Tuesday, May 31, 2016

எண்ணம்போல் வாழ்வு

வாழ்க்கையைப் பூவாய் நினைத்தால் மணங்கமழும்!
வாழ்க்கையை முள்ளாய் நினைத்தால் தினம்உறுத்தும்!
ஆழ்மன எண்ணம்போல் வாழ்க்கை அமைந்துவிடும்!
நாள்தோறும் நம்பிக்கை கொள்

Sunday, May 29, 2016

பாபாராஜ்;

வள்ளுவர் குடும்பத்தின்
வற்றாத தமிழ் நதி.
மரபும் புதுமையும்
இசைந்திசைக்கும்
கூடல் குயில்.

இருந்தாலும்
வெண்பா
பாபாவின்
தலைவாழை
இலையில்
"நிச்சய தாம்பூலம்

வள்ளுவர் குடும்பத்தின்
தணிக்கை குழு அதிகாரி.
பாலா கவிதைக்கும்
ஹெலினா படத்திற்கும்
பாபாவின்
கத்திரிக்கோல் பற்றிய
கவனம்  உண்டு.

கொடைக்கானல் ஆனாலும்
சிம்லா ஆனாலும்
இணைந்து வருவது
இல்லத்தரசி மட்டுமல்ல.
இன்பத் தமிழும் தான்.

சிம்லாவில்
குதிரையின்
குதிபோடும்
குளம்புகளுக்கு
முன்னால்
குதித்து ஓடியது
பாபாவின் வெண்பா

வெள்ளைப் பளிங்குக்
காதல் சின்னத்தின்
முன்னின்று
வெண்பா வேந்தரும்
வீட்டரசியும்.

உள்ளமெல்லாம்
"ஊற்றெடுக்கும்
ஒற்று'மை'யில்"
தொட்டு எழுதிய
கவிதை.

வசந்தா அம்மையார்
வசப்பட்டதால் தான்
இந்த
ஆலவாய்க் குயில்பாட்டு
ஆதம்பாக்கத்தில்
நித்தம் ஒலிக்கிறது.

வாழ்க வளமுடன்

வள்ளுவர் குடும்பத்தின்
சார்பில்

அன்புடன்
ஆர்.பாலகிருஷ்ணன்



Friday, May 27, 2016


பயன்படுவதே அழகு!

கொம்போ அழகுதான்! கால்கள்? அழகில்லை!
என்றே வருந்தியது மான்தான்! புலிதுரத்த
கண்டபடி ஓடியது! கொம்போ மரக்கிளையில்
நன்றாக சிக்கியதும் ஓட முடியவில்லை!
என்ன அழகிருந்தும் கொம்பால் ப யனில்லை!
என்னை இதுவரை காக்க உதவியது கால்களே!
கொம்புக்கு கால்களே மேல்.

முறுக்க நொறுக்கு!

கடக்கு முடக்கு முறுக்க பிடிச்சு
எடக்கு மடக்கா கடிச்சுக் கடிச்சுக்
சடக்கு சடக்கு முறுக்க ஒடிச்சு
மடக்கு மடக்கா விழுங்கு.

இப்படியும் பெற்றோர்கள்!
>
> பிள்ளைகள் என்றாலும் நாள்தோறும் பெற்றோர்கள்
> தொல்லையாய் மாறிவிட்டால் அத்தகைய பெற்றோரை
> பிள்ளைகள் வாழும் பரபரப்பில் எப்படி
> உள்ளத்தால் போற்றுவார் கூறு?

மேகத்தின் மறுமொழி

நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான்
இவ்வுலகம் பாவலரே! மூலவித்து செங்கதிரோன்
சொல்வதைக் கேட்போமா நாம்?

நல்லவரோ கெட்டவரோ வெப்ப மயமாக்கி
தொல்லுலகைப் பாழ்படுத்தி நிற்கின்றார் நாள்தோறும்!
எல்லையற்ற தண்ணீரை ஆவியாக்கும் நற்பணிக்கோ
தொல்லை இதுதான் உணர்.

ஓசோன் படலத்தில் ஓட்டை விழுமளவு
நாசத்தை சந்தித்தும் என்கடமை செய்தாலும்
நாடறிய நல்லவர்கள் வாழ்ந்தாலும் மேகத்தைக்
கூடுகட்ட என்முயற்சி தோற்கிறதே!என்செய்வேன்?
பாடுபட்டு பார்க்கின்றேன் நான்.


