Wednesday, September 27, 2017

மறந்தபருவம்!

மூன்று பருவத்தில் ஆடித் திளைத்திருந்தோம்!
நான்காம் பருவத்தை எண்ண மறந்துவிட்டோம்!
நான்காய் முதுமை தழுவிய நேரத்தில்
தூண்டுகின்ற உள்ளம் விரும்பினாலும் ஒத்துழைக்க
ஊனுடல்  முன்வருமா? சொல்.

தந்தை முத்துசுப்பு அவர்களின் பிறந்தநாள்

21.09.2017

எனது தந்தை தெய்வத்திரு.முத்துசுப்பு அவர்களின் பிறந்தநாள் இன்று

21.09.1914 -- 11.11.1980

நீதியும் நேர்மையும் வாழ்வின் விழிகளாக
மேதினியில் நேர்வழியில் நாளும் உழைப்பாலே
ஈடில்லா பண்புடன் வாழ்ந்தவர் என்தந்தை!
பாடி வணங்குகிறேன் இன்று.




மதிப்பிற்குரிய கவிராயர் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் கூஜாவின் கோபம் எழுத்தோவியம்
பழைய நினைவலைகளைத் தட.டி எழுப்பியது.கூஜா வாழ்க்கையில்
பிடித்திருந்த இடத்தை அருமையாக படம்பிடித்துக் காட்டி இருந்தீர்கள்
.பாராட்டுகள்.வாழ்த்துகள்.

தங்கள் நட்புற்கினிய
மதுரை பாபாராஜ்

கூஜா

கூஜா வரலாறை வண்டமழின் சொல்மணக்க
தூதனுப்பி உள்ளத்தில் அக்காலக் காட்சிகளை
நாடறிய வைத்த கவிராயர் வாழியவே!
ஈடற்ற ஆற்றலுக்கு வாழ்த்து

Wednesday, September 20, 2017


எதுவும் உனதில்லை!

உடலே  உனதில்லை! சாம்பலாகிப் போகும்!
உடமைகள்? சொல்லவும் வேண்டுமோ? அம்மா!
உடன்வராதே! யாரோ அனுபவிப்பார்! நீயேன்
பதறித் துடிக்கின்றாய்? சொல்.


தமிழ் மீனவர்களும் இந்தியர்தான்!

இலங்கைக் கடற்படையின் நண்டுப் பிடியில்
கலங்கித் தவிக்கின்றார் மீனவர்கள் இங்கே!
கரம்நீட்டிக் காக்கும் கடமை மறந்தே
அரசுகள் வேடிக்கை பார்க்கும் அவலம்!
இவர்களும் இந்தியர் தான்.


வேலை முறைகள்

மனித இனத்தின் அடிப்படை வேலை முறைகள்
மனித உறவுத் தொடர்பிழையில் தொய்வைக்
கணிசமாக உண்டாக்கி உள்ளக் குமுறல்
அணிவகுக்கும் கோலத்தைப் பார்.

பெற்றோர் அரவணைக்க ஏங்கும் குழந்தைகள்!
பெற்றோர் முகம்பார்த்தே அன்னார் சிரித்துவந்தால்
கட்டிப் பிடிப்பார்! முறைப்புடன் வந்தாலோ
எட்டடி தள்ளிநிற்பார் ஏக்கமுடன் பாவமாக!
பெற்றோர் உணர்ந்தால் மகிழ்வு.


மதிப்பெங்கே?

மதிப்பின்றி வாழலாம் கண்மணியே நாளும்
மிதிபட்டு வாழ்தல் மடமை! வறண்ட
நதியினை யார்மதிப்பார்? தென்றலும் தன்னை
ஒதுக்கி நகரும்! உணர்.

பேசப் பழகு!

கனிவுடன் பேசு! கருத்துடன் பேசு!
இனிமையாய்ப் பேசு! தெளிவாகப் பேசு!
பணிவாகப் பேசு! துணிவுடன் பேசு!
மனதிலே உள்ளதைப் பேசு

Saturday, September 16, 2017

உளைச்சல் களம்!

