Friday, June 25, 2010

செம்மொழி மாநாடு

செம்மொழி மாநாடு
மேடைப் போலிகள் திரை விலக்கட்டும்!
============================================
மேடையிலே பேசுகின்றார் செந்தமிழே வாழ்வென்று!
மேடையை விட்டே இறங்கியதும் உள்ளத்தில்
வேடமிட்ட போலித் தனமோ உறுத்திட
வேகமாகச் செல்கின்றார் பார்.

தனிமனிதர் வீடுகளில் ஆங்கில மோகம்
அணிவகுக்க நாள்தோறும் மக்களின் வாழ்வில்
புனிதத் தமிழோ தலைகுனிந்து நிற்க
மனங்கள் கணக்கிறதாம்! ஓ!

எத்தனைப் பேச்சாளர் தங்கள் குழந்தைக்கு
முத்தாய்த் தமிழ்ப்பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார்?
எத்தனைபேர் தங்கள் குழந்தை தமிழ்வழியில்
கற்பதற்குத் தூண்டியவர்?சொல்.

தங்கள் குழந்தைகள் தங்களை ஆங்கிலத்தில்
இங்கழைக்க உள்ளம் மகிழாமல் தாய்த்தமிழில்
என்றும் அழைத்திட வேண்டும் எனும்நிலையை
கொண்டுவந்தோர் எத்தனைபேர்? கூறு.

வீட்டிற்குள் தங்கள் குடும்பத்தை மாற்றாமல்
நாட்டிற்குள் மாற்ற முயல்வதோ?-- ஏட்டுச்
சுரைக்காய் கறிசமைக்க ஆகுமோ? போலித்
திரைவிலக்கி உண்மையாய் வாழ்.

பேசுவதோ ஒன்றாகும்! செய்வதோ ஒன்றாகும்!
கூசாமல் போலி முகத்திரையை ஏந்துவதேன்?
ஊசலாடும் உள்ளமின்றி சொல்பவர்கள் செய்யட்டும்!
தேசமே பின்பற்றும் அன்று.

சொந்தச் செலவில் பொது மக்கள் சென்றனர்!
அந்த உணர்வே தமிழுணர்வு! மற்றவர்கள்
செஞ்சோற்றுக் கடன்தீர்க்கச் சென்றவரே! அல்லாமல்
தன்னல மற்றவரோ? சாற்று.

மதுரை பாபாராஜ்

வாங்கும் சக்தியின் இடைவெளியை நீக்கு!

===========================================
தனிமனிதன் இங்கே பொருள்வாங்கும் சக்தி
கணிசமாய் நாளும் இடைவெளி கண்டால்
கனியாது தாயே! சமத்துவ வாழ்வு!
கனியவைக்கும் திட்டத்தைத் தீட்டு.

தனியார் நிறுவனத்தின் சம்பளமும் நாட்டின்
இமையாம் மற்றவையின் சம்பளமும் என்றும்
இணையாமல் மாபெரும் வேறுபாட்டில் நின்றால்
மனைதோறும் நிம்மதி ஏது?

சொத்துக்கள் தம்மை மலைபோல் குவிக்கின்ற
வக்கிரத்தைச் சட்ட விதிகளின் வாயிலாக
அக்கறை கொண்டேதான் கட்டுப் படுத்தவேண்டும்!
தப்பாமல் செய்யவேண்டும் சாற்று.

நாளுக்கு நாளிங்கே பேதங்கள் கூடினால்
ஊழ்வினை என்றுரைத்தே காலம் கடத்துவதோ?
வாழ்வில் வறுமை நிலையின்றி வாழவேண்டும்!
வாழவைக்க வேண்டும் அரசு.

மதுரை பாபாராஜ்

யார் காரணம்?

=========================
சிலருக்கு வாழ்க்கை மணம்வீசும் சோலை!
பலருக்கு நாளும் அனல்வீசும் பாலை!
கலங்கவைக்கும் ஊழியாய் இங்கே பலரைப்
புரட்டி எடுப்பதன்? கூறு.

தரணியில் வாழ அனைவருக்கும் வாய்ப்பைத்
தரமறுக்கும் தன்னலத்தைக் கட்டவிழ்த்து விட்டே
அரசும் சுயநலக் கும்பலும் இந்தக்
கலக்கத்தைத் தோற்றுவித்தார் காண்.

