Tuesday, September 29, 2015

சிறந்த நிர்வாகி!
-------------------------------
திறமை மிளிர்கின்ற நிர்வாகி என்றால்
கடமைப் பொறுப்பைப் பகிர்ந்தளித்துத் தந்து
திறம்படச் செய்வதை மேற்பார்வை பார்க்கும்
திறன்கொண் டிருக்கவேண்டும் செப்பு.

அன்றும் இன்றும்!
.----------------------------------
முன்பு அலுவலக நேரம் முடிந்தேதான்
மங்குகின்ற மாலைப் பொழுதிலே தாய்தந்தை
வந்தால் குழந்தைகள் சூழ மகிழ்ந்திருப்பார்
இன்றிங்கே வீட்டுக்கு வந்தும் அலுவலகத்
தின்பணியை வீட்டில் தொடரும் அவலநிலை!
தங்கள் குழந்தைகள் ஏக்கத் துடனிங்கே
நின்றே மிரள்கின்றார் பார்.

செய்தியும் கவிதையும்!
இந்து தமிழ் 29.09.15
-----------------------------------------------
துருவப் பனிமலைகள் வேகமாக நாளும்
உருகத் தொடங்கி கடல்மட்டம் இங்கே
பெருகி உயரும் பதினைந்து மீட்டர்!
கருத்தைப் படித்தால் துடிக்கிறது நெஞ்சு!
உருமாறிப் போகும் உலகு.

கடலோர நாடுகளும் தீவுகளும் மூழ்கி
அடையாளம் இன்றி அழிந்துவிடும் என்ற
விடையை நினைத்தால். வெப்பமய மாக்கும்
நடைமுறைக்குக் காரணமும் நாம்.

பேச்சு வகையறா
-------------------------------------
வெட்டொன்று துண்டிரண்டாய் நேராகப் பேசுபவர்
பட்டும் படாமல் நழுவித்தான் பேசுபவர்
பட்டாசு போல வெடித்தேதான் பேசுபவர்
அக்கறையாய்க் கேட்டுத் தலையாட்டிப் பேசுபவர்
இப்படித்தான் பேசும் வகையிலே மாந்தர்கள்
அப்பப்பா எத்தனையோ? சொல்.

ஆர்வக்கோளாறு!
----+-------------------------------
யாரையும் நம்பாமல் வாழ்க்கை நடத்துவது
தேரைத் தனியாய் இழுத்து நிலைசேர்க்கப்
பார்க்கின்ற ஆர்வத்தின் கோளாறாம்! நற்றமிழே!
ஊரே நகைக்கும் உணர்.

Saturday, September 26, 2015

மூவருலா!
-----------------------
கடந்துவந்த பாதையோ கற்றுணர்த்தும் ஆசான்!
கடக்கின்ற பாதை உடனிருக்கும் பெற்றோர்!
கடப்பதற்குப் போகின்ற பாதை. இயற்கை!
நடப்பதை  யாரறிவார்? சொல்.

Thursday, September 24, 2015

கவிதைக்கலை!
----------------------------------
சொற்கண்டு நூலில் கருத்து மணிகளை
அற்புதமாய்க்  கோர்க்கும் அழகே கவிதையாம்!
சற்றும் சளைக்காமல் நற்றமிழ்த்தாய்க் கைப்பிடித்துக்
கற்கின்ற வித்தை இது.

ஒற்றுமை ??????????
---------------------------------------
விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கைக்
கற்றுக் கொடுக்கின்ற கூட்டுக் குடும்பங்கள்
முற்றிலும்  தட்டுத் தடுமாறிப் போவதால்
ஒற்றுமை கேள்விக் குறி?

சிறை!
--------------
கண்களுக்குள் என்தலைவன் சென்றுள்ள காரணத்தால்
கண்களை நானோ திறக்கமாட்டேன் நற்றமிழே!
கண்களை நான்திறந்தால் என்தலைவன் நீங்கிடுவான்!
அன்பனுக்குப் பொன்சிறைதான் நான்.

