Sunday, December 18, 2011

இதுதான் சன்றாண்மை!
==========================
நல்லது கெட்டது பாரபட்ச மின்றியே
எல்லாப் பொருளை நதிசுமந்து செல்வதுபோல்
எல்லா மனிதரையும் நாளும் அரவணைத்துச்
செல்வதே சாண்றாண்மைப் பண்பு.

நேர்வழிதான் நிம்மதி!
========================
குண்டுமணி என்றாலும் நேர்வழிதான் வந்தவழி
என்றாலோ ஏற்றுக்கொள்! இல்லை குறுக்குவழி
வந்தவழி என்றால் மறுத்துவிடு! ஏனென்றால்
நிம்மதி போய்விடும் இங்கு.

நடைமுறையை நம்பு!
=======================
பகைவன் எனினும் மதித்துப் பழகு!
கடையன் எனினும் புறக்கணிக் காதே!
தடைகள் வரினும் சுணங்கிட வேண்டாம்!
நடைமுறையில் நம்பிக்கை வை.

வேழமும் எறும்பாகும்!
=======================
சூழல் சிரிக்கிறது! நெஞ்சைப் பிழிகிறது!
வேழம் எறும்பாய்க் கூனிக் குறுகியது!
வேழம் நிமிர்ந்திடுமா? இல்லை எறும்பாக
வேழமே தேய்ந்திடுமா? செப்பு.

மனங்கொத்தி

மனங்கொத்தி! =================== கொத்திக் குடையும் மரங்கொத்திப் போலத்தான் 
கொத்திக் குடையும் குழப்பங்கள் உள்ளத்தைக் 
குத்திக் கிழிக்கும் மனங்கொத்தி யானதேன்? எப்படி யார்பொறுப்பார் சொல்?

இன்றைய சென்னையின் அலங்கோலம்!
=====================================
சாக்கடையும் குப்பையும் துர்நாற்றம் வீச
மூக்கையும் வாயையும் மூடித்தான் மக்களோ
தாக்குப் பிடிக்காமல் ஓடுகின்றார் சென்னையில்!
காட்சியைப் பார்த்தாயா இன்று?

எங்கெங்கு சென்றாலும் பள்ளங்கள் துள்ளவைக்கும்!
தங்குதடை இல்லாமல் குப்பைக் குவியல்கள்!
தண்ணீரோ தேங்க, கொசுக்களுக்குக் கொண்டாட்டம்!
சென்னையின் கோலத்தைப் பார்.

பொறுமையே இன்று பொறுமை இழந்து
வெறுத்தபோதும் மக்கள் பொறுமைக்கே நாளும்
பொறுமையைக் கற்றுத் தருகின்றார்! பாவம்
பொறுமையின் கோலத்தைப் பார்.

குழந்தையே பல்கலைக் கழகம்!
================================
இல்லற வாழ்வில் இறைவன் குழந்தைகளை
வெள்ளைச் சிரிப்பு, குறும்புகளுடன் தந்தருள்தல்
இவ்வுலகில் பெற்றோர் பொறுமை, கடமையை
நன்குணர வேண்டுமென்று தான்.

குழந்தை வளர்ப்பில் விவேகம், தியாகம்
தளமாக நாளும் சகிக்கின்ற தன்மை,
வெளிப்படைத் தன்மை இவைபோன்ற பண்பைச்
சலிக்காமல் கற்கவைக்கும் சாற்று.

குழந்தை நலமென்றால் பெற்றோர் மகிழ்வார்!
குழந்தைக்கு நோயென்றால் பெற்றோர் துடிப்பார்!
உலகிலே இன்பமும் துன்பமும் மாறும்
நிலையுணர்த்தும் பாடம்தான் இஃது.

குப்பை உணவு
(JUNK FOOD)

====================
குப்பை உணவென்று கூறும் பொருள்களை
அப்படியே அங்காடி தோறும் பளபளக்கும்
அட்டையில் தொங்கவிட்டுத் தூண்டி இழுக்கின்றார்!
விற்பதைக் கண்டிப்பார் யார்?