Sunday, June 13, 2010

நோயின் வலிமை

====================
அச்சமென்றால் என்னவென்று கேட்கும் மனிதனும்
உச்சகட்ட நோயால் உடலில் வலியெடுத்தால்
கத்திக் கதறிடுவான்! அஞ்சி நடுங்கிடுவான்!
இத்தரணி நீதி உணர்.

எப்படிச் சீறிச் சினந்தவனும் நோய்வந்தால்
பெட்டிக்குள் பாம்பாய்ச் சுருண்டு படுத்திடுவான்!
நெற்றியடி வாங்கி அசையாமல் வீழ்ந்திருப்பான்!
தத்தியே தத்தளிப்பான் சாற்று.

மதுரை பாபாராஜ்

Saturday, June 12, 2010

பெரும்புள்ளி கரும்புள்ளி

=============================
கள்ள மனங்கொண்டு கள்ளப் பணம்சேர்ப்பார்
அள்ளி வழங்குகின்ற வள்ளலாய் நாள்தோறும்
நல்லபெயர் வாங்கி பெரும்புள்ளி யாகத்தான்
துள்ளி வலம்வருவார்! சொல்.

பெரும்புள்ளி என்றே பெயரெடுத்த போதும்
கரும்புள்ளி என்றே சமுதாயம் தூற்றும்!
இருக்கும் வரையில் தனிமனிதப் பண்பில்
சரியாமல் வாழவேண்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்

Wednesday, June 02, 2010

வளைவதற்குக் கற்றுக்கொள்

==============================
தந்தைக்கோ தாய்க்கோ உடல்நலம் பாதித்தால்
இன்றைய சூழ்நிலையில் வேலையை விட்டுவிட்டு
தொண்டுசெய்ய கூடவே நிற்பதற்கு வாய்ப்பில்லை!
அன்பில்லை என்றா பொருள்?

இருவரும் வேலைக்குப் போகும் கோலம்!
ஒருநாள் விடுப்பும் கிடைக்காத சோகம்!
பரபரப்பு வாழ்க்கை! குழந்தைக்குக் கூட
அரவணைப்பு கானல்தான் பார்.

குடும்ப நிகழ்ச்சிக்குப் போவதற்கும் நேரம்
ஒதுக்க முடியாத காலகட்டம்!பாவம்!
உறவினர் யார்யார்? குழந்தை விழிக்கும்!
கதவுகளை மூடியது யார்?

கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்ட
காட்டுச் சமுதாயப் போக்கில் நடைபோட்டு
வேற்றுமைக்குள் வேற்றுமையை நாற்றுநடும் உள்ளங்கள்!
ஆத்திரமும் வன்பகையும் சொத்து.

குழந்தைகள் எல்லாம் கவனிப்பார் இன்றி
வளர்கின்ற காலமிது! பெற்றோரும் இந்த
வளையத்தில் வாழ்கின்றார்! மாற்றத்தை ஏற்று
வளைவதற்குக் கற்கவேண்டும் இங்கு.

புகழுக்கு வேர்!

====================
கறுப்பு நிறமா? சிவப்பு நிறமா?
நிறத்தில் சிறப்புகள் இல்லை--சிறப்புகள்
உந்தன் உயர்ந்த குணங்களில்தான் உள்ளன!
பண்பே புகழுக்கு வேர்.

உறவைப் பகைக்காதே!

=======================
உறவும் பகையும் நடக்கும் வரைதான்!
முடங்கிப் படுத்துப் படுக்கையில் வீழ்ந்தால்
உறவோ விலகும்! பகையோ நகைக்கும்!
உறவைப் பகைக்காமல் வாழ்.

தன்னலமே அரசியல்!

========================
இப்பக்கம் சேர்ந்திருந்தால் அப்பக்கம் உள்ளோரை
எப்பொழுதும் சாடுவார்! அப்பக்கம் சென்றுவிட்டால்
அப்பக்கம் உள்ளோரை எப்பொழுதும் வாழ்த்துவார்!
கட்சி அரசியலைப் பார்.

நிரந்தர நாண்பர், பகைவர்கள் என்றும்
அரசியலில் இல்லை எனச்சொல்வார்! நாமும்
தலையாட்டி பொம்மைகளாய்ப் பார்த்து ரசிக்கும்
நிலைதானே நாட்டிலே இன்று.

