Thursday, December 21, 2017


குறுந்தொகை

வேதனை தீருமா?

பாடல் 79

பாடலாசிரியர்:
குடவாயிற் கீரத்தனார்

கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே
-------------------------------------------------------------------------------
தோழியே! அவருக் கிணையாக நானில்லை?
ஈவிரக்க மின்றித்தான் சென்றதால் ஏங்குகிறேன்!
 ஓவியமாம் என்னவர் சிற்றூர்க்குள் சென்றாரோ!
யானையோ ஓமை மரத்தை உரித்தபின்
கானகத்தில் நிற்கும் உலர்ந்த மரக்கிளையில்
கால்பதித்துப் பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
பாதையில் உள்ளதே சிற்றூர்! அதைக்கேட்டு
பேதையென்னை நெஞ்சில் நினைப்பாரோ?மாட்டாரோ?
வேதனை தீர்ப்பாரோ? சொல்.


ஒற்றைச்சொல் மூலதனம்!

இக்கட்சி ஊழலா? அக்கட்சி ஊழலா?
எக்கட்சி ஊழலெனத் தேடி அலைந்திருந்தேன்!
மக்களைக் காக்கும் அரசியலின் மூலதனமே
ஒற்றைச்சொல் ஊழலென்றார்!  போ!

ஏமாந்தன!

இரண்டு பறவைகள் மீனொன்றைக் கவ்வ
முயன்றன வேகமாக! எங்கிருந்தோ வந்தே
அலகால் விருட்டென்று கவ்வித்தான் மீனை
இரையாய்ப் பிடித்தது மூன்றாம் பறவை!
இரண்டுமே ஏமாந்த தே!

Monday, December 18, 2017

தையே வருக! தைத்துவிட்டு வருக!

கார்த்திகைத் தாண்டவத்தில்
சீரழிந்த கோலங்கள்!
மார்கழியின் மேனியெங்கும்
மங்காத வடுக்களாக
ஊர்மக்கள் அகதிகளாய்
மருதநிலம் நெய்தலும்
நார்நாராய் கிழிந்ததம்மா!
சீராக்க வா! தாயே!

விளைநிலங்கள் விளைச்சலிலே
களைகட்டி மகிழட்டும்!
அலையாடும் கடலினிலே
மீனவர்கள் உள்சென்றே
மலைக்காமல் மீன்பிடித்தே
வளங்கண்டே வாழட்டும்!
உளைச்சலிலே வாடுவோரின்
இல்லங்கள் ஒளிரட்டும்!

தைமகளே! அத்தனையும்
சீர்செய்து புதுப்பொலிவை
தைத்தேதான் மீட்டுத்தா!
 சோதனைகள் சாதனையாய்ப்
புத்துணர்ச்சி் கொண்டேதான்
புவிமெச்ச மலர்வதற்கே
அக்கறையாய் அரவணைத்து
முத்திரையைப் பதித்துவிடு!

புத்தொளியைப் பாய்ச்சிவிடு!
புதுப்பொலிவைத் தந்துவிடு!
நற்றமிழைச் செழிக்கவிடு
நல்லிணக்கம் வளரவிடு!
எத்திக்கும் அமைதிகொடு! 
இல்லத்தில் மகிழ்ச்சிகொடு!
வற்றாத ஆற்றலுடன்
வல்லரசாய் மாற்றிவிடு!

ஆக்கபூர்வ சிந்தனைகள்
அரங்கேற்றம் காணட்டும்!
ஊக்கத்தின் சிறகுகளில்
ஊன்றட்டும் சாதனைகள்!
சூட்டுகிறோம் பாமாலை!
சூளுரைத்துத் தைமகளே
வேற்றுமையில் ஒற்றுமையோ
வேரூன்ற வந்துவிடு!


