Wednesday, September 28, 2016


பாடல் முயற்சி

தென்றல் பாடும் ராகத்தில்
பூக்கள் மயங்கி பூக்குமே

பறவை சேர்ந்து பாடுமே
அலைகள் கூட்டம் ஆடுமே

அருவி யெல்லாம் சிரிக்குமே
மலைகள் கேட்டு மலைக்குமே

மரங்கள் இங்கே சிலிர்க்குமே
வயல்கள் வாழ்த்துப் பாடுமே

இயற்கை காட்சி எங்குமே
இன்பம் இன்பம் இன்பந்தான்

நமது காதல் வாழ்க்கையும்
இன்ப மாக மாறுமே


பால்கணக்கு தயிர்கணக்கு

அக்கால முறை

1958 களில்

தயிர்க்கணக்கை பால்கணக்கை எல்லாம் சுவரில்
வரிவரியாய் வண்ணவண்ணக் கோடுகள் போட்டே
சரியாய்க் கணக்கிட்டுத் துல்லியமாய்ச் சொல்லும்
தெளிவிலே தேர்ந்திருந்தாள் தாய்.தாயை மறக்காதே!

எந்த மொழிகளையும் கற்கலாம் தப்பில்லை!
செந்தமிழாம் தாய்மொழியே நம்முயிர்! கண்மணியே!
எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதே!
நம்மை அரவணைக்கும் தாய்.

கழிதல் புகுதல்

பழையன எல்லாம் கெடுதிகள் அல்ல!
உலகில் புதியன எல்லாம் வாழ்வில்
நலமளிப்ப தில்லை! பகுத்தறிந்து  பார்த்து
இரண்டிலும் தேர்ந்தெடுத்து வாழ்.

உலக நடப்பு!

நடமாட்டம் உள்ளவரை நாடிவந்து பேசி
படரவைப்பார் நட்புதனை வாழ்த்துப்பா பாடி!
நடமாட்டம் ஓய்ந்துவிட்டால் கண்டுகொள்ள மாட்டார்!
பறந்திடுவார் நாளும் தவிர்த்து.

Saturday, September 24, 2016

நான்கு தூண்கள்!

அழுக்காறு!

நீதிமன்றத்
தீர்ப்பின்மேல்
பொறாமை!

அவா!

எல்லாம் தனக்கே
வேண்டும்
என்ற பேராசை!

வெகுளி

அவனுக்குரியதைக்
கொடுக்காதே!
சினந்தெழுந்து
கிடைத்தவனைத்
தாக்கு!

இன்னாச்சொல்

இந்தியர்களை
இந்தியரே
வன்சொற்களால்
சாடு!

இவைகளைக்
களைந்தெறிய
வேண்டிய
அறம்
வேடிக்கை பார்க்கிறதே!

பாபா 24.09.16

குறளால் முடியும்
-----------------------------------
புற அழுக்கை  நாளும் குளியலால் நீக்கு!
அகஅழுக்கை நாளும் திருக்குறளால் நீக்கு!
அகத்தூய்மை பெற்றுவிட்டால்  நிம்மதிதான் வாழ்க்கை!
அறத்திற் கதுதானே வித்து.


காலம் தரும்!

இந்தப் பிறவியில் காலம் நமக்கென்று
என்னென்ன வாழ்வில் கொடுக்கவேண்டும் என்றறியும்!
அந்த வசதிக்குள் இங்கே திருப்தியுடன்
நம்மனம் வாழவேண்டும் பார்.


DONATE THE EYES!

MY BODY HAS BECOME AN URN OF ASH
BUT MY EYES ARE THERE ON A HUMAN FACE
STILL I SEE THE NATURE !
THAT FACE GLITTERS WITH RAPTURE
BLEND WITH LANDSCAPE
ENJOY THE BEAUTY OF NATURE
BEYOND THE HORIZON!
AM I DEAD?
NO MY EYES ARE THERE!
I AM NOT DEAD!

எல்லோரும் வாழ்வார்!

