பந்தான் பார்.

ஆண்டுகள் ஓடின! மாற்றங்கள் வந்தன!
கூண்டிலே வாழ்ந்த பறவைகள் திக்கொன்றாய்
கூண்டு திறந்திட வெவ்வேறு ஊர்களின்
கூண்டுகளில் வாழ்ந்துவந்தார் காண்.

வாழ்ந்திருந்த வீட்டை மறுபடியும் பார்ப்பதற்கு
காலம் கனிந்தது! ஆசையுடன் ஓடினாள்!
கோலத்தைப் பார்த்தாள்!குமுறி அழுதுவிட்டாள்!
காலமாற்றம் என்றாள் தவித்து.

தொடர்வண்டி ஓட தடமமைக்கும் வேலை
நடந்ததால் அவளோ எதிர்பார்த்து வந்த
தடங்களெல்லாம் சீரழிக்கப் பட்ட நிலையைத்
துயரமுடன் பார்த்தாள் துடித்து.

அன்றுவாழ்ந்த அந்தக் குடியிருப்பும் சூழ்நிலையும்
இன்றில்லை!இங்கே சிதைந்தன!ஆனாலும்
தன்நெஞ்ச எண்ணங்கள் இன்னும் சிதையவில்லை!
என்றுகாண்பாள்?ஏங்கினாள் பார்த்து.

-- மதுரை பாபாராஜ்

Monday, October 26, 2009

விதிவளையம் !

==================
இப்படிச் செய்திருந்தால் சாவைத் தவிர்த்திருப்பார்!
அப்படிச் செய்திருந்தால் சாவைத் தவிர்த்திருப்பார்!
உற்றார் உறவினர்கள் கூடி முணுமுணுப்பார்!
சுற்றம் தலையசைக்கும் சூழ்ந்து.

எப்படிக் காத்திருந்த போதும் விதிவளையம்
சுற்றி வளைத்திட்டால் தப்ப முடியாது!
எப்பொழுது எங்கெங்கே எப்படிச் சாகவேண்டும்
அப்படிப் போய்விடுவார் பார்.

பிறப்பதற்கு வாய்ப்பின்றிப் போனாலும் போகும்!
பிறந்தவர்கள் இவ்வுலகில் நாளும் நிலைத்தே
இறக்காமல் வாழ்கின்ற வாய்ப்பில்லை கண்ணே!
இறப்பது நிச்சயம் இங்கு.

--மதுரை பாபாராஜ்

Sunday, October 25, 2009

அழகின் பின்னணி!

============================
நளினத்தின் பின்னணியில் நங்கை அழகு!
உளிகளின் பின்னணியில் ஓசை அழகு!
விழிகளின் பின்னணியில் பார்வை அழகு!
துளிகள் மழையின் அழகு.

வெளிகளின் பின்னணியில் அண்டம் அழகு!
மயில்களின் பின்னணியில் தோகை அழகு!
வயல்களின் பின்னணியில் நாடே அழகு!
உயர்வோ உழைப்பின் அழகு.

நிலவொளியின் பின்னணியில் மேகம் அழகு!
சலசலப்பின் பின்னணியில் ஆறே அழகு!
புலர்பொழுதின் பின்னணியில் ஊரே அழகு!
புலமை அறிவின் அழகு.

படைகளின் பின்னணியில் வீரம் அழகு!
தடைகளின் பின்னணியில் ஏற்றம் அழகு!
கொடைகளின் பின்னணியில் நேயம் அழகு!
இசைக்கு ராகம் அழகு.

குணங்களின் பின்னணியில் மாந்தர் அழகு!
உணர்ச்சியின் பின்னணியில் பாக்கள் அழகு!
மணங்களின் பின்னணியில் பூக்கள் அழகு!
மனமோ நிறைவில் அழகு.

அரவணைப்பின் பின்னணியில் அன்னை அழகு!
உரங்களின் பின்னணியில் மண்ணே அழகு!
மரங்களின் பின்னணியில் சூழல் அழகு!
தரமே மனிதர்க் கழகு.