மந்தக் கூட்டணி
----------------------------------
வாழ்வதற்(கு) உண்பது நல்லது! உண்பதற்கு
வாழ்வது நல்லதல்ல! மத்திய மாநிலம்(வயிறு)
பாழ்பட்டு மந்தமாகும் கூட்டணியில்  புத்தியும்
சேர்ந்துகொள்ளும் ! தத்தளிப்போம் நாம்.

பழையபாதை!
----------------------------
முன்னேறி வாழ்பவர்கள் ஏறிவந்த பாதைகளைப்
பின்னோக்கிப் பார்த்தலே நன்றி மறவாமை!
அந்த நிலைகளை இங்கே மறந்துவிட்டால்
முன்னேற்றம் பார்க்கும் நகைத்து.

பொறுமையைக் கற்போம்!
-------------------------------------------------------
எத்தனைப் பேர்களைத் தாங்கினாய்? மண்ணகமே!
எத்தனைப் பேர்களைத் தாங்குகிறாய்? இன்னும்நீ
எத்தனைப் பேர்களைத் தாங்குவாயோ? அம்மம்மா!
சற்றும் சளைக்காத உன்பொறுமை வாழ்க்கையில்
கற்றால்  பிணக்கில்லை பார்.

சிக்கலோ சிக்கல்!

------------------------------------------
இப்பக்கம் போனால் இடியாப்பச் சிக்கல்கள்!
அப்பக்கம் போனால் அங்கங்கே சிக்கல்கள்!
எப்பக்கம் போனாலும் ஏதேதோ சிக்கல்கள்!
அப்பப்பா ஆளை விடு.

Sunday, September 20, 2015

விடியல் காட்சி!
--------------------------------
காலைக் கதிரவனைக் கீழ்த்திசையில் கண்டதும்
நீலக் கடலலைகள் துள்ளிக் கரமசைக்க
சோலை மலரினங்கள் பூத்துச் சிரித்திருக்க
நீலவானில் வண்ணப் பறவைகள் பண்ணிசைக்க
நீரைத் தெளித்தேதான் வாசலிலே மங்கையர்
கோலமிட்டே நாளும் வரவேற்கும் ஆரவாரக்
கோலந்தான் காட்சிதான் பார்.

வேகத்தைத்தவிர்!
---------------------------------
வேகத் தடையிருந்தால் வண்டியில் செல்பவர்கள்
வேகத் தடையைத் தவிர்ப்பதற்குச் சுற்றித்தான்
வேகமாகச் செல்கின்ற போக்கெடுத்தால் சாலையிலே
வேகம் விபத்தைத் தரும்.

Saturday, September 19, 2015

விருந்தோம்பல்
----------------------------------

காக்கைக்குச் சோறுவைத்தேன் காகம் குரல்கொடுத்து
காக்கை விருந்தினர்காள் வாங்கோ என அழைக்க
காக்கைகள் வந்தமர்ந்து பங்கிட்டே உண்டன!
காக்கை விருந்தோம்பல் பார்.

அகரவரிசையில்

இல்லறத்தில் நல்லறம்!
---------------------------------------------
அன்பைப் பரிமாறி ஆசையின் வேரறுத்து
இன்சொல்லைப் பேசித்தான் ஈகைக் குணம்வளர்த்து
உண்மையைப் பின்பற்றி ஊக்கமுடன் சந்தித்தே
என்றும் எளிமையுடன் ஏற்றத்தில் துள்ளாமல்
அம்மம்மா ஐயத்தைத் தள்ளி ஒழுக்கத்தைப்
பண்பாக்கி ஓரணியாய் நாளும்  இணையர்தான்
ஒன்றிச் செயல்பட்டால் ஒளவைத் தமிழ்போல
பண்பட்டு வாழலாம் பார்.

இல்லறத்தின் வேர்!
----------------------------------------
வீட்டில் கணவன் மனைவி இருவரும்
ஊற்றெடுக்கும் வேலைப் பளுவைப் பகிர்ந்துகொண்டால்
வீட்டில் அமைதி தவழும்! வேற்றுமையின்
ஆட்சி வலுவிழக்கும் பார்.

இன்றைய குழந்தையின் பாட்டு!
---_--------------------------------------------------------
அம்மா அப்பா வாருங்கள்
உங்களுக்கு முத்தம் தருகின்றேன்
சோறைத் தட்டில் போட்டேதான்
உங்களுக்கு ஊட்டி விடுகின்றேன்!