மதிப்பெண்கள் வாங்க குழந்தைகள் தம்மை
படியென்று நாளும் பிழிந்தெடுக்க வேண்டாம்!
படிப்பார்கள் என்றேதான் நம்பிக்கை வைப்போம்!
படிப்படியாய் முன்னேற்றம் எல்லோர்க்கும் உண்டு!
எதிர்காலம் வாய்ப்பைத் தரும்!

கல்வி! அறிவுத் திறனை வளப்படுத்தும்!
கல்விக்கும் வாழ்வை வளப்படுத்தும் வேலைக்கும்
எள்ளளவு கூட தொடர்பின்றிப் போகலாம்!
கல்வி, தகுதிக்குச் சான்று.

Sunday, September 18, 2016

யாரை நோவது?

நேர்மைக்கு நெத்தியடி! வாய்மைக்கு வாய்ப்பூட்டு!
ஊர்சிரிக்கும் ஊழலுக்கோ உற்சாகக் கொண்டாட்டம்!
பார்முழுதும் அங்கங்கே இத்தகைய காட்சிகளே!
யார்திருத்த? யார்திருந்த? சொல்.

Friday, September 16, 2016


தந்தை பெரியார் வாழ்க!

தந்தை பெரியாரின் தாக்கம் இருப்பதால்
செந்தமிழ் நாட்டில் மதவெறி ஊன்றவில்லை!
சொந்தபந்தம் போல உறவாடும் நல்லிணக்கம்
இங்கே தழைக்கிறது பார்.


கண்ணால் காண்பது பொய்!

தலைசுற்றல்! தள்ளாடிச் சென்றேன்! போதை
தெளியவில்லை? கேட்டுப் பரிகசித்தார்! போதை
தெளியாமல் தள்ளாடிச் சென்றவரைப் பார்த்து
தலைசுற்றல் பாவமென்றார் பார்.


அனைத்தும் நன்மைக்கே!

கடந்ததை எண்ணிக் கலங்கிட வேண்டாம்!
கடப்பதை நீந்திக் கடந்திட வேண்டும்!
நடப்பவை நன்றாய் நடந்திடும் நம்பு!
நடப்பதெல்லாம் நன்மைக் குணர்.


மனிதனை மதி

மனிதனை எந்தமதம் இங்கே மதித்து
மனிதனாகப் போற்றுமோ அந்த மதத்தை
மனிதர்கள் ஏற்பார் மகிழ்ந்து! மதமே!
மனிதனை இங்கே மதி.


பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
15 ஆம் ஆண்டுக் கம்பன் விழா
வாழ்த்துக் கவிதை
---------------------------------------------------------------

பதினைந்தாம் ஆண்டுவிழா கம்பன் கழகம்
செறிவாக கொண்டாடும் செய்தி அறிந்தேன்!
துடிப்புடன் பாரதி தாசன் பிரான்சில்
நெறிப்படுத்தும் வித்தகர்! கம்பன் தமிழில்
மகிழ்ந்து மனதைப் பறிகொடுத்து வாழும்
நெறியாளர்! பண்பாளர்! அன்பான நண்பர்!
மதிக்கின்றேன்! வாழ்த்துகின்றேன்! பாத்தமிழை நோக்கித்
துதிக்கின்றேன்! தாயே சரண்.மழையின் வேதனை!

வானம் தருகிறது நானும் வருகின்றேன்
நான்வரும் பாதையை ஏனோ தடுக்கின்றார்?
நான்வந்தால் போக இடமில்லை! கண்டபடி
நானும் அலைகின்றேன் நாட்டுக்குள்,வீட்டுக்குள்!
ஏனோ எதிர்பார்த்த மக்களே சாடுகின்றார்?
நானா பொறுப்பு? விளம்பு.

இது தீர்வல்ல!

வன்முறை என்றும் இருமுனைக் கத்தியாகும்!
இங்கே தொடுத்தவனும் பேரழிவைச் சந்திப்பான்!
பண்பிழந்தே துள்ளிப் பழிக்குப் பழிவாங்கும்
புண்மனங் கொண்டவனும் வன்முறையால் சீரழிவான்!
வன்முறை தீர்வல்ல நம்பு.