--மதுரை பாபாராஜ்

கடவுள் எங்கே?

================
கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும்
கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச
வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது!
தேருலா நாளுந்தான்! செப்பு.

அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்!
அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்!
தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே
வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

உண்ணும் பொருளில் கலப்படம் செய்தேதான்
உண்போர் உயிருக்கே வேட்டுவைக்கும் கூட்டத்தார்
அன்றாடம் கோடிகளில் ஆனந்தக் கூத்தாட்டம்
கண்ணெதிரே ஆடுகின்றார் காண்.

தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தின்
வேர்கள் படர்வதற்குத் தோள்கொடுக்கும் -- பாழ்மனங்
கொண்டவர்கள் வேடமிட்டே வாழ்ந்தாலும் ஏந்தலென்றே
கொண்டாடும் கோலத்தைப் பார்!

லட்சக் கணக்கிலே இன்னுயிரை மாய்த்தேதான்
சுட்டுக் கொலைபண்ணும் போர்வெறியின் நாயகர்கள்
புத்தராய் காந்தியாய் புன்னகைப்பார்! இவ்வுலகம்
எத்தரென்றே ஏசாது! ஏன்?

இப்படித்தான் வாழவேண்டும் என்றே ஒழுக்கத்தின்
கட்டளைக்குக் கீழ்ப்படியும் மாந்தருக்கோ துன்பந்தான்!
எப்படியும் வாழலாம் என்பவர்க்கோ இன்பந்தான்!
அப்பா!கடவுளெங்கே?சொல்.

--மதுரை பாபாராஜ்

விலைகளைக் கட்டுப்படுத்து

===============================
திண்டாட வைக்கும் விலைவாசி ஏற்றத்தை
எந்த அரசியல் கட்சியோ,ஆட்சியோ
கண்டனம் செய்வதற்கோ,கட்டுப் படுத்தவோ
முன்வர வில்லையே ஏன்?

ஏழை எளியவர்கள் வாழ்வதற்கே தத்தளிக்கும்
கோலத்தில் நாள்களை நாளும் நகர்த்துகின்றார்!
சாரமற்ற சக்கைபோல் வாடி வதங்குகின்றார்!
ஈரமனம் ஏனில்லை?இங்கு.

காய்கறியும் பாலும் பருப்பு வகைகளும்
தேய்பிறையே இன்றி விலையின் உயர்விலே
பாய்ந்துசெல்லும் ராக்கெட்போல் விண்ணைத் தொடுகிறதே!
யார்தடுப்பார்?யார்காப்பார்?சொல்.

நடுங்கியே வாழும் கடைநிலை வர்க்கம்!
நடுத்தெருவில் வாழும் நடுத்தர வர்க்கம்!
மிடுக்குடன் வாழும் உயர்தர வர்க்கம்!
அடுக்குமா பேதம்?உரை.

விலைவாசி எப்படி ஏறினாலும் வாழ்வில்
மலைப்பின்றி வாங்குவோர் செல்வம் உடையோர்!
மலைப்பெல்லாம் ஏழைக்கே!அய்யோ!அரசே!
விலைகளைக் கட்டுப் படுத்து.

--மதுரை பாபாராஜ்

Friday, October 23, 2009

திருமா கருத்தின் மெய்ப்பொருள் காண்போம்!

இலங்கைச் சிக்கல்
===================
திருமா கருத்தின் மெய்ப்பொருள் காண்போம்!
==============================================
தமிழர்கள் கூட்டம் தனித்தனி யாக
அமைப்புகள் வைத்தே பிரிந்து கிடக்கும்
தமிழினமாய் மாறினால் ஒற்றுமை என்னும்
கனியைக் கொய்வதுதான் என்று?

நன்கு பசுக்களும் ஒன்றாய் இருந்தன!
கானகச் சிங்கமோ தாக்க முடியவில்லை!
நான்கும் தனித்தனி யாகப் பிரிந்தன!
நான்கும் மடிந்தன! பார்.

