Tuesday, October 31, 2006

தெருநீரே கண்ணாடி

தெருக்குப்பை சேர்க்கும் சிறுவன் ஒருவன்
தெருவோரம் தேங்கும் மழைநீரில் பார்த்து
விரல்களால் கோதி தலைசீவி மகிழ்ந்தான்!
தெருநீரே கண்ணாடி செப்பு.

பணிவே உயர்வு

அறிந்தவர்கள் பேசி அளவளாவும் போது
அறியாதோர் பேசாமல் அங்கே -- முறையாய்
அமைதியாகக் கேட்கவேண்டும்!அந்தப் பணிவே
இமையாம் உயர்வுக்கு இங்கு.

காசு

காசை வணங்கி மதிப்பேன் கடவுளாய்
மாசற்ற மார்க்கத்தில் வந்திருந்தால்!-- நேசமுடன்
மாசு படிந்த வழியிலே காசுவந்தால்
தூசென்பேன் நான்தான் துணிந்து.

பெண்ணின் எழுச்சி

ஆண்களைப் பெண்களோ சார்ந்திருந்து,அக்காலம்
பூண்டிருந்த கோலங்கள் போனதின்று -- ஆண்களுடன்
போட்டிபோட்டு முன்னேறும் பொன்னான காட்சிகளை
ஏற்றார் எழுச்சியுடன் இங்கு.

தாரணியைக் காப்பாற்றும் தாய்

வீட்டையும் நாட்டையும் வேரிழக்கச் செய்கின்ற
காட்டுமழை நிற்க கரங்களைக் -- கூப்பியே
சீரடி சாய்பாபா வேண்டுகின்றேன்! நீதானே
தாரணியைக் காப்பாற்றும் தாய்.

28.10.2006 இரவு 9.00 மணி

தாயன்பின் சுவை

தாய்க்கடலில் துள்ளிவரும் தன்னிகரே இல்லாத
தூயதொரு அன்புத் துளிமுன்னே -- ஞாலத்தில்
பாற்கடலில் பொங்கிவந்த தேனமுதம் ஒன்றுமில்லை!
தோற்றுவிடும் அச்சுவையில் சொல்

சிகைதிருத்தும் நண்பர்

கத்திரியை,சீப்பை கலைநயமாய் ஓடவிட்டு
இப்படியும் அப்படியும் ஆட்டியே -- அற்புதமாய்
நம்சிகையைச் சீர்படுத்தி நம்மை அழகாகக்
கண்கவர மாற்றுகின்றார் காண்.

Monday, October 30, 2006

காகிதமும் பளுவாகும்

ஆடை அணிகலனை அன்றாடம் போட்டேதான்
நாடிச் சுமக்கும் நளினமெல்லாம் -- ஓடி
ஒளிந்துவிடும் நோய்வந்தால்! காகிதமும் இங்கே
பளுவாகும் மானிடனே பார்.

கடவுள்

இளமைப் பருவம்! கடவுளில்லை என்போம்!
வளரும் பருவங்கள் வாழ்வின் -- களத்தில்
உருட்டும் அனுபவத்தால் உள்ளம் கடவுளை
விரும்பிடும் தானாய் விரைந்து.

Friday, October 27, 2006

சமுதாயமே மாறு

கணவன் இறந்தாலும் காரிகையின் நெற்றி
மணக்கவேண்டும் மங்கலத்தை ஏந்தி -- வணங்கவேண்டும்
மன்பதையே!அக்கறையாய் மங்கையை நன்றாக!
துன்புறுத்திப் பார்க்கவேண்டாம் சொல்.

அரும்பே விருட்சமாகும்

இன்றோ அரும்பாய் இருப்பதாக எண்ணாதே
அந்த அரும்போ அவனியில் -- முன்னேறும்
நாளில்,அரும்பின்முன் நாம்நிற்கும் கோலத்தை
சூழ்நிலை ஏற்படுத்தும் சொல்.

உள்ளத்தில் நல்லதை ஏந்து

ஏற்பதும் ஏற்க மறுப்பதும் உன்மனமே!
காற்றடிக்கும் திக்கெல்லாம் காகிதமாய் --காற்றுடனே
செல்லுதல் நல்லதல்ல! சிந்தித்து நல்லதையே
உள்ளத்தில் ஏந்தி உயர்.

கோள்களின் சுழற்சி

வாழ்க்கைக் கணக்குகளை மாற்றிமாற்றிப் போட்டாலும் சூழ்நிலைக் கோள்கள் சுழற்சியால் -- கீழ்மேலாய் மாற்றம் நடத்தி மலைப்பை உருவாக்கும்! ஏற்றம் இறக்கம் இயல்பு.

நாவை அடக்கு

இப்பக்கம் அப்பக்கம் எப்பக்கம் சென்றாலும்
கொப்பளிக்க வைக்கிறத் கோபத்தை -- அப்பப்பா
நாக்கை அடக்கினால் நம்மிடத்தில் கோபந்தான்
மூக்கறுந்து வீழும் முறிந்து.