Sunday, September 11, 2016

பற்றுடன் வாழ்

இப்பற்றோ அப்பற்றோ எப்பற்றை விட்டாலும்
அப்பா! ஒழுக்கத்தின் மீதுள்ள பற்றுதனை
எப்பொழுதும் பின்பற்றி வாழவேண்டும்! மன்பதையே
இப்பற்றைப் பின்பற்று நீ

Friday, September 09, 2016கலப்படம் தவிர்ப்போம்

ஆங்கிலச் சொற்களை வேண்டுமென்றே நற்றமிழை
ஏந்திவரும் பாக்களில்  தூவுகின்றார்--- தீந்தமிழில்
இல்லாத சொற்களா? ஊனமாக்க வேண்டாமே!
நல்லதமிழ்ப் பாவிளக்கை ஏந்து.


காவிரி
கர்நாடக சிக்கல்

ஊடகங்கள் தீர்வுக்கு நல்வழியைக் காட்டாமல்
நாடதிர ஊதிப் பெரிதாக்கும்  போக்காலே
வேகமாக வேற்றுமை ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும்
பாதகமே தோன்றும் உணர்.


பதிவுகள் எத்தனைப் பதிவுகள்!

கருத்தைக் கவரும் பதிவுகள் உண்டு!
சுருங்க விளக்கும் பதிவுகள் உண்டு!
அருவருப்பைத் தூண்டும் பதிவுகள் உண்டு!
செருக்குடன் துள்ளும் பதிவுகள் உண்டு!
சுருள்போல நீளப் பதிவுகள் உண்டு!
கருத்துப் பதிவின் வகை.

பூட்டுவில் வெண்பா

மொழிவிலக்கி நாளும் படிக்கும் படிப்பில்
தெளிவும் அறிவும் விலகும் குறையும்!
துளியும் பயனோ விளையாது வாழ்வில்!
தவிக்கின்றாள் ஏங்குகின்றாள் தாய்.

பூட்டு வில் வெண்பா

குப்பை உணவு

உணவு முறையில் எதிர்மறைத் தாக்கம்
குணமிழந்து கோடித்துன் பங்கள் – பிணிகளும்
நம்மையே நாடிவர போராட்டம் வாழ்விலே!
அம்மம்மா! குப்பைவேண் டாம்!

வலையபட்டி கன்னியப்பன்

Thursday, September 08, 2016நோய்

அகத்திலே ஒன்றும் புறத்திலே ஒன்றும்
கபட மனங்கொண்டே இங்கே நடிப்போர்
தடம்மாறி நாளும் தடுமாறும் கூட்டம்!
உடனிருந்து கொல்கின்ற நோய்.

கல்வி செல்வம் வீரம்

கல்வி அறவழியைக் காட்டும் அதன்வழியில்
செல்வங்கள் சேர்த்தால்  விவேகம் உறவாட
உள்ளத்தில்  சூழ்திலையைச் சந்திக்கும் வீரத்தை
எல்லோரும் ஏந்தலாம் சொல்.

Tuesday, September 06, 2016


Solomon proverb

31 From the mouth of the righteous comes the fruit of wisdom,
    but a perverse tongue will be silenced.

சான்றோரின் சொற்களிலே ஞானம் சுரந்துவரும்!
வேண்டாத வக்கிரச் சொற்க ளை ஏந்துவோரின்
தாண்டவ மாடுகின்ற நாவின் வெறியாட்டம்
ஊன்றி அடக்கப் படும்.

Solomon proverb

30 The righteous will never be uprooted,
    but the wicked will not remain in the land.

நல்லொழுக்கச் சான்றோர்க்கோ என்றும் அழிவில்லை!
வல்லூறாய் வட்டமிடும் வஞ்சகரைப் பேரழிவின்
எல்லைக்கே காலக் கரங்கள் உருட்டிவிடும்!
நல்லொழுக்கம் வாழ்வின் அரண்.Solomon proverb

29 The way of the Lord is a refuge for the blameless,
    but it is the ruin of those who do evil.

குற்றம் புரியார் புகலிடம் என்றுமே
பற்றும் இறையடி உள்ளதுபோல்; பாரினில்
கொற்றவை ஒப்ப அழிக்கும் இடமாய்
குற்றம் புரிந்தோர்க்கு இறை!

