Thursday, November 26, 2015

உப்பு!
---------------
தண்ணீரின்  பிள்ளையாம் உப்பைநாம் நாள்தோறும்
தண்ணீரை விட்டே பிரித்தெடுப்போம்! மீண்டும்நாம்
தண்ணீரில் போடுகின்றோம் தாயும் மனமகிழ்ந்தே
அன்புடனே ஏற்பாள் கரைந்து.

என் உள்ளத்தில் துள்ளிவந்த கவிதை!
பொருளென்ன? தெரியவில்லை!
------------------------------------------------------------------
ஞாலக் கருப்பொருளோ? மூலக் கருப்பொருளோ?
ஏழுலகம் தாண்டியும் ஏழுகடல் தாண்டியும்
சீல முழக்கமிடும் ஓங்கார நாதமோ?
யாரறிவார்?நற்றமிழே! சொல்.


பொச்சாவாமை
----------------------------------
மறதி கெடுதி
------------------------------------
அலிபாபா மேகம்!
--------------------------------------
திறந்திடு சீசேம்! திறந்தேன்! பொழிந்தேன்!
மடமட வென்று நிறைந்தேன்! நிறைந்தேன்!
மறந்துவிட்டார் மூடுகின்ற மந்திரத்தை! கண்ணே!
மறதி கொடிதென் றுணர்.


துப்பார்க்குத் துப்பாய
-------------------------------------------------
மழையின் துளிகள் மரத்தில் விழுந்து
கிளையில் விழுந்து  இலையில் வழிந்து
துளித்துளி யாகத் தரையைத் தழுவும்
எழிலை ரசித்திருந்தேன் நான்.

தமிழில் மயங்கிய நதி

தமிழில் மயங்கிய நதி
-------------------------------------------
நதிகள் அனைத்தும் கடலிலே சேரும்
மதுரையின்  வைகையோ சங்கத் தமிழில்
மதிமயக்கங் கொண்டு கடலை மறந்து
முடிந்தது தென்பாண்டி நாட்டில்! வைகை
நதியோ கடல்கலக் காது.

மதுரை பாபாராஜ்

வைகை நதியோ
    கடல்கலக் காது
பாபா கவிக்கு
    நிகரிருக் காது.

கனியன் கிருஷ்ணன்
09.12.21

இலக்கியக் காரணம்
--------------------------------------
www.eegarai.net
----------------------------------------
பாற்கடலோ நஞ்சைச் சிவனுக்குத் தந்ததாலே
வேற்றுமை கொண்டே  வைகை நதியிங்கே
ஊற்றெடுத்தே ஆடும் அலைகடலில் சேராமல்
பாத்தமிழ்ப் பாண்டிநாட்டின் எல்லைக்குள் வாழ்கிறதாம்!
கூத்தருக்கு சொன்னார் புகழேந்தி என்றேதான்
நாற்றுநடும் செய்தியொன்று உண்டு

மதம்பிடித்த மனிதன்
-----------------------------------------
எந்தமதக் கோயிலில் வெண்புறாக்கள் தங்கினாலும்
அந்தமதம் சொல்லிப் புறாவை அழைப்பதில்லை!
அந்தோ! புறாக்கள் கோபுரத்தில் உள்ளன!
இங்கே மனிதர்கள் தங்களை அந்தமதம்
இந்தமதம் என்று பிரித்து மதம்பிடித்து
மண்ணுலகில் தாழ்ந்தனர் பார்.

காட்சி எங்கே?
------------------------------
முன்பெல்லாம் வீட்டுக்குச் சென்றால் அனைவரும்
கண்குளிர உட்கார்ந்து பேசி சிரித்திருப்போம்!
இன்றிங்கே அத்தகைய வாய்ப்பு மறைகிறதே!
இன்றைய சூழ்நிலையே வேறு.


