குடிக்காதே!
========================
ஏழை வயிற்றில் அடித்து, குடிக்கவைத்து
நாளும் அரசு வருமானம் ஈட்டுமென்றால்
கோலும் வளைந்துவிடும்!நன்னெறி தாழ்ந்துவிடும்!
பாழாகும் நாடுதான் பார்.
குடியைக் கெடுக்கும் குடியிலே மூழ்கி
கதியிழந்து வாழ்விழந்து சொந்த -- மதியிழந்து
வாட்டிப் புரட்டும் வறுமை எரிமலையின்
தாக்கத்தில் வாழ்ந்திருப்பார்!சாற்று.
மனிதனை இங்கே மிருகமாக்கும்! அம்மா !
புனிதமான உள்ளம் தடம்புரண்டே ஓடும்!
தனிமனித நல்லொழுக்கம் சீர்குலைந்தே போகும்!
மனைதோறும் காரிருள் தான்.
நம்பி இருக்கும் மனைவி,குழந்தைகள்
கும்பி எரிய வெறுமையில் வாழ்ந்திருப்பார்!
இந்த நிலையைத் தருகின்ற இப்பழக்கம்
நிந்தனைக்கே வித்தூன்றும்!சொல்.
--மதுரை பாபாராஜ்
1 Comments:
குடி குடியைக் கெடுக்கும் - உண்மை - ஆனால் அரசுக்கு வருவாய் வருகிறதே - அரசு யாரையும் குடி எனக் கட்டாயப்படுத்துவது இல்லை - சுயக் கட்டுப்பாடு வேண்டும்
1:50 AM
Post a Comment
<< Home