சூழ்நிலையைத் தங்களுக் கேற்றற்போல் மாற்றியே
வாழ்வில் வளைந்து வளங்காணும் அற்புதத்தை
நாளும் நடத்தும் அரசியல் வாதிகள்தான்
நாட்டை நிமிர்த்துவா ரோ?

வாழ்வைக் கசக்காதே

==========================================
உறவுகளின் கூட்டணிப் பின்னல், குடும்பம்!
நிறைகளும் உண்டு!குறைகளும் உண்டு!
நிறைகளைத் தேக்கு!குறைகளை நீக்கு!
நிறைவுடன் வாழ்தலே வாழ்வு.

குறைகளைத் தேக்கி உறவைப் பகைத்து
விறைப்புடன் வாழ்ந்தால் நிம்மதி போகும்!
சிறகை இழந்த பறவையைப் போல
நடைதடு மாறும் உணர்.

கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் தங்களுக்குச்
சீட்டு கொடுத்தால்தான் அங்கே இருப்பார்கள்!
சீட்டு தரவில்லையா கூட்டணி மாறுவார்!
வேட்டுவைப்பார் கொள்கைக்குத் தான்.

வாழ்க்கையில் அப்படி வாழ முடியாது!
சூழ்நிலைகள் என்றுமே சீராய் இருக்காது!
சூழ்நிலைக் கேற்றவாறு பக்குவம் கொள்ளவேண்டும்!
தாழ்வு மனத்தை விலக்கு.

குழந்தைகள் சண்டையில் மூக்கை நுழைத்து
களமமைக்க முற்பட்டால் சச்சரவே மிஞ்சும்!
குழந்தை அடுத்த நொடிப்பொழுதில் ஒன்றாய்
விளையாடும் சண்டை மறந்து.

வம்பிழுத்த பிள்ளையும் பாதித்த பிள்ளையும்
ஒன்றாய் இணைந்து விளையாடும்! கைகொட்டி
நன்றாய் சிரிக்கும்! நம்முடைய மூக்குடையும்!
கண்டும்கா ணாமல் இரு.



கிடைக்கின்ற நேரத்தில் தந்தையும் தாயும்
இசைமீட்டும் இன்பமாய் மாறி ,குழந்தை
யுடன்சேர்ந்தே ஆடியும் பாடியும் வாழ்ந்தால்
விடைகொடுக்கும் ஏக்கந்தான் பார்.

தந்தையும் தாயும் குமுறிச் சினந்தேதான்
தங்களுக்குள் சண்டையிடும் கோலத்தைப் பார்த்திருந்தால்
பிஞ்சு மழலை அதிர்ச்சியில் வாழ்ந்திருக்கும்!
கெஞ்சும் விழிகளால் பார்த்து.

இத்தகைய ஏக்கம் குழந்தையின் நெஞ்சத்தில்
எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றேதான்
பெற்றோர்கள் சிந்தித்து நாளும் செயல்பட்டால்
அற்புதந்தான் இல்லறம் இங்கு.

அச்சத்தில் வாழும் குழந்தைகள் உள்ளத்தில்
எப்பொழுதும் ஊன்றும் அழுத்தங்கள்! அந்நிலையில்
அக்குழந்தை ஏங்கும் அடுத்தவரைப் பார்த்துதான்!
அச்சமின்றி வாழப் பழக்கு.

எடுத்ததற் கெல்லாம் சினங்கொண்டு சீறி
மடுவை மலையாக்கி வாழ்வைக் கசக்கும்
கொடுமையோ இல்லறத்தில் நல்லதல்ல! தென்றல்
நடைபோட வாழப் பழகு.

புலவரின் ஆசிகள்

====================
மண்விட்டு மண்சென்று பூவோ வளர்வதுபோல்
பெண்ணிங்கே இல்லறத்தை ஏற்றதும்
மிகச்சிறந்த உவமை

மாமனார்,மாமியார்,நாத்தனார், தன்கணவன்
தேனருவி வாண்டுகள் எல்லோர்க்கும் நல்லவளாய்
ஆனமட்டும் ஆவதற்கு நாட்டியம் ஆடுகின்றாள்!
பூமகள் பம்பரந் தான்.
ஒய்யார நடைபோடும் உன்னத வெண்பா

செங்கைப் பொதுவன் அடிகள்

சமுதாயக் கோடரிக் காம்பு!

