பக்குவம் கொள்!
========================
கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் பேதமின்றி
வீட்டுக்கு வீடு விதவிதமாய்ச் சிக்கல்கள்1
போட்டி, பொறாமை , அகந்தை இவைகளின்
கூட்டணித் தாக்குதல்தான் பார்.
படித்தவ்ர்கள் பண்பின்றிப் பேசுவதும் உண்டு!
படிக்காதோர் பண்புடனே பேசுவதும் உண்டு!
படிப்பதே நற்பண்பைக் கற்பதற்குத் தானே?
படித்தவர்க்குப் பக்குவமே பண்பு.
ஒன்றுமில்லை என்று நினைத்துவிட்டால் ஒன்றுமில்லை!
ஒன்றுமற்ற ஒன்றை வெடிக்கவைக்க எண்ணினால்
உண்டில்லை என்றாக்கிப் பார்க்கலாம்! எல்லாமே
பண்பான பக்குவத்தில் தான்.
===================================================
திரிசங்கு நிலை!!
===================
கீழே இருக்கிறது பூமி! கவர்ச்சியுடன்
மேலே இருக்கிறது வானம்! இடையிலே
வாழ்கின்றோம் மக்கள்! எதுநடக்கும்? எப்போது?
யாரறிவார் துல்லியமாய்? சொல்.
==================================================
பித்தன்!
============
உள்ளதை உள்ளபடி சொன்னபோது பொய்யென்றார்!
உள்ளதை மாற்றிநான் சொன்னபோது மெய்யென்றார்!
உள்ளதைப் பொய்மெய் கலந்துசொன்னேன்! பித்தனென்றே
எள்ளிநகை யாடுகின்றார்! ஏன்?
==================================================
நம்வாழ்க்கை நம்கையில்!
==============================
விட்டுக் கொடுப்பதோ ஒற்றுமைக்கு வித்தாகும்!
முட்டிப் பகைப்பதோ நிம்மதிக்கு முள்ளாகும்!
அக்கறையாய்த் தேர்ந்தெடுத்து வாழ்வதோ நம்கையில்!
ஒட்டாமல் வாழ்வது வீண்.
======================================================
0 Comments:
Post a Comment
<< Home