இருக்கும் அமைப்புகள் எல்லாம் இலங்கைத்
திருநாட்டில் ஒற்றுமையைக் காட்டினால் போதும்!
ஒருங்கிணையும் சக்திக்கு முன்னே அனைத்தும்
துரும்பாகும்!உண்மை உணர்.

திருமா வளவனின் உள்ளம் உணர்த்தும்
கருத்தின் வலுவான உண்மையைப் போற்று!
அருமைத் தமிழினமே! ஒற்றுமைதான் சக்தி!
ஒருமையும் ஒற்றுமையும் வேர்.

காந்தி தலைமையில் ஒன்றானார் இந்தியர்கள்!
ஆங்கிலேய ஆதிக்கம் வேரிழந்து சாய்ந்தது!
ஓங்குகின்ற ஒற்றுமையில் ஓரணியாய் மாறிவிட்டால்
வான்முட்டும் வெற்றியுண்டு! செப்பு.

--மதுரை பாபாராஜ்

திட்டமிடுதல்--உற்பத்தி--பகிர்ந்தளித்தல்

திட்டமிடுதல்--உற்பத்தி--பகிர்ந்தளித்தல்
அடுக்களையில் இருந்து தொடங்குகிறது
தொழிற்சாலையில் அமல்படுத்தப் படுகிறது!
====================================================
PLANNING--PRODUCTION--DISTRIBUTION
STARTS FROM KITCHEN AND IMPLEMENTED IN THE INDUSTRY
====================================================
அம்மா!விருந்துக்கு நண்பர்கள் நான்குபேர்
என்னுடன் இன்று வருவார்கள்--நன்முறையில்
அந்த விருந்திருக்க வேண்டும்!சரியாம்மா
என்றான் மகன்தான் சிரித்து.

சரிதான்!சைவமா இல்லையா?என்றாள்!
பிரித்தால் நபர்களின் எண்ணிக்கை என்ன?
தவிப்புடன் கேட்டாள்! தொலைப்பேசி தன்னில்
களிப்புடன் பேசினான் அங்கு.

பேசிவிட்டு வந்தேதான் எல்லாம் சைவமென்றான்!
தேடிவந்தே அம்மா!வருகின்றேன் என்றேதான்
ஓடி விரைந்தான் அலுவலகம் நோக்கித்தான் !
ஓடினாள் சந்தைக்குத் தாய்.

காய்கறி போட்டு பிரியாணி செய்யவேண்டும்!
பால்கறி, வெங்காய சாம்பார்!ரசமுடன்
ஆர்வத்தைத் தூண்டும் உருளை வறுவலும்
சேர்த்துச் சமைக்கவேண்டு மாம்.

தயிருடன் வெங்காயப் பச்சடி! வாழை
அவியலும் அப்பளமும் பூரியும் செய்து
தவிக்கத் தவிக்க விருந்துவைக்க வேண்டும்!
வயிறு பலூன்தான் பார்.

என்னென்ன வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ
என்று கணக்கிட்டே எவ்வளவு செய்யவேண்டும்
என்பதையும் திட்டமிட்டே வேண்டும் பொருளனைத்தும்
கொண்டுவந்தாள் இன்முகத்தாள் அங்கு.

வகைகள் அனைத்தையும் வாகாய்ச் சமைத்தே
முறையாய் அடுக்கி முனைப்புடன் வைத்தாள்!
அறைமுழுக்க வாசம் பரவிய தாலே
மறைமுகமாய்த் தேடியது நா.

வந்த விருந்தினர் நன்கு வயிறார
உண்டு மகிழ்ந்தே எழுந்தனர்!அம்மாவை
வண்டமிழால் பாராட்டிச் சென்றனர்!பெற்றமகன்
இன்புற்றான்!இன்புற்றாள் தாய்.

வீட்டில் இருப்போர்க்கும் நாடி வருவோர்க்கும்
கூட்டிக் கழித்தேதான் திட்டமிட்டு,துல்லியமாய்
ஆக்கிப் படைத்தே பகிர்ந்தளிக்கும் ஆளுமைதான்
நாட்டில் தொழிலுக்கும் உண்டு.