மணிவிழா வாழ்த்துப்பா

நாள் 03.04.2016 பிள்ளையார்பட்டி

மணிவிழா இணையர்
கெஜராஜ்.   மல்லிகா

இல்லற முத்துக்கள்

மகன் கார்த்திக் சுப்பாராஜ்- திரைப்பட     இயக்குனர்
மருமகள் சத்தியப் பிரேமா--
மருமகன் கார்த்திகேயன்
மகள்.         தேவிகாராணி
பேரன்.        சஞ்சய்
-----------------------------------------------------------------
பெற்றோர்கள் ஆசியுடன் உற்றார் உறவினர்கள்
சுற்றத்தார் நண்பர்கள் பிள்ளையார் பட்டியிலே
நற்றமிழால் வாழ்த்த மணிவிழா கொண்டாட்டம்!
அற்புதமாய் வாழ்க மகிழ்ந்து

மணிவிழா காணும் கெஜராஜ் இணையர்
தமிழ்போல வாழ்க! வளமுடன் வாழ்க!
மணிக்குறள் கூறும் அறங்களைப் போற்றி
இனிமையாய் வாழ்கபல் லாண்டு.

மருந்துத் துறையில் நுழைந்தவர் இன்றோ
பெருமை மிளிரும் கலைத்துறை தன்னில்
அருமைப் புகழ்சேர் நடிகராய் ஆனார்!
அருந்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.

அன்புடன்
மதுரை பாபாராஜ்
வசந்தா

இணைந்து வாழ்த்தும் இதயங்கள்

ரவி-- சுபாதேவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்--  சத்யபாமா
நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா

Labels:

ஒன்றின் மகிமை

ஒன்றின்றி ஒன்றில்லை! ஒன்றுடன் ஒன்றாக
ஒன்றித்தான் ஒன்றிலே ஒன்றாகி ஒன்றுக்குள்
ஒன்றுடன் ஒன்றாக்கி ஒன்றாக ஒன்றிடும்
ஒன்றுதான் ஒன்றென் றுணர்.

மழையின் சுழற்சி

கடலில் கலந்த மழைநீரை வெப்பம்
சுடச்சுட ஆவியாய் மாற்றிட, மேகம்
மடமடவென்றே முகந்தே சேர்த்துச்
சடசட வென்று மழையைப் பொழிய
தொடர்கதை இந்தப் பொழிவு.

இலக்கியக் காட்சி

பெண்மான் களைப்பாற ஆண்மான் நிழலளித்து
நின்றிருந்த காட்சி இலக்கியத்தில் உண்டம்மா! செந்தமிழே!
பெண்ணென்றால் அன்பைப் பொழிய உயிர்கூட
தந்திடுவோம் என்பதைப் பார்.



வீடு மாற்றம்
புதிய முகவரிக்கு
--------------------------------------------------
நான்
கைபேசியில்
கவிதை பதிவுசெய்யும்
பொழுதெல்லாம்
எனது அறையின்
நாற்காலியில் வந்து
உட்காருவது
எப்படித் தெரியும்
காகமே உனக்கு?
சாளரத்துக் கதவில்
அமர்ந்து
கா. கா என்று
இன்னிசை மீட்டுகின்றாய்!
நாளை நாங்கள்
வேறு முகவரிக்கு
மாறுகின்றோம்!
ஏமாற்றம்
உனக்கு மட்டுமல்ல
எனக்கும்தான்!
உனக்காவது
சொந்தக் கூடு
உண்டு!
உன்னை எவரும்
அசைக்கமுடியாது!
எங்களுக்கு?
இது வாடகை வீடுதான்!
எனவேதான் வீடுமாற்றம்!
உனக்கும்
எனக்கும்
ஏமாற்றம்!
நீ
எங்கிருந்தாலும்
வாழ்க!
உன்தோழன்
மதுரை பாபாராஜ்
புதிய முகவரி:
குரோவ் அடுக்ககம்
வைபவ் B-2
நகர் இணைப்புச் சாலை
City Link Road
ஆதம்பாக்கம்
சென்னை 600 088


படியளப்பது யாரோ?

உலகிலே எல்லோர்க்கும் வாழ்க்கை இயங்க
அவரவர் வாழ வருமானந் தன்னை
அளப்பவர் யாரோ? இயக்குபவர் யாரோ?
உலகே அறிவாயோ? சொல்.