மருத்துவர்கள் தீங்கென்று சொல்கின்றார், ஆனால்
கருத்துடனே பிள்ளைகள் எல்லோரும் வாங்க
அலுக்காமல் விற்றே உயிரோடு நாளும்
விளையாடிப் பார்க்கின்றார் ஏன்?

ஊடகத்தில் காட்டும் விளம்பரத்தில் இப்பொருளில்
நேசமுடன் புத்துணர்ச்சி பொங்குமென்று சொல்கின்றார்!
ஈசனே! காக்கும் அரசாங்கம் இப்போக்கைச்
சாடவில்லை ஏனென்று சொல்?

உடல்நலத்தைப் பாதிக்கும் குப்பை உணவைத்
தடைசெய்ய வேண்டும் அரசாங்கம் இன்றே!
தடைசெய்தால் நல்லரசு இல்லையென்றால் தாயே!
கடைந்தெடுத்தப் பேயரசு தான்.

Thursday, December 15, 2011

என்றிந்த மாற்றம் வரும்?
=========================
குத்தாட்டம் ஆடுவது! கூத்தாட்டம் போடுவது!
வக்கிரமாய் ஆடுவது! மட்டமாக ஆடுவது!
இத்தகைய ஆட்டத்தை ஊடகங்கள் போற்றுவது!
இப்படியா செல்வது நாடு?

தமிழே தெரியாது! ஆனாலும் இங்கே
தமிழ்ப்படத்தில் மின்னும் நடிகையாய்த் தோன்றி
தமிழர்கள் பண்பாட்டைப் பற்றி திரையில்
மணிக்கணக்கில் பேசுவார் பார்.

விடுதலைநாள் மற்றும் குடியரசு நாளில்
அடுத்தடுத்தே காணும் திருவிழா நாளில்
அடக்கமின்றி ஊடகத்தில் தோன்றிச் சிரிப்பார்!
அசடுகளாய் மெய்சிலிர்ப்போம் நாம்.

பண்பாட்டைச் சீரழிக்கும் பாதகத்தை ஊடகங்கள்
புண்படுத்திச் செய்கின்ற போக்குகளை மாற்றவேண்டும்!
செந்தமிழைக் கொச்சையாக்கும் இந்தநிலை மாறவேண்டும்!
என்றிந்த மாற்றம் வரும்?

உண்மைத் துறவு!
==================
காவி யுடைதரித்து, நீளமான தாடிவைத்து
மேலே சடாமுடி தொங்கிடவே காட்சிதரும்
கோலங்கள் எல்லாம் வெளியுலகம் பார்ப்பதற்கும்
போலியாக வழ்வதற்கும் தான்.

வெளிப்புறக் கோலங்கள் தேவையில்லை! என்றும்
வெளிப்படைத் தன்மையுடன் உள்புறத் தூய்மை
ஒளியில் புலனடக்கம் கொண்டேதான் பற்றை
ஒழித்தலே உண்மைத் துறவு.

Monday, December 12, 2011

யார் மதிப்பார்?
=================================================
பெண்மைக்குள் மென்மைக் குணங்கள் இருக்கவேண்டும்!
வன்மையும் வன்மமும் கூத்தாட்டம் போடுமென்றால்
பெண்ணுக்கும் இங்கே மதிப்பில்லை! அத்தகையப்
பெண்மைக்கும் உண்டோ மதிப்பு?
==============================================

தீவிரவாதி இங்கே! தண்டனை எங்கே?
======================================
கலப்படம் செய்து பொருள்களை விற்றுப்
பிழைப்பவன், மக்கள் உயிருடன் நாளும்
விளையாடும் அற்பன்! கொலைகாரன்! என்றே
அழைத்தேதான் த்ண்டித்தல் நன்று.