--மதுரை பாபாராஜ்

Saturday, October 17, 2009

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!
==========================================
கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்.

காலையில் சென்றால் இரவில் திரும்புகின்றார்!
வேலையோ வேலை! அவர்கள்தான் என்னசெய்வார்?
நாளும் குழந்தைகள் தூங்கிவிடும் கோலத்தால்
காலையில்தான் பார்க்கின்ற வாய்ப்பு.

கணினித் துறையில் வெளிநாட்டு நேரம்
கனிவதற் கேற்றாற்போல் செய்கின்ற வேலை!
தனிமையில் வாழும் குழந்தைக்கோ இந்தப்
பணிமுறைதான் வாழ்வின் தவிப்பு.

காலையில் செல்கின்ற மற்ற பணிக்களத்தில்
மாலையில் வீடு திரும்புகின்ற வாய்ப்புண்டு!
பெற்றோரைக் கண்டு குழந்தைகள் இன்புறுவார்!
பெற்றோரும் வாழ்கின்றார் சூழ்ந்து.

அங்கங்கே பெற்றோர் அருகிலே பிள்ளைகள்
அன்புடனே ஆடுகின்ற கோலத்தை ஒப்பிட்டே
தங்களது பெற்றோர் வரவில்லை என்றேதான்
தங்களுக்குள் ஏங்குகின்றார் பார்.

தாத்தாவும் பாட்டியும் உள்ள குடும்பத்தில்
ஊற்றெடுக்கும் பாசத்தால் பிள்ளைக் கனியமுதோ
தேக்காது ஏக்கத்தை! பெற்றோரைப் பார்த்தவுடன்
ஏக்கமின்றி துள்ளியோடும் செப்பு.

தாத்தாவும் பாட்டியும் இல்லாத சூழ்நிலையில்
ஏக்கப் பெருமூச்சில் பெற்றோரோ பிள்ளைகளைக்
காப்பகத்தில் விட்டுவிடும் காட்சிகள் உள்ளன!
பார்க்கப் பரிதாபந் தான்!

கணினி நிறுவனங்கள் தாய்மார்க்கு மட்டும்
பணிநேர மாற்றத்தைச் செய்துதர வேண்டும்!
இனிமையாய்த் தாயின் அரவணைப்பில் நாளும்
கனிமழலை வாழவேண்டும் இங்கு.

--மதுரை பாபாராஜ்

Sunday, October 11, 2009

கோழித் தூக்கம்

=====================
மத்தியான நேரத்தில் தூங்க முயன்றேதான்
அப்பாடா! என்றே படுத்திருந்தேன்!-- அப்போது
வந்து மணியடித்தார்!தூதஞ்சல் கொண்டுவந்தார்!
தந்துவிட்டுச் சென்றார்!விரைந்து.

மீண்டும் விழிமூடித் தூங்க முயன்றேதான்
மீண்டும் படுத்தேன்!மணியடித்தார்!--ஊன்றி
எழுந்தேதான் சென்றேன்!முகவரி கேட்டார்!
ஒருவாறு சொன்னேன் ஒடிந்து.

மறுபடியும் வந்து படுத்தேன்!அயர்ந்தேன்!
மறுபடியும் அங்கே மணியடித்தார் அன்பர்!
சமையல் எரிவாயு வந்ததென்றே தந்தார்!
இமைமூட நான்முயன்றேன்!இங்கு.

தொலைப்பேசி அங்கே அடித்தது!சென்றேன்!
வலைவீசும் வங்கியின் திட்டத்தை மங்கை
உரைநடை ஆங்கிலத்தில் சொன்னாள்!பொறுத்து
சிலைபோல் கேட்டிருந்தேன் பார்.

மத்தியான நேரம் மனங்குமுறும் கோணத்தில்
இப்படித் தேடிவந்தே கொட்டும் இடையூறில்
எப்படி மக்கள் தொடர்ந்தே உறங்கிடுவார்?
இப்படித்தான் வாழ்கின்றோம் நாம்.

