Tuesday, January 31, 2017

இறுதிக் கவிதை

இறுதிக் கவிதை!

பத்துக் குறள்கள் போதும்!

இறப்பேன்! இறந்தால் சடங்குகள் வேண்டாம்!
முறைகளும் வேண்டாம்! முடியிறக்க வேண்டாம்!
குறள்களில் பத்தை உரைத்தேதான் வாழ்த்து!
கடமைக்குச் செல்க விரைந்து.

மனைவி வசந்தாவின் மங்கலத்தை மாற்றவேண்டாம்!
நினைத்தாலே போதும்  அமாவாசை வேண்டாம்!
தனிமனித நல்லொழுக்கம் போற்றினால் போதும்!
மனதிலே மாசின்றி வாழ்.

குறைவின்றி என்னைக் குழந்தைகள் பார்த்தார்!
நிறைவுடன் பேரன்கள் பேத்தியும் சூழ
உறவுகள்  போற்ற உலகினில் வாழ்ந்தேன்!
கடந்தது வாழ்க்கை மறைந்து.

கவிதைப் பறவைச் சிறகை  விரிக்கக்
கவிஞன் பறந்தான் இனிமேல் கவிதைப்
பொழிவதோ இல்லை! எழுதிய பாக்கள்
வழிகளைக் காட்டினால் நன்று.

கானல்!

இன்பமே வாழ்க்கை என்றே
 இறுமாந் திருந்த போதோ
இன்னலின் கீற்று வந்தே
 இடித்தது உள்ளந் தன்னில்!

உண்மைதான் என்று நம்பி
 ஊர்வலம் போன போது
உண்மையே பொய்யாய் மாறி
 உறுத்திடச் செய்யக் கண்டேன்!

அக்கரைப் பச்சை என்றே
 அருகினில் சென்று பார்த்தேன்!
இக்கரையே மேல்தான் என்றே
 இதயமோ நகைக்கக் கண்டேன்!

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி!

எதிர்க்கட்சி என்றாலே ஆள்கின்ற கட்சி
எதுசெய்த போதும் எதிர்ப்பதா? இல்லை!
கடிதோச்சி மெல்ல எறிதல்போல் சொல்லிச்
செறிவுடன் என்றும் செயல்பட  வேண்டும்!
கடிவாளம் கைகளில் தான்.

உழைப்பும் பிழைப்பும்!

கரையான்கள் புற்றெடுக்க அந்தநல்ல புற்றில்
கருநாகம் வந்தே குடியேறி வாழும்
ஒருநிலைபோல் யாரோ உழைக்கும் உழைப்பில்
செருக்குடன் வாழ்வதா வாழ்வு?

Saturday, January 28, 2017

திருமணநாள் வாழ்த்து

எழிலரசன் -- சத்யபாமா மணநாள்

27.01.2017 -- வெள்ளிக்கிழமை

மகனும் மருமகளும்  நிக்கில் வருணும்
அகங்குளிர பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து!
குறள்நெறி போற்றி குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்-- வசந்தா
உடன்வாழ்த்தும் இதயங்கள்:
ரவி-- சுபா-- சுசாந்த்

நல்லொழுக்கம் போற்று!

தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்கும்
மனிதனின் வாழ்க்கையே சோலை- மனதைத்
தறிகெட்டுப் போகவிடும் வாழ்க்கையோ பாலை!
நெறிகளே நிம்மதிக்குத் தூது.

Sunday, January 22, 2017

பீட்டாவை ஓடவைப்பார்

ஊற்றெடுத்த மக்கள் புரட்சியின் வேகத்தால்
காற்றில் சருகாய்ப் பறக்கின்ற கோலத்தில்
பீட்டாவை ஓடவைப்பார் தேசத்தை விட்டேதான்!
காட்சி அரங்கேறும் காண்.

வாடிவாசலைத் திறந்துவிடு!

வாடி வாசல் திறந்தவுடன்
ஒவ்வொரு காளையும் பாய்ந்துவரும்

சீறித் துள்ளும் காளையினை
இளைஞர் கூட்டம் பின்தொடர்ந்து
திமிலைப் பிடித்தே அடக்கிடுவார்

அடங்காக் காளை மாடுகளோ
சிலரை இங்கே பந்தாடும்

அஞ்சா நெஞ்ச வீரர்கள்
மீண்டும் மீண்டும் முயன்றிடுவார்

நுட்பத் திறமை  உள்ளவர்கள்
அடக்கி நிமிர்வார் அடலேறாய்!