==============================
எந்த உணவுப் பொருளெனினும் நம்நாட்டின்
சந்தைக்குள் விற்பனைக்கு வந்திறங்கும் முன்னாலே
நன்கு பகுப்பாய்வு செய்தே அதன்தரத்தைக்
கண்டுணர்ந்து உண்மையைச் சொல்.

சந்தைக்கு வந்தபின்பு தீமையைப் பட்டியலாய்
என்னதான் தந்தாலும் உட்கொண்டு பாதித்த
சின்னஞ் சிறுகுழந்தைக் கூட்டம் பலியாடா?
என்னகுற்றம் செய்தார் அவர்?

சந்தைக்குள் விற்கலாம் என்ற அனுமதியை
இங்கே கொடுத்துவிட்டால் அப்பொருளில் எக்குறையும்
இம்மி அளவும் இருக்கவே கூடாது!
இங்கே இருக்கிறதா? சொல்.

வேண்டியவர் வேண்டாதோர் என்றே நிறுவனத்தின்
பின்புலத்தைப் பார்க்காமல் அஞ்சா நடுநிலையில்
உண்மையைக் கண்டறிதல் என்றும் கடமையாம்!
உண்மைக் கொடியை உயர்த்து.

நலத்திற்குத் தீமை விளைவிக்கும் என்றால்
முளையிலேயே கிள்ளி தடைவிதிக்க வேண்டும்!
களைபோல வளரவிட்டு வேடிக்கை பார்த்தால்
குலமே அழியும் உணர்.

ஊடகங்கள், செய்தி இதழ்கள், விளம்பரங்கள்
வீடறிய நாடறிய இந்தப் பொருளெல்லாம்
கேடில்லை என்றுரைத்த பின்னால் சிலநாளில்
கேடென்றால் யார்பொறுப்பு ?சொல்

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமநதானே?
சட்டத்தை இங்கே ஒதுக்கிவிட்டு -- எப்படியோ
சந்தைக்குள் விற்கட்டும் என்றே அனுமதி
தந்தவர்தான் என்றும் பொறுப்பு.

தந்தவர் யாரெனினும் பாரபட்சம் இல்லாமல்
தண்டிக்க வேண்டுமிங்கே! வாழும் உயிருடன்
கண்டபடி இங்கே விளையாடும் நீசர்கள்
மன்பதையின் கோடரிக் காம்பு..

மதுரை பாபாராஜ்

அனலானாள் ஆரணங்கு !

==============================
மண்விட்டு மண்சென்று பூவோ வளர்வதுபோல்
பெண்ணிங்கே இல்லறத்தை ஏற்றதும் பண்புடனே
தன்வீட்டை விட்டுப் புகுந்தவீடு செல்கின்றாள்!
கண்ணீரின் ராகம் பிரிவு.

வாழ்க்கை கிடைத்துவிட்ட இன்பத்தில் நாள்தோறும்
சூழ்நிலைப் போக்கைப் புரிந்து புகுந்தவீட்டில்
காலத்தை வெற்றிபெறும் கோலத்தில் தன்னைத்தான்
தாயமாய்த் தந்திடுவாள் சாற்று.

மாமனார்,மாமியார்,நாத்தனார், தன்கணவன்
தேனருவி வாண்டுகள் எல்லோர்க்கும் நல்லவளாய்
ஆனமட்டும் ஆவதற்கு நாட்டியம் ஆடுகின்றாள்!
பூமகள் பம்பரந் தான்.

இப்படிப் போனாலும் குற்றமென்பார்! அம்மங்கை
அப்படிப் போனாலும் குற்றமென்பார்! நாள்தோறும்
எப்படிப் போனாலும் குற்றமென்றால் என்செய்வாள்?
செப்புமகள் நின்றாள் தனித்து.

தனிமரமாய் நின்றவளை நோக்கிக் கணைகள்
அணியணியாய் வந்தாலும் தன்னை மணந்த
கணவனும் கண்டுக்கொள்ள முன்வர வில்லை!
அனலானாள் அங்கே நிமிர்ந்து.

மனித நேயத்துடன் மீள்குடியேற்றம் செய்யுங்கள்

=====================================================
ஈழத் தமிழரைப் பாருங்கள்!
இன்னல் வேதனை பாருங்கள்!
உண்ணச் சரியாய் உணவில்லை!
உடுக்க போதிய உடையில்லை!