--மதுரை பாபாராஜ்

குடிக்காதே!

========================
ஏழை வயிற்றில் அடித்து, குடிக்கவைத்து
நாளும் அரசு வருமானம் ஈட்டுமென்றால்
கோலும் வளைந்துவிடும்!நன்னெறி தாழ்ந்துவிடும்!
பாழாகும் நாடுதான் பார்.

குடியைக் கெடுக்கும் குடியிலே மூழ்கி
கதியிழந்து வாழ்விழந்து சொந்த -- மதியிழந்து
வாட்டிப் புரட்டும் வறுமை எரிமலையின்
தாக்கத்தில் வாழ்ந்திருப்பார்!சாற்று.

மனிதனை இங்கே மிருகமாக்கும்! அம்மா !
புனிதமான உள்ளம் தடம்புரண்டே ஓடும்!
தனிமனித நல்லொழுக்கம் சீர்குலைந்தே போகும்!
மனைதோறும் காரிருள் தான்.

நம்பி இருக்கும் மனைவி,குழந்தைகள்
கும்பி எரிய வெறுமையில் வாழ்ந்திருப்பார்!
இந்த நிலையைத் தருகின்ற இப்பழக்கம்
நிந்தனைக்கே வித்தூன்றும்!சொல்.

--மதுரை பாபாராஜ்

Monday, October 05, 2009

யாதும் ஊரே!யாவரும் கேளிர்!-- எங்கே?

============================================
எந்தநாடு என்றாலும் என்னுடைய நாடென்றும்
எந்தநாட்டு மக்களும் எம்மக்கள் என்றுந்தான்
சங்ககாலப் பாவலன் பாடிவைத்தான்!கண்ணருகே
வன்கொடுமை!பார்த்திருப்போம் நாம்.

தானாடா விட்டாலும் தன்சதை ஆடுமென்றார்!
தானுமிங்கே ஆடவில்லை ! தன்சதையும் ஆடவில்லை!
தானுண்டு தன்குடும்பம் உண்டென்றே வாழ்கின்றோம்!
ஊனமன ஊர்வலந்தான் பார்.

எரிதணலில் காகிதமாய் ஒவ்வொரு நாளும்
தவித்தே மரணத்தின் வாசலில் வாழ்க்கை
சரிந்துவிழ, பூக்கள் கருகுதடா! பார்த்தும்
புவியரசு மௌனத்தில் ! ஏன்?

மதுரை பாபாராஜ்

முரண்

===========
விடிந்தது! விடிந்தது!விழித்தனர் குழந்தைகள்!
துடித்தனர்!துவண்டனர்!பால்கேட்டு அழுதனர்!
பதறினாள் பெற்றவள்!ஓடினாள் வெளியே!
அடுத்தவர் வீட்டின் வாசலில் கெஞ்சினாள்!
கொடுத்திட மறுத்தனர்!வெறுமையில் திரும்பினாள்!

அம்மன் கோயிலில் பாலால் அபிஷேகம்!
செம்புடன் ஓடினாள்!குடங்குட மாகப்
பால்தான் இருந்தன! பூஜையைத் தொடங்கிட
தலைவரின் வருகை தாமதப் பட்டது!
கெஞ்சினாள்!கதறினாள்! பால்தர மறுத்தனர்!
திரும்பினாள்!ஆரவாரம்!தலைவரோ ஊற்றினார்
அம்மனின் சிலைக்கு குடங்குடமாய்ப் பால்தான்!

ஓலைக் குடிசையின் வாசலில் நின்று
கைதட்டிச் சிரித்தன அழுகையுடன் குழந்தைகள்!
அம்மனைப் பார்த்தாள்! தாயும் சிரித்தாள்!
அம்மனா கேட்டாள்? கூட்டத்தைப் பார்த்தாள்!

ஒருஜான் வயிறு ஏங்குது பாலுக்கு!
ஒருகுடம் பாலோ தரையில் ஓடுது!
இந்த முரணோ வாழையடி வாழை!
இந்த முரணில் சிரிப்பானோ ஏழை?