கேடுகள் நீங்குமா?(18.12.2017)

ஓகி புயலே குமரியின் மக்களை
வாடி வதங்கவைத்தாய்! என்னதான் கோபமோ?
தேடிவந்த மீனவரைப் பந்தாடி பார்த்துவிட்டாய்!
தேடுகின்றார் தேம்பி அழுகின்றார்! ஓலங்கள்
நாடுதோறும் கேட்கிறதே! அக்கரைச் சீமையிலும்!
வீடுகள் தோறும் விரக்தியின் உச்சங்கள்!
போதுமடா சாமி! துயரத்தின் வேதனைகள்!
கேடுகள் நீங்குமா? கூறு.

புத்துணர்ச்சி

தேரை இழுத்து நிலையிலே சேர்ப்பதும்
காலையில் பிள்ளைகளைப் பள்ளியிலே  சேர்ப்பதும்
வேலைப் பளுவில் சரிசம மானதே!
காலையில் புத்துணர்ச்சி தான்.

Saturday, December 16, 2017




ழகரம் சிகரம்

தமிழே! தழைக்கும் அழகே! அமிழ்தே!
இமிழ்கடல்  முழங்கும் முழவே! பழமே!
அவிழும் இதழே ! பழகும் மொழியே!
விழியே! விழுதே! எழு.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் எங்கெங்கோ
சொந்தங்கள் வாழ்கின்ற கோலங்கள்! பிள்ளைகள்
கண்டு பழகுகின்ற வாய்ப்புகள் இல்லையே!
சென்ற தலைமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால்
இந்தத் தலைமுறை ஏதோ இருக்கின்றார்!
அந்தோ! தெரியும் அடுத்த தலைமுறையோ
கண்டாலும் அப்படியா? என்றே ஒதுங்கிடுவார்!
சொந்தங்கள் யாரோ? உறவுகள் யார்யாரோ?
அன்றே கனியன்பூங் குன்றனார் சொன்னதே
இன்றைய வாழ்க்கைக்குத் தான்.

Wednesday, December 13, 2017

பகல்வேடம்!

உரிய மரியாதை தந்தே பழகு!
உரியதைத் தாண்டி வளைந்து குழையும்
மரியாதை எல்லாம் பகல்வேடக் காட்சி!
தெளிவுடன் வாழ்தல் சிறப்பு.

Monday, December 11, 2017

பாரதி வாழ்க!

11.12.2017

சொல்ல முடியாத நேரத்தில் நற்கருத்தைச்
சொல்லி நிமிர்ந்தவன் பாரதி! ஆதிக்க
வல்லூறைப் பாவினத்தால் பந்தாடிப் பார்த்தவன்!
தெள்ளுதமிழ்ப் பாமுரசை வாழ்த்து.


நாடுபோற்றும் பாரதி ஆசிரியர் தொண்டுசெய்த
சேதுபதி பள்ளி மதுரையிலே நான்படித்தேன்!
பாடுபொருள் பாரதியின் காற்றங்கே பட்டதாலே
ஏடுகளில் நானும் கிறுக்குகின்றேன்  பாவினங்கள்!
நாடுகின்றேன் ஆசிகளைத் தொட்டு.

Wednesday, December 06, 2017

குழந்தையும் பொம்மையும்!
கணவனும் மனைவியும.

குழந்தையிடம் பொம்மை கிடைத்துவிட்டால் போதும்
குழந்தையோ இப்படி அப்படி ஆட்டும்!
தரைமீது தூக்கி எறியும்! சிரிக்கும்!
அலைபாயும் உள்ளம் உவந்து.

தன்விருப்பம் போல நடக்கவேண்டும் என்றேதான்
என்னென்ன செய்யும்? அடிபணிய வைத்தேதான்
கொஞ்சும் மகிழும் வலிக்கிறதா என்றேதான்
நெஞ்சுருக்க் கேட்கும் அழுது.

இப்படித்தான் வாழ்வில் ஒருவர்மேல் அன்புவைத்தால்
அப்படி இப்படி ஆடவேண்டும் என்றேதான்
எப்பொழுதும் இங்கே எதிர்பார்ப்போம்! ஏக்கமுடன்!
சற்றே தடம்புரண்டால் வாடி வதங்கிடுவோம்!
இப்பற்றின் பண்பே இது.