மழையே தத்தளிக்க வைக்காதே
------------------------
உணவைத் தருகின்றாய்! நீயே பருகும்
உணவாக மாறுகின்றாய்! எங்களை இன்றேன்
உணவுக்கே தத்தளிக்க வைத்தாய்? மழையே!
மனம்நொந்து கேட்கின்றோம் கூறு.

ஏரியில் வீடுகட்ட வில்லை! அடுக்குமாடி
மாளிகையில் நாங்களில்லை! இங்கே நடுத்தெருவில்
வாழ்க்கையில் தத்தளிக்கும் ஏழைகளாய் வாழ்கின்றோம்!
சேரியை நீயோ அழித்தேதான் செல்கின்றாய்!
பாவமென்ன செய்தோம்? விளம்பு.
-------------

மயங்காதே!
------------------------
அன்புக் கடிமையா? போற்றுவார்! நல்லொழுக்கப்
பண்புக் கடிமையா? போற்றுவார்! -- என்றும்
புகழுக் கடிமையா மக்கள் நகைப்பார்!
புகழில்  மயக்கம் விலக்கு.

உன்குடும்பம்
-------------------------
வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எல்லோரும்
தோள்கொடுத்துச் சந்திக்க வேண்டியதை விட்டுவிட்டுச்
சூளுரைத்துத் தாறுமாறாய்த் தேரிழுத்தால் அச்சாணி
தூர்ந்து நிலைகுலையும்! செப்பு.

பகட்டுச் செலவு!
------------------------------------
இயற்கை அழகை தினந்தோறும் மாந்தர்
செயற்கையாய் மாற்றி அலைகின்றார்!தங்கள்
அழகை அலங்கோல மாக்கும் பகட்டுச்
செலவுக்குள் மெய்மறந்தார் பார்.

Wednesday, November 18, 2015

வானமே கருணைகாட்டு!
---------------------------------------------------
வானம் உடைப்பெடுத்தே ஊற்றும் மழையேஉன்
கானத்தின் பண்ணோ முகாரியாய் இல்லாமல்
தேனினிமைப் பூபாள மாக்கித்தான் வாழ்வியங்கத்
தானே துணைபுரிவாய் நீ.

கொட்டி முழக்கி முடக்குகின்ற வான்மழையே
கொட்டியது போதுமே!அன்றாட வாழ்க்கை
எப்பொழுதும் போல இயங்கத் துணைபுரிந்தால்
நற்றமிழால் நன்றிசொல்வோம் இங்கு.

மழையேஉன் ஆட்டத்தை இங்கே நிறுத்து!
கரைபுரண்ட வெள்ளமாய் வந்தேனோ மக்கள்
நிலைகுலைந்து வாழும் நிலைதந்தாய்? வானே!
இரக்கமுடன் காப்பாற்று நீ.

நிறுத்து நிறுத்து மழையை நிறுத்து!
கறுத்த வானமே வெளுப்பாக மாறு!
கடுமழை போதும் கருணையைக் காட்டு!
படுத்தியது போதும் நிறுத்து

16.11.2015

திரு.ரமணன் மேல் குற்றமில்லை!
--------------------------------------------------------------
கடலில் புயற்சின்னம் பார்த்துக் கணித்துப்
படமெடுக்கும் மாமழை என்பார்! ரமணன்!
நகர்ந்திடும் மேகங்கள் ஏமாற்றிப் போனால்
பகர்ந்தவர் குற்றமில்லை பார்.

அந்தப் பொறுப்பிலே அங்கிருந்து சொல்லவேண்டும்!
எந்த மனிதரும் வேண்டுமென்றே சொல்லமாட்டார்!
சொன்னதை மீறி இயற்கையே மாறினால்
சொல்வோர் பொறுப்பா? இயம்பு.

மழையே! மழையே!
-------------------------------------------
மழையே மழையே நின்றுவிடு!
மக்களைக் கொஞ்சம் வாழவிடு!