Sunday, October 04, 2009

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சு!

=====================================
அன்றாடம் உண்டும் உறங்கியும் வாழ்கின்றோம்!
நிம்மதி நம்வீட்டு வாசலில் நிற்கிறது!
அந்தோ! இலங்கைத் தமிழர்கள் அன்றாடம்
நொந்து துடிக்கின்றார் பார்.

முள்வேலி போட்ட முகாமில் அடைபட்டுச்
சொல்லொண்ணா இன்னலுக்கே ஆளாகி -- நாள்தோறும்
உள்ளம் உடைபட வாழ்வை நகர்த்துகின்றார்!
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சு!

தொலைக்காட்சி, செய்திகளை பார்த்தால் தினமும்
கலங்கித் தவிக்கிறது நெஞ்சம்-- புலராதோ
நற்பொழுது அப்பாவி மக்களுக்கே என்றேதான்
நற்றமிழை வேண்டுகின்றேன் நான்.

பெற்றோரும் உற்றார் உறவினரும் இல்லாளும்
பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளும் எங்குள்ளார்?
சுற்றம் தொடர்பின்றி எங்கெங்கோ தத்தளிக்கும்
இக்கொடுமை நீங்கிடுமா?சொல்.

கண்கள் அடிபட்டால் காக்கும் கரங்கள்தான்!
அந்தக் கரங்களுக்கு ஒன்றென்றால் கண்களோ
சும்மாதான் பார்த்திருக்கும்!நாமிங்கே கண்கள்போல்
சும்மா இருக்கின்றோம்! ஏன்?

கரமெட்டும் தூரம் இருந்தாலும் நம்மால்
வரம்புகளை மீற முடியவில்லை! நாட்டின்
அரசுகளும் இவ்வுலக நாடுகளும் சேர்ந்து
முயன்றால் முடியும் துயர்.

-- மதுரை பாபாராஜ்

Thursday, October 01, 2009

என்றும் அவள் மங்கலமே

=============================
கைம்பெண்மேல் இந்தச் சமுதாயம் புண்படுத்தும்
அம்புகளைக் குத்துவதைச் சாடுகின்றேன் -- என்னடா!
இந்தக் கொடுமை? மறையாதா? மாறாதா?
கண்டிப்போம் நாம்தான் நிமிர்ந்து.

மங்கலப் பண்டிகையில் வந்து கலந்திடுவார்!
குங்குமத்தை, பூவை அனைவருக்கும் தந்திடுவார்!
கைம்பெண்ணை மட்டும் தவிர்த்திடுவார்! ஏனடா?
பண்பற்ற இச்செயலைச் சாடு.

மங்கலத் தட்டைத் தருவதில் கைம்பெண்ணை
இங்கே தவிர்ப்பது தேவையில்லை! மண்ணகத்தில்
மங்கலமாய் வாழ்ந்தவள் தன்கணவன் சென்றதும்
மங்கலம் அற்றவளா? சொல்.

அவளைத் தவிர்க்காமல் மங்கலத் தட்டை
அவளுக்கும் தந்தால் மகிழ்வாள் -- அவளதை
இங்கே தனக்கோ, குடும்பத்தில் உள்ளவர்க்கோ
தந்திடுவாள்! வாய்ப்பினைத் தா.

எதிரிலே வந்தால் முகம்சுழித்து நின்றே
எதிரியைப் பார்த்தே ஒதுங்கும் -- வெறிமனப்
போக்கை பகுத்தறிவால் நீக்கு! மனங்குளிர
ஆக்கபூர்வ சிந்தனை கொள்.

கணவன் இருந்தால்தான் மங்கலம் என்னும்
மனப்போக்கை மாற்று! திருந்து!--மனதார
வாழ்ந்த்தவளின் மங்கலம் என்றும் அவளுடன்தான்!
கோலமாற்றம் கேடில்லை சாற்று.

மதுரை பாபாராஜ்