Sunday, October 04, 2009

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சு!

=====================================
அன்றாடம் உண்டும் உறங்கியும் வாழ்கின்றோம்!
நிம்மதி நம்வீட்டு வாசலில் நிற்கிறது!
அந்தோ! இலங்கைத் தமிழர்கள் அன்றாடம்
நொந்து துடிக்கின்றார் பார்.

முள்வேலி போட்ட முகாமில் அடைபட்டுச்
சொல்லொண்ணா இன்னலுக்கே ஆளாகி -- நாள்தோறும்
உள்ளம் உடைபட வாழ்வை நகர்த்துகின்றார்!
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சு!

தொலைக்காட்சி, செய்திகளை பார்த்தால் தினமும்
கலங்கித் தவிக்கிறது நெஞ்சம்-- புலராதோ
நற்பொழுது அப்பாவி மக்களுக்கே என்றேதான்
நற்றமிழை வேண்டுகின்றேன் நான்.

பெற்றோரும் உற்றார் உறவினரும் இல்லாளும்
பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளும் எங்குள்ளார்?
சுற்றம் தொடர்பின்றி எங்கெங்கோ தத்தளிக்கும்
இக்கொடுமை நீங்கிடுமா?சொல்.

கண்கள் அடிபட்டால் காக்கும் கரங்கள்தான்!
அந்தக் கரங்களுக்கு ஒன்றென்றால் கண்களோ
சும்மாதான் பார்த்திருக்கும்!நாமிங்கே கண்கள்போல்
சும்மா இருக்கின்றோம்! ஏன்?

கரமெட்டும் தூரம் இருந்தாலும் நம்மால்
வரம்புகளை மீற முடியவில்லை! நாட்டின்
அரசுகளும் இவ்வுலக நாடுகளும் சேர்ந்து
முயன்றால் முடியும் துயர்.

-- மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home