வாழ்வில் உளைச்சலா? தீர்வுகள் காணலாம்!
வாழ்வே உளைச்சல் களமென்றால் கண்மணியே!
தீர்வுகளை எப்படி யாரிடம் காண்பது?
மூழ்கியே மூச்சுத் திணறு.

கவனம்தேவை

கவனம்தேவை!

முதுமைப் பருவத்தில் பக்குவம் வேண்டும்!
எடுத்ததற் கெல்லாம் உணர்ச்சிவசப் பட்டால்
படுத்துவது உங்களை மட்டுமல்ல உங்கள்
குடும்பத்தை என்றே உணர்.

கானல்

பதவி வரலாம்! புகழும் வரலாம்!
மடமட வென்றேதான் பட்டம் வரலாம்!
கதவைத் திறந்தேதான் காற்று விரைந்தால்
உதவாத கானல் இவை.

கசப்பே!

பழகப் பழக உறவும் கசக்கும்!
வளர வளர வரம்பும் கசக்கும்!
தளரத் தளர உடலும் கசக்கும்!
உழல உழல் உலகம் கசக்கும்

கடமையே கடவுள்

கடமையே கடவுள்!
---------------------------------------
நாத்திகம் பேசி இளமை கழிந்தது!
மாற்றமில்லை இன்பங்கள் துன்பங்கள் ஆண்டன!
ஆத்திகத்தில் நடந்தேன்! அதிசயங்கள் ஏதுமில்லை!
மாற்றமின்றி வாழ்க்கையில் இன்பதுன்பம் வந்தன!
ஆத்திகமோ நாத்திகமோ ஆற்றுவோம் நம்கடமை!
ஏற்போம் வருவதை நாம்.

Wednesday, September 13, 2017



காலம் நகர்த்துகின்ற  காய்கள்!

காலம் நகர்த்துகின்ற காய்களாக நாமிங்கே!
கோலத்தை மாற்றுகின்ற காலமே சிற்பியாகும்!
வேழம் எறும்பாகும்! காலம் எறும்பையும்
வேழமாக்கும் அற்புதமும் உண்டு.


பறவை- மனிதன்

கூடுகட்டி உட்சென்று நாள்தோறும் புள்ளினங்கள்
பாடுபட்டுத் தன்குடும்பம் வாழ பறந்துசெல்லும்!
வீடுகட்டி உட்சென்று நாள்தோறும் மாந்தர்கள்
பாடுபட்டுத் தன்குடும்பம் வாழ பறக்கின்றார்!
கூடெனினும் வீடெனினும் சோம்பல் துணையானால்
கேடுகள் சூழ்ந்து விடும்


குடி குடியை அழிக்கும்!

குடித்துக் குடித்துக் குடியே குடியாய்
குடித்தால் குடியோ குடியைக் குடித்துக்
குடியில் அமுக்கிக் குடும்பம் குழந்தை
குடியழிக்கும் அந்தக் குடி.


நன்மைக்கே!

நடந்ததை எண்ணி அசைபோட வேண்டாம்!
நடந்திடுமோ என்றெண்ணும் அச்சமும் வேண்டாம்!
நடப்பதோ இங்கே நடந்தேதான் தீரும்!
நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான்!

நிலவரம் கலவரமாகாது!

இணையர் ஒருவர்க் கொருவர் தினமும்
துணைக்கரம் நீட்டிக் குடும்பக் கடமை
வினைகளில் பங்கெடுத்தே அன்புடன்  வாழ்ந்தால்
மணக்கும் அமைதி மலர்.

TIBETAN PROVERB TRANSLATION


நன்றாக நீடுவாழும் வாழ்வின் இரகசியம்:
உண்பது பாதி! நடப்பதோ  இருமடங்கு!
அம்மா! சிரிப்பதோ மும்மடங்கு! உள்ளத்தின்
அன்பைப் பொழிவதோ அளவின்றி என்பதாகும்!
பின்பற்றி வாழப் பழகு.

ஓடிக் கண்டதென்ன?

ஏதேதோ எண்ணத்தை உள்ளத்தில் தேக்கித்தான்
ஏதேதோ தேடுகின்றார் எங்கெங்கோ ஓடுகின்றார்!
இன்பங்கள் துன்பங்கள் சூழ்ந்துவரும் வாழ்க்கையிது!
தேடல் முடியாத வாழ்வு.