வம்புகள் செய்யும் குழந்தைகள்போல்
அடம்பிடித் தேனோ அழுகின்றாய்?

எட்டுத் திசைகளில் பெருக்கெடுத்தே
வெள்ள மாக ஓடுகின்றாய்!

அழையா விருந்தினர் வந்ததுபோல்
வீட்டுக் குள்ளே வந்துவிட்டாய்!

பாத்திரம் பண்டம் மிதக்கிறது!
பசியால் வாடித் துடிக்கின்றார்!

மழையே மழையே நின்றுவிடு!
மக்களைக் கொஞ்சம் வாழவிடு!

பற்றுக பற்றை!
---------------------------------
இப்பற்றோ அப்பற்றோ எப்பற்றைப் பற்றினாலும்
பற்றித் தொடராமல் நீங்கிவிடும் நற்றமிழே!
பற்றித் தொடரும் கடமையெனும் பற்றொன்றே!
ஒப்பற்ற அப்பற்றைப் பற்று.

பிடிவாதம் வேண்டாம்!
---------------------------------------------
குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் எல்லாம்
வெடிபொருளை நம்முள்ளே நாமே செலுத்தும்
வெறித்தனந்தான் மாந்தரே! வேறில்லை! ஏனோ
பிடிவாதம்? விட்டுவிடு நீ.

இருதுருவங்கள் இணையும்!
--------------------------------------------------------
ஆத்திகத்தில் நாத்திகத்தை நாளும் கடைப்பிடிப்போம்!
ஊற்றெடுக்கும் மூடப் பழக்கத்தை ஏற்காதே!
நாத்திகத்தில் ஆத்திகத்தை என்றும் கடைப்பிடிப்போம்!
போற்றும் தனிமனித நல்லொழுக்கம் பேணுவோம்!
ஏற்றேதான்வாழ்தல் அறிவு.

பரிமாற்றம்
-----------------------
கருத்துப் பரிமாற்றம் செய்கின்ற நேரம்
கருத்தைக் கருத்தாய்க் கருதவேண்டும்! நாம்தான்!
கருத்தைப் பகையாக எண்ணாமல் இங்கே
பெருந்தன்மை நட்பைப் பேண்

கப்பல் போகுது
---------------
அம்மா அம்மா மழைவெள்ளம்
அழகாய் தெருவில் ஓடுதம்மா!

காகிதக் கப்பல்  செஞ்சாச்சு!
நீரில் ஓட விடுகின்றேன்!

ஆகா மிதந்து போகிறது!
ஆடி அசைந்து போகிறது

அம்மா அம்மா வாஇங்கே!
கப்பல் போகுது பார்பார்பார்!

உலகமே இப்படித்தான்!
----------------------------------------------
OMNIPRESENT
------------------------------------------------
கவனித்தால் நாங்கள் கவனிப்போம்! இல்லை
கவனிப்ப தைப்போல் பாசாங்கு செய்தே
கவனிப்போம் என்றே அலையவைத்துப் பார்ப்போம்!
கவனிக்கக் கற்றுக்கொள் நன்கு.

Friday, November 13, 2015

ஏனோ?
------------------
கனிகள் குலுங்கிக் கனிந்திருந்த போதும்
மனிதனோ காய்களை நாடித்தான் செல்வான்!
இனிமையான சொற்கள் கனிபோல் இருந்தும்
அனல்பறக்கும் சொற்களாம் காய்களை வீசி
ரணப்படுத்திப் பார்ப்பதும் ஏன்?

Sunday, November 08, 2015

நிறைகுடம்
----------------------
மற்றவர்கள் புண்படுத்திப் பேசுகின்றார் என்றேதான்
கற்றறிந்தோர் மற்றவரைப் புண்படுத்தக் கூடாது!
கற்பதோ என்றும் நிறைகுடமாய் வாழ்வதற்கே!
அற்ப மனத்தை விலக்கு.