உங்களை ஆடச் சொல்லித்தான்
பார்த்தே நான்தான் ரசிப்பேன்!
செல்போன் லேப்டாப் அலுவலகம்
உங்கள் செல்லக் குழந்தைகள்!

தூக்கம் வருதா உங்களுக்கு
தூங்கப் போவோம் இப்பொழுதே!
பாடு கின்றேன் தாலாட்டு!
அமைதி யாகத் தூங்குங்கள்!

Tuesday, September 15, 2015

பண்பே அளவுகோல்!
---------+--------+--------++------+-
எப்பொழுது நம்மை உயர்ந்தவ ரோடிங்கே
ஒப்பிட வேண்டும்? மற்றபடி--எப்பொழுது
தாழ்ந்தவ ரோடிங்கே ஒப்பிட வேண்டும்?
வாழ்நிலைப் பண்பே அளவு.

செல்லினம்!
-------------------------
செல்லினம் மென்பொருள் தன்னைப் பதிவிறக்கம்
செய்து தமிழில் எழுதுகின்றேன்!சொற்களின்மேல்
புள்ளிகள் தள்ளி விழுகிறது! இப்படித்தான்
புள்ளி வருவதே னோ?

நீருக்குத் தாகமோ?
---------------------------------------
உலகமே வெப்ப மயமாகும் கோலம்!
சுழன்று சுழன்று பனியோ உருகி
உயர்த்தும் கடலின் உயரத்தை! அம்மா!
உலகை வளைக்கும் கடலின் அலைகள்!
உலகம் பலியாடு தான்.

Saturday, September 12, 2015

அய்யய்யே!
-------------------------
குழந்தைகள் சண.டை! பெரியவர்கள் வந்தார்!
கலகமே மூள, குழந்தைகள் பார்த்தார்!
கரங்கோர்த்து மீண்டும் விளையாடச் சென்றார்!
புரியாமல் பார்த்தார் சிரித்து.

Friday, September 11, 2015

வேடிக்கை மனிதர்கள்!
-----------------------------------------------
வானத்தைப் பார்த்தொருவர் அண்ணாந்துபார்த்திருந்தார்!
ஏனென்று கேட்காமல் மற்றவர்கள் கூடிநின்று
வானத்தைப் பார்த்திருந்தார்! ஏனென்று கேட்டதற்கோ
ஏனென் றறியோம்  அவர்பார்த்தார்! பார்க்கின்றோம்
வானத்தை என்றார் சிரித்து.

அறம்-- பொருள்-- இன்பம்
-------------------------------------------------
அறவழியில் நின்று பொருளை உழைத்து
முறையாகப் பெற்றால் தழைக்கின்ற இன்பம்
நிறைவாக வாழ்வில் நிம்மதியைத் தூவும்!
குறள்வழி வாழப் பழகு.

இழக்காதே!
--------------------------
எதிலும் குறுகிய கண்ணோட்டம் கொண்டால்
மதியின் செயல்பாடு மந்தமாகிப் போகும்!
புதிராவோம்!மற்றவர்கள் மதிக்கத் தயங்குவார்!
மதிப்பை இழக்கலாமா? கூறு.

யார்?
-----------
சோழிகளை இங்கே உருட்டுதல் போலத்தான்
வாழ்விலே வெற்றிபெற ஓடுகின்றார் நற்றமிழே!
சோழிகள் சாதகமா? பாதகமா?  போட்டியிலே
யாரிங்கே வெற்றிபெற்றார்? யாரிங்கே தோற்றுவிட்டார்?
சோழிகளே! சொல்லுங்கள் ! யார் ?

அன்பின் வலிமை!
------------------------------
வம்பிழுக்கும் நேரத்தில் பிள்ளையா? பெற்றோரா?
என்றிங்கே பார்த்தாலோ வெற்றிபெறும் பிள்ளைதான்!
தங்களை விட்டுக் கொடுத்தேதான் இன்புறுவார்
அன்பாக பெற்றோர்தான் பார்.