சட்டத்தின் பொந்துகளில் ஓடி ஒளிந்துகொண்டு
சட்டத்தைத் தன்பக்கம் அய்யோ! வளைக்கின்றான்!
இப்படிப் பட்டோரைத் தீவிர வாதியென
சற்றும் தயங்காமல் கூறு.

குழந்தைகள் உண்ணும் பொருள்முதல் நாட்டில்
பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலும் நஞ்சைக்
கலப்பதுபோல் மூடன் கலப்படம் செய்கின்றான்!
கலப்படத்தைப் போக்குவது யார்?

அரசியலும், தேர்தலும், சாதிகளும் இங்கே
பயமின்றி சித்துவிளை யாட்டுகளை ஆடும்
களமாக நாட்டையே மாற்றியதால் தாயே!
கலப்படம் ஆள்கிறது பார்.

மக்களாட்சி மக்களைக் காப்பதற்கு மாறாக
மக்களை வாட்டி வதைகும் கலப்படத்தை
வெட்கமின்றி வாலாட்ட விட்டுவிட்டால் நம்பிக்கை
எப்படி வேரூன்றும் ? சொல்.

ஏசுநாதர்

அனைவருக்கும் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் =============================================== 25.12.2011 ================================================= 
ஆணவத்தின் வேரறுக்க வானரசின் வாரிசாக 
தேனகத்து ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் வானகத்து தேவதூதர் சூழ அவதரித்தார்! தேன்மழழைச் சித்திரத்தைப் பார்.

 எண்ணற்ற சோதனைகள் பின்தொடர வாழ்ந்தாலும் 
பண்புடனே சாதனையாய் மாற்றினார் ஏசுநாதர்! 
நன்னெறியில் மக்கள் அமைதியாய் வாழ்வதற்கே 
இன்னல்கள் ஏற்றார் உவந்து. 

 சிலுவையைத் தோளில் சுமக்கவைத்துப் பார்த்தார்! 
அழுக்குமன மூடர்கள் கல்லறையில் வைத்தே 
பெருங்கல்லால் மூடினார்! மூனறாம்நாள் ஆகா! 
பெருமகனார் அங்கே உயிர்த்தெழுந்தார்! நீசர் 
விழுந்தடித்தே ஓடினார் அங்கு. 

மாசற்ற ஏசுநாதர் காட்டுகின்ற நன்னெறியை நேசமுடன் பின்பற்றி வாழ்வில் உழைத்திடுவோம்! 
ஈடற்ற நற்பண்பை நாளும் கடைப்பிடிப்போம்! பாடுபட்டால் நற்பலன் உண்டு.

மதுரை பாபாராஜ்

Sunday, December 11, 2011

கண்ணீரே வடிகட்டி!
========================
உளைச்சலின் தாக்கத்தால் கண்ணீரோ பொங்கிக்
கரைபுரண்டே ஓடும்! வடிகட்டி யாகும்!
உளைச்சலும் நன்கு வடிந்துவிடும் அம்மா!
களைநீக்கும் நிம்மதி தான்.

சோர்வின் பிடியில்!
==================================
மனச்சோர்வா? இல்லை உடற்சோர்வா? என்றே
இனம்பிரித்துப் பார்க்க முடியாத நேரம்
மனமும் உடலும் இணைந்தேதான் சோர்வில்
தினமும் துடிக்கும் களைத்து.

மலைப்பு!
=======================================
மலையுயரம் பார்த்தும் மலைக்காமல் நிற்கும்
மலையேறும் வீரன் விலைவாசி என்னும்
மலையுயரந் தன்னைக் கணிப்பதற்கும் அஞ்சி
மலைத்திருப்பான் நாடே! சலித்து.

