Wednesday, December 30, 2015

               31.12.2015
   புத்தாண்டை வரவேற்போம்
            இப்படியல்ல
   ----------------------------------------------------          

கும்மாளம் போட்டுக் குடிக்காதே! அங்கங்கே
கண்டபடி சென்றே குரலெடுத்து  ஊளையிட்டே
வண்டிகளை ஓட்டாதே! இந்திய நாடிங்கே
உன்னைத்தான் நம்பி இருக்கிறது! வல்லரசாய்
நம்நாட்டை மாற்றவேண்டும் மாறு.

கொடுமை!
--------------------------
தன்பிள்ளை ஏக்கமுடன் நின்றே வழியனுப்ப
அம்மா, அடுத்தவீட்டுப் பிள்ளையைப் பார்ப்பதற்கு
நெஞ்சம் துடிதுடிக்க சென்றிருக்கும் ஏழ்மையை
வன்கொடுமை என்றேதான் சாடு.

வறுமைத் தணலில் தகித்திடும் வாழ்க்கை
வெறுமையை நோக்கிச் சிறகை விரிக்கும்!
பொறுமை கடலினும் பெரிதெனச் சொன்னால்
உறுத்தாதா நம்முள்ளம்? சொல்.

புத்தாண்டே வா!
           2016
------------------------------------
தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்க
அனைத்துமத நல்லிணக்கம் ஒன்றி நிலைக்க
மனைதோறும் வள்ளுவத்தில் மக்கள் திளைக்க
மனிதநேயப் புத்தாண்டாய் வா.

உள்ளுணர்வு!
-----------------------------
நாய்வண்டி தேடிவந்து நாயைப் பிடிக்கவரும்!
நாய்களோ  வண்டியைப் பார்த்ததும் ஓடிவிடும்!
யார்கற்றுத் தந்தார்கள் இந்தப் பகுத்தறிவை!
நாய்களின் உள்ளுணர்வைப் பார்.

Sunday, December 27, 2015

+ ×÷ -- = வாழ்க்கை!
-------------------------------------
கூட்டல் பெருக்கல் வகுத்தல் கழித்தலென்னும்
வீட்டுக் கணக்குதான் வாழ்வெனும் ஏட்டிலே!
மாற்றிமாற்றிப் போடும் கணக்கில் பிழையென்றால்
ஏட்டைக் கிழிப்பதேன்? சொல்.

அலையும் மலையும்!
------------------------------------------
அலைகள் மலையை அடிக்க அடிக்க
மலையோ பொறுத்து மனதில் சிரிக்க
அலைகள் களைத்துக் கடலில் கலக்க
அலைகள் மலைக்க நகுமே கடலே.

இவன்தான் மனிதன்!
------------------------------------------
கூடுகட்டி விட்டுப் பறவையோ சென்றது!
கூடுநோக்கித் தாய்ப்பறவை நாடித்தான்  வந்தபோது
கூடழிந்து போனகோலம் கண்டேதான் நொந்தது!
வீடழகைப் பாதிக்கும் என்றே மனிதனோ
கூடழித்தான் தூசியென்று தான்.

நிம்மதி நம்மிடம்!
--------------------------------------
அமையாத ஒன்றை நினைத்தேதான் ஏங்கி
அமைந்ததையும் விட்டே அலைகின்ற உள்ளம்
குமுறித்தான் கூவும் ! உளைச்சலிலே வாடும்!
அமைந்ததில் நிம்மதி காண்.

யாரறிவார்?
-------------------------
ஒன்பதுக்குள் ஓடுகின்ற காற்றிங்கே எந்தவழி
என்றிங்கே செல்லுமென்றே யாரறிவார்? நற்றமிழே!
கண்டிப்பாய்ச் செல்கின்ற நாளுண்டு! மன்பதையே!
அன்றுவரை உன்கடமை செய்.

போலித்தனம் வேண்டாம்!
-------------------------------------------------------
இருக்கும் பொழுது மதிப்பதே உண்மை!
இருப்போர் இறந்ததற்குப் பின்னே படையல்
விருந்து படைப்பதெல்லாம் போலித் தனந்தான்!
இருப்போரைப் போற்றப் பழகு.

