Friday, April 13, 2012

குட்டிப் பேரன்! சுட்டிப் பேரன்!
=====================================
குட்டிப் பேரன் வருவான்!
சுட்டித் தனம் புரிவான்!

அங்கும் இங்கும் ஓடுவான்!
கீழே விழுந்தே அழுவான்!

பொம்மைப் பையைத் தூக்கியே
தலைகீ ழாகக் கொட்டுவான்!

அறைமுழுக்கப் பொம்மைகளைச்
சிதறச் செய்தே சிரிப்பான்!

தாத்தா பாட்டி கோபத்தை
பழுப்புக் காட்டி ரசிப்பான்!

வேண்டும் என்றால் வேண்டுந்தான்
கிடைக்கும் வரையில் அடந்தான்!

சுட்டித் தனங்கள் செய்தாலும்
கட்டிப் பிடித்தே கொஞ்சுவான்!

தூங்கப் போகும் வரைக்கும்
லூட்டி லூட்டி லூட்டிதான்!

========================================

Thursday, April 12, 2012

தேவையா?===================
முள்கரண்டி, மேசைக் கரண்டி இரண்டாலும்
அள்ளி எடுத்தே உணவு வகைகளை
மெல்லமெல்ல வாய்க்குள் அனுப்ப முயன்றிடுவோம்!
முள்கரண்டி நாவிலே குத்த வலியெடுக்கும்!
துள்ளுவோம் நாம்தான் தவித்து.
=========================================================

குப்பையற்ற சென்னை எப்போது?
===============================
'எப்பொழுதும் எங்கேயும்' வாசகத்தை ஏந்துகின்ற
குப்பை எடுக்கின்ற வண்டி நடமாட்டம்
முப்பொழுதும் கற்பனையில் ஆனதால் வீதியிலே
குப்பைதான் எப்பொழுதும் கூறு.
================================================

Monday, April 09, 2012

வீதிவலம் வருக!
===========================
கோட்டைக்குள் வாழும் அமைச்சர்கள் எல்லோரும்
நாட்டுக்குள் மாதம் ஒருமுறை வீதிகளை
நோட்டமிட்டால், குப்பைக் குவியல்கள் அன்றேனும்
நாட்டில் மறைந்துவிடும்! துர்நாற்றம் இல்லாத
காட்சியைக் காணலாம் இங்கு.

Saturday, April 07, 2012

அனைத்தும் வசப்படும்!
=======================
பணிவாய் இருந்தால் சிகரம் தொடுவாய்!
பணிவை மறந்தால் தரையில் விழுவாய்!
பணிவே உயிரின் இயக்கமாய் ஆனால்
அனைத்தும் வசப்படும் இங்கு.

Wednesday, April 04, 2012

நீர் -- நிலம்-- காற்று-- வானம்-- நெருப்பு
=====================================

நீரில் மிதந்து, நிலத்தில் பிறக்கின்றோம்!
பாரிலே காற்றைச் சுவாசித்து, வானளவு
வாழ்விலே ஆசைக்கே ஏங்கி இறந்ததும்
சேர்வோம் நெருப்பில் கரைந்து.