Friday, October 23, 2009

திட்டமிடுதல்--உற்பத்தி--பகிர்ந்தளித்தல்

திட்டமிடுதல்--உற்பத்தி--பகிர்ந்தளித்தல்
அடுக்களையில் இருந்து தொடங்குகிறது
தொழிற்சாலையில் அமல்படுத்தப் படுகிறது!
====================================================
PLANNING--PRODUCTION--DISTRIBUTION
STARTS FROM KITCHEN AND IMPLEMENTED IN THE INDUSTRY
====================================================
அம்மா!விருந்துக்கு நண்பர்கள் நான்குபேர்
என்னுடன் இன்று வருவார்கள்--நன்முறையில்
அந்த விருந்திருக்க வேண்டும்!சரியாம்மா
என்றான் மகன்தான் சிரித்து.

சரிதான்!சைவமா இல்லையா?என்றாள்!
பிரித்தால் நபர்களின் எண்ணிக்கை என்ன?
தவிப்புடன் கேட்டாள்! தொலைப்பேசி தன்னில்
களிப்புடன் பேசினான் அங்கு.

பேசிவிட்டு வந்தேதான் எல்லாம் சைவமென்றான்!
தேடிவந்தே அம்மா!வருகின்றேன் என்றேதான்
ஓடி விரைந்தான் அலுவலகம் நோக்கித்தான் !
ஓடினாள் சந்தைக்குத் தாய்.

காய்கறி போட்டு பிரியாணி செய்யவேண்டும்!
பால்கறி, வெங்காய சாம்பார்!ரசமுடன்
ஆர்வத்தைத் தூண்டும் உருளை வறுவலும்
சேர்த்துச் சமைக்கவேண்டு மாம்.

தயிருடன் வெங்காயப் பச்சடி! வாழை
அவியலும் அப்பளமும் பூரியும் செய்து
தவிக்கத் தவிக்க விருந்துவைக்க வேண்டும்!
வயிறு பலூன்தான் பார்.





என்னென்ன வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ
என்று கணக்கிட்டே எவ்வளவு செய்யவேண்டும்
என்பதையும் திட்டமிட்டே வேண்டும் பொருளனைத்தும்
கொண்டுவந்தாள் இன்முகத்தாள் அங்கு.

வகைகள் அனைத்தையும் வாகாய்ச் சமைத்தே
முறையாய் அடுக்கி முனைப்புடன் வைத்தாள்!
அறைமுழுக்க வாசம் பரவிய தாலே
மறைமுகமாய்த் தேடியது நா.

வந்த விருந்தினர் நன்கு வயிறார
உண்டு மகிழ்ந்தே எழுந்தனர்!அம்மாவை
வண்டமிழால் பாராட்டிச் சென்றனர்!பெற்றமகன்
இன்புற்றான்!இன்புற்றாள் தாய்.

வீட்டில் இருப்போர்க்கும் நாடி வருவோர்க்கும்
கூட்டிக் கழித்தேதான் திட்டமிட்டு,துல்லியமாய்
ஆக்கிப் படைத்தே பகிர்ந்தளிக்கும் ஆளுமைதான்
நாட்டில் தொழிலுக்கும் உண்டு.

--மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home