Friday, September 25, 2009

நரசிம்ம அவதாரம்!

-------------------------------
நாரா யணனென்ற நாமத்தை உச்சரித்தால்
வேரோடு வீழ்த்துவேன் என்றே இரண்யன்தான்
பாரதிர ஆணையிட்டான்!மக்களெல்லாம் கீழ்ப்படிந்தார்!
ஊரதிர ஆண்டிருந்தான் பார்.

இரண்யன் இணையருக்கு மைந்தன் பிறந்தான்!
பிரகலாதன் என்றே பெயரிட்டார்! அந்த
அரசர் குலக்கொழுந்து பக்திப் பழமாய்
வளர்ந்து மகிழ்ந்ததே அங்கு.

நாரா யணனே தரணியைக் காப்பவர்!
ஊராளும் மன்னர் அவர்க்கீடோ? என்றேதான்
நேரடியாய்க் கேட்டான்! நிலைகுலைந்தார் கேட்டவர்கள்!
யாரிவனோ? அஞ்சினார்!கண்டு.

மலைபோல நின்றிருந்த தந்தையின் முன்னால்
தரையில் மடுபோல நின்றான் மகன்தான்!
தரணியைக் காப்பவர் யாரென்றான் வேந்தன்!
நெருடலின்றி சொன்னான் நிமிர்ந்து:

"தரணியைக் காப்பவர் நாரா யணன்தான்!
அரசரே! நீங்கள் உணர்தலே நன்று!"
உரைத்தான் மகன்தான்!உறுமினான் தந்தை!
உரைப்பாயா?எங்கவன்?காட்டு.

இங்குள்ள தூணிலும் இந்தத் துரும்பிலும்
எங்கெங்கும் நீக்கமற உள்ளார் எனவுரைத்தான்!
இங்கிருக்கும் தூணிலா? என்றே இரண்யன்தான்
அங்கே உதைத்தான் வெகுண்டு!

உதைத்ததும் தூணும் பிளந்தது! பார்த்தான்!
நடுநடுங் கிடவே நரசிம்மன் கோலம்
உடுத்தியே நாரா யணனங்கே வந்தார்!
படுத்தது ஆணவந்தான் பார்!

அரண்மனை வாசல்! நரசிம்மன் வந்தே
தளத்தில் அமர்ந்தே இரண்யனை அங்கே
கிடத்தினார் தன்மடியின் மீதுதான்! சிங்க
முகக்கடவுள் சீறினார் காண்.

நகங்களால் மன்னனின் மார்பைக் கிழித்தார்!
அகந்தை அழிந்தது! தர்மமே வென்று
அகங்குளிர ஆட்சியை மைந்தனுக்குத் தந்தே
அடங்கினார்! ஆகா! மகிழ்ந்து.

கதைதானா? உண்மையா? தேவையில்லை வாதம்!
கடைந்தெடுத்த ஆணவம் யாருக் கெனினும்
உடைந்து நொறுங்கவேண்டும்! இந்தக் கருத்தைப்
படைப்பதுதான் இஃதென்றே சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home