-நன்றி:உரத்தசிந்தனை இதழ்

உண்மையாய் இரு

காலில் விழவேண்டாம்! காவடித் தூக்கவேண்டாம்!
நாளும் துதிபாடும் நாவேண்டாம் -- வேளை
வரும்பொழுது கால்களை வாரிவிடும் எண்ணம்
ஒருநாளும் வேண்டாம் உணர் .

Thursday, October 26, 2006

இசையரும்பு அனுக்ஷ்நாராயணண் இசைத்தருவாய் வளர்க

சுரங்களில் ராகங்கள்! ராகத்தில் பாடல்
தரமாக வந்து தழைக்க -- விரல்கள்
அசைவினில் இன்னிசையை ஆள அனுக்ஷே!
இசைபோல நீடுவாழ்க இங்கு.

Wednesday, October 25, 2006

தித்திக்கும் மாம்பழத் தேன்

திருக்குறளின் நன்முறை திக்கெட்டும் வாழ
தெருக்குரலின் வன்முறை தேய -- வருகின்ற
சித்திரைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் ஆட்சியே
தித்திக்கும் மாம்பழத் தேன்.

( அமுதசுரபி ஏப்ரல் இதழில் வெளிவந்த கவிதை )

பருந்திடம் கோழி

எந்தமானம் சென்றாலும் இங்கே செரிமானம்
மந்தமானால் வாடி வதங்கிடுவோம் -- அந்த
ஒருநாள் யுகம்போல் உலகில் நகரும்!
பருந்திடம் கோழியாவோம் பார்.

உலகம் தூற்றும்

வளைந்து நெளிந்து வடிவம் குனிந்து
அலைந்து திரிந்தே அடையும் -- மலையளவு
மாப்புகழும் இங்கே மடுவின் துளியாகும்!
தூற்றும் உலகம் உணர்ந்து.

குடிக்காதே!

"நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல உயிருக்கும்
கேட்டை விளைவிக்கும் கேளுங்கள்" -- போட்டேதான்
விற்கும் மதுவினத்தை வேட்கையுடன் வாங்குகின்றார்!
மக்கள் திருந்தினால் வாழ்வு.

வேதனைக்கே ஊற்று

கார்களில் வண்டிகளில் போகும் பொழுதெல்லாம்
ஆர்வமுடன் செல்போனை அன்றாடம் -- நேர்த்தியாய்
காதுகளில் வைத்தே கதையளக்கும் கோலங்கள்
வேதனைக்கே ஊற்று! விளம்பு.

பண்பே இனிது

படிக்கப் படிக்கப் பரந்தமனப் பான்மை
அடித்தளம் ஆகவேண்டும் அம்மா -- படிப்பெதற்கு
வக்கிரங்கள் வாலாட்டும் கோலத்தை வாழ்த்திசைக்க?
எக்கணமும் பண்பே இனிது.

கல்வியும் அனுபவமும்

அறியாமை ஆரிருளைப் போக்கும் கல்வி
நெறிப்படுத்தும் நேசமிகு தந்தை -- செறிவான
நல்ல அனுபவம்,நம்மை அரவணைத்துக்
கல்லைக் கனியாக்கும் தாய்.

மாறுமா?

முன்னால் எரிமலை! மூச்சிழுத்துப் பின்புறத்தில்
சென்றால் நிலநடுக்கம்! தேக்கமுடன் -- இந்தநிலை
இப்படித்தான் வாழ்வில் இருக்கிறது என்செய்ய?
எப்படி மாறும் இயம்பு.

காப்பது யார்?

முதியோர்கள் வாழ்வின் முழுச்சுமையாய் மாறும்
கதிவந்தால் காப்பதுயார்? பாவம் -- நதியாக
வாழ்ந்தும் கலக்கும் கடல்நாடி ஏங்ககுகின்ற
சூழ்நிலைக்கே ஆளானார் சொல்.

Tuesday, October 24, 2006

மன இணக்கம் கொள்

பணஇறுக்கம் வந்தாலோ பாதகம் இல்லை!
மனஇறுக்கம் வாட்டி வதைக்கும் -- எனவே
மனஇணக்கம் கொண்டே மகிழ்தல் நலம்!
தினந்தோறும் நிம்மதிதான் செப்பு.

ஒற்றுமையை முன்நிறுத்து

ஒருகையின் அய்ந்துவிரல் ஒன்றாய் உளதோ?
ஒருகுடும்பம் என்றால் உரசல் -- கருத்துமோதல்
உள்ளாடும் ! என்றாலும் ஒற்றுமையை முன்நிறுத்தும்
உள்ளுணர்வு வேண்டும் உணர்.

Monday, October 23, 2006

பண்பைப் பார்த்து வாழ்

அருகருகே வாழ்ந்தாலும் அந்நியராய் நெஞ்சில்
செருக்குடனே வாழ்தல் சிறப்போ?--கருத்துடன்
பாலெது? நீரெது? பண்புகளைப் பார்த்தேதான்
வாழ்தல் அறிவுடைமை வாழ்.