சொந்த நாட்டில் அகதிகளாய்
சோகச் சித்திர மாகத்தான்
நொந்து நைந்த விரக்தியுடன்
நொறுங்கிப் போனார் நடைப்பிணமாய்!

உறவைப் பிரிந்தே தவிக்கின்றார்!
உறவைத் தேடி அலைகின்றார்!
உறவைக் காண வில்லையடா!
உலகம் இருளாய்த் தோன்றுதடா!

தமிழின மக்களைக் கடத்துகின்றார்!
தமிழ்க்குலக் கற்பை அழிக்கின்றார்!
அமைதி, நிம்மதி கானலடா!
அனுதினம் வாழ்க்கை அவலமடா!

செய்தித் தாளைப் படித்தாலே
திகைப்பும் கவலையும் பெருகுதடா!
கைகள் எட்டும் தூரந்தான்!
கண்ணீர் விழிகளின் ஓரந்தான்!

குருவிகள் கூட மரங்களிலே
கூடுகள் கட்ட உரிமையுண்டு!
அருமைத் தமிழர் வாழ்வதற்கு
அவர்தம் நாட்டில் உரிமையில்லை!


மிச்சம் சொச்சம் இருப்போரை
மீள்குடி யேற்றம் செய்யுங்கள்!
அக்கறை யோடு செயல்பட்டு
அவர்களை வாழ வைத்திடுங்கள்!

--- மதுரை பாபாராஜ்

Tuesday, June 01, 2010

வெளிப்படைத் தன்மை (TRANSPARENCY)

============================================
வெளிப்படைத் தன்மையில் சந்தேகம் என்றால்
உளியால் செதுக்கும் சிலையிலே ஊனம்
உளியால் வருவதுபோல் இல்லறம் நாளும்
களையிழந்து தோன்றும்!உணர்.
================================================

எரிமலையும் தூண்டிலும்!

================================================
தூங்குகின்ற எரிமலையைத் தூண்டிவிட்டுப் பார்ப்பதும்
தோன்றுகின்ற சூழ்நிலையின் உண்மை உணராமல்
வேண்டுமென்றே சந்தேகத் தூண்டிலுக்குள் சிக்குவதும்
மானிடனே ஒன்றுதான் பார்.
=========================================================

நீசமனம்!

==============================================
பாசக் கணக்கைக் கணக்கிடும் உள்ளமோ
காசுக் கணக்கைக் கணக்கிட்டுப் பார்க்காது!
பாசத்தைத் தள்ளிவைத்துக் காசைக் கறக்கின்ற
நீசமனம் வாழாது பார்.
==============================================

அசைவம் தவிர்!

==================
கோழியும் ஆடும் கதறக் கதறவே
பாவிகள் வெட்டித் தருகின்றார்!-- பாவிகள்
ஆவி பறக்க சமைத்தே விழுங்குகின்றார்!
ஈவிரக்கம் கொண்டே தவிர்.
===============================================

ரணகளம்!

ரணகளம்!
===============
மனசாட்சி காட்டுகின்ற நன்னெறியைத் தள்ளி
மனம்போன போக்கில் நடந்தால் துரோகம்
மனக்குரங்கை ஆட்டுவித்து வேடிக்கைப் பார்க்கும்!
ரணகளந்தான் வாழ்க்கைக் களம்.
=================================================

குழப்பத்தின் கானல் !

=========================
சுற்றிச் சுழல்கின்ற சூழ்நிலைகள் எல்லாமே
பற்றித் தொடரும் நிழல்களாய்த் தோன்றுதம்மா!
சுற்றும் மனமோ குழப்பத்தின் கானலைத்
தொட்டுச் சரிகிறது பார்.
===================================================

நெருடல்கள்!

=================
நெருடல்கள் உள்ளச் சுவரை உறுத்தி
நெருக்கும் நிலையேனோ தாயே!-- உருகித்
தவிக்கும் மனநிலையைத் தந்தவர் யாரோ?
புவியே!உரைப்பாயா ?சொல்.
==========================================

சிக்கலை உண்டாக்காதே !

============================
ஏற்கனவே சிக்கல்கள் எங்கிருந்து எப்பொழுது
தாக்கவரும் என்றிருக்கும் வாழ்விலே நாமாகத்
தோற்றுவிக்கும் சிக்கலையும் தாக்க அனுமதித்தால்
ஊற்றெடுக்கும் துன்பந்தான்!சொல்.