கண்ணோட்டம்
-----------------------------------
அற்பப்  பொருளாய் நமக்குத் தோன்றுவதோ
அற்புதமாய்த் தோன்றும் குழந்தை மனதுக்கு!
அற்பமென்று சொல்லி நகைக்காதே!பிள்ளைக்கோ
அற்புதமும் அற்பமும் ஒன்று.

பலாப்பழம்!
-------------------------
கரடு முரடான தோற்றந்தான் !ஆனால்
தரமான பண்பான மென்மையான உள்ளம்!
உருவத்தைப் பார்த்துக் கணிக்காதே! கண்ணே!
உருவம் பலாப்பழம் போல்.

நன்றி மறவாமை!
-----------------------------------
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவைப் பெறுவதற்குப்
பெற்றோர் குழந்தைக்கு வாய்ப்பை வழங்கவேண்டும்!
கற்றேதான் நன்றியைச் சொல்.

இப்படியும் விருந்தோம்பல்!

கரு:ஒளவையார் தனிப்பாடல்!
பாடல்:இருந்து முகம்திருத்தி...
-----------------------------------------------------
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
வள்ளுவர் சொன்னது! இல்லா ளிடத்திலே
உள்ளம் மகிழ விருந்தினர்க்கு நல்விருந்தை
நல்ல கணவனோ வேண்டியதும் காரிகையோ
கள்ளமனங் கொண்டே முறத்தால் கணவனைத்
துள்ளவைத்தாள். அங்கே அடித்து.

குழந்தையின் கோரிக்கை!
---------------------------------+----------------
யானையைக்கேட்டழுவார்! பானையைக்கேட்டழுவார்!
யானையும் பானையும் வந்ததும் யானையைப்
பானைக்குள் வைக்க அடம்பிடிப்பார்! ஆர்ப்பாட்டம்
வான்முட்டும்! நிற்போம் வியந்து.

வாழப் பழகு!
--------------------------------
கணவன் மனைவி இருவர் உறவில்
இணக்கம் இருந்தால் சிறக்கும் குடும்பம்!
சுணக்கம் இறுக்கம் உறவின் விரிசல்!
மனமொன்றி வாழப் பழகு.


தாமரைப்பூ வாழைப்பூ
------------------------------------------------
வந்த விருந்தினரைப் பார்த்தால் முகமிங்கே
செந்தா மரையாய் மலரவேண்டும்---வந்தாரே
என்று முகஞ்சுருங்கி வாழைப்பூ போலானால்
வந்தவர் நின்றிருப்பார் நொந்து.

போதை!
----------------------
கண்ணே! மணியே கனியமுதே என்றெல்லாம்
என்னென்ன சொல்லி வளர்த்திருப்பாள் தாயிங்கே!
இன்று நடுத்தெருவில் போதைப் பிடியிலே!
இந்த அலங்கோலம் ஏன்?

சிறைகாக்கும் காப்பு!
------------------------------------------
தந்தையும் அண்ணனும் என்னதான் காவலில்
கண்ணுங் கருத்துமாய்க் கூட இருந்தாலும்
தன்மகளோ தங்கையோ காதலுக்குத் தூதுவிடும்
எண்ணத்தை எப்படிக் கட்டுப் படுத்துவது?
பெண்மனக் காவலே மெய்.

ஆகா!
=================
விண்ணகம் தாயெனின் சேய்கள் முகிலினங்கள்
கொண்டாட்டம் போட்டுத்தான் ஆடுதடா தாய்மடியில்!
வெண்ணிலவும் விண்மீனும் அங்கே ரசிக்கின்ற
கண்கவரும் காட்சியைப் பார்.