பொய்முகம்  ஏன்?
--------------------------
விளம்பரத்தில் காட்டும் நடிகர் நடிகை
அழகினைப் பார்த்துப் பொருள்விற்ப தில்லை!
தரம்பார்த்தே வாடிக்கை யாளர்கள் வாங்கும்
களந்தன்னில் பொய்முகம் ஏன்?

Sunday, September 06, 2015

சுமையை நீக்கு!
--------------------------
மனதிற்குள் வைத்துப் புழுங்குவதை விட்டு
மனதில் இருக்கும் கசடுகளைக் கொட்டு!
மனச்சுமை நீங்கும்! தெளிவு பிறக்கும்!
மனதில் மலரும் சிரிப்பு.
















டாம் & ஜெர்ரி
Tom & JERRY
-------+----------+-
எப்போதும் சண்டையும் சீண்டலுந்தான்! ஆனாலும்
விட்டுப் பிரியாமல் வாழ்ந்திருக்கும்! இல்லறத்தில்
இப்படித்தான் இங்கே கணவன் மனைவியும்!
விட்டுக் கொடுப்பதே வாழ்வு.

தமிழில்
மதுரை பாபாராஜ்
















கப்பலோட்டிய தமிழர்
    வ.உ.சி வாழ்க
------------------------------------
திரைகடலில் இந்தியனின் கப்பலைக் கண்டு
மிரண்டனர் ஆதிக்க வெள்ளையர்கள் அன்று!
வரலாற்றில் என்றும் சிதம்பரனார் வாழ்வார்!
கரங்குவித்து வாழ்த்தி வணங்கு.

அணையா விளக்கு!
------------------------------------
நேர்மையும் வாய்மையும் நாணயத்தின் பக்கங்கள்!
பேரொழுக்கச் சித்திரங்கள்! பேராண்மை முத்திரைகள்!
பாரில் தலைநிமிர்ந்து வாழவைக்கும் பண்புகள்!
வாழ்வின் அணையா விளக்கு.

திரண்டவர்கள் எங்கே?
---------------------------------------
பட்டம் பதவியில் இங்கே பரபரப்பாய்
சுற்றிவந்த காலத்தில் வண்டுகளாய் மொய்த்திருந்தார்!
வெற்றிவிழா நாயகர் ஓய்விலே வந்தபின்பு
சுற்றிவந்தோர் சென்றார் பறந்து.

பார்ப்பதற்கே ஆளின்றி வீட்டில் முதுமையிலே
வாழ்கின்ற சூழ்நிலை! நோய்களின் தாக்கத்தால்
தூர்ந்து, படுத்த படுக்கையில் வாடுகின்றார்!
யார்செய்த குற்றம் இது?

Life's but a walking shadow, a poor player,
That struts and frets his hour upon the stage,
And then is heard no more. It is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.

SHAKESPEARE
--------------------------------------
வாழ்க்கை! நடமாட்டம் கொண்ட நிழலாகும்!
தேராத ஆற்றலை ஏந்தும் நடிகராய்
தோரணம்,ஆணவம் மேடையிலே காட்டிவிட்டே
தாவி மறைந்துவிடும்!
வாழ்க்கை, மடையனால் சாரமின்றி சொன்ன குறுங்கதை இவ்வுலகில்!
பேரிரைச்சல் கோபம் தினவெடுக்க ஒன்றுமே
வாழ்வில்லை என்றழியும் இங்கு.

தமிழில்
மதுரை பாபாராஜ்

வறுமைப்பிடி!
-----------------------
சுடுநெருப்பில் போட்டுப் புரட்டிப் புரட்டி
வறுத்து வறுத்துப் படுத்திப் படுத்தி
கொடுமை அனலில் கதறிக் கதறும்
வறுமைப் பிடியில் வயிறு.

அரைகுறை

இதுதான் நான்!
-------------------------------
பயிரியல் பட்டம்! கணக்கியல் வேலை!
கவிதை தெரியும்! அரைகுறை எல்லாம்!
தெளிவற்ற வானம்! முரணேந்தும் கூடு!
புவிவாழ்வில் இப்படித்தான் நான்.