இத்தகைய முதுமை வரமே!
==========================
உடையும், உணவும், இருக்க இடமும்
கிடைத்தால் முதுமைப் பருவம் வரந்தான்!
கடைக்கண்ணால் பார்த்துப் பராமரிக்கும் சுற்றம்
கிடைத்தால் கொடுத்துவைத்தோர் தான்.

இத்தகைய முதுமை சாபமே
=============================
சற்றே ஒதுங்க நிழல்நாடி ஏக்கமுடன்
நிற்கும் முதுமைப் பருவத்தில் சுற்றமோ
முற்றும் ஒதுங்கிநின்றால் வாழ்க்கையே சாபமாகும்!
குற்றமென்ன செய்தார்? விளம்பு.

Thursday, December 08, 2011

மடமைக்குச் சான்று!
======================
குடியோ குடியைக் கெடுக்குமென்று சொல்லிக்
குடிப்பதற்கு டாஸ்மாக் திறப்பார்! புகைத்தல்
உடலுக்குத் தீங்கென்று சொல்லிப் புகைக்க
கடைகளில் எல்லாம் சிகரெட்டை விற்பார்!
மடமைக்குச் சான்றிதுதான் பார்.

உள்நாடு போதும் வெளிநாட்டுப் போதையில்
தள்ளாடு என்றே எலைட்கடையை நம்மரசு
துள்ளித் திறக்கிறது! வள்ளுவர், காந்திமகான்
நல்லவேளை இல்லையம்மா இன்று.
================================================

இதுவன்றோ சமத்துவம்!
===========================================
செல்வந்தர், ஏழை, நடுத்தர மக்களென்ற
எல்லைகள் இன்றியே ஒவ்வொரு வீட்டிலும்
தொல்லையும் சிக்கலும் தாக்கி உளச்சலில்
துள்ளவைத்துப் பார்க்கிறது பார்.
============================================

நிலத்தின் பெருந்தன்மை!
=========================
மிதித்து நடக்கின்றோம் உன்மேல் நிலமே!
மிதிக்கின்ற நாங்கள் விழாமல் இருக்க
மதித்துப் பெருந்தன்மைப் பண்புடன் காக்கும்
மதிப்பால் உயர்ந்துவிட்டாய் நீ.
===============================================

பூமியே உன்னைப்போல் யாருளார்?
==========================================
எவ்வளவு மக்கள் பிறந்து வளர்ந்தனர்!
எவ்வளவு மக்கள் இறந்து புதைந்தனர்!
எவ்வளவு மக்கள் பிறந்து வளர்கின்றார்!
எவ்வளவு மக்கள் இறந்துபோகப் போகின்றார்!
எவ்வளவு மக்கள் பிறந்து வளர்ந்திடுவார்!
எவ்வளவு மக்கள் இறந்து புதைந்திடுவார்!
அவ்வளவு மக்களையும் முக்காலும் பூமியே!
உன்னுள்ளே தாங்கியும் தாங்கத தயாராயும்
என்றும் பொறுமையுடன் காத்திருக்கும் உன்னைப்போல்
மண்ணுலகில் யாருளார்? சொல்.

Wednesday, December 07, 2011

அமைதியான வானமா இப்படி?
===================================
இடிமின்னல் மற்றும் புயல்மழையைத் தேக்கிப்
பிடித்துவைத்துக் காத்திருக்கும் வானம்!அதுவோ
விடியும் பொழுதும் இருட்டும் பொழுதும்
நடிக்கும் நடிப்பில் மயங்கிடும் நேரம்
வெடித்துப் புயலால், மழையால், இடியால்
அடித்தே உலகைப் புரட்டி எடுக்கும்
வெறியை உணர்ந்தால் அமைதியான வானம்
குடிவெறியால் கூத்தாட்டம் போடுதோ? என்றே
துடிக்கும் இதயம் மலைத்து.

மகளின் வேதனை!
======================
அப்பா குடிகாரர்! அம்மா குடிகாரி!
எப்போதும் சூழ்நிலை வீட்டில் இப்படி!
எப்படி வாழ்வேன் மகளாய்த் தலைநிமிர்ந்து?
குற்றமென்ன செய்தேன்? கூறு.

