Monday, September 07, 2009

வாழ்வின் சுழற்சிகள்

========================
அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
தந்தையின் தாயின் அரவணைப்பில் -- ஒன்றியே
ஒற்றுமை ஊஞ்சலில் ஆடித் திளைத்திருப்பார்!
சுற்றங்கள் நாடுமே சூழ்ந்து.

படிப்படி யாகப் படிப்பார்!வளர்வார்!
துடிப்புடன் சாதனையின் தோளில் -- அடிக்கடி
ஏறிச் சிரித்திருப்பார்!ஆனந்த ராகங்கள்
தூவியதே உள்ளம் இணைந்து.

பருவங்கள் பூத்தன! எல்லோர்க்கும் இங்கே
திருமணம் மங்கலத்தை ஏந்த -- ஒருமனதாய்
வாழ்வினை ஏற்றார் உறவினர்கள் சூழத்தான்!
காலம் சுழன்றது பார்.

சுழற்சிகள் கொண்டதே வாழ்க்கை! தினமும்
பரபரப்பின் எல்லைகள் தோன்ற -- வரம்புகள்
ஊன்றிக் குடும்பத்தின் தேவையின் கூண்டுக்குள்
ஊர்வலக் காட்சிகள்தான் பார்.

அவரவர்க்குத் தேன்மழலைச் சுற்றம் பெருக
அவர்களைச் சார்ந்த குடும்பம் -- உயர்ந்திடப்
பாடுபடும் சூழல் சிறகுகள் தாம்விரிய
ஈடுபடும் கோலத்தைப் பார்.

அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
அன்றிருந்த கோலங்கள் வேறாகும் -- இன்றிருக்கும்
கோலங்கள் வேறாகும்!தூரநின்று பார்ப்பதுதான்
காலத்தின் கோலமேன்பேன் காண்.




இப்படி வாழ்வதைத் தப்பென்று சொல்லவில்லை!
எப்படி ஒன்றாக வாழ்ந்தவர்கள் -- இப்படி
இவ்வுலகில் திக்கொன்றாய் நின்றே பிரிந்தேதான்
தள்ளிநின்று வாழ்கின்றார் பார்.

குடும்ப உறவுகளின் சங்கிலிக் கண்ணி
அறுந்தறுந்து வீழ்ந்தாலும் அந்த நிலையில்
அடுத்தவர்போல் வேடிக்கை பார்கவைக்கும் வாழ்க்கை!
கடுமைதான் வாழ்க்கைஎன்பேன் நான்

யார்சுமையை யார்சுமப்பார்? யார்தேவை யார்தருவார்
யாராய் இருந்தாலும் தங்களது போர்வைக்குள்
யாரோ ஒருவர்போல் இங்கே முடங்குவதே
வாழ்வின் நடைமுறை யாம்.

அடுத்த தலைமுறையின் வாழ்க்கை தொடரும்!
இதுபோல் சுழற்சிகள் அன்றும் தொடரும் !
இதுதான் வாழ்வியல் பாடங்கள் என்றே
குடும்பம் உருண்டிருக்கும் கூறு.




--மதுரை பாபாராஜ்
1, முதல் குறுக்குத் தெரு
கணேஷ்நகர் டெலிபோன் காலனி
ஆதம்பாக்கம்
சென்னை - 600 088
======================
கைபேசி:900 3260 981
=======================

0 Comments:

Post a Comment

<< Home