கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!
கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!
==========================================
கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்.
காலையில் சென்றால் இரவில் திரும்புகின்றார்!
வேலையோ வேலை! அவர்கள்தான் என்னசெய்வார்?
நாளும் குழந்தைகள் தூங்கிவிடும் கோலத்தால்
காலையில்தான் பார்க்கின்ற வாய்ப்பு.
கணினித் துறையில் வெளிநாட்டு நேரம்
கனிவதற் கேற்றாற்போல் செய்கின்ற வேலை!
தனிமையில் வாழும் குழந்தைக்கோ இந்தப்
பணிமுறைதான் வாழ்வின் தவிப்பு.
காலையில் செல்கின்ற மற்ற பணிக்களத்தில்
மாலையில் வீடு திரும்புகின்ற வாய்ப்புண்டு!
பெற்றோரைக் கண்டு குழந்தைகள் இன்புறுவார்!
பெற்றோரும் வாழ்கின்றார் சூழ்ந்து.
அங்கங்கே பெற்றோர் அருகிலே பிள்ளைகள்
அன்புடனே ஆடுகின்ற கோலத்தை ஒப்பிட்டே
தங்களது பெற்றோர் வரவில்லை என்றேதான்
தங்களுக்குள் ஏங்குகின்றார் பார்.
தாத்தாவும் பாட்டியும் உள்ள குடும்பத்தில்
ஊற்றெடுக்கும் பாசத்தால் பிள்ளைக் கனியமுதோ
தேக்காது ஏக்கத்தை! பெற்றோரைப் பார்த்தவுடன்
ஏக்கமின்றி துள்ளியோடும் செப்பு.
தாத்தாவும் பாட்டியும் இல்லாத சூழ்நிலையில்
ஏக்கப் பெருமூச்சில் பெற்றோரோ பிள்ளைகளைக்
காப்பகத்தில் விட்டுவிடும் காட்சிகள் உள்ளன!
பார்க்கப் பரிதாபந் தான்!
கணினி நிறுவனங்கள் தாய்மார்க்கு மட்டும்
பணிநேர மாற்றத்தைச் செய்துதர வேண்டும்!
இனிமையாய்த் தாயின் அரவணைப்பில் நாளும்
கனிமழலை வாழவேண்டும் இங்கு.
--மதுரை பாபாராஜ்
1 Comments:
This comment has been removed by a blog administrator.
8:49 AM
Post a Comment
<< Home