இப்படி உள்ளக் குடும்பம் அபூர்வந்தான்!
இப்படியும் வாழும் குடும்பம் இருக்கிறதே!
தட்டுத் தடுமாற பிள்ளையை நோகவைக்கும்
பெற்றோர் விலங்கினும் கீழ்.

மனைவியின் வேதனைத் தீ!============================
குடித்துக் குடித்துக் குடிகெட்டுப் போச்சு!
சகிக்க முடியாத வேதனைத் தீயில்
தகிக்கத் தகிக்க திகில் நிறைந்த வாழ்க்கை!
விடியல் தொடுவானந் தான்.
=====================================================

வானம் போல இரு!=======================
விண்பரப்பில் மேகங்கள் நாளும் திரண்டேதான்
விண்ணகத்தை முட்டினாலும் விண்ணுக்குச் சேதமில்லை!
மண்ணக்த்தில் மானிடனே! சிக்கல் இடித்தாலும்
விண்போல வேடிக்கை பார்.
========================================================

ஆகா!
=================
விண்ணகம் தாயெனின் சேய்கள் முகிலினங்கள்
கொண்டாட்டம் போட்டுத்தான் ஆடுதடா தாய்மடியில்!
வெண்ணிலவும் விண்மீனும் அங்கே ரசிக்கின்ற
கண்கவரும் காட்சியைப் பார்.
================================================

சூழ்நிலையின் கொத்தடிமை!
================================
உனக்குநான் என்றும் எனக்குநீ என்றும்
மனக்கணக்குப் போட்டு மகிழ்ந்திட வைத்துத்
தினமும் ரசித்திருப்பார்! காலச் சுழற்சி
மனதைப் பிரித்துவிடும் செப்பு.

வாழ்க்கைக் கடலில் அலைக்கழிக்க வைத்தேதான்
சூழ்நிலை எங்கெங்கோ ஊன்றவைத்துப் பார்த்திருக்கும்!
வேர்கொண்ட சுற்றங்கள் வேரிழந்து சென்றுவிடும்!
பாரில் இயல்பே இது.

வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு சூழ்நிலைகள்
கவ்வுகின்ற வாழ்வில் இறந்தவரைப் பார்ப்பதற்கும்
அம்மா! கடைசி மரியாதை செய்வதற்கும்
இங்கே முடியவில்லை யே.

ஊரறிய காகம் இறந்துவிடும்! காக்கையினம்
பார்த்தேதான் கூடிநிற்கும்! ஆனால் மனிதஇன
வாழ்க்கையில் அத்தகைய வாய்ப்பும் நழுவுதம்மா!
சூழ்நிலையின் கொத்தடிமை நாம்.

Saturday, December 03, 2011

மலராய் இரு!
==============
பறிக்கப் பறிக்கக் கலக்கமே இன்றிச்
செடியில் மலர்கள் மலர்ந்தன மீண்டும்!
இடிக்கும் துயரில் கலங்கும் மனிதா!
செடியில் மலராய் இரு.
=======================================
பூபாளம் கேட்குமா?
=======================================
குடித்துக் குடித்தே உருக்குலைந்தார் அப்பா!
அடிவாங்கி வாங்கி உருக்குலைந்தார் அம்மா!
படிக்க மனமிருந்தும் வாய்ப்பில்லை! நானும்
படிக்கவில்லை!காப்பவர் யார்?