வீட்டுக்கு வீடு

வீட்டுக்கு வீடிங்கே வீணான சச்சரவு !
பாட்டுக்குப் பாட்டா ! இனிமைதான் -- ஈட்டிபோல
பாய்ச்சலுக்குப் பாய்ச்சலோ இல்லறத்தில் நிம்மதியை
தேய்த்து மறைத்துவிடும் செப்பு.

விடுதலையில் அர்த்தமில்லை!

பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒருநிலை
துக்கம் வழியும் துயர்நிலை -- இக்கொடுமை
உள்ளவரை நாட்டில் உலவும் விடுதலையில்
எள்ளளவும் அர்த்தமில்லை இங்கு

மடுவும் மலையாகும்

நம்பிக்கை நாற்றுகளை நட்டுவைத்துக் காத்திருப்போம்!
என்று எவைகள் எழுச்சியுடன் -- விண்ணைத்
தொடும் விருட்சமாகும்? காலம் கணிக்கும்!
மடுவும் மலையாகும் பார்.

இல்லத்தரசி


மனைவி இளமையில் நந்தவனம் ! முதுமையில் கைத்தடி !
சன் டி வி தீபாவனி பட்டிமன்றத்தில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறிய கருத்து.-------------இந்தக்கருத்தை மையமாக வைத்து எழுதிய வெண்பா----------------------------------


இளமையில் நந்தவனம் இல்லத் தரசி !
தளர்ந்து தவிக்கவைத்துப் பார்க்கும் -- களமாம்
முதுமையில் கைத்தடி யாவாள் முனைந்து !
இதுதான் மனைவியின் மாண்பு.

இளமையில் நந்தவனம் இல்லத் தரசி !தளர்ந்து தவிக்கவைத்துப் பார்க்கும் -- களமாம்முதுமையில் கைத்தடி யாவாள் முனைந்து !இதுதான் மனைவியின் மாண்பு.இளமையில் நந்தவனம் இல்லத் தரசி !
தளர்ந்து தவிக்கவைத்துப் பார்க்கும் -- களமாம்
முதுமையில் கைத்தடி யாவாள் முனைந்து !
இதுதான் மனைவியின் மாண்பு.

Saturday, October 21, 2006

பக்குவம்

நூறு வயது நொடிப்பொழுதும் சோராமல்
பாடுபடும் நல்லுடலும்,பாரிலே -- கூடுவிட்டு
இன்னுயிர் இன்றே பிரிந்தாலும் ஏற்கின்ற
பொன்மனமும் வேண்டும் புரிந்து.

RICHGIFTS

RICH GIFTS WAX POOR
WHEN GIVERS PROVE UNKIND.
--SHAKESPEARE

கொடுப்பவர்கள் இங்கே கொடுப்பதைத் தேளின்
கொடுக்கெனக் கொட்டிக் கொடுத்தால் -- கொடுத்தது
என்னவிலை என்றாலும் வாங்குவோர் நெஞ்சமோ
இன்னலில் ஏங்கும் இடிந்து.

அறிவுடைமை!

எப்படி உன்வாழ்க்கை இங்கே அமைகிறதோ
அப்படி வாழ்தல் அறிவுடைமை -- எப்படியும்
என்றும் வளைத்திடலாம் என்றுமட்டும் எண்ணாதே!
பண்பால் வளைவதே வாழ்வு.

துரும்பைத் தூணாக்காதே!

துரும்புகளைத் தூணாக்கித் துன்பத்தில் வாடும்
ஒருநிலை ஏற்றால் உலகம் -- இருள்மயமாய்த்
தோன்றும்! மனதைத் துவளவைத்து சோதிக்கும்!
வேண்டாத கற்பனையை வெட்டு.

அற்ப அரசியல்

மதவெறி எல்லாம் அரசியல் வாதி
நடத்துகின்ற நாடகம்!நாடே! -- அகங்குளிர
மக்கள் மதஇணக்கம் கொண்டுதான் வாழ்கின்றார்!
அற்ப அரசியலைச் சாடு.

Thursday, October 19, 2006

சீரடி சாய்பாபா சிந்தனையைப் போற்றுவோம்

நம்பிக்கை நல்ல பொறுமை இவையிரண்டும்
நம்பிவரும் பக்தருக்கு நன்னெறிகள் -- என்றென்றும்
சீரடி சாய்பாபா சிந்தனையைப் போற்றினால்
தாரணியில் வாழ்வார் தழைத்து.

தாழ்வு நிலையில்லை

ஒருகதவு மூடிவிட்டால் உள்ளம் உடைந்து
இருட்டுக்குள் வாழ்வதுபோல் எண்ணி -- உருகாதே !
வாழ்வில் மறுகதவு இங்கே வழிகாட்டும் !
தாழ்வு நிலையில்லை சாற்று.

சிக்கன் குனியா வெண்பா

முட்டிக்கு முட்டி முடக்கும் வலியெடுக்கும்
தத்தித் தத்தி நடக்கவைக்கும் -- அப்பப்பா
சிக்கன் குனியாவை தேக்கும் கொசுவினத்தை
எப்பொழுது யாரழிப்பார் இங்கு.