Dr.RajSolomon proverb


28 The prospect of the righteous is joy,
    but the hopes of the wicked come to nothing.

வாய்மையை நேர்மையைப் போற்றுவோர் இன்புறுவார்!
ஏய்த்தேதான் வாழ்கின்ற கெட்டவரின் நம்பிக்கை
காய்ந்த சருகாகி காணாமல் போய்விடும்!
வாழ்வில் ஒழுக்கத்தைப் பேண்.


Solomon proverb

27 The fear of the Lord adds length to life,
    but the years of the wicked are cut short.

மனசாட்சிக் கஞ்சித்தான் வாழ்வோர் உலகில்
மணங்கமழ நீடுவாழ்வார் மாசின்றி தாயே!
குணமிழந்த தீயெண்ணம் கொண்டோரின் வாழ்நாள்
மணல்மேல் எழுத்தாகும் பார்.


26 As vinegar to the teeth and smoketo the eyes,
    so are sluggards to those who send them.

பளிக்காடி பற்களைப் பாதிக்கும்! கண்ணே
குவியும் புகையிங்கே கண்ணுக் கெரிச்சல்!
புரியும் செயலுக்கு சோம்பேறி தன்னைத்
தெரிவுசெய்தல் அந்த மனிதருக்கு முள்ளாம்!
தெரிவில் தெளிவாய் இரு.

SOLOMON PROVERB

25 When the storm has swept by, the wicked are gone,
    but the righteous stand firmforever.

நச்செண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் புயலடித்தால்
எத்திக்கு சென்றார் ?தெரியாது! -- நற்றமிழே!
நல்லெண்ணம் கொண்டவர்கள் அஞ்சாமல் சந்தித்தே
வெல்வார் நிமர்ந்தே! உணர்.

SOLOMON PROVERB

24 What the wicked dread will overtake them;
    what the righteous desire will be granted.
பொல்லார் எதற்கு பயந்தாரோ, அவ்வெண்ணம்
தோல்வியைத் தந்துவிடும் இங்கு - அதுபோல
நல்லார் விருப்பம் நிறைவேறும் என்பது
தொல்லுலகின் நீதியாம் இங்கு!


ஆணாதிக்கம்

கூனிக் குறுகி அடுப்பூதி வாழ்ந்தபெண்கள்
கூன்நிமிர நின்றே எரிவா(யு) அடுப்பிலே
தானிங்கே நாளும் சமைக்கின்றார்! ஆண்களின்
வீணான ஆதிக்க கூக்குரல் சாடத்தான்!
ஆண்களின்னும் மாறவில்லை பார்.


குறுநகை!

நூலாடை கட்டி வடைசிரிக்க வெண்ணிற
மேலாடை கட்டி தயிர்சிரிக்க கீரையின்
கோலாடை கட்டி குழம்பிருக்க பார்த்திருந்தாள்
நூலிழையாள்! மெல்ல நகைத்து.


இருப்பதில் இன்பம் கொள்!
----------------------------------------------
இருக்கின்ற வாழ்க்கையை இன்பமாக மாற்றும்
ஒருநிலையை மேற்கொண்டால் நிம்மதி உண்டு!
இருப்பதையும் விட்டுவிட்டே ஏங்கினால் நாளும்
கருகிவிடும் நிம்மதிதான் காண்.

நிகரேது?

தாய்க்கு நிகர்யாரோ? தேடினேன்! தேடினேன்!
பார்முழுதும் தேடினேன்! தேடித் திரிந்தலைந்தேன்!
வீடுவந்து சேர்ந்தேன்! கதவுகளைத் தாய்திறந்தாள்!
பாடுபட்ட மகனேநீ சாப்டாயா! என்றுகேட்டாள்!
பாடுகின்றேன் தாய்தான் நிகர்.