காக்கும் இறைவனுக்கோ பார்த்தும் கருணையில்லை!
காக்கும் அரசுக்கும் கண்திறக்க நேரமில்லை!
காற்றடிக்கும் திக்கிலே வாழ்க்கை பறக்கிறது!
மாற்றத்தைக் காலமே! காட்டு.
===============================================

கலங்காதே!
============
கலங்கா திருப்பாய் மனமே! கலக்கம்
சலசலக்க வைக்கும்! நடுங்கவைக்கும்! ஆனால்
கலக்கத்தை நீயோ கலங்கிநிற்கச் செய்தால்
கலக்கம் கழன்றோடும் காண்.
=======================================

காலமே வழிகாட்டி!
=====================

காலம் வழிகாட்டும்! சற்றும் கலங்காதே!
காலம்தான் உன்னை வழிநடத்திஸ் செல்கிறது!
தோளுயர்த்து! சோர்வைப் புறக்கணித்துத் தூக்கியெறி!
காலம் கனிந்துவரும் காண்.
==========================================

சல்லடை!==============
நல்லதைக் கெட்டதைச் சல்லடைப் போலத்தான்
தெள்ளத் தெளிவாய்ச் சலித்தெடுத்து, மேல்தங்கும்
அல்லதை வீசிவிட்டு, கீழ்த்தங்கும் நல்லதை
உள்ளபடி ஏற்கப் பழகு.
==========================================

தள்ளாட்டம்!
============
துறவறத்தை நாடித்தான் காடுனோக்கிச் சென்றான்!
பறவைகளின் கூட்டுக் குடும்பத்தைப் பார்த்தான்!
துறவறத்தை உள்ளம் துறப்பதற்குத் தூண்ட
நடந்தானே வீடுநோக்கித் தான்..
===============================================

ஓ!==========
இறுக்கி இறுக்கி அழுத்த அழுத்த
நொறுங்கி நொறுங்கி முணங்க முணங்க
இறுக்கம் தளர்த்தி கரத்தை விரித்தேன்!
முறுக்குச் சிரித்தது பார்.
=====================================

இதற்குத்தானா?================
கண்கள் ஒளிமங்கும்! பற்கள் விழுந்துவிடும்!
பொன்மேனி எல்லாம் சுருக்கங்கள் தோன்றிவிடும்!
நன்நடை தள்ளாடும்! நோய்மொய்க்கும்! மானிடர்க்கு
மண்ணில் இறுதிநிலை இஃது.
============================================

பதர்களை எடுத்தெறி!
==========================

உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் பதர்களை
அள்ளி எடுத்தெறிந்து மாசற்ற தாக்கினால்
எல்லா எதிர்மறைச் சிந்தனையும் மாறிவிடும்!
உள்ளம் தெளிவாகும் பார்.

தனிமை!
================
முதுமைப் பருவத்தில் நாளும் தனிமை
உறுதுணை யாதல் இயல்புதான் அம்மா!
பொறுமைச் சுமையைச் சுமந்து பழகு!
வெறுமை விலகிவிடும் காண்.

அசைபோட்டுப் பார்த்திருப்போம் நம்காலந் தன்னை!
அசைபோட்டுப் பேச அழைத்தால், பார்ப்பார்
பசைபோல் ஒட்டுவாரோ என்றே ஒதுங்கிக்
கடைதாண்டிச் செல்வார் நெளிந்து.

பக்குவம் கொள்!
========================
கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் பேதமின்றி
வீட்டுக்கு வீடு விதவிதமாய்ச் சிக்கல்கள்1
போட்டி, பொறாமை , அகந்தை இவைகளின்
கூட்டணித் தாக்குதல்தான் பார்.

படித்தவ்ர்கள் பண்பின்றிப் பேசுவதும் உண்டு!
படிக்காதோர் பண்புடனே பேசுவதும் உண்டு!
படிப்பதே நற்பண்பைக் கற்பதற்குத் தானே?
படித்தவர்க்குப் பக்குவமே பண்பு.