தண்ணீர்த் துளியை மதிக்கவேண்டும்! செந்தமிழே!
விண்ணில் இருக்கும் மழைத்துளி என்றாலும்
கண்களின் கண்ணீர்த் துளியெனினும் நாம்மதிக்கும்
பண்புதான் நேயம் உணர்.

TRANSLATION

குருவிகள் எங்கே?

குருவிகள் எங்கே?

வீட்டுக்கு வீடு குருவிகள் கூடுகட்டி
பாட்டொலியை் கீச்சுகீச் சென்றே பாடியதைக்
கேட்டுத் திளைத்திருந்த காலகட்டம் மாறியது!
கேட்பதற்கே ஏக்கம் இருந்தும். குருவிகளின்
கூட்டத்தைக் காணவில்லை யே.


நா

அறநா அசையும் மறநா திகைக்கும்
மடநா மயங்கும் மறைநா  மணக்கும்
விடநா விழுந்தே அடநா ஒதுங்கும்
மடமட வெற்றிநா தான்.



பொறுப்பு

பொறுப்புள்ளோர் தங்கள் பொறுப்புகளை எல்லாம்
பொறுப்பின்றி நாளும் வெறுப்புடன் தள்ளி
பொறுப்பைப் புறக்கணித்தால் பொறுப்புகளே பொறுப்பை
உறுத்தலுடன் பார்க்கும் உணர்.

Tuesday, September 05, 2017

என்னசொல்ல?

விண்ணைப் பிளக்கின்ற கற்பனையில் ஓரரசு!
மண்ணுக்குள் மக்கிக் கிடக்கின்ற ஓரரசு!
கண்டும் பொறுமைஉடன் வாழ்கின்ற நனன்மக்கள்!
என்று விடியும் பொழுது?

நீட் பூட்டு!

வாய்ப்பூட்டை  வீட்டில் கழற்றிவிட்டு பேசினேன்!
கால்பூட்டை நானும் கழற்றி நடந்துவந்தேன்!
ஆவலுடன் கைப்பூட்டை நான்கழற்றி பார்த்தபோது
பாவிகள் நீட்டென்னும் மெய்ப்பூட்டைப் போட்டுவிட்டார்!
போலிச் சமஉரிமை தான்.

ஆசிரியரை வணங்குவோம்



ஆசிரியரை வணங்குவோம்!(05.09.2017)

கற்பிக்கும் ஆற்றல் உளிகொண்டு மாணவக்
கற்களை நன்கு செதுக்கிச் சிலையாக்கி
அற்புத மாந்தராய் வாழ்வில் உலவவைக்கும்
விற்பன்னர் ஆசிரியர்கள்! நாமோ மறவாமல்
தொட்டு வணங்குவோம் சூழ்ந்து.



உள்ளொளி பெருக்கு

இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணித்தான்
அல்லாடும் போக்கைக் கைவிட்டு நாள்தோறும்
உள்ளத்தில் ஊறிவரும் உள்ளொளியால் வாழ்க்கையில்
கவ்வும் இருள்நிலையை நீக்கு.


 கடையனே!

கடையனாக நின்றேன்! ஒருவனோ வந்தான்!
கடையனுக்குப் பின்னால் கடையனாக மாறும்
கடையனோ என்னையும் முந்தியே மீண்டும்
கடையனாக்கிப் பார்த்தான் சிரித்து.


வள்ளுவம்

நல்லவர்கள் நல்லவராய் வாழ வழிகாட்டும்!
பொல்லாதோர் நல்லவராய் மாற  நெறிகாட்டும்!
இல்லாமை நீங்க திசைகாட்டும்! நற்றமிழே!
வள்ளுவத்தின் சாரம் இது.

GIFTS OF NATURE

Chirping lovely birds
Dangling fragrant flowers
Swinging ocean waves
Moving colourful clouds
Enchanting rising Sun
Awesome shining moon
Hugging tender breeze
Gurgling river water
Jumping dancing water falls
Bends and curves of mountain path
Wandering forest animals
Playing innocent tender kids
All are gift of Nature
Full of boundless rapture