Monday, October 05, 2009

முரண்

===========
விடிந்தது! விடிந்தது!விழித்தனர் குழந்தைகள்!
துடித்தனர்!துவண்டனர்!பால்கேட்டு அழுதனர்!
பதறினாள் பெற்றவள்!ஓடினாள் வெளியே!
அடுத்தவர் வீட்டின் வாசலில் கெஞ்சினாள்!
கொடுத்திட மறுத்தனர்!வெறுமையில் திரும்பினாள்!

அம்மன் கோயிலில் பாலால் அபிஷேகம்!
செம்புடன் ஓடினாள்!குடங்குட மாகப்
பால்தான் இருந்தன! பூஜையைத் தொடங்கிட
தலைவரின் வருகை தாமதப் பட்டது!
கெஞ்சினாள்!கதறினாள்! பால்தர மறுத்தனர்!
திரும்பினாள்!ஆரவாரம்!தலைவரோ ஊற்றினார்
அம்மனின் சிலைக்கு குடங்குடமாய்ப் பால்தான்!

ஓலைக் குடிசையின் வாசலில் நின்று
கைதட்டிச் சிரித்தன அழுகையுடன் குழந்தைகள்!
அம்மனைப் பார்த்தாள்! தாயும் சிரித்தாள்!
அம்மனா கேட்டாள்? கூட்டத்தைப் பார்த்தாள்!

ஒருஜான் வயிறு ஏங்குது பாலுக்கு!
ஒருகுடம் பாலோ தரையில் ஓடுது!
இந்த முரணோ வாழையடி வாழை!
இந்த முரணில் சிரிப்பானோ ஏழை?

0 Comments:

Post a Comment

<< Home