நண்பா! வெண்பா!
----------------------------------------
காய்ச்சீர் விளச்சீர்கள் முன்னாலே நேரசையும்
மாச்சீர்கள் என்றால் நிரையசையும் ஈற்றடி
வாய்பாடாய் நாள்மலர் காசு பிறப்பில் முடிக்கவேண்டும்!
சீர்கெட்டால் வெண்பா தளைதட்டும்! பார்த்தெழுது!
சீர்களே வெண்பாவின் வேர்.

கனியிருக்க காய்களே நன்று!
-------------------------------------------------------
வெண்பா எழுத, கனியிருக்க காய்களை
நன்கு கவரத்தான் வேண்டும்--நண்பா!
கனிச்சீரை ஏற்காது! காய்ச்சீரை ஏற்கும்!
கனியிருக்க காய்களே நன்று.

Wednesday, December 23, 2015

நெகிழிப்பொருட்கள் மரணச்சீட்டுகள்
AVOID PLASTIC MATERIALS
--------------------------------------+------------------+-------
காலையில் பாலுறை ஆரம்பம்! அன்றாடம்
சாலைக் கடைப்பொருள்கள் வண்ணவண்ண ஆடைகள்
தோரணம்போல் தொங்கவிடும் அங்காடி என்றேதான்
நாளெல்லாம் வாழ்வில் நெகிழிப் பொருட்கள்
காலத்தால் ஒன்றாக கலந்தே தொடர்கிறது!
ஞாலம் அலறுதடா பார்.

தெருவில் எறிவதோ குப்பையாக மாற
எரிப்பதில் உள்ள ரசாயனம் நஞ்சாய்
பெருக்கெடுத்து இங்கேஉயிரினத்தைத் தாக்கி
சுருக்குதுபார் ஆயுளைத் தான்.

கடலில் கலக்கும் நெகிழிப் பொருட்கள்
கடலுக்குள் வாழும் உயிரினத்தைத் தாக்கும்
உடலுக்குள் சென்றே அழிக்கும்! உலகில்
படருது மாசுகள் பார்.

நெகிழிப் பயன்பாட்டை மக்கள் குறைத்தே
அகிலத்தை வெப்பச் சலனச் சுழற்சி
வெறிதணிக்க இங்கே துணைக்கரம் நீட்டி
நெறியுடன் வாழ்வது நன்று.

மாசைத் தவிர்க்கும் பொருளைப் பயன்படுத்தி
மாசற்ற சூழலை நாளும் உருவாக்கு!
தேசத்தில் வாழும் உயிர்களைக் காத்திடுவோம்!
மோசமான மாசைத் தவிர்.

தந்தை பெரியாரை வணங்குவோம்!
---------------------------------------------------------------------
தந்தை பெரியாரின் தன்னல மில்லாத
தொண்டின் பயன்களை இங்கே உணர்கின்றோம்!
நம்நாட்டின் நல்லமைதி வேருக்குக் காரணம்
தந்தை பெரியார்தான்! சாற்று.

எங்கள் வீட்டில் துவாதசி குழம்பு
--------------------------------------------------------------
அகத்தி முருங்கை அவரையுடன் மொச்சை
புடலை சிறுகிழங்கு சேனையுடன் வெண்டை
சிகப்புநிற வெண்ணிற பூசணி டர்னிப்
கசப்பான பாகற்காய்  நூல்கோல் மற்றும்
சிகப்புநிற முள்ளங்கி நல்ல புதினா
கடமுடா செய்யும் உருளையுடன் பீன்சு
அகங்கவரும் தக்காளி வெங்காயம் நெல்லி
மகத்துவ வாழைப்பூ தேங்காய் மிளகாய்
முறையாய் அளவாய்க் கலந்தால் குழம்பு
சுடச்சுட அங்கே கமகம வென்று
நிறைந்து மணம்பரப்பும் நாவின் நடனம்
திகிடத் திகிடத்தான் செப்பு.