கண்ணெதிரே!
உழவன் உழைப்பில் உழுத நிலத்தில்
விளைச்சலைக் காணாமல் ஏங்குதல் போல
எழுதும் கவிதையின் நற்கருத்தை நாளும்
புழுதியில் வீசுவதைப் பார்த்தே நானும்
உருகித் தவிக்கின்றேன் பார்.

டில்லி சிம்லா சுற்றுலா
----------------------------------------------------
08.05.16---15.05.16
----------------------------------------------------
முருகன் பயண ஏற்பாட்டாளர்
------------------------------------------------------------
08.05.16  SPICEJET விமானம்
------------------------------------------------------------
தலைநகர் டில்லியில் எங்கள் விமானம்
தரைதொட்(டு) இறங்கிய காட்சியைக் களித்தோம்!
சுவையான சிற்றுண்டி உண்டுவிட்டு, பேருந்தில்
உவகையுடன் சென்றோம் அறைக்கு.

அக்ஷர்தாம் கோயில்
--------------------------------------------
கலையெழில் சிந்தும் ஆன்மிகக் கோயில்!
திளைக்கவைத்த சிற்பங்கள்! சிற்பியின் ஆற்றல்
மலைக்கவைக்கப் பார்த்திருந்தோம் நாங்கள் ரசித்து!
தலைநகரின் அற்புதந் தான். (தொடரும்)

09.05.16
----------------
குருசேத்திரம்
--------------------------------
மண்ணாசை, சூதாட்டத் தந்திரம் ஆகியவை
இந்திய மண்ணிலே போர்க்களம் காண்பதற்கு
அன்றிருந்த காரணத்தால் பாரதப்போர் மூண்டது!
பண்பட்ட பாண்டவர்கள் மண்ணாசை கௌரவர்கள்
தண்ணீராய் ரத்தவெள்ளம் ஓட நடந்ததுவே!
புண்பட்டாள் பாரதத் தாய்.

பீஷ்மர் அம்புப்படுக்கை
-------------------------------------------
பீஷ்மர் பிதாமகன் அம்புப் படுக்கையிலே
காட்சி அளித்த அருமைச் சிலைபார்த்தோம்!
போற்றும் நெறிவாழ்ந்த பீஷ்மர் முடிவறிந்து
தூற்றினேன் போரைத்தான் இங்கு.

கீதை அறிவுரை
---------------------------------
போரில் உறவினரைச் சந்திக்க அர்ச்சுணன்
நேரில் தயங்கினான்! அங்கே கிருக்ஷ்ணரோ
போரின் நெறிமுறை, வாழ்வியல் தத்துவத்தை
சீரிய நற்கருத்தால் போதித்த அவ்விடத்தை
ஆவலுடன் பார்த்தோம் வியந்து.

சண்டிகார் பாறைச் சோலை(ROCK GARDEN)
-----------------------------------------------------------------------------------
கற்களைச் சொற்களாக்கிப் பாவினத்தை மண்ணகத்தில்
அற்புதமாய் யாத்து வியக்கவைக்கும் கோலத்தை
நற்றமிழே! பாறைகளின் சோலையிலே பார்த்திருந்தோம்!
இத்தகைய ஆற்றலைப் போற்று.

நாட்டுப் பிரிவினைக் காலக் கலவரத்தில்
ஆற்றல் நினைவாற்றல் தன்னை இழந்தவரோ
கற்களால் ஆக்கிய கற்பாறைப் பூங்காவாம்!
அக்கறையாய்ப் பார்த்தோம் உணர்ந்து.

சிம்லா நோக்கி
---------------------------
நீளமான சாலையில்
பேருந்துப் பயணம்!
பூனை உறக்கமுடன்
மெய்மறந்து சென்றிருந்தோம்!
திடீரென்று
எங்கு பார்த்தாலும்
மலைகளின் கூட்டம்!
இயற்கையின் பிரமாண்டம்
எழுந்து நின்றே
அடக்கத்துடன்
சிம்லா செல்க!
செல்க என்றே
வாழ்த்துக் கூறியது!

10.05.2016
---------------------
குதிரைப் பயணம்
------------------------------------------------
கரடு முரடான கற்கள் வரவேற்க
சளைக்காமல் செல்லும் குதிரைகள் மீது
மலைப்பும் வியப்பும் பயமும் கலக்க
வலைக்குள் மீனாய் துடித்தேதான் சென்றோம்!
கலங்கித் தவிக்கவைத்துப் பார்த்த பயணம்!
தரையில் இறங்கியதும் நிம்மதி மூச்சில்
சிரித்தோம் பயத்தை மறைத்து.


