Saturday, April 25, 2009

இதுதான் பண்பு!

நண்பர்கள் மத்தியில் நற்பெயர் வாங்குவதில்
என்றும் வியப்பில்லை ! கண்மணியே1-- உன்னுடன்
வேறுபடும் மாந்தரிடம் நற்பெயரை வாங்கிடக்
கூடுகட்டும் பக்குவமே பண்பு.

மதுரை பாபாராஜ்

எங்கும் கோடி! எதிலும்கோடி!

கோடிகோடி மக்கள் கடையராய் வாழ்கின்றார்!
வாடி வதங்குகின்றார்! மக்களுக்குத் தொண்டாற்ற
தேடிவரும் வேட்பாளர் கோடிகோடி வைத்துள்ளார்!
கோடிக்குக் கோடியா காப்பு?

கடையராய்க் கோடிமக்கள்! நாள்தோறும் அந்தப்
படையிலே கோடிவந்து சேரும் -- படையெடுக்கும்
வேட்பாளர் கோடியிலும் கோடிசென்று சேர்ந்திடும்!
நாட்டில் சமத்துவம் என்று?

மதுரை பாபாராஜ்

Friday, April 24, 2009

ராஜபக்சே ! சே! இழுக்கு!

மனிதனைத் தின்னும் கழுகுகள் கூட
மனிதனேயப் பண்பின் இரக்கத்தைக் காட்டும்!
மனிதமே இல்லாத ராஜபக்சே அந்தப்
புனிதமண் ஏந்தும் இழுக்கு.

மதுரை பாபாராஜ்

வெண்பாவும் வெங்காயமும்

வெண்பா எழுதுகின்ற நேரத்தில் வெங்காயம்
கொஞ்சம் கடையிலே வாங்கிவா என்றேதான்
சொன்னாள் மனைவிதான்! வெண்பாவைத் தள்ளிவைத்து
வெங்காயம் வாங்கிவந்தேன் இன்று.

உறிக்க உறிக்க விழிகளில் கண்ணீர்
தெறித்தே எரிச்சலுடன் ஓடும் -- கறியுடன்
சாம்பாரில் சேர்த்தால் சுவைமணக்கும்! நாமணக்க
வேண்டுமென்றே நாடும் மனம்.

மதுரை பாபாராஜ்

Tuesday, April 21, 2009

போரை நிறுத்து!

இலங்கை அரசே! இலங்கை அரசே!
போரை நிறுத்திவிடு!

இந்திய அரசே! இந்திய அரசே!
உடனே ஆணை இடு!

மௌனம் போதும் மௌனம் போதும்
இன்றே கலைத்துவிடு!

அப்பாவி மக்கள் சாவதைத் தடுக்கும்
விவேக நிலையை எடு!

சிந்திய ரத்தம் சிந்திய உயிர்கள்
போதும் போதுமடா!

ஒருவர்க் கொருவர் குற்றம் சாட்டிய
நிலையும் போதுமடா!

அனைவரும் திரண்டே ஒன்றாய் நின்றே
அழிவைத் தடுப்போமடா!

காரணம் சொல்லி மக்களைக் காக்கும்
கடமை தவறவேண்டாம்!

கடந்த காலம் இந்தியா காத்ததை
என்றும் மறக்கவேண்டாம்!

மதுரை பாபாராஜ்

Sunday, April 19, 2009

இலங்கையில் எங்களது பேரழிவைத் தடுப்பது யார்?

குடும்பம் குடும்பமாய்ப் பாதுகாப்பை நாடிப்
பதுங்கு குழிகளில் நாங்கள் ! -- சொடுக்கும்
மணித்துளிகள் எல்லாம் மரணத் துளிகள்!
மனித உயிர்க் கென்ன மதிப்பு?

விதவிதமாய்க் குண்டுகளை வீசி எறிந்தே
பதுங்கு குழியை மரணக் குழியாய்
ஒடுக்கும் நிலையெடுத்துத் தாக்குகின்றார்! கண்முன்
குடும்பம் சிதைகிறது! கூறு.

அழியும் விலங்கினத்தைக் காப்பதற்கும் திட்டம்
தெளிவாக நாடுகளில் உண்டு -- அழியும்
தமிழினத்தைக் காப்பதற்கு நாடுகளோ ஏனோ
இமைகளாய் மறவில்லை இங்கு?