சிகைதிருத்தும் நண்பர்!
---------------------------------------------
கத்திரியை, சீப்பை கலைநயமாய் ஓடவிட்டே
இப்படியும் அப்படியும் ஆட்டியே--அற்புதமாய்
நம்சிகையைச் சீர்படுத்தி நம்மை அழகாகக்
கண்கவர மாற்றுகின்றார் காண்.

உருவுகண்டு எள்ளாமை!
---------------------------------------------------
மாற்றுத் திறனாளி நாளும் உழைக்கின்ற
ஆற்றலைப் பார்த்தால் உருவுகண்டு எள்ளாமை
கூற்றளித்த வள்ளுவரை எண்ணி வியக்கின்றேன்!
ஆற்றல்முன் ஊனமோ தூசு.

வானிலையும் நம்முடலும்!
---------------------------------------------------
நான்கிலே மூன்றுபங்குதண்ணீர் உலகிலே!
நான்கிலே மூன்றுபங்கு தண்ணீர் உடலிலே!
வான்வெளிக் காற்றுதான் வெப்பத்தைத் தோற்றுவிக்கும்!
தோன்றுகின்ற வெப்பமாற்றம் மாற்றுதம்மா வானிலையை!
மேனிக்குள் காற்றுதான் பல்வேறு மாற்றத்தைத்
தூணடிவிட்டுமேனிநலப் பாதிப்பை ஏற்படுத்தும்!
வானிலையும் நம்முடலும் ஒன்று.

எதிர்கொள்!
-------------------------
நதியிலே நீரிருந்தால் துள்ளித்தான் ஓடும்!
நதியில் வறட்சியா? வாடித்தான் போகும்!
நதிபோல வாழ்விலும் காட்சிகள் மாறும்!
எதிர்கொள் செயல்படு  நீ.

வாய்மையே வெல்லும்!
------------------------------------------------
உண்மை! ஒருமுறை சொன்னாலும் பன்முறை
சொன்னாலும் மாறாது! பொய்மையோ தூண்டிவிட்டு
நம்மைத்தான் மாற்றிமாற்றிச் சொல்லவைத்துச் சிக்கவைக்கும்!
புண்படச் செய்யும் நகைத்து.

கைபேசி பேச்சு
----------------
காதோடு தைத்தாலும் கைபேசி பேச்சாலே
காதே எரிந்தாலும் பேசச் சளைக்கமாட்டார்!
தோதாக நேரத்தை வீணாக்கி பேசிடுவார்!
சோதனையா? வேதனையா? சொல்.

மார்கழியே வா!
--------------------------------
வாசலில் சாணி தெளித்தேதான் கோலமிட்டுப்
பூசணிப் பூவை நடுவிலே நிற்கவைத்து
மாசற்ற வெண்பனி மார்கழி மாதத்தைப்
பாசமுடன் வாவென்போம் வாழ்த்து.

இரும்பு மனிதர்!

நினைத்தால்  சிலிர்க்கும் இரும்பு மனிதர்!
இணைத்தார் சமஸ்தானம் ஒவ்வொன்றாய்! இன்றோ
இணையற்ற இந்தியா கண்டோம்! படேலின்
நினைவுநாளில் போற்றுவோம் சூழ்ந்து.

அய்ந்திணை!
-------------------------------
கடலும் கடல்சார்ந்த பேரிடம் நெய்தல்!
அடர்வனம் சார்ந்த இடந்தானே முல்லை !
நெடுமலை சூழ்ந்த இடமே குறிஞ்சி!
பகுத்துண்டு வாழும் வயலே மருதம்!
தொகுத்த குறிஞ்சியும் முல்லையும் பாலை!
வகுத்தனர் அய்ந்து திணைகளாய் முன்னோர்!
மகத்தான அய்ந்திணை பார்.

Sunday, December 13, 2015

துறவு!
------------------
குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிட்டே இங்கே
உறுத்தலே இன்றித் துறவறம் ஏற்க
விடுபட்ட அம்பெனச் செல்பவரே கோழை!
பொறுப்பைச்  சுமத்தல் துறவு.