தேசிங்கு ராஜாபோல் எண்ணித்தான் சென்றவர்கள்
ஜான்சிராணிபோல் எண்ணித்தான் சென்றவர்கள்
ஆகா குதிரையை விட்டே இறங்கிவிட்டால்
போதுமென்றே கூவினார் அங்கு.

11.05.16
----------------
இமயமலைக் காட்சி
------------------------------------------
இந்திய னாகப் பிறந்துவிட்டு நாமிங்கே
இந்திய நாட்டின் இமயமலைச் சாரலின்
கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் போவதோ?
அம்மம்மா! அற்புததின் ஊற்று.

எங்கெங்கும் சுற்றி இமயமலைக் காட்சிதான்!
வெண்பனி மீது முகிலினங்கள் கொஞ்சுகின்ற
தன்னிக ரற்ற இயற்கையின் காட்சியிலே
ஒன்றித் திளைத்திருந்தோம் பார்.

வெந்நீர் ஊற்று
---------------------------------
தண்ணீர் வருகின்ற மண்னிலே ஊற்றெடுத்து
வெந்நீர் பெருகிய கோலம்! சுகமாக
அங்கே குளிக்கின்றார்! அற்புதந்தான் மண்ணகத்தில்!
விந்தை உலகென்று சொல்.

பனிமுனை(ICE POINT)
------------------------------------------------
சென்றுவந்தோர் அனுபவம்
-------------------------------------------------------
மலைப்பாதை ஏறி பனிமுனைப் பார்த்தார்!
இயற்கை எழுதிய வெண்பனிப் பாடல்!
உலகை மறந்தே குளிரின் மடியில்
உவகையில் துள்ளினா ராம்.

படகு சாகசம்!(RIVER RAFTING)
-----------------------------------------------------
கற்களின் ஊடே வளைந்து வளைந்தேதான்
சுற்றிச் சுழன்றும் எழுந்தும் இறங்கியும்
தண்ணீரை வாரி இறைத்ததோ இன்பந்தான்!
உண்மையான சாகசந் தான்.

தீன்மூர்த்தி பவன்
------------------------------------------
உலக அமைதிக்குப் பாடுபட்ட நேரு
வலம்வந்து நாளும் பரபரப்பாய் வாழ்ந்த
அழகான இல்லம் வரலாறாய் மாறி
வரவேற்று நிற்கிறதே இன்று.

இந்திராகாந்தி இல்லம்
------------------------------------------
உலக கவனத்தை இந்தியாவை நோக்கி
சுழலவைத்தார் இந்திரா காந்தி! தனது
உயிர்மெய்க் காப்பாளன் காலனாக மாறி
உயிர்பறித்தான்! பூச்செண்டை மண்னிலே சாய்த்தான்!
தளிரோ கருகுதல்போல் வீழ்ந்து மடிந்தார்!
புவியே அழுததே அன்று.
மகாத்மா காந்தி நினைவிடம்!
----------------------------------------------------------
அன்னியர் பல்லாண்டு பாதுகாத்து ஒப்படைத்த
அண்னலை ஆறுமாதங் கூடஇங்கே காக்கவில்லை!
இந்தியன் சுட்டுக் கொன்றுவிட்டான் பாதகன்!
புன்னகை பூத்து வழிபாடு கூட்டத்தை
தன்னகம் பார்க்க நடந்துவந்த அண்னலை
குண்டுகளால் தாக்கி அழித்தான் கொடியவன்!
கண்ணீர் ததும்பிநிற்க பார்த்தேன்! துடித்தேன்!
இன்னொரு காந்தி கிடைப்பாரா? ஏங்குகின்றேன்!
அண்ணலைப் போற்றி வணங்கு.

மதுராவில் கண்னன் பிறந்த இடம்/
சிறைச்சாலை
-----------------------------------------------------------------
தங்கையின் எட்டாம் குழந்தை தனக்கெமன்தான்
என்றதால் தங்கையை,மைத்துனனைக் கம்சனோ
புண்பட வைத்தான்  சிறையிலே! அச்சிறையில்
செண்டுமலர் தேன்மழலைக் கண்னன் பிறந்துவிட்டான்!
தன்குழந்தைக் கண்ணனைக் கூடையிலே தான்சுமந்து
தந்தையே ஆற்றில் நடந்துசென்று அக்கரையில்
அன்பரசி யான யசோதையின் பூமகளை
தன்னிடத்தில் கொண்டுவர வாங்கினார்! கண்னனைத்
தந்துவிட்டு வந்தார் சிறைக்கு.