கண்ணெதிரே எங்கள் குடும்பத்தார் சாகின்றார்!
அங்கேயே விட்டுவிட்டு ஓடுகின்றோம் -- துன்பக்
கழுகுகளின் கால்களில் சிக்கித் தவித்தே
அழுகின்றோம் நித்தமுந் தான்!

அடுத்தவீட்டுப் பேரழிவை வேடிக்கை பார்க்கும்
கொடுமையானப் போக்குள்ள பாரில் -- அடுத்தநாட்டுப்
பேரழிவை முன்வந்து நின்று தடுப்பாரோ?
சீரழியும் சித்திரமே! செப்பு.

அரசியல் வாதி வரலாற்றைப் பேசி
அரசிய லாக்குகின்றார் எம்மை!-- களவெற்றி
காண பகடைக்காய் ஆக்கி உருட்டுகின்றார்!
ஊனமனம் பெற்றதேன்? சொல்.

மதுரை பாபாராஜ்

வாழும் கலை!

கணவன் மனைவிக்குக் கண்பார்வை இல்லை!
தினமும் ஒருவர்க் கொருவர் -- துணையாய்க்
கைகளைப் பற்றி நடக்கின்றார்! வாழும்
கலையுணர்ந்து வாழ்கின்றார்! காண்.

அடுத்த வீட்டைப் பார்க்காதே!

அடுத்த வீட்டை உற்றுநோக்கி அங்கலாய்க்கும் போக்கைத்
தடுத்து நிறுத்தவேண்டும்! வாழ்வில் -- அடுக்கடுக்காய்
சிக்கல்கல் உன்னை வளைத்திருக்க, மற்றவரை
அக்கறையாய்ச் சாடுவதும் ஏன்?

உலகம் ஒதுக்கும்!

இமைகளாய் அன்று நினைத்தவர்கள் எல்லாம்
சுமைகளாய் எண்ணுகின்றார் இன்று -- தமிழே!
முதுமைப் பருவம் வெறுப்புக்கே வித்தோ?
ஒதுக்கும் உலகம் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

Friday, April 10, 2009

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற எண்ணிக்
களமமைத்துப் போராட இங்கே -- உளமாற
எந்த அரசியல் கட்சிகளும் இல்லையே!
தன்னலத்தின் வேரானார்! சாற்று.

தொப்புள் கொடியுறவு தத்தளிக்கும் கோலத்தில்!
இப்பொழுது சாவோமா? அப்பொழுது சாவோமா?
எப்பொழுது எப்படிச் சாவோமோ? என்றேதான்
எப்படியோ வாழ்கின்றார் அங்கு.

பாதுகாப்பு என்னும் வளையமே போர்க்களமோ?
வேதனைச் சாவு நெருக்குகின்ற சாக்காடோ?
பாதகர்கள் வல்லூறாய்ச் சுற்றுகின்றார் தாகமுடன்!
ஊடகத்தில் பார்க்கின்றோம்! நொந்து.

நாடுதோறும் மக்கள் கொதித்தெழுந்து பொங்குகின்றார்!
நாடுதோறும் ஆட்சிகள் கண்டித்தும் பார்க்கின்றார்!
ஏடுகளும் ஊடகமும் நாளும் குமுறுகின்றார்!
தூதுவிட்டும் பயனில்லை! ஏன்?

இலங்கைத் தமிழினத்தை வேரறுக்கும் போக்கு
கலங்கவைத்து நம்மைத் தேம்பி -- அழவைக்கும்
கோலத்தைத் தந்ததே ! இந்திய வல்லரசே!
காலத்தைத் தாழ்த்தாதே இங்கு.

இருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும்!
இரண்டு அரசுகளும் போர்க்கால வேகம்
சுழல நடவடிக்கை தன்னை முடுக்கிக்
கரங்கொடுத்துக் காக்கவேண்டும் இன்று.

மதுரை பாபாராஜ்
10.04.2009

Wednesday, April 01, 2009

அன்புள்ள தமிழ்மணம் நண்பர்களுக்கு

அன்புள்ள தமிழ்மணம் நண்பர்களுக்கு

எனது புதிய இணைய தளம் www.kaviyalaikal.com இன்றிலிருந்து பதிவுகள்
வெளியிடப்படுகின்றன. அனைவரும் படித்து கருத்துக்களை வழங்குமாறு
கேட்டுக்கொள்கின்றேன். மின் அஞ்சல் : spbabaraj@gmail.com

நட்பிற்கினிய
மதுரை பாபாராஜ்