காலைப் பொழுதிலே வாசலிலே நீர்தெளித்துக்
கோலமிட்டு வீட்டில் விறகடுப்பை ஊதிஊதி
பால்காய்ச்சி காப்பிபோட்டு நின்று கணவனை
கால்தொட் டெழுப்பும் மனைவியின்
அன்பிலே
வாழ்ந்திருந்தார் முன்னோர்கள் தான்.

ஆட்டுக்கல் ஆட்டித்தான் மாவரைத்து வைக்கவேண்டும்!
மூச்சிரைக்க நின்று கிணற்றிலே நீரிறைத்து
வீட்டைப் பெருக்கிக் கழுவி விடவேண்டும்!
மாட்டுப்பெண் அல்லவா! பார்.

வீட்டில் இருப்பவர்க்கும் நாடி வருவோர்க்கும்
கூட்டுக் குடும்பச் சமையல் வகைகளை
மூட்டு வலிக்க விறகடுப்பில்
தாக்குகின்ற
என்றும் புகையில் திணறிச் சமைத்தவளே
அன்று மருமக ளாம்!

விபத்தில்லா தீபாவளி! வீட்டுக்கெல்லாம் நிம்மதி!

விபத்தில்லா தீபாவளி!
வீட்டுக்கெல்லாம் நிம்மதி!
----------------------------------------------------
மத்தாப்பு பட்டாசு மற்றும் வெடிவகைகள்
அப்பப்பா! வீதிக் கடைகளிலே வந்தாச்சு!
கொட்டும் மழையெனினும் பிள்ளைகள் கொண்டாடும்!
விற்பனைக்கோ பஞ்சமில்லை பார்.

மத்தாப்பு மற்றும் வெடிகளைப் பாதுகாப்பாய்
முற்றும் கவனமாய்ப் பார்த்துக் கொளுத்தவேண்டும்!
அப்படி இப்படி வேடிக்கை பார்த்திருந்தால்
எப்படியோ தாக்கும் விபத்து.

விபத்தைத் தவிர்ப்போம் விவேகத்தைக் காப்போம்!
படபடப்பு வேண்டாம் நிதானந்தான் தேவை!
மறந்தும் நெருப்பருகே செல்லாதே! சீறும்!
அகத்தில் விழிப்புணர்வு கொள்.

பறவைகள் --- தாமரை
---------------------------------------------
வற்றிவிட்ட நீர்நிலையை விட்டகலும் புள்ளினங்கள்!
ஒட்டிவாழ்ந்த தாமரையோ வாடிக் கருகிவிடும்!
உட்பகையைத் தேக்குவோரும் புள்ளினம்போல் சென்றிடுவார்!
நற்றமிழே! தாமரை போல துணையாவோர்
எத்தனைபேர் இங்குண்டு? சொல்.

நடுங்குதே நாடுதான் கண்டு.

கொசுக்களைக் கூட எண்ணலாம் ஆனால்
எடுத்ததற் கெல்லாம் அரசியல் கட்சி
மிடுக்குடன் நாளும் தொடங்குவதை எண்ண
அடுத்த பிறவியும் போதாது! கண்ணே!
நடுங்குதே நாடுதான் கண்டு.

Monday, November 02, 2015

வளைந்து கொடுப்பது விவேகம்!
----------------------------------------------------------------
மூங்கிலாக வாழ்ந்தால். மரங்களாக நின்றிருப்போம்!
நாங்கள் வளைந்து கொடுத்ததால் அப்படியே
தேங்காமல் மக்கள் நலப்பொருளாய் வாழ்கின்றோம்!
மாந்தர்கள் மாறினால் நன்று.

ஆற்றலே வாழ்வின் அளவு.
-------------------------------------------------------
சேற்றில் இருந்தாலும் ஊர்மெச்சும் தாமரையை!
தோற்றம் எதிலெனினும் ஊற்றெடுக்கும் ஆக்கபூர்வ
ஆற்றலால்தான் மாந்தரை மெச்சுகின்றோம் வாழ்விலே!
ஆற்றலே வாழ்வின் அளவு.