Saturday, December 12, 2015

மனநிலை!
---------------------------
ஒருகடமைக் கஞ்சி  ஒதுங்கித்தான் சென்றால்
பெருங்கடமை ஒன்று வரவேற்கும் நின்று!
இருக்கும் கடமையைச் செய்து மகிழ்ந்தால்
துரும்பாகும் தூணும்! உணர்.

மீண்டெழுவோம்! (12.12.2015)
-------------------------------------
எழுவோம் எழுவோம் மீண்டெழுவோம்!
விழுந்து விழுந்து புரண்டாலும்
எழுவோம் எழுவோம் மீண்டெழுவோம்!
எப்படிப் புயல்கள் அடித்தாலும்
எத்தனை வெள்ளம் வந்தாலும்
வீட்டை பொருளை அழித்தாலும்
வாழ்வை இங்கே சிதைத்தாலும்
அகதிக் கோலம் தந்தாலும்
சளைக்க மாட்டோம் மீண்டெழுவோம்!
தலைக்கு. மேலே வெள்ளந்தான்
நிலைமை எல்லாம் மோசந்தான்
கலக்கம் என்பது மணித்துளிதான்
விரட்டி விட்டுத் துணிந்தெழுவோம்!
எழுவோம் எழுவோம் மீண்டெழுவோம்
எழுவோம் எழுவோம் மீண்டெழுவோம்!

தமிழின் அழகு!
------------------------------
ஆர்த்தெழு கடலின் அலைகள்-- விண்
பார்த்தெழும் ஓங்கிய மலைகள்!

காற்றிடை பறக்கும் புள்ளினம்--மண்
சேற்றிடை மலர்செந் தாமரை!

அஞ்சற் கரியவன விலங்கு--அங்கே
கொஞ்சிப் பேசிடும் கிள்ளை!

காலை வானின் சூரியன்--பார்த்துச்
சோலையில் மலர்ந்திடும் பூக்கள்!

மாலை மறைந்ததும் இரவில்--- தோன்றும்
அமுதைப் பொழியும் நிலவு!

மலையிடைப் பொழியும் அருவி--மரத்தில்
தாவிக் குதிக்கும் குரங்கு!

இயற்கையின் அழகைக் கூட்டும்---பார்க்கப்
பரவச மூட்டும், உண்மை!

தாய்த்தமிழ் அழகின் முன்னே---அனைத்தும்
மின்னலாய் மறையும் காணீர்.

பட்டிமன்றம் !
---------------------- -----
இயற்கையான பேரிடரே! வந்தவெள்ளம் எல்லாம்
செயற்கையான பேரிடரே! பட்டிமன்றம் இங்கே
வளர்கிறது ! வாழ்விழந்து வாடுகின்ற மக்கள்
கலங்கித்தான் நிற்கின்றார் காண்.

Thursday, December 10, 2015

ரணம்!
---------------
அன்பைப் பொழியும் ஒருசொல்லோ இன்பந்தான்!
வம்புகளைத் தூண்டும் ஒருசொல்லோ துன்பந்தான்!
அன்பாகப் பேசுவோம்! வம்பிழுத்துப் பேசவேண்டாம்!
வம்பு, மனதின் ரணம்.

கண்மூடித்தனம்
-----------------------------
பின்னணியில் வைத்து மதிப்போரைத் தாக்குவதும்
முன்னணியில் வைத்துத் துதிப்போரைத் தாங்குவதும்
பொன்மனதை விட்டுவிட்டுப் பொய்மனதைப் போற்றுகின்ற
தன்னலப் பண்பென் றுணர்.

வணங்கு!
----------------------
தொண்டுப் படகை மனிதநேயச் சிந்தனை
என்னும் துடுப்பால் இயக்கித்தான் சாதிமதம்
மண்மூடிப் போகச் சுழன்று சுழன்றுதான்
தொண்டாற்றி மக்களைக் காப்பாற்றும் தொண்டர்கள்
வண்டமிழ்போல் வாழ்க வென்றே வாழ்த்து.