இந்தியா வாசல்

போர்க்களத்தில் இன்னுயிரை நீத்த தியாகிகளின்
வீரத்தைப் போற்றி அமைத்திருக்கும் இவ்வாசல்
தாரணி கண்ட முதலுலகப் போர்க்களத்தில்
வீர மரணத்தை ஏற்றவரின் சின்னமாகும்!
போரைத் தவிர்த்தல் அறிவு.

குதுப்மினார்

கம்பீரமாக நிற்கும் குதுப்மினார் சின்னமோ
தன்னகத்தே ஆறு தளங்களைக் கொண்டது!
பங்கெடுத்த போர்க்கள வெற்றியின் சின்னமிது!

இந்தியாவின் டில்லியில்
அன்று முதன்முதலில்
தன்னாட்சி ஊன்றி முதலரச னாகவந்த
மன்னர்  குதுப்உத்தின் அலிபாக் நிறுவிய
சின்னமாம் இந்தக் குதுப்மினார்! கட்டிடத்தைச்
செங்கல் பளிங்குகளைக்
கொண்டேதான் கட்டினராம்!
தன்னகத்தே ஏந்தும் மசூதிதான் இந்தியாவில் நின்ற முதல்மசூதி யாகும் வழிபட!
மின்னலால் மேல்பகுதி சீரழிந்த போதிலும்
கண்கவர மீண்டுமதைக் கட்டிவிட்டார் பண்மணியே!
இந்தியாவின் அற்புத த்தில் ஒன்று.



ஆக்ரா கோட்டை!
----------------------------------
ஆக்ரா கோட்டை யமுனை நதிக்கரையில்!
ஏற்ற  இறக்க வரலாறைக் கொண்டது!
போற்றுகின்ற அக்பர் உருவாக்கிய பின்னணியை
ஏற்றே ஜஹாங்கீரும் ஷாஜஹான் ஔரங்கசீப்
நாட்டமுடன் தங்கள் கலையுணர்வின் காட்சிகளைக்
காட்டித்தான் கட்டினராம் அன்று.
கோட்டையை வேட்டையாடிப் பார்த்தார் நதிர்ஷாதான்!
கோட்டையின் அங்கங்கங்கள் அன்றே சிதைந்தன!
ஆக்ராவின் மக்கள் விடுதலைச் சீற்றத்தைத்
தாக்குப் பிடிக்க முடியாமல் வெள்ளையர்கள்
கோட்டையில் தஞ்சமானார்! கோட்டையைத் தாக்கியதால்
கோட்டை பலபகுதிகள் தம்மை இழந்ததாம்!
ஆக்ரா புகழுக்குச் சான்று.

தாஜ்மகால்
(சுற்றுலா நிறைவுக் கவிதை)
---------------------
இல்லற வாழ்வில் பதினெட்டே ஆண்டுகள்
நல்லறம் போற்றித்தான் வாழ்ந்தவர் மும்தாஜாம்!
இவ்வுலகில் மாசற்ற காதலிலே ஷாஜஹான்
உள்ளம் கவர்ந்தவள் மும்தாஜ்! அவளிறப்பால்
சொல்லொண்ணா வேதனையில் ஷாஜஹான் நாள்தோறும்
துள்ளித் துடித்தான் சிறகிழந்த புள்ளைப்போல்!
கல்லறைக்குச் சென்று கதறி அழுதவன்
இவ்வுலகம் போற்ற நினைவிடம் செய்துவிட்டான்!
அன்பிற்கும் உண்டோ அடைக்கின்ற தாழென்ற
பண்பிற்குச் சான்றாக காதலின் காவியமாய்
நம்முன் பிரமாண்ட மாகத்தான் தாஜ்மகால்
மண்ணகத்தில் நிற்கிறது பார்.
பல்வேறு நாட்டின் கலைஞர்கள் தங்களது
உள்ளம்  கவர்ந்த வரைபடத்தைத்  தந்தனர்!
வல்லவன் ஷாஜஹான் தாஜ்மகால் தோற்றத்தை
உள்ளத்தால் தேர்ந்தெடுத்தான் பார்.
துருக்கிநாட்டின் உஸ்தாத் இசா அஃபாண்டி
உருவாக்கித் தந்த வடிவந்தான் தாஜ்மகால்!
அருமையாய் இவ்வுலக அற்புதமாய் மாறி
பெருமையுடன் நிற்கிறது பார்.

மதுரை பாபாராஜ்