தமிழனின் வீர விளையாட்டு
வதைகள் சிறிதும் அதிலில்லை

வாடி வாசலைத் திறந்துவிடு
ஜல்லிக் கட்டை நடத்தவிடு.

Tuesday, January 17, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்

17.01.2017

கூடிவந்த கூட்டம்

வாடிவாசல் மூடியதால் போராட்டக் கோலங்கள்!
நாடிவந்து நல்ல முடிவளித்தால்  நல்லது!
கூடிவந்த கூட்டமிது! கூட்டிவந்த கூட்டமல்ல!
தேடிவந்து தீர்ப்பளிக்க வா.


 அரசே!
பிணக்குகளை நீக்கு
இணக்கத்தை உருவாக்கு

Sunday, January 15, 2017

கட்சிகள் வேரூன்ற

தமிழுக்குத் தொண்டாற்றும் கட்சிகள் மட்டும்
தமிழ்நாட்டில் வேரூன்றி நிற்கும் -- தமிழைப்
புறக்கணிக்கும் கட்சிகளை மக்களே இங்கே
புறக்கணிப்பார்! மெய்யென் றுணர்.

நெய்தல்- மருதம்- பாலை

நெய்தல் நிலக்கடலில் தண்ணீர் இருந்தாலும்
பொய்த்தது வானமென்றால் இங்கே மருதநிலம்
தொய்ந்து வறண்டேதான் பாலைபோல் காட்சிதரும்!
எல்லாம் இயற்கை செயல்.

Thursday, January 12, 2017

போகியே பொசுக்கு!

மதவெறியைப் போக்கிப் பொசுக்கட்டும்! நெஞ்சின்
பகைவெறியைப் போக்கிப் பொசுக்கட்டும்! தீமை
கடைவிரிக்கும் போக்கைப் பொசுக்கட்டும்! ஊழல்
முடைநாற்றம் போகப் பொசுக்கு

குதிரை

டக்கு டக்கு குதிரை
நடந்து செல்லும் குதிரை

ஓடும் போது டக்டக்டக்
ஓசை எழுப்பும் குதிரை

மேலே ஏறி உட்கார்ந்தால்
துள்ளிக் குதிக்கும் குதிரை

உணவாய் நாளும் புல்லையே
புசிக்கும் நல்ல குதிரை

கட்டுப் படுத்த கடிவாளம்
கட்டி விட்டால் அடக்கந்தான்

இல்லை என்றால் தறிகெட்டே
வெறியாய் ஓடும் குதிரை

வண்ண வண்ணக் குதிரை
வீட்டில் வளரும் குதிரை

குதிரையைக் கண்டால் குழந்தைகள்
குதித்துக் குதித்து மகிழ்வார்!

மொழியின் உயிர் எளிமை!

புலமையைக் காட்டி பயமுறுத்த வேண்டாம்!
எளிமையாய்ச் சொல்லி புரியவைத்தல் வேண்டும்!
தெளிவாய்ப் புரிந்தால் தமிழ்தான் வளரும்!
எளிமை மொழியின் உயிர்.

Tuesday, January 03, 2017

புத்தாண்டு கொண்டாட்டம்
நன்றிக் கவிதை
-----------------------------------------------
குரோவ் வளாகம் - 31.12.2016
-----------------------------------------------
பன்முக ஆற்றலை நன்கு வெளிப்படுத்த
பொன்னான வாய்ப்புகளை அள்ளி வழங்கிய
உங்களுக்கு நன்றிதனை
உள்ளத்தால் கூறுகின்றோம் !
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

புத்தாண்டு நாளில் வளாகத்தில் எல்லோரும்
புத்தெழுச்சி உற்சாகம் பெற்றே உலாவந்தார்!
அற்புதமாய் ஏற்பாடு செய்து மகிழவைத்த
அக்கறைக்கு வாழ்த்துப்பா பாடு.

மதுரை பாபாராஜ்
வைபவ் B2