வேலெறியும் நேரமல்ல!
------------------------------------------------
பாய்ந்துவரும் வெள்ளம் பயந்தோடும் மாந்தர்கள்!
ஊர்முழுதும் காட்சி பதறுதம்மா மக்களாட்சி!
பார்க்கின்றோம் பார்க்கின்றோம் வேதனையின் காட்சிகளை!
யாருக்குத் தீங்குசெய்தோம் சொல்?

சென்றவர்கள் சென்றவர்தான் வெள்ளத்தில் மீண்டிங்கே
வந்தவர்கள் வந்தவர்தான்
காணாமல் போனவர்கள்
எங்குசென்றார் ?என்னவானார்?
எவர்வந்து சேதி சொல்வார்?
ஒன்றும் புரியவில்லை யே!

காரணங்கள் யாரோ? அலசுகின்ற நேரமல்ல!
காயங்கள் ஆற மனிதநேய நற்பணிகள்
ஆர்வமுடன் தொட்டுத் துலங்கினால் நல்லது!
வேலெறிந்து பார்க்கவேண்டாம் சொல்.

அவலம்!
------------------------
அண்ட சராசரம் நின்று குலுங்கிட
வந்து முழங்கின பேரிடி மாமழை!
அஞ்சி நடுங்குதே எல்லா உயிர்களும்
பஞ்சாய்ப் பறக்குது வாழ்வு.

பறந்தனர் மக்களோ ஊர்களை நோக்கி!
பறந்தனர் தங்கள் உயிர்களைக் காக்க!
உறவை மறந்தார்! உடைமை மறந்தார்!
அடமழைக் கோலம் இது.

விதிவிலக்கே இல்லை!
------------------------------------------------
மேடுகளைப் பள்ளத்தை உண்டாக்கி வெள்ளமோ
மேடுகளில் வாழ்ந்தோரை பள்ளத்தில் வாழ்ந்தோரை
கூடிழக்க வைத்தேதான் வேடிக்கை பார்க்கிறது!
வாடி வதங்குகின்றார் பார்.

நம்பிக்கை
---------------
புயலுக்குள் நின்றால் புயல்விளக்காய் மாறு!
குளநீரில் சிக்கினால் மீனாக மாறு!
களத்துக்குள் கால்பதிந்தால் வீரனாக மாறு!
கலங்காமல் நம்பிக்கை கொள்.

கடைத்தேற்றம் என்று?
---------------------------------------------
உடையும் உணவும் இருப்பதற்கு வீடும்
கடையனுக் கென்று கிடைக்கிறதோ அந்நாள்
மகத்தான மக்களாட்சிப் பொன்னாளாம்! தாயே!
நடக்கவைக்கும் நல்லரசைத் தா.

அக்கறை யார்காட்டுவார்?
-----------------------
புத்தக மூட்டைச் சுமையைக் குறைக்கின்ற
அக்கறை யாருக்கும் இல்லையா?--நற்றமிழே!
தட்டுத் தடுமாறி நடக்கின்றார் மாணவர்கள்!
மொட்டுத் தளிர்கள் முதுகு வளைந்துவிடும்!
அக்கறை யார்காட்டு வார்?

கலங்காதே!
-------------------------
இருளில் பயணம்? ஒளிவிளக் கேற்று!
நெருப்புத் தடையா? புனலினை ஊற்று!
உலுக்கும் சினமா? விலகு நிமிர்ந்து!
கலக்கம் கலங்கிடும் காண்.

பெய்யெனப் பெய்யும்!
------------------------------------------
வானத்தில் நீந்திவா !வண்டமிழ்ப் பாவினங்கள்
தேனகமாய் ஊறிவரும்! சோலைக்குள் துள்ளிவா!
சேணத்தை நீக்கிவிடு !செந்தமிழ்ப்பா கொஞ்சிவரும் !
கானகத்தில் ஓடிவா! பைந்தமிழ்ப்பா பண்ணிசைக்கும்!
பாமணக்கப் பாமழை பெய்.