Sunday, October 25, 2009

கடவுள் எங்கே?

================
கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும்
கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச
வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது!
தேருலா நாளுந்தான்! செப்பு.

அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்!
அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்!
தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே
வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

உண்ணும் பொருளில் கலப்படம் செய்தேதான்
உண்போர் உயிருக்கே வேட்டுவைக்கும் கூட்டத்தார்
அன்றாடம் கோடிகளில் ஆனந்தக் கூத்தாட்டம்
கண்ணெதிரே ஆடுகின்றார் காண்.

தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தின்
வேர்கள் படர்வதற்குத் தோள்கொடுக்கும் -- பாழ்மனங்
கொண்டவர்கள் வேடமிட்டே வாழ்ந்தாலும் ஏந்தலென்றே
கொண்டாடும் கோலத்தைப் பார்!

லட்சக் கணக்கிலே இன்னுயிரை மாய்த்தேதான்
சுட்டுக் கொலைபண்ணும் போர்வெறியின் நாயகர்கள்
புத்தராய் காந்தியாய் புன்னகைப்பார்! இவ்வுலகம்
எத்தரென்றே ஏசாது! ஏன்?

இப்படித்தான் வாழவேண்டும் என்றே ஒழுக்கத்தின்
கட்டளைக்குக் கீழ்ப்படியும் மாந்தருக்கோ துன்பந்தான்!
எப்படியும் வாழலாம் என்பவர்க்கோ இன்பந்தான்!
அப்பா!கடவுளெங்கே?சொல்.

--மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home