என்றும் அவள் மங்கலமே
=============================
கைம்பெண்மேல் இந்தச் சமுதாயம் புண்படுத்தும்
அம்புகளைக் குத்துவதைச் சாடுகின்றேன் -- என்னடா!
இந்தக் கொடுமை? மறையாதா? மாறாதா?
கண்டிப்போம் நாம்தான் நிமிர்ந்து.
மங்கலப் பண்டிகையில் வந்து கலந்திடுவார்!
குங்குமத்தை, பூவை அனைவருக்கும் தந்திடுவார்!
கைம்பெண்ணை மட்டும் தவிர்த்திடுவார்! ஏனடா?
பண்பற்ற இச்செயலைச் சாடு.
மங்கலத் தட்டைத் தருவதில் கைம்பெண்ணை
இங்கே தவிர்ப்பது தேவையில்லை! மண்ணகத்தில்
மங்கலமாய் வாழ்ந்தவள் தன்கணவன் சென்றதும்
மங்கலம் அற்றவளா? சொல்.
அவளைத் தவிர்க்காமல் மங்கலத் தட்டை
அவளுக்கும் தந்தால் மகிழ்வாள் -- அவளதை
இங்கே தனக்கோ, குடும்பத்தில் உள்ளவர்க்கோ
தந்திடுவாள்! வாய்ப்பினைத் தா.
எதிரிலே வந்தால் முகம்சுழித்து நின்றே
எதிரியைப் பார்த்தே ஒதுங்கும் -- வெறிமனப்
போக்கை பகுத்தறிவால் நீக்கு! மனங்குளிர
ஆக்கபூர்வ சிந்தனை கொள்.
கணவன் இருந்தால்தான் மங்கலம் என்னும்
மனப்போக்கை மாற்று! திருந்து!--மனதார
வாழ்ந்த்தவளின் மங்கலம் என்றும் அவளுடன்தான்!
கோலமாற்றம் கேடில்லை சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home