மதிக்கவைக்கும் பண்பு!
----------------------------------
காலந் தவறாமைப் பண்புதான் மாந்தர்கள்
ஞாலத்தில் முன்னேற்றம் காண முதல்படி!
நாள்தோறும் பின்பற்று! மற்றவர்கள் உன்னைத்தான்
வாழ்த்தி மதிப்பார் உணர்.

பதுமைகள்!
-----------------------
இன்று சிறியவர்! நாளை பெரியவர்!
என்றிங்கே எப்படி யாராவார்? என்பதைக்
கண்முன்னே காலமோ காய்நகர்த்திக் காட்டிவிடும்!
அன்பே! பதுமைகள் நாம்.

இதுதான் உலகம்!
-----------------------------
புலமையைக் காட்டு , புரியவில்லை என்பார்!
எளிமை எழுத்தா? இதுதானா என்பார்!
இரண்டையும் சேர்த்தால்.தெளிவில்லை என்பார்!
உலகமே இப்படித்தான்!  பார்.

கடமை
--------------
காலை மலர்கிறது! மாலை உதிர்கிறது!
காலை மலரோ அறிந்தும் மலர்கிறது!
வாழ்வில் கடமைகளைச் செய்வோம்! கிடைக்கின்ற
வாய்ப்பில் உழைப்போம் துணிந்து.

மரியாதை!
------------------------------
கேட்டுப் பெறுவதல்ல இங்கே மரியாதை!
ஊற்றெடுக்கும் பண்பால், நடந்துகொள்ளும் பக்குவத்தால்
கேட்காமல் மற்றவரைக் காட்டவைக்கும் பண்பாகும்!
கேட்டுப் பெறுதல் இழிவு.

Tuesday, September 01, 2015

இலக்கியத்தில்
    வறுமை
-------------------------------------
வீட்டிலே சோறில்லை! வீட்டம்மா சொன்னதும்
பாவேந்தர், பார்வேந்தைக் காண்பதற்குச் சென்றுவிட்டார் !
பார்வேந்தைப் போற்றிப் பரிசிலாக பொன்பொருள்,
வேழம், உலையரிசி கொண்டுவந்து சேர்த்தாராம்!
ஏழைப் புலவர்கள் வீட்டிலே இப்படித்தான்!
வாழ்வில் வறுமையே சொத்து.

தங்கமலை ரகசியம்!

------------------------------------
அர்ச்சுனன் குந்திமைந்தன் கர்ணனுக்கும் கண்ணன்
இருபெரிய தங்க மலைகளைத் தந்தான்!
நலிந்தோர்கள் கேட்டவுடன் வெட்டிவெட்டித் தந்திருந்தான்
அர்ச்சுனன்தான்! ஏழையோ கர்ணனிடம் கேட்டான்!
ஒருமலையை வெட்டாமல்  அப்படியே தந்தான்!
அர்ச்சு னனேபார்! கொடைவள்ளல் என்று
புவிமக்கள் கர்ணனைச் சொல்வதேன் என்று
புரிந்துகொள்! என்றுரைத்துப் புன்னகைத்தான் கண்ணன்!
புரிந்துகொண்டான் அர்ச்சுனன் தான்.

துரியோதனண்---கர்ணன்
   யார் வள்ளல்?
-------------------------------------
திருமணம் நாளை, சமைத்திட வேண்டும்!
தருவீர் விறகென்றான் ஏழை ஒருவன்!
பெருமழைக் காலம் விறகில்லை என்றே
தரவில்லை அங்கே துரியோ தனன்தான்!
தளராமல் ஏழையோ கர்ணனிடம் கேட்டான்!
தயங்காமல் உத்திரத்தை வெட்டிக் கொடுத்தான்!
உலகில் மனமிருந்தால் மார்க்கமுண்டு! வள்ளல்
தரணியில் கர்ணன்தான்!  சாற்று.

இராமன் விளைவு!
RAMAN EFFECT!
-----------------------------------+
நாடாள்வாய் என்றார்! முகத்தில் சலனமில்லை!
காடாள்வாய்! என்றாள்! முகத்தில் சலனமில்லை!
ஈடற்ற இப்பண்பை  இல்லறத்தில் கற்றேதான்
சோதனையைச் சாதனையாய் மாற்று.