ஒன்றுமில்லை என்று நினைத்துவிட்டால் ஒன்றுமில்லை!
ஒன்றுமற்ற ஒன்றை வெடிக்கவைக்க எண்ணினால்
உண்டில்லை என்றாக்கிப் பார்க்கலாம்! எல்லாமே
பண்பான பக்குவத்தில் தான்.
===================================================

திரிசங்கு நிலை!!
===================
கீழே இருக்கிறது பூமி! கவர்ச்சியுடன்
மேலே இருக்கிறது வானம்! இடையிலே
வாழ்கின்றோம் மக்கள்! எதுநடக்கும்? எப்போது?
யாரறிவார் துல்லியமாய்? சொல்.
==================================================

பித்தன்!
============
உள்ளதை உள்ளபடி சொன்னபோது பொய்யென்றார்!
உள்ளதை மாற்றிநான் சொன்னபோது மெய்யென்றார்!
உள்ளதைப் பொய்மெய் கலந்துசொன்னேன்! பித்தனென்றே
எள்ளிநகை யாடுகின்றார்! ஏன்?
==================================================

நம்வாழ்க்கை நம்கையில்!
==============================
விட்டுக் கொடுப்பதோ ஒற்றுமைக்கு வித்தாகும்!
முட்டிப் பகைப்பதோ நிம்மதிக்கு முள்ளாகும்!
அக்கறையாய்த் தேர்ந்தெடுத்து வாழ்வதோ நம்கையில்!
ஒட்டாமல் வாழ்வது வீண்.
======================================================

வேலி தாண்டாதே!
======================
ஆண்பெண் உறவுகள் அற்புத மானவை!
ஆண்பெண் இருவரும் நல்லொழுக்க வேலியைத்
தாண்டாமல் என்றும் பழகினால் நிம்மதி!
தாண்டினால் சீரழியும் வழ்வு.
===============================================

வாழக்கற்றுக்கொள்!
======================
மற்றவரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டேதான்
உற்றதுணை, சுற்றத்தை வாட்டி வதைக்காதே!
இப்பிறவி வாழ்வில் உனக்கென உள்ளவை
எப்படியும் வந்துசேரும் ! நம்பு.

தலைநிமிர்ந்து பர்த்தால் அனைத்தும் தெரியும்!
நிலைகுலைந்து போகாமல் உள்ளம் பொறாமை
அலைகளில் சிக்கித் தவிக்காமல் வாழ்ந்தால்
நிலையாகும் நிம்மதி தான்

இருப்பதை வைத்தே அமைதியாய் வாழ்ந்தால்
தருவாக வாழ்க்கை நிலைக்கும்! சினத்தை
நெருங்கவிட்டு நாளும் சிடுசிடுப்பில் வாழ்ந்தால்
கருகும் சருகாகும் வழ்வு.
========================================

Thursday, December 01, 2011

குழந்தைகளைப் பார்த்தால் பாவமாய் இல்லை?

===========================================
துள்ளி விளையடும் பள்ளிப் பருவத்தில்
அள்ளிச் சுமக்கின்றார் புத்தக மூட்டையை!
தள்ளாடிச் சாய்ந்தே நடக்கின்ற கோலமோ
சொல்லொண்ணாத் துன்பந்தான் சொல்.

அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கிறது! பள்ளி
நிர்வாகம் வேடிக்கைப் பார்க்கிறது! பெற்றோர்
உள்ளம் பொருமினாலும் வேடிக்கைப் பார்க்கின்றார்!
சொல்லித் திருத்துவார் யார்?

நடுநிலை நாளேடு கண்டித்தும், இங்கே
நடுநிலை யாளர் எடுத்துரைத்த போதும்
கொடுமை தொடர முதுகெலும்புச் சிக்கல்
அடுத்துவரும் என்செய்வோம் நாம்?

இதற்கொரு தீர்வுகாண எல்லோரும் சேர்ந்து
உடனே வழிமுறை காணவேண்டும்! இந்தக்
கடமையைச் செய்வோம்! குழந்தைகளைக் காப்போம்!
அகங்குளிர்வார்! வாழ்த்துவார்! பார்